புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகளில் விசேட கவனம்

சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் 400 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது தான் நீதியமைச்சராக பதவி வகித்த போது சிறைச்சாலைகளில் இருந்த விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை 110 ஆக குறைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளை துரிதப்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய கொழும்பு மற்றும் அநுராதபுரத்தில் விசேட மேல நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வழக்கு எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் 31 பேர் உள்ளனர்.

இவர்களில் 16 பேர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையிலும் 15 பேர் சந்தேகத்தின் அடிப்படையிலும் தடுத்து  வைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் உள்ள விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விடயங்களை பெற்றுக்கொண்டு, சுகாதாரத்துறை பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் ஒரு விசேட குழுவை அமைத்து சிறை கைதிகளின் வயது மற்றும் உடல்நிலை ஆகியவற்றை கருத்திற் கொண்டு ஜனாதிபதியின் அனுமதியுடன் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் பாதீட்டு அலுவலகம் ஒன்றை நிறுவ தீர்மானம்

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைவு ஆசிரியருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கான சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்தின் போது, வரைவுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்து, வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்படி, பிரதமர் இது தொடர்பான ஆரம்ப சட்டமூலம் குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதுடன், கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் அமைச்சரவையின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்திற்கொண்டு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைவு ஆசிரியருக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் ஜப்பானுக்கு – ரணில்

இலங்கை துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானிற்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வர்த்தக சம்மேளனத்தில் ஆரம்பமாகியுள்ள உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்ய ஜப்பான் விரும்பியதால் அதனை வழங்க முன்வந்துள்ளோம்.

இதேவேளை ஜப்பான் மறுப்பு தெரிவித்தால் அதனை வேறு நாடுகளிற்கு வழங்குவோம்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலாலி- சென்னை விமானசேவை 12 ஆம் திகதி முதல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

வாரத்திற்கு 04 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து புறப்படும் விமானம் காலை 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைவதற்கும் பலாலி விமான நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிய விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அனுப்பபடும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது: மத்திய வங்கி விளக்கம்

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது என்று இலங்கை மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது.

இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்படபோவதாக, பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என மத்திய வங்கி கூறியுள்ளது.

இதேபோன்று இந்த பணத்தை பலவந்தமாக இலங்கை நாணயத்திற்கு மாற்றப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை எவ்வித மாற்றமும் இன்றி அதே முறையில் தொடர்ந்து அனுபவிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவின் தொழில்நுட்ப உதவி

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் தங்கியிருப்பதனை தவிர்க்கும் வகையில் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அவசியமான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இந்திய தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டின் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

அது தொடர்பில், இந்திய தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையும் (NDDB) இந்தியாவின் அமுல் பால் நிறுவனமும் இணைந்து இந்நாட்டில் திரவப் பால் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கான ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் உள்ளுர் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், நீண்டகால திட்டத்தினூடாக இலங்கையை பாலில் தன்னிறைவடையச் செய்வதே இதன் நோக்கம் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.

விவசாய அமைச்சின் மேலதிகச் செயலாளர் கலாநிதி நிமல் சமரநாயக்க, தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ. சிரில் மற்றும் அமைச்சுக்களின் உயரதிகாரிகளும் இந்திய தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் சிரேஷ்ட பொது முகாமையாளர் ராஜேஷ் ஓங்கர்நாத் குப்தா(Rajesh Onkarnath Gupta), பொது முகாமையாளர் சுனில் சிவபிரசாத் சின்ஹா(Sunil Shivprasad Sinha), சிரேஷ்ட முகாமையாளர் ராஜேஷ் குமார் சர்மா (Rajesh Kumar Sharma) உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

இதய நோய், உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு : தாதியர் சங்கம் எச்சரிக்கை

இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றுக்கான மருந்து மற்றும் சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்றும் இலங்கை தாதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில்  திங்கட்கிழமை (டிச. 5) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அகில இலங்கை தாதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் ரவீந்திர கஹந்தவாராச்சி,

தற்போது உயிரிழக்கும் நோயாளர்களின் மரண சான்றிதழில் எந்த இடத்திலும் மருந்து இன்மையே அவர்களது உயிரிழப்பிற்கு காரணமாகும் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக குறித்த நோய் நிலைமை காரணமாகவே மரணம் ஏற்பட்டுள்ளதாகவே குறிப்பிடப்படுகிறது.

எமது நாட்டில் அதிகளவில் பதிவாவது இதய நோயாளர்களாவர். இதய நோயாளர்களுக்கு கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய அடிப்படை மருந்துகளுக்கும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களுக்கும் தற்போது வைத்தியசாலைகளில் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

இது மாத்திரமின்றி நோயாளர்களுக்கு ‘எக்ஸ் ரே’ எடுப்பதற்கான வசதிகளும் தற்போது இல்லை. இவ்வாறான தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு வைத்தியசாலை கட்டமைப்பினை நிர்வகித்துச் செல்வது? உயிரற்ற நபர்கள் நாட்டை ஆட்சி செய்வதைப் போன்ற நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

இதன் போது கருத்து வெளியிட்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பீ.மெதிவத்த, இவ்வாறான அபாய நிலைமை ஏற்படும் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் இந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அறிவித்தோம்.

ஆனால் அதனை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கான சிறந்த தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.

தற்போது தேர்தலுக்கான காலம் உருவாகியுள்ளது : எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானதல்ல – பஷில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய தற்போதைய செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றன. அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானதல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் ஊடக மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு திங்கட்கிழமை (டிச.05) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

தற்போது தேர்தலுக்கான காலம் உருவாகியுள்ளது. எனினும் அது எவ்வாறு இடம்பெறும் என்பது எமக்குத் தெரியாது. கட்சி என்ற ரீதியில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இதுவரை போட்டியிட்ட சகல தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதற்காக நாம் முழு நாட்டு மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எவ்வாறிருப்பினும் மக்களின் எதிர்பார்ப்பினை நூறு வீதம் நிறைவேற்றத் தவறியிருந்தால் அது தொடர்பில் கவலையடைகின்றோம்.

நிச்சயம் எமது குறைபாடுகளை தீர்வு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நான் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள போதிலும் , அரச நிர்வாகத்தில் ஈடுபடவில்லை. தற்போது 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அரச நிர்வாகத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதல்லவா? எவ்வாறிருப்பினும் அரச நிர்வாகத்தில் நான் இல்லாத போதிலும் அரசியலில் இன்னும் இருக்கின்றேன். நான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்ல எதிர்பார்க்கவில்லை. என்னால் பாராளுமன்றத்திற்கு செல்லவும் முடியாதல்லவா? அது தொடர்பில் நான் மகிழ்வடைகின்றேன்.

69 இலட்சம் பொது மக்கள் வாக்களித்து தெரிவு செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியை இராஜநாமா செய்தார். அதனையடுத்து பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்ட போது , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு தீர்மானித்தது. எமது இந்த தெரிவு தவறானதல்ல என்று எண்ணுகின்றேன்.

தற்போது ஆளும் , எதிர்க்கட்சி என அனைவரும் சுதந்திரமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகக் காணப்பட்டது. அந்த சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

பொது வெளியில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுவதற்கான சூழலை ஜனாதிபதி எமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார். அதே போன்று பொருளாதாரம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவார் என்று பாரிய எதிர்பார்ப்பு எம் மத்தியில் காணப்படுகிறது.

பொதுஜன பெரமுனவில் எந்தவித பிளவும் கிடையாது. மக்கள் மத்தியில் நாம் ஒருமித்தே காணப்படுகின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக உத்தியோகபூர்வமாக இன்னும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பதவி வகிக்கின்றார். எதிர்காலத்தில் புதியவர்கள் தெரிவு செய்யப்படுவர் என்றார்.

சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு !

உள்நாட்டு சமையல் எரிவாயுயின் விலைகள் இன்று (டிச.5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ 250 ரூபாய் அதிகரித்து 4,610 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் 5 கிலோ எரிவாயு 100 ரூபாய் அதிகரித்து 1,850 ரூபாயாகவும் 2.3 கிலோ 45 ரூபாய் அதிகரித்து 860 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையில் மாற்றம்

லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் ஆகிய நிறுவனங்கள் டீசலின் விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளன.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது.

நள்ளிரவு முதல் நடைமுறை இதன்படி, ஒரு லீட்டர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தற்போது 430 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாகும்.