ஒரே திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணம் அடுத்த 05 வருடங்களில் அபிவிருத்தி செய்யப்படும் – ரணில் விக்கிரமசிங்க

ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வட. மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு 50% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணம் நாட்டு பொருளாதாரத்தின் எஞ்சின் ஆக இயங்குகிறது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களையும் அதனுடன் இணைத்துக்கொண்டு 05 பிரதான எஞ்சின்களுடன் இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியா மாவட்ட கலாசார மண்டபத்தில் இன்று (05) நடைபெற் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் கல்வி,சுகாதாரம், மீள்குடியமர்த்தல், காணி, மின்சாரம்,குடிநீர், சுற்றுலா, வனவன பாதுகாப்பு, மீன்பிடித் துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு, சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜனாதிபதி அவ்விடத்திலேயே அறிவித்தார்.

கொழும்பு, கண்டி, வடக்கு இந்நாட்டின் மூன்று பிரதான கல்வி கேந்திர நிலையங்களாக உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு எஞ்சின் மாத்திரமே உள்ளது. அதற்கு 50% பங்களிப்பு மேல் மாகாணத்திலிருந்தே பெறப்படுகிறது. மற்றை மாகாணங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதார பங்களிப்பு மந்தமான நிலையிலேயே உள்ளது. நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்கு எஞ்சின்களின் எண்ணிக்கையையை அதிகரிக்க வேண்டும். அதற்காக மற்றைய மாகாணங்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும். அதற்காக சில மாகாணங்கள் அறியப்பட்டுள்ளன. வடக்கு,மேற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு பெருமளவான பங்களிப்பை வழங்கும் மாகாணங்களாக மேம்படுத்தப்பட வேண்டும்.

தற்போது நிதி பலமும் இருப்பதால் இடைநிறுப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும். அதேபோல் வெளிநாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தொடர்வதற்கான உதவிகளும் கிடைக்கப்பெறவுள்ளன.

மேலும் வட.மாகாணத்திடமிருந்து இந்நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. வட. மாகாணத்திலிருந்து காற்று மற்றும் வெப்ப நிலை காரணமாக மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தயாரிப்புக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வட. மாகாணத்தில் தயாரிக்கூடிய மின்சாரத்தின் அளவை கணக்கிட்டு பார்க்கும் போது எஞ்சிய தொகையை இந்தியாவுக்கு விற்பனை செய்து பணம் பெறக்கூடிய நிலையும் உள்ளது. அதற்கான பேச்சுவார்தைகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வட.மாகாணத்தின் விவசாயிகள் திறமையும் செயற்திறனும் கொண்டவர். விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் வட.மாகாணத்தின் விவசாய நிலங்களை முகாமைத்துவம் செய்வதன் வாயிலாக ஏற்றுமதி விவசாய தொழிற்துறையை பலப்படுத்தலாம் ” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன

நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதாளத்தில் விழுந்து கிடந்த போது நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியமை சிறப்புக்குரியதாகும்.

ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்ட போது சமயல் எரிவாயு இருக்கவில்லை, எரிபொருள் இருக்கவில்லை. மின் துண்டிப்பு தொடர்ச்சியாக நீடித்தது. வெளிநாட்டு கையிருப்பு முற்றாக தீர்ந்துப்போயிருந்தது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தினார். அதனால் இன்று வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிக்க முடிந்துள்ளது. வட. மாகாணத்தின் வீதிக் கட்டமைப்புக்களை பலப்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அதேபோல் போக்குவரத்து செயற்பாடுகளை பலப்படுத்தி சுற்றுலா வலயமாக மேம்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படு வருகின்றன.

வட. மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்

கடந்த முறை உயர்தரத்தில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை யாழ்ப்பாணம் பெற்றுக்கொண்டது. க.பொ.த. சாதாரண தர பரீட்சையிலும் சிறப்பான பெறுபேறுகள் கிடைத்திருந்தன. மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.

வட. மகாண கல்வி அபிவிருத்திக்காக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாமாக முன்வந்து செயற்திறனுடன் பணியாற்றி வருகின்றனர். அது தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியும். சுகாதார துறையில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்திகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், விவசாய அபிவிருத்தி திட்டங்கள் பலவும் தற்போதும் ஆரம்பிக்கபட்டுள்ளன. குறிப்பாக இதுவரையில் பயிர்செய்யப்படாத நிலங்களில் பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பிலான தலையீடுகளை மேற்கொண்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இப்பிரதேச விவசாயிகளின் அறுவடைகளை கொண்டுச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த முறை எமது பிரதேசத்திற்கு விஜயம் செய்த போதும் இங்குள்ள தேவைகளை ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். இம்முறையும் ஜனாதிபதியை வரவேற்று நன்றி கூறுகின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான காணிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், குளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை விவசாயத்திற்கு விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன், யானை வேலி பராமரிப்பு மற்றும் மீன்பிடி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம்

ஜனாதிபதியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கிறோம். வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் புதிய பொருளாதார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட சுமார் 12 அரசியல் கைதிகள் இன்னமும் உள்ளதாகவும், அவர்களை விடுவிக்க அல்லது பிணையில் விடுவிக்க விசேட அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

யுத்தம் நிறைவடைந்தாலும் வவுனியாவில் அபிவிருத்திப் பணிகள் குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருகின்றார். காணி விடுவிப்புப் பணிகளை நீங்கள் நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளதால், அதற்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். மேலும், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் அபிவிருத்திப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ். நோஹரதலிங்கம், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, சமூக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத் சந்திர மற்றும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம்

வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான திருமதி ஷெனுகா செனவிரத்ன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி ரௌபதி மோமுரிடம் ஒப்படைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ஜனாதிபதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பையும் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, மிலிந்த மொரகொட அந்தப் பதவியை வகித்தார்.

அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொன்னாவெளி சுண்ணக்கல் விவகாரத்தில் புவியியல் போராசிரியர்கள் மௌனம் காக்கக் கூடாது – சபா.குகதாஸ் கோரிக்கை.

பொன்னாவெளி சுண்ணக்கல் விவகாரத்தில் புவியியல் போராசிரியர்கள் மௌனம் காக்கக் கூடாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச பொன்னாவெளி பகுதியை மையமாக கொண்டு சுண்ணாம்புக்கல் அகழ்வதற்கும் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அகழ்வுப் பணி நடைபெற்றது. பின்னர் வனவளத் திணைக்களம் தலையிட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் மக்கள் ஐந்து மாதங்களை கடந்து போராடுகின்றனர்.

சுண்ணக்கல் அகழ்வு தொடர்பாக தடுப்பதற்கு அரசியல்வாதிகள் மக்களுடன் நின்று ஊடகங்களுக்கு அறிக்கை விடுவது மட்டும் தான் நடைபெறுகிறது.

ஆனால் இதனை தடுப்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் மற்றும் புவியியல் சார்பான விளக்கங்கள் உரிய நிபுணர்கள் அல்லது விரிவுரையாளர்கள் போன்ற தரப்பால் இதுவரை அரசாங்கத்தை நோக்கியோ அல்லது பொதுவாகவோ முன் வைக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட புவியியல் சார்பு கல்விமான்கள் மௌனம் காப்பது நல்லதல்ல. புவியியல் ரீதியாக யாழ்ப்பாண பாறை அமைப்பு மயோசின் கால சுண்ணக்கல் வகைக்குரியதாகும்.

அத்துடன் இளமடிப்பு பாறை வகைக்கு உரியதாகவும் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் பாரிய அகழ்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

இதனை மையமாக கொண்டு புவியியல் பேராசிரியர்கள் இவை தொடர்பான கருத்துக்களை வெளியிட வேண்டும் காப்பிரேட் கம்பனிகளினால் உலகில் பல இடங்கள் பாலை வனங்களாகவும் மக்கள் வாழ முடியாத பிரதேசங்களாகவும் மாறி வருவதை போன்று எதிர் காலத்திலும் பொன்னாவெளி பிரதேசம் மாறிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“லொகான் ரத்வத்தை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்தார்” – தமிழ்க் கைதி ஒப்புதல் வாக்குமூலம்

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தன்னைதுப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதோடு மரண அச்சுறுத்தல் விடுத்தார் என அரசியல்கைதியொருவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் நுழைந்த அமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அனுராதபுரம் சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்கைதி பூபாலசிங்கம் சூரியபாலன் என்பவரே இந்த குற்றச்சாட்டை நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.

மேலும்,” சிறைச்சாலைகள் அமைச்சர் எங்களை சந்திக்க விரும்புகின்றார் விடுதலைக்கான கையெழுத்துக்களை பெறவிரும்புகின்றார் என சிறைச்சாலைகள் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்து, எங்களை வெளியில் அழைத்து சென்று வரிசையாக நிற்க செய்தனர். சிறைச்சாலை பிரதான அதிகாரி தலைமை சிறைக்காவலர் பல பொலிஸ் அதிகாரிகள் அங்கு காத்திருந்தனர் ” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் தன்னை முழங்காலில் இருத்தியதோடு உண்மையை சொல்லுமாறு துப்பாக்கியை தலையை நோக்கி நீட்டி மரண அச்சுறுத்தல் விடுத்தார் ” என அவநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, சந்தேகநபரான இராஜாங்க அமைச்சரும் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாகாண மட்டத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 13வது திருத்தத்தின் அதிகாரங்கள் போதுமானவை – ஜனாதிபதி

அதிகாரப் பகிர்வு பற்றி கதைப்பதுபோன்று, அந்த அதிகாரங்களை தமது மாகாணங்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். நாம் அரசியல் ரீதியாக அதிகாரப்பகிர்வு பற்றி பேசுகிறோம். சட்டத்தால் இந்த அதிகாரங்கள் அனைத்தையும் வழங்கலாம். ஆனால் உங்களின் மாகாணத்தை அபிவிருத்தி செய்ய போதிய பணம் இல்லை என்றால் அதன் பெறுமதி என்ன என்று நாம் கண்டறிய வேண்டும்.

அதிகாரப் பகிர்வு குறித்து நாம் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் இன்றைய நிலவரப்படி மேல் மாகாணத்தால் மாத்திரமே தனது சொந்த செலவை செய்ய முடிகிறது. அதன்படி, எனைய அனைத்து மாகாணங்களும் மேல் மாகாணத்துடன் இணைகின்றன. எனவே, தமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய, தங்கள் சொந்த மாகாணங்களுக்குள் வலுவாக இருக்க வேண்டும்.

உங்கள் மாகாணத்தில் ஒரு வெளிநாட்டு மொழிப் பாடசாலையை நிறுவ விரும்பினால், அதற்கு அரசாங்கம் ஏன் பணம் வழங்க வேண்டும்? அதற்கான கேள்வி மற்றும் தேவை இருந்தால், நீங்கள் அதை எளிதாக ஆரம்பிக்க முடியும். மாணவர்கள் கல்வியைத் தொடர தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்குகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கல்வி இப்படித்தான் செயல்படுகிறது. இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர் செய்யத்தான் என்னால் முடியும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற “Zee Tamil” சரி கம ப “little champs 2023” போட்டியில் மகுடம் சூடிய கில்மிஷா உதயசீலன் சிறுமி தனது குடும்பத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

14 வயதான கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் என்பதோடு, இலங்கை சிறுமியொருவர் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றி வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கில்மிஷா உதயசீலன் சிறுமி நாட்டுக்கு தேடித்தந்த புகழுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, அவரது கல்வி செயற்பாடுகள் மற்றும் இசை வாழ்விலும் வெற்றிபெற ஆசிகளை தெரிவித்தார்.

இதன்போது கில்மிஷா ஜனாதிபதி முன்னிலையில் பாடல் ஒன்றையும் பாடினார்.

கில்மிஷாவை நேரில் சந்தித்து வாழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் பாடகி உதயசீலன் கில்மிஷாவையும் அவர்களது உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதில் அமைச்சர்களான கடற்றொழில் அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஊடகத்துறை அமைச்சர் பந்துலகுணவர்த்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

மீள்குடியேற்றும் பணிகள் அடுத்த வருடத்தினுள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் – ஜனாதிபதி ரணில்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

அதன்படி இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்சினை தொடர முடியாது எனவும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும், அதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வட மாகாணத்திற்கு 4 நாட்கள் விஜயமாக சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன் ஜெனரல் (ஓய்வு) ஹமூத் உஸ் சமான் கான் (Lt Gen (Retired) Hamood uz Zaman Khan) இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று (03) நடைபெற்ற மூன்றாவது இலங்கை – பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சிநேகபூர்வமாக வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு – ஆட்கொலை என நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் தொடர்பிலான வழக்கு கட்டளைக்காக நேற்று (2) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் உடலில் காணப்பட்டதாகவும், இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் தோற்ற அடிப்படையில் இது மனித ஆட்கொலை என நீதிபதி தெரிவித்தார். மேலும் இரண்டாவது சாட்சி, ஐந்து பொலிஸார் சித்திரவதை செய்ததாக தெரிவித்த நிலையில், மேலதிக சந்தேக நபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கின் விசாரணைப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும் குறித்த குற்றத்தில் பொலிசார் ஈடுபட்டிருப்பதால் நீதிமன்ற கட்டளையின் பிரதியை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்புமாறு மன்று கட்டளையிட்டது. இது சித்திரவதைக்கு உள்ளான மனித ஆட்கொலை வழக்கு என்பதால் மேல் நீதிமன்றத்திலேயே இறுதியான தீர்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் குற்றப் பத்திரத்தினை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு சட்டமாஅதிபருக்கு அறிவுறுத்தியதுடன் மூல வழக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்குமாறு மன்றின் பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

திருகோணமலை மாணவர் படுகொலை – நீதி நிலைநாட்டப்படாமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை விசனம்

திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதுகுறித்து உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை விசனம் வெளியிட்டுள்ளது.

செவ்வாய்கிழமையுடன் (2) ‘திருகோணமலை 5 மாணவர் படுகொலை’ இடம்பெற்று 18 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலை நகரில் 5 தமிழ் மாணவர்கள் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, திருகோணமலை 5 மாணவர் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், அதுகுறித்து உண்மை, நீதி நிலைநாட்டப்படுவதையும், இழப்பீடு வழங்கப்படுவதையும் உறுதிசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. அதுமாத்திரமன்றி முக்கிய ஆதாரங்கள் இருந்தபோதிலும், அது மூடிமறைக்கப்பட்டிருப்பதாகவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.