தீர்க்கமான முடிவின் பின்னரே தேர்தல் குறித்த அறிவிப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு பொறுத்தமான தினம் குறித்து பல தரப்பினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் , எதிர்வரும் இரு தினங்களுக்குள் இடம்பெறவுள்ள பல்தரப்பு தீர்க்கமான கலந்துரையாடலின் பின்னரே உத்தியோகபூர்வமாக தினம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தமிழ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஏற்கனவே திட்டமிட்ட தினத்தில் தேர்தல் நடத்தப்படாமல் , அதற்கான புதிய தினம் அறிவிக்கப்பட வேண்டுமெனில் பழைய தினத்திலிருந்து 21 நாட்களின் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கமைய ஏப்ரல் முதலாம் வாரத்தில் தேர்தல் இடம்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் ஏப்ரல் இரண்டாம் வாரம் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நீண்ட விடுமுறை என்பதால் குறித்த காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியாதெனக் கூறி தேர்தல் ஆணைக்குழு , அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

இவ்வாறு பலராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையிலேயே ஆணைக்குழுவின் தலைவரை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேர்தலை நடத்துவதற்கான புதிய தினம் குறித்து ஆணைக்குழு இன்னும் தீர்மானங்கள் எவற்றையும் எடுக்கவில்லை. இவ்விடயம் கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளது. எனவே தான் அடுத்த வாரம் மீண்டும் கூடி இது தொடர்பில் அறிவிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அடுத்த கூட்டத்தில் எம்மால் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவல்களுடனும் கலந்துரையாடப்பட்ட பின்னரே தினம் உறுதி செய்யப்படும் என்றார்.

தெற்காசியாவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான நிகழ்நிலை அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கை உள்ளடங்கலாக தெற்காசியப்பிராந்தியத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களை உள்ளடக்கிய நிகழ்நிலை அருங்காட்சியகமொன்றை உருவாக்குவதை முன்னிறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை செயற்பட்டுவருகின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்கு முன்னரான இனக்கலவரங்களின்போதும் பெருமளவானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்கள் மற்றும் உள்நாட்டில் நிறுவப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், நீதியை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்றுடன் 2204 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே தெற்காசியப்பிராந்திய நாடுகளில் இவ்விவகாரம் தொடர்பில் பணியாற்றிவரும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து, இயலுமானவரையில் தெற்காசியப்பிராந்தியத்தில் இடம்பெற்ற அனைத்து வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களையும் உள்ளடக்கிய நிகழ்நிலை அருங்காட்சியகமொன்றை உருவாக்குவதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை திட்டமிட்டுள்ளது.

இச்செயற்திட்டத்திற்கான ஒத்துழைப்பை வழங்க முன்வருமாறு இலங்கையைத் தளமாகக்கொண்டியங்கும் சில அரச சார்பற்ற அமைப்புக்களிடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நீதிமன்றம், ஏனைய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐ.நாவிடம் கோரிக்கை

மனித உரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் நீதிமன்றம் மற்றும் ஏனைய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தும்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கைவிடுத்துள்ளது.

அதேபோன்று கடந்தகால மீறல்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கு அவசியமான விசாரணை செயன்முறையில் தாமதமேற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் உபகட்டமைப்பான சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பில் மீளாய்வு செய்யும் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், இலங்கை தொடர்பான மீளாய்வு எதிர்வரும் 8 – 9 ஆம் திகதியகளில் நடைபெறவுள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மீளாய்வுக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி மனித உரிமைகள் அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை தொடர்பான தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன.

அதன்படி உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கையின் கடந்தகால மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் தமது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பல்வேறு விடயங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நீக்கப்பட்டன. இருப்பினும் கடந்த 2022 ஒக்டோபர் 31 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம், 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட சில அம்சங்களை உள்ளடக்கியிருந்தாலும்கூட முன்னர் காணப்பட்டவாறு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் நியமனத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளுமற்ற நிலை இதில் உறுதிப்படுத்தப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் நீதிமன்றம் மற்றும் ஏனைய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்தவேண்டும்.

அடுத்ததாக இலங்கை அரசாங்கங்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாகவும், பிறிதொரு சட்டத்தின்மூலம் அதனைப் பதிலீடு செய்வதாகவும் தொடர்ந்து வாக்குறுதியளித்து வந்திருக்கின்ற போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்கள், அச்சட்டத்தின் ஊடாக நிகழ்த்தப்புடும் தன்னிச்சையான கைதுகள், தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் உள்ளிட்ட மீறல்கள் தொடர்பில் உரியவாறான தீர்வை வழங்கவில்லை. எனவே மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக மிகமோசமான அனைத்துச்சட்டங்களையும் திருத்தியமைக்குமாறு அல்லது முழுமையாக நீக்குமாறும், அதுவரையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை நிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துங்கள்.

மேலும் கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எவையும் எட்டப்படாத நிலையில், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51ஃ1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறும், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழு மற்றும் நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழு என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு வழிமுறைகளில் உள்ளடக விசாரணைகளைத் தாமதப்படுத்துவதற்கோ அல்லது அதில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கோ மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நிறுத்துமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்துங்கள்.

அதேபோன்று அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்படுவதுடன் அவ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும். அத்தோடு அமைதிப்போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகித்த அனைத்து அதிகாரிகளும் உரியவாறான விசாரணைகள் மூலம் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படத் தயார்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடையின்றி விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு மதிப்பளித்து செயற்பட நிதி அமைச்சு தயாராகவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கித்துல்கல பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார்.

எந்த தரப்பினராக இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படுவது அவசியம் எனவும் நிதியமைச்சு என்ற வகையிலும், அதனை மதித்து செயற்படுவதாகவும் அதில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் அவர் கூறினார்.

அத்துடன், நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செலவுகளை முகாமைத்துவம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக  ஒதுக்கப்பட்ட நிதியை முடக்கி வைப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சர் சார்பில்  சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

தமிழர்களின் நில அபகரிப்பு பிரச்னைக்கு தீர்வு அவசியம்; மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா வலியுறுத்தல்

இலங்கையின் தமிழர் பகுதியான வடக்கு, கிழக்கில் தொடரும் நில அபகரிப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் தொடர்பில் 42ஆவது மீளாய்வு நடக்கிறது. இதில் பிரித்தானியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சைமன் மான்லி சி. எம். ஜி. இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

2020 செப்ரெம்பரில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதங்கள் தொடர்பான ஐ. நா. சிறப்பு அறிக்கையாளர் பாப்லோ டி கிறீப், கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வு கள் மீதான ஒடுக்குமுறையானது மீண்டும் மன உளைச்சல் மற்றும் அந்நியப்படுத்தலை – உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உறவுகளை – அனுபவங்களை நினைவுகூரும் வாய்ப்பை இது மறுக்கிறது. படையினரால் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் துக்கமடைந்த குடும்பங்கள், சீருடையில் இருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை புதைக்க அல்லது அழிக்க வேண்டிய அவசியம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார். உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர, இலங்கை தனது அனைத்து சமூகங்களையும் சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்று மான்லி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியான அடக்குமுறைகள் – கண்காணிப்புகள் இருப்பினும் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூருவதற்காக வடக்கு – கிழக்கு முழுவதும் தமிழர்கள் ஒன்றுகூடி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் வடக்கு மற்றும் கிழக்கில் நில அபகரிப்பு செய்கின்றமை தொடர்பான கவலைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும்.

முல்லைத்தீவில் இராணுவம் 16 ஆயிரத்து 910 ஏக்கருக்கும் அதிகமான பொது மற்றும் தனியார் காணிகளை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. இந்த இடங்களில் குறைந்தபட்சம் 7 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2021 மார்ச்சி ஓக்லாண்ட் இன்ஸ்ரிரியூட் வெளியிட்ட அறிக்கை, முல்லைத்தீவில் அளம்பில் தொடக்கம் கொக்கிளாய் வரையான 15 கி. மீற்றர் தூரத்தில் 5 கடற்படைதளங்கள் அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளது.

வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதாகக் கூறி இராணுவம், தொல்பொருள் திணைக்களம் தமது தாயகத்தை தொடர்ந்து கைப்பற்றுவதற்கு எதிராக தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் மான்லி வெளிப்படுத்தியுள்ளார்

அரசும் தேர்தல் திணைக்களமும் பொதுமக்களை ஏமாற்றக்கூடாது – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை செய்யக்கூடாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ரெலோ கட்சியின் பணிமனையில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் தேர்தல் தொடர்பான தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறும், தேர்தல் நடத்துவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், ஜனாதிபதி தேர்தல் இல்லை எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் திணைக்களம் தேர்தலை நடத்துவதாக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றது. வேட்பாளர்கள் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் தேர்தல் நடக்குமா இல்லையா என்ற சிந்தனையே உள்ளது.

ஆகவே, தேர்தல் திணைக்களம் தேர்தலை வைப்பதாயின் உடனடியாக தனது நிலைப்பாட்டை சொல்ல வேண்டும். தற் போது 9 ஆம் திகதி தனது கருத்தை சொல்வதாக தேர்தல் திணைக்களம் கூறுகிறது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்பது தெரியாமல் இருக்கு. தேர்தல் வருமா, வராதா என கட்சிகளும், வேட்பாளர்களும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் செய்யக் கூடாது. ஆகவே, இறுதி முடிவை 9ஆம் திகதியாவது அறிவிக்க வேண்டும் – என்றார்.

தேர்தலை பிற்போடும் உத்தியை சுமந்திரனிடமே ரணில் கற்றார் – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

கருணாவிடமிருந்து பெற்ற இரகசியங்களை விடுதலைப் புலிகளை அழிக்க அரசாங்கம் பயன்படுத்தியதை போல, சுமந்திரனிடமிருந்து கற்ற விடயங்களை கொண்டு ரணில் தேர்தலை பிற்போட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) . தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சிங்கள தலைவர்கள் எங்களிடமிருந்தே பலவற்றை கற்றுக்கொண்டு, எங்களிடமே பரீட் சித்துப் பார்க்கும் நிலைமையுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைப் பற்றி நாங்கள் அனைவரும் அறிவோம். அவர்களின் புலனாய்வுப் பிரிவு பரந்துபட்டு, மிகவும் வித்தியாசமாக இருந்தது.

எனினும், கருணா 2004இல் புலிகளில் இருந்து பிரிந்து சென்று, இலங்கை இராணுவத்திடம் அந்த புலனாய்வுத் தந்திரங்களை கூறியபடியால், இன்று இலங்கை பாதுகாப்பு பிரிவினர் மிகப் பலமான புலனாய்வு கட்டமைப்பை வளர்த் துள்ளனர்.

கிழக்கு மாகாண சபை தேர்தல் 5 வருடங்களாகவும், வட மாகாண சபை தேர்தல் 4 வருடங்களாகவும் நடக்கவில்லை. 2016ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சிக்குள் சுமந்திரன் போன்றவர்களுடன் முரண்பட்டதால், க. வி. விக் னேஸ்வரன் தமிழ் தேசிய கூட் டமைப்பை விட்டு வெளியேறியிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு ஆதரவாக இளைஞர் பட்டாளம் திரண்டு, அவரது பதவியைக் காப்பாற்ற போராடினார்கள்.

2018ஆம் ஆண்டு வட மாகாண சபையின் ஆட்சிக் காலம் முடிந்ததும், அவர் மீண்டும் போட்டியிட்டால் பெரு வெற்றியீட்டுவார் என்ற காரணத்தால் இருக்கலாம் ரணில் பிரதமராக இருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 50-50 என தேர்தல் முறை மாற்றப்பட்டு, எல்லை மீள்நிர்ணய விவகாரத்தால் மாகாண சபை தேர்தல் நடத்த முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதை ரணிலுக்கு சொல்லிக் கொடுத்தது சுமந்திரன். அந்த சட்டமூலத்தை உருவாக்குவதற்கு முக்கிய பாத்திரமாக இருந்தவர் சுமந்திரன். அப்போது கற்றுக்கொண்டவற்றை வைத்து, இப்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற் போட ரணில் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார் – என்றார்.

அரச அதிகாரிகளை அழைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் ஆணைக்குழுவிற்கு அழைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் அவர்களை அழைக்க எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடி, உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் நேற்று (03) வழங்கிய தீர்ப்பிற்கமைய, நிதி அமைச்சு உள்ளிட்ட குறித்த நிறுவனங்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி குறித்து எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் அறிவிப்பதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்கி வைப்பதை தவிர்க்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வளாகம், இந்தியன் ஒயில் நிறுவன எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு நேற்று (03) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படாத திருகோணமலை எண்ணெய் தாங்கிக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி, திருகோணமலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையம் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை இந்தியன் ஒயில் நிறுவனத்தின் எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை IOC முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா வரவேற்றதுடன், இந்தியன் ஒயில் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கலக்கும் ஆலையையும் ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

எண்ணெய் களஞ்சிய முனையத்தில் அமைந்துள்ள அதிநவீன ஆய்வுக்கூடத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அதன் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், அண்மையில் மேம்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது உள்நாட்டு கிரீஸ் உற்பத்தி ஆலையையும் பார்வையிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடாந்தம் 3,000 மெட்ரிக் தொன் கொள்ளளவைக் கொண்ட இந்த கிரீஸ் உற்பத்தி ஆலையானது நாட்டின் மொத்த கிரீஸ் தேவையையும் பூர்த்தி செய்யும் என்பதோடு, தற்போது கிரீஸ் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச்செலாவணியை சேமிக்கும் திறனையும் கொண்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் நெருக்கடியான காலப்பகுதியில் நாட்டிற்கான எரிபொருள் விநியோகத்தை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்ல இந்தியன் ஒயில் நிறுவனம் மேற்கொண்ட அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு IMF பாராட்டு

கொள்கை வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட தீர்மானத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) பாராட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் குறித்த தீர்மானம் பொருத்தமான நடவடிக்கை எனவும், பணவீக்க இலக்குகளின் கீழ் அமைக்கப்பட்ட தமது நோக்கங்களுக்கு ஏற்ற வகையில் இது அமைந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்றிட்டத்தின் சிரேஷ்ட பிரதானி  Peter Breuer, இலங்கைக்கான செயற்றிட்டத்தின் பிரதானி Masahiro Nozaki ஆகியோர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பணவீக்கத்தின் வீதம் குறைவடைந்து வருகின்ற போதிலும், வறிய மக்களை  பாதிக்கும் வகையில் தற்போதும் உயர் மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பணவீக்கம் நடப்பு போக்கினை மாற்றியமமைக்கக்கூடும் என்பதுடன், பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதால், கொள்கை வட்டி வீதத்தை அதிகரித்தமையை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.

இந்த நடவடிக்கையானது, பணவீக்கத்தை விரைவாகக் குறைக்கும் மத்திய வங்கியின் அர்ப்பணிப்பை வௌிப்படுத்துவதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், ஒற்றை இலக்க பணவீக்கத்தை நோக்கி உறுதியாக நகர்வதை இது எடுத்துக்காட்டுவதாகவும் நாணய நிதியம் கூறியுள்ளது.

உறுதியான பணவீக்க வீழ்ச்சியானது சந்தையின் நம்பிக்கையை அதிகரிக்க உதவிபுரியும் என்பதுடன், பாரிய வணிக நிறுவனங்களுக்கும் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்குமான நிதி நிலைமைகளை இலகுபடுத்துவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதிய செயற்றிட்டத்தை இந்த மாதத்திற்குள் செயற்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நேற்றைய (03) நாணய மீளாய்வுக் கூட்டத்தின் போது நம்பிக்கை வௌியிடடமையும் குறிப்பிடத்தக்கது.