யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமல ஆகியன பௌதீக வள அபிவிருத்திக்கான நகரங்களாக அடையாளம்

கொழும்பு, அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நான்கு முக்கிய நகரங்கள் பௌதீக வள அபிவிருத்திக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த நகரங்களை இணைக்கும் வகையில் 9 பொருளாதார வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நகரின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு உரிய திணைக்களங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் முக்கிய வர்த்தக மற்றும் நிதி நகரமாக கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையானது எதிர்வரும் 8 வருடங்களுக்கான கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தை ஏற்கனவே வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளது.

அதன் கீழ் கிரிமண்டல மாவத்தை நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர மறுமலர்ச்சி வீடமைப்புத் திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொரளை நகர அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அம்பாந்தோட்டை நகரின் அபிவிருத்திக்காக தயாரிக்கப்பட்ட அம்பாந்தோட்டை பெரு நகர அபிவிருத்தித் திட்டத்தை இது புதுப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட சர்வதேச மாநாட்டு மண்டபம், துறைமுகம், மத்தள விமான நிலையம், உலர் வலய தாவரவியல் பூங்கா மற்றும் நிர்வாக வளாகம் என்பன ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. புதிய திட்டங்களாக, வங்கியின் பிராந்திய திட்டம் மற்றும் மருத்துவமனை சதுக்க அபிவிருத்தித் திட்டம் ஆகியவை எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ளன.

திருகோணமலையை ஒரு பெரிய வணிக நகரமாக அடையாளம் காணவும் மற்றும் பல உள்ளுராட்சி நிறுவனங்களை உள்ளடக்கவும் திருகோணமலை நகர அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி, திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, எண்ணெய் முனைய அபிவிருத்தி மற்றும் கப்பல்துறை கைத்தொழில் வலயம் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து திட்டங்களைத் தயாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ் குடாநாட்டுக்கான அபிவிருத்தி திட்டமும் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன் கீழ் காங்கேசந்துறை நகர அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய வசதிகளை விஸ்தரித்தல், கைத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் பல கலப்பு அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இந்த நான்கு முக்கிய நகர அபிவிருத்தி திட்டங்களுடன் தம்புள்ளை, கண்டி மற்றும் காலி அபிவிருத்தி வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலி அபிவிருத்தி திட்டம் ஏற்கனவே அதன் கீழ் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. காலி கோட்டை தபால் நிலைய மீள் அபிவிருத்தி, ஒலுவாகொட சூழலியல் விவசாய அபிவிருத்தித் திட்டம் மற்றும் காலி மத்திய கலப்பு அபிவிருத்தித் திட்டம் ஆகியவையும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போகம்பர சுற்றுலா மற்றும் கலாச்சார அபிவிருத்தி நிலையம், கட்டம்பே நடுத்தர வர்க்க வீடமைப்பு வளாகம், கட்டுகஸ்தோட்டை மொத்த விற்பனை நிலைய அபிவிருத்தித் திட்டம், கன்னோரவ கல்வி மைய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல கலப்பு அபிவிருத்தித் திட்டங்கள் கண்டி அபிவிருத்தியின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தம்புள்ளை அபிவிருத்தித் திட்டம் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளது. இதன் கீழ் பல்வகை போக்குவரத்து நிலையம், சீகிரியா சுற்றுலா அபிவிருத்தி திட்டம், தம்புள்ளை இனாமலுவ சிகிரியா வழியாக ஹபரணைக்கு செல்லும் பாதை அபிவிருத்தி, ஹபரணை சுற்றுலா அபிவிருத்தி திட்டம், கலேவெல மாற்று பாதை திட்டம் மற்றும் நாவுல பொது விளையாட்டரங்கம் நவீனமயப்படுத்தப்படவுள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக தற்காலிக பின்னடைவை சந்தித்த இவ்வாறான பாரிய திட்டங்கள் அடுத்த வருடம் துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஜனாதிபதியும் சம்மதித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கூறினார்.

சீனாவுடனான கலந்துரையாடல் வெற்றி

சீனா அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட கடன் தொடர்பான நாடுகளின் கடன் மறுசீரமைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த சீன வெளிவிவகார அமைச்சு  சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சீனா வருமாறு அழைத்திருந்தது. இதையடுத்து கிறிஸ்டலினா ஜார்ஜீவா அங்கு சென்றிருந்தார்.

சீனப் பிரதமர் லி வியாழன் அன்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை அன்ஹுய் மாகாணத்தின் ஹுவாங்ஷான் நகரில் சந்தித்து மேக்ரோ-கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உறுதிமொழி அளித்தார்.

இலங்கை, சாம்பியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்களுடன் கலந்துரையாடியதாக கிறிஸ்டலினா ஜார்ஜீவாவா குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார நிர்வாகத்தில் சீனா ஒரு பங்கேற்பாளராகவும், ஆதரவாளராகவும், பங்களிப்பாளராகவும் இருந்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் லீ கெகியாங், சீனா பல ஆண்டுகளாக IMF உடன் ஒரு நல்ல கூட்டுறவு உறவைப் பேணி வருகிறது என்றார். கடன், காலநிலை மாற்றம் மற்றும் பிற உலகளாவிய சவால்களைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் உட்பட அனைத்து தரப்பினருடனும் மேக்ரோ-கொள்கை ஒருங்கிணைப்பை சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ் இணைப்பாளர்

க்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பது என்பதே இந்த வருடத்துக்கான எமது கருப்பொருளாக இருக்கிறது.

அங்கவீனர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்டத்துறை மக்கள் போன்றோரின் உரிமைகளுக்காக அவர்களால் கூட குரல் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.

சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு இன்று யாழில் உள்ள கியூடெக்கில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று. எனக்கும் ஒரு குரல் இருக்கிறது. அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம், நீதி என்பது அவசியம் என்ற தலைப்பிலே நாங்கள் நினைவுகூருகின்றோம்.

இந்த மனித உரிமைகள் தினத்தின் முக்கியத்துவம்  குறித்த ஆவணம் 1948 டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையிலே நிறைவேற்றப்பட்டு, அனைத்துலக மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த ஆவணம் இன்று 75 வருடங்களாக நிலைத்திருக்கக்கூடிய ஓர் ஆவணமாக இருப்பதற்கு அடிப்படை காரணம், இந்த உலகத்தில் வாழ்கின்ற சகல மனித உயிர்களின் உரிமைகளை அங்கீகரித்த ஆவணமாக இது பார்க்கப்படுகிறது.

சகல மக்களையும் ஒன்றிணைப்பது மனித உரிமை. எனவே, சகல உயிரினங்களும் சமமானவை என்ற அடிப்படையில் அந்த உரிமைகளை அங்கீகரித்த ஆவணமாக பார்க்கப்படுகிறது.

இந்த வருடத்துக்கான தொனிப்பொருளில் எனக்கும் ஒரு குரல் இருக்கிறது. அனைவருக்கும் இந்த கௌரவம், சுதந்திரம், நீதி என்பது முக்கியமானதாகும். ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்கு அவர்களது உரிமைகளை பெற்றுக்கொள்வதில் பல சவால்கள் இருக்கின்றன.

குறிப்பாக அங்கவீனர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்டத்துறை மக்கள் போன்றோரின் உரிமைகளுக்காக அவர்களால் கூட குரல் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

எனவே அரசுடன் சிவில் சமூகங்களும் இணைந்து இந்த ஒதுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பது என்பதே இந்த வருடத்துக்கான எமது கருப்பொருளாக இருக்கிறது என்றார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அறிவு பூர்வமாக புரட்சியே அவசியம் – பேராயர்

அரசியல்வாதிகள் தமது அதிகாரங்களையும் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்நாட்டை பயன்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது.

வெளிநாடுகளில் கல்வி கற்று வந்த அரசியல்வாதிகளால் நாட்டின் கலாசாரம் சீரழிக்கப்படுவதற்கு மகா சங்கத்தினர் அனுமதித்து விடக்கூடாது என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கம்பஹா – குருண புனித பீட்டர் வித்தியாலயத்தில் புதிய கட்டடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உயர்மட்டத்திலுள்ளவர்கள் முதல் அடிமட்டத்திலுள்ளவர்கள் என அனைவரும் இன்று மோசடிகளுக்கு அடிமையாகியுள்ளனர்.

இதன் காரணமாக 74 வருடங்களுக்குள் உண்மைகளை பொய்யாகவும் , பொய்களை உண்மைகயாகவும் மாற்றுவதற்காக போக்கின் காரணமாகவே நாடு இன்று இந்த நிலைமையை அடைந்துள்ளது.

ஒருபுறம் போதைப்பொருளை உபயோகிப்பவர்களுக்கும் , அவற்றை தம்வசம் வைத்திருப்பவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது.

ஆனால் மறுபுறம் கஞ்சா பயிர்செய்கையை ஊக்குவிப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் கல்வி கற்றவர்கள் இலங்கைக்கு வந்து கசினோக்களையும் , இரவு நேர தொழில்களையும் ஊக்குவிக்குமாறு கூறுகின்றனர்.

எமது நாட்டின் நாகரீகம் எங்கே? பௌத்த போதனைகளால் ஒழுக்கம் மிக்க சமூகத்தினர் தோற்றம் பெற்ற இந்த நாட்டின் கலாசாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது.

இதுபோன்ற முட்டாள் தனமான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று மகா சங்கத்தினரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

முழு நாட்டையும் விற்றேனும் உண்டு வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இவர்கள் காணப்படுகின்றனர். ஒவ்வொரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு பகுதிகளையும் வழங்குவதாகக் குறிப்பிடுகின்றனர்.

இவற்றின் மூலம் எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்புவது? அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும் , பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இந்த நாட்டை உபயோகித்துக் கொள்ள வேண்டாம்.

சர்வதேச நாணய நிதியமும் , உலக வங்கியும் கூறுகின்றது என்பதற்காக நாட்டுக்கு பொறுத்தமற்ற சட்டங்களை நடைமுறைப்படுத்துவது கையேந்தும் செயற்பாட்டைப் போன்றதல்லவா? நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முழுமையான அறிவு பூர்வமாக புரட்சியே அத்தியாவசியமானதாகும் என்றார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியாவின் மேற்பார்வை அவசியம் – செல்வம் எம்.பி.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியா, மேற்பார்வை பொறுப்பை ஏற்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்து தலையீடு செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே தற்போது மேற்பார்வை பொறுப்பை ஏற்றால் நியாயமான ஒரு தீர்வை பெற முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குழுநிலை விவாத்தத்தின்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

மேலும் சர்வதேசமும் இந்த பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்த 13 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் சந்திப்பு, மனசாட்சியின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இலகு ரயில் திட்டத்தை மீண்டும் இலங்கைக்கு வழங்க ஜப்பான் விருப்பம்

ஜப்பானிய அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் நிர்மாணிக்க தயாராக உள்ள நிறுத்தப்பட்ட இலகு ரயில் திட்டத்தை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை எட்டியவுடன் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் என ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடெனகி ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தனவிடம் குறிப்பிட்டுள்ளார்.

ருவான் விஜயவர்தனவுக்கும் ஜப்பானிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில் இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் மீண்டும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் பின்னர் ஜப்பானிய அரசாங்கம் பல முதலீட்டுத் திட்டங்களின் மூலம் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் ருவான் விஜயவர்தன ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஜப்பான் விஜயத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும், அங்கு ஜப்பானிய அரசாங்கமும் இத்திட்டத்தை மீள ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

இலகு ரக ரயில் திட்டம் இடைநிறுத்தப்பட்டதால் 597.8 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.

பொதுச்சுகாதார பாதுகாப்பு: ஜனாதிபதி விடுத்த விஷேட உத்தரவு

பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைய நாட்களில் விலங்குகள் திடீரென உயிரிழந்ததையடுத்து ஜனாதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு விஜயம்

வடக்கு தெற்கு இடையே உள்ள உறவுப் பாலத்தை மேம்படுத்தும் முகமாக கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனநாயக்கவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டனர்.

வெள்ளிக்கிழமை (09) காலை கொழும்பிலுள்ள துறைமுக நகரம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குழு, மாலை கொழும்பு மாநகர சபை மற்றும் கொழும்பின் முக்கிய இடங்களை பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

குறித்த விஜயத்தில் யாழ் மாநகர சபை, வலி தென்மேற்கு பிரதேச சபை, வலி தெற்கு பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சீனா துரிதப்படுத்தவேண்டும் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சீன துரிதப்படுத்த வேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜி20 பொதுகட்டமைப்பு தொடர்பிலும் விசேடமான சில நிலைமைகள் தொடர்பிலும் நாங்கள் விசேட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்பியா இலங்கை தொடர்பான கடன் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் சர்வதேச நாணயநிதியமும் ஏனைய சர்வதேச கடன் நிதியமைப்புகளும் நிதிகளை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு ஈ-விசா வசதி

இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்  இது தொடர்பில் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

உல்லாசப் பயணம், வணிகம், மாநாடுகள் மற்றும் பலவற்றுக்காக இந்தியா செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.