வங்கிகளில் கடனாகப் பெற்ற 8000 கோடிகளை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள்

இலங்கையில் உள்ள 10 உயர்மட்ட வர்த்தகர்கள் இரண்டு பிரதான அரச வங்கிகளுக்கு சுமார் 8,000 கோடி ரூபா கடனைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர்களின் பெயர்களை வெளியிடுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் எனவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க இதனை வெளிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் அதிக தொழில் செய்து அரசியல் பாதுகாப்பை பெற்று சம்பாதித்த பணத்தை அந்தந்த இரண்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ளதாகவும், இலங்கை வங்கிக்கு 5,000 கோடி ரூபாவையும் மக்கள் வங்கிக்கு 3,000 கோடி ரூபாவையும் இவர்கள் வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மன்னாரைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் தமிழ்நாட்டில் அகதிகளாகத் தஞ்சம்

மன்னார், சாந்திபுரம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட  இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் நேற்று வெள்ளிக்கிழமை (01) தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.

தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார், அவர்களை மீட்டு, முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர், மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.

விசாரணையின்போது அவர்கள், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே தாம் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாகவும் படகு கட்டணமாக இரண்டு குடும்பங்களும் சேர்ந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று வரை 295 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை

கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச தரநிலைகள் மற்றும் மனித உரிமைகள் மரபுகளுக்கு ஏற்ப சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் இதற்கிடையில் உறுதிமொழிகளின்படி பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அவ்வொன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது கவலை அளிக்கிறது – ஜூலி சங்

அமைதியான போராட்டக்காரர்களை கைது செய்தல் மற்றும் சிறைகளில் கைதிகளை நடத்துவது உட்பட பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து கேள்விப்படுவது கவலை அளிக்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் தடுப்புக் காவலில் இருப்பவர்களிடம் கருத்துச் சுதந்திரம் மற்றும் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்வது இன்றியமையாதது என்றார்.

குறிப்பாக அரசாங்கம் அதன் சர்வதேச கடமைகளுக்கு இணங்க பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றியமைத்து முக்கிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த விரும்புவதால், அது அடிப்படை சுதந்திரங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

‘கேக்’ விற்ற சிறுவன் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது; சபையில் ஜனா எம்.பி. ஆதங்கம்

பேக்கரியில் ”கேக் ”விற்ற ஒரு சிறுவன் மாவீரர் தினத்தை காரணம் காட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை   தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான கோவிந்தன் கருணாகரம் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

பாராளுமன்றத்தில்  இன்று (30) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இந்த விவகாரத்தை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மட்டக்களப்பில் கடந்த வாரம் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனக்கு தெரிந்த ஒரு சிறுவன் மட்டக்களப்பில் உள்ள பேக்கரியில் வேலை செய்கின்றார். அவர் கடந்த வாரம் கேக் ஒன்றை விற்றுள்ளார். அந்த கேக்கை வாங்கியவர் அதனை கொண்டுபோய் அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என பெயர் எழுதியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் குறிப்பிட்ட பேக்கரிக்கு சென்று சி.சி.டிவி கமராவை ஆராய்ந்துள்ளனர். அதில் அந்த சிறுவன் கேக்கை மாத்திரம்தான் கொடுத்துள்ளார். அதில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என எழுதிக்கொடுக்கவில்லை.

ஆனால், அந்த பேக்கரியில் வேலைசெய்த குற்றத்துக்காக அந்த சிறுவன் பயங்கரவாதத்தடை சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்படியே செல்லுமாக  இருந்தால் இந்த நாடு அழிந்து போகும் என்றார்.

கோயில்களை அழித்து அமைக்கப்படும் பௌத்த விகாரைகள்; இந்திய அரசாங்கம் தலையிடவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்து

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பழங்கால இந்து ஆலயங்களை அழித்து பௌத்த விகாரைகள், மடாலயங்களை அமைக்கும் முயற்சியை தடுப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு தலையிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

உலக அளவில் இந்துக்கள் மற்றும் கோயில்களின் பாதுகாவலராக பாரதிய ஜனதா கட்சி காட்டிக் கொள்கிறது. ஆனால், இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பழம்பெரும் கோயில் அழிக்கப்படுகின்றன. இந்துக்களின் கலாசார அடையாளங்கள் பௌத்த அடையாளங்களாக மாற்றப்படுகின்றன. இந்த விடயத்தில் பா. ஜ. க. மத்திய அரசு மௌனம் காக்கிறது. இதேநேரம், புதுடில்லி சென்றுள்ள விக்னேஸ்வரன் எம். பி., குறைந்தது ஆயிரத்து 800 ஆலயங்களை இலங்கையின் அரச இயந்திரங்கள் அழித்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

”யாழில் மலையகத்தை உணர்வோம்” ஆவணக் கண்காட்சி ஆரம்பம்

யாழ்ப்பாணம் சிவில் சமூகமாக அமைப்புக்கள், கண்டி சமூகமாக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் 1823 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 வரையான காலப்பகுதி வரை மலையகத்தின் 200 ஆண்டுகளை முன்னிட்டு யாழில் மலையகத்தை உணர்வோம், மலையகம் 200 என்னும் கருப்பொருளில், மலையகமக்களின் வாழ்வியலை ஆவணமாக்கும் கண்காட்சிகள் இன்று யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.

இதில் இந்திய வாம்சாவளியில் இருந்து இலங்கையின் மலையகத்தில் மீள்குடியேறிய தமது ஜீபனோயத்திற்காக உழைக்கும் மலையக மக்களின் வாழ்வியல் தொடர்பான கண்காட்சிகள் காட்டூன் சித்திரங்களாவும், புள்ளிவிபரத் தரவுகளாகவும், விளக்க புகைப்படச் சித்திரங்களாவும், ஆரம்ப கால முத்திரை வெளியீடுகளாகவும், ஆரம்ப கால தொட்டு இன்று வரையான காலத்தில் அரசியல்வாதிகளின் புகைப்படங்களும், ஒடுக்குமுறையை மக்களின் இயல்புகள் பற்றி இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யாழில் மலையகத்தை உணர்வோம் மலையகம் 200 என்னும் கருப்பொருளிலான மலையக மக்கள் வாழ்வியலில் ஆவணமாக்கப்படும் கண்காட்சிகள் திறந்துவைக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண கல்விப்பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் கலந்து கொண்டார்.

கிராமிய வீதிகளை புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பம்- பந்துல குணவர்தன

நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி சுமார் 20 பில்லியன் ரூபா கடனுதவி வழங்க இணங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், உரிய கடன் தொகை கிடைத்த பின்னர் வீதிப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

“இந்நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் செயற்பட சர்வதேச நிபுணத்துவத்துவமுடைய பிரான்ஸ் நாட்டு லாசார்ட் நிறுவனமும், சர்வதேச கடன்களை செலுத்தாததால் ஏற்பட்டுள்ள சட்ட விடயங்களுக்கு கிளிபர்ட் ஹான்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடன் வழங்குனர்களுடன் அவர்கள் விரிவாக கலந்துரையாடினர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களின் போது ஜப்பான், இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவைக் கோரினார்.

தற்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டை மேற்கொள்ள சர்வதேச சமூகம் உத்தியோகபூர்வமாக இணங்கியுள்ளது. அது ஒரு நாடாக நாம் பெற்ற வெற்றியாகும். நாடு மீண்டும் சுவாசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நாடளாவிய ரீதியில் நிறுத்தப்பட்டிருந்த திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும். ஒரு சில வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. மேம்பாலங்கள் அமைக்கும் பணி இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றே நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, இவ்வாறு நிறுத்தப்பட்ட அனைத்துத் திட்டங்களும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்பட உள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் சுமார் 20 பில்லியன் ரூபா கடன் உடன்படிக்கை மேற்கொண்டிருக்கிறோம். இந்தக் கடன் தொகை மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள சேதமடைந்த மற்றும் பயணிக்க முடியாத வீதிகளை புனரமைப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது. அந்த வீதிகள் குறித்து ஆராயுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். அதன்படி, அடுத்த வாரத்திற்குள் வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

புகையிரதப் பாதைகள், அதிவேகப் பாதைகள் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். செயற்திறன்மிக்க புகையிரதப் பாதைகளாக மாற்ற, புகையிரத தண்டவாளங்களை நவீனமயப்படுத்த வேண்டும். நான் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் போது இந்திய கடன் திட்டத்தின் கீழ் 160 புகையிரதப் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. இந்த புகையிரதப் பெட்டிகளுக்கான துறைமுக அபராதத் தொகையை செலுத்திய பின்னர், 123 புகையிரதப் பெட்டிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களின் அடிப்படையில்தான் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் அளவுக்கு நமது நாட்டில் பொருளாதாரப் பலம் இல்லை. துறைமுகங்கள், விமான நிலையங்கள், வருமான வரித்திணைக்களம் உள்ளிட்ட அரச வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும். தற்போதுள்ள காலாவதியான செயற்பாட்டுப் பொறிமுறையுடன் தொடர்ந்து செல்ல முடியாது.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்று இலங்கையை மாற்றுவதற்கு அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவது அவசியமாகும். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொழில்நுட்ப மாற்றத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். ” என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்

பரீட்சைக்குத் தோற்றும் இளைஞர் உட்பட 7 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இளைஞர் உட்பட 7 பேர் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு வாகனங்கள், ஜெனரேட்டர் மற்றும் ஸ்பீக்கர்களை வாடகைக்கு எடுத்ததற்காக சிலர் கைது செய்யப்பட்டனர்,

மற்றவர்கள் நவம்பர் 27 அன்று சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகளை கொண்டு சென்றதற்காக கைது செய்யப்பட்டனர்.

இதில் பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தில் பயங்கரவாதம் என வரையறுக்கப்படாத வாகனங்களை வாடகைக்கு எடுப்பது கூட பயங்கரவாதமாக கூறப்பட்டுள்ளதாக என்றும் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் நினைவு கூறுபவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பது, அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் அவநம்பிக்கையை மேலும் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகள் கண்டறிப்படும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் போராடும் – சஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை தேடிக்கொள்ளும் வரை, சத்தியத்தை தேடும் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு பரிசுத்த பாப்பரசர் அறிவிப்பு செய்துள்ளார்.

அந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் தொடர்ந்தும் இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (30) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த சபையில் பல தடவைகள் விவாதங்களை நடத்தி இருக்கிறோம். ஆனால் அதற்கு பின்னர் எதுவும் இடம்பெறவில்லை.

தாக்குதல் தொடர்பில் ஆராய குழுவொன்றை அமைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என சபாநாயகரான நீங்கள் தெரிவித்தீர்கள்.

அமெரிக்க பென்டகன் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட விசாரணைக்குழுக்கு ஒத்ததாக எதிர்க்கட்சியின் தலைமையில் விசாரணை குழு அமைப்பதே யோக்கியம் என நாங்கள் தெரிவித்திருந்தோம்.

அதேபோன்று கோத்தாபய ராஜபக்ஷ் அதிகாத்துக்கு வரும்போது இதன் சூத்திரதாரிகளை தேடுவதாகவே தெரிவித்தார்.

அதேபோன்று ஸ்கொட்யாடை பயன்படுத்திக்கொண்டு விசாரணை ஒன்றை மேற்கொள்வதாக தற்போதைய ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதேபோன்று இதுதொடர்பாக நிச்சயமாக விசாரணை மேற்கொள்வதாக ஜேர்மன் ஊடகமொன்றுக்கும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் எதுவும் இடம்பெறவில்லை. மாறாக மறைக்கும் நடவடிக்கையே இடம்பெற்று வருகிறது.

இந்த தாக்குதல் தொடர்பில் பேராயர் கர்தினால், கத்தோலிக்க சபை சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கின்றனர்.

எனவே உயிர்த்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் மன்னிப்பு கிடையாது. அவ்வாறானவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.

அதேபோன்று பயங்கரவாத தாக்குதலுக்கு நேரடிரடியாகவோ மறைமுகமாகவோ ஒத்துழைப்பு வழங்கிய எவருக்கும் மன்னிப்பு இல்லை.

அதேபோன்று இந்த தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தங்களின் கடமை பொறுப்பை புறக்கணித்த எவருக்கும் பாதுகாப்பும் இல்லை சந்தர்ப்பமும் வழங்கப்படாது.

ஏனெனில் இந்த தாக்குதல் காரணமாக பேராயர் கர்தினால் உட்பட கத்தோலிக்க மக்கள் பாரிய வேதனைக்கு ஆளாகியுள்ளனர். பயங்கரவாத தாக்குதல் ஊடாகவே எனக்கும் தந்தை இல்லாமல் போனது.

அதனால் இந்த பயங்கரவாதத்துக்கு எமது நாட்டில் இடமில்லை. பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்.

பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு கடமை ரீதியாக தங்களின் பொறுப்பை புறக்கணித்து செயற்பட்ட எவருக்கும் நாங்கள் மனிப்பு வழங்குவதில்லை.

அவர்களையும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்குவோம். இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள யாரையும் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை. அவர்களுக்கு துராேகம் இழைக்கப்போவதும் இல்லை.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை தேடிக்கொள்ளும் வரை, சத்தியத்தை தேடும் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு பாப்பரசர் அறிவிப்பு செய்துள்ளார். அந்த போராட்டத்தில் நாங்களும் இருக்கிறோம் என்ற விடயத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.