யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா

யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

நாளை (சனிக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மணிவண்ணன் தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து அவர் தனது பதவியை துறக்க முன்வந்துள்ளார்.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் மணிவண்ணன் இராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிததுள்ளன.

கடந்த 2020 டிசம்பர் 30ஆம் திகதி மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்ட நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மண்ணில் வேரூன்றும் முயற்சியாகவே சீனா அரிசியை வழங்கியுள்ளது: ஐங்கரநேசன்

பட்டினியால் குடும்பங்கள் படும் அவலத்தை சீனா சாதகமாகப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் மனதிலும் தமிழ் மண்ணிலும் வேரூன்றும் முயற்சியாகவே அரிசியை வழங்கி வருவதாக, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ என்ற திட்டத்தின்கீழ் பொருளாதார ரீதியாக நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சீனர்களின் உணவுப் பண்பாட்டில் இடம்பிடித்துள்ள பசைத் தன்மைகூடிய ஸ்ரிக்கி றைஸ் அரிசியே இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உணவுப் பண்பாட்டில் கடலட்டை எவ்வாறு இல்லையோ, அதேபோன்றே இந்த ரக அரிசியும் இல்லை.

சீனா மனிதாபிமான நோக்கில் அரிசியை வழங்கியிருந்தால் எங்களது பயன்பாட்டிலுள்ள அரிசியைத் தெரிவு செய்து வழங்கியிருக்கும். ஆனால், இந்தச் சீன அரிசியில் மனிதாபிமானம் இல்லை, வல்லாதிக்கப் போட்டி அரசியலே அதிகமாகவுள்ளது. பசியோடு இருக்கும் மக்களைச் சீன அரிசியை நிராகரிக்குமாறு எவருமே கோரமுடியாதபோதும் இந்த அரிசியிலுள்ள அரசியலை எமது மக்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி உடனடியாகத் தீரப்போவதில்லை. இதனாலேயே அரசாங்கம் பயன்படுத்தாமலுள்ள காணிகளை எடுத்து இராணுவத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது. இது உணவு உற்பத்தி என்ற பெயரில் காணிகளை கையகப்படுத்தும் மறைமுக நோக்கத்தையும் கொண்டுள்ளது.

வடக்குக் கிழக்கில் உள்ள வெற்றுக் காணிகளில் எமது பொது அமைப்புகள் அல்லது தன்னார்வலர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபட முன்வரவேண்டும். பல வெற்றுக் காணிகளின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். குத்தகை அடிப்படையிலேனும் பயிர்ச்செய்கைக்கு காணிகளை வழங்க அவர்கள் முன்வரவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் பசியால் ஒரு சிறுவன் இறந்ததாகப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஈழத்தமிழ்ச் சமூகத்துக்குமே இழுக்காகும்.

போர்க்காலத்தில் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டிருந்தபோது கூட பட்டினியால் எவரும் இறந்ததில்லை. பிரதேச செயலகங்களில் கிராம சேவையாளர் பிரிவுரீதியாகப் பட்டினியை எதிர்நோக்கியுள்ள வறிய குடும்பங்களின் விபரங்கள் உள்ளன. திருவிழாக் காலங்களில் மட்டுமே அன்னதானங்கள் என்று இல்லாமல் இக்குடும்பங்களின் சிலநாள் பசியையேனும் போக்க எமது ஆலயங்களும் முன்வரவேண்டும்’ என கூறினார்.

கடலட்டை பண்ணைகளுக்காக யாழில் பேரணி

கடற் தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு அட்டைப் பண்ணைகள் வேண்டுமென இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது.

பேரணிகள் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடத்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அட்டைப் பண்ணைகள் பெரிதும் உதவுகின்றது.

தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியில் நாட்டுக்கும் மக்களுக்கும் அன்னிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு தொழிலாக அட்டைப் பண்ணை காணப்படுகின்றது.

சிலர் தமது குறுகிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடற் தொழில் மேற்கொள்ளாத சிலரும் அட்டப்பண்ணையை விரும்பாத சிலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அட்டை பண்ணைகளை அமைப்பதற்கு சங்கங்களின் விருப்பமும் பெறப்பட்டே உரிய திணைக்களங்கள் ஊடாக அளவீடு செய்யப்பட்டு அனுமதியுடன் பண்ணைகளை அமைத்துள்ளோம்.

அட்டைப் பண்ணைகளை வேண்டாம் என கூறுவோர் ஏன் வேண்டாம் என முதலில் மீனவ சங்கங்களுடன் பேச வரட்டும் அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கட்டும்.

யாழில் அட்டப் பண்ணைகள் வேண்டுமென பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் துறைசார்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகவே ஒரு சிலரின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மீனவ சமூகம் நன்மை அடைகின்ற அட்டைப் பண்ணைகளை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர தடுக்கக் கூடாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இலக்கத்தகடுகளிலுள்ள மாகாணங்களை நீக்க தீர்மானம்

புதிதாக வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் உரிமையாளர்கள் மாற்றத்தின் போது வாகன இலக்க தகடுகளிலும் மாற்றங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் புதிதாக வாகனங்களை பதிவு செய்யும் போதும், உரிமையாளர்கள் மாற்றப்படும் போதும் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க வாகன இலக்கத்தகடுகளிலுள்ள மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் உரிமை மாகாணங்களுக்கு இடையில் மாற்றப்படும் ஒவ்வொரு முறையும் இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டியிருக்கும் போது வாடிக்கையாளர்களும் போக்குவரத்து திணைக்களமும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ள நேரிட்டுள்ளது.

வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது வாடிக்கையாளர்கள் மற்றும் போக்குவரத்து திணைக்களம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுபடுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் போது, சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு 24 புள்ளிகள் வழங்கப்படவுள்ளன.

குறித்த புள்ளி வழங்கும் முறைமை தொடர்பில் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சீன மக்கள் பயன்படுத்தும் அரிசியையே வழங்கினோம் – சீன பிரதித் தூதுவர்

சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் கவலை தெரிவித்தார்.

சீன அரசின் நிவாரண அரிசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பாக இலங்கைக்கான சீன பிரதித் தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது தொடர்பில் ஊடகங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

நான் உட்பட சீன மக்கள் உணவுக்கு பயன்படுத்தும் அரிசியையே இங்கு வழங்கினோம். அந்த அரிசியை ஸ்ரிக்கி றைஸ் (sticky rice) என்று சொல்வார்கள்.

அதனை சமைப்பதற்கான வழி முறை என்பது சற்று வித்தியாசமானது என்றார்.

பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரிசி : செல்வம் எம்.பி அரச அதிபருக்கு கடிதம்

இந்தியாவின் தமிழக அரசினால் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட அரிசி மூடைகள் தொடர்பில் தகவல் கோரி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வவுனியா அரசாங்க அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.


இக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக அரசினால் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட அரிசி மூடைகள் பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன்.

இவ்விடயத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்: தலைவர்கள் இரங்கல்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 99), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை அஹமதாபாத்தில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

தொடர்ந்து, இறுதி சடங்கிற்காக மறைந்த ஹீரா பென்னின் உடல் காந்தி நகரில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பிரதமர் மோடி இறுதி சடங்குகளை செய்தார்.

தொடர்ந்து, தனது தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார். இதன்மூம் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தெல்லிப்பழையில் கிராமசேவகர்கள் பொலீஸாருக்கு எதிராக போராட்டம்

தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக, தெல்லிப்பழை பிரதேச செயலக கிராம சேவகர்கள், பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றையதினம் முன்னெடுத்தனர்.

இப் போராட்டம் குறித்து தெரியவருகையில்,ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில தினங்களுக்கு முன்னர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இது குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை தெல்லிப்பழை பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “சமாதான அலுவலர், சமாதான நீதிவானுக்கே இந்த நிலையா?, இன்று எங்களுக்கு நாளை உங்களுக்கு, எங்கள் சேவைக்கு பாதுகாப்பு இல்லையா?, அலுவலகத்தை சேதமாக்கியோரை கைது செய், தீ வைத்தது உங்கள் கை வெந்தது உங்கள் சொத்து” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடுகள் விற்கப்பட்டதில் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம்

நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஈட்டியுள்ள தொகை 502,170.93 டொலர்களாகும். இது உள்ளூர் நாணயத்தில் 181.2 மில்லியன் ரூபாயாகும்.

இந்த ஆண்டு டொலர்களில் வீடுகள் விற்கப்பட்டு எதிர்பார்க்கப்படும் வருமானம் 05 இலட்சம் டொலர்கள்.

ஆண்டு முடிவதற்குள் அந்த இலக்கை தாண்ட முடிந்ததாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நாட்டின் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்கள் கொள்வனவு செய்வதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, முதலாவது வீடு கடந்த செப்டம்பர் மாதம் விற்கப்பட்டது. துபாயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 11 வீடுகள் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த வீடுகள் பன்னிபிட்டிய, வீரமாவத்தையில் வியத்புர வீடமைப்புத் தொகுதியில் அமைந்துள்ளது.

தற்போது இந்த ​​அடுக்குமாடி குடியிருப்பில் 2 படுக்கையறைகள் கொண்ட வீடுகள் முற்றாக விற்றுவிட்டதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

டுபாய், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஓமான் கத்தார் மற்றும் பிஜி தீவுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த வீடுகளை வாங்கியுள்ளனர்.

வீடுகளுக்குரிய பணத்தை மொத்தமாக செலுத்துவதால் 10 சதவீதம் விலைக்கழிவும் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளையுடன் ஓய்வு

நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் நாளையுடன்(சனிக்கிழமை) ஓய்வு பெற்று செல்வதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் ஒரே தடவையில் இந்தளவு பெருமளவிலான அரச ஊழியர் ஓய்வு பெற்று செல்வதால் அரச சேவையில் எத்தகைய வீழ்ச்சியும் ஏற்படாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரச ஊழியர் ஓய்வு பெறும் வயதெல்லையை கடந்த அரசாங்கம் 65 என அறிவித்த போதும் தற்போதைய அரசாங்கம் அந்த வயதெல்லையை 60 ஆக குறைத்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.