வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்க விரைவில் சிகிச்சை மையம்

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார திணைக்களத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (12) நடத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

கடந்த ஒரு வருடமாக வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் வைத்தியசாலைக்கு வரும்போது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இருப்பினும், முற்று முழுதாக போதைக்கு அடிமையானவர்களை நீண்ட காலமாக வைத்து பராமரித்து சிகிச்சை அளிப்பதற்கென சிகிச்சை நிலையம் ஒன்று வட பகுதியில் இல்லை. அவ்வாறான ஒரு விசேட நிலையத்தை அமைப்பதாயின், அதற்கு பல்வேறுபட்ட வசதிகள் தேவையாக இருக்கின்றன.

இந்நிலையில், இவ்வாறானதொரு நிலையத்தை வடக்கில் அமைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் முயற்சிகளை எடுத்திருக்கிறார்.

அதேவேளை புதிதாக ஒருவர் போதைக்கு அடிமையாகாமல் குடும்ப உறுப்பினர்களும் சமூகத்தவர்களும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா

இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா செனவிரட்ண நியமிக்கப்படவுள்ளார்.

இலங்கையின் உயர்ஸ்தானிகராக தற்போது பணியாற்றும் மிலிந்தமொராகொட செப்டம்பரில் தனது பொறுப்பினை முடித்துக்கொள்ளவுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் சேனுகா செனவிரட்ண உயர்ஸ்தானிகர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

சேனுகா நியுயோர்க்கி;ல் உள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்தின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார்.

மேலும் ஐக்கிய இராச்சியம் தாய்லாந்து ஆகிய நாடுகளிற்கான தூதுவராகவும் இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

வீரமுனை படுகொலையின் 33 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த படுகொலையினை நினைவு கூர்ந்து வீரமுனையில் ஆலய பூசையுடன்  நேற்று(12) அங்கு அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த யுத்த சூழ்நிலையில் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல்கள் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை வளவினுள்ளும் தஞ்சம் புகுந்திருந்தனர்.

வீரமுனை மற்றும் அதனை சூழவுள்ள வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை ஆகிய கிராமங்களில் சுமார் 400இற்கும் அதிகமானவர்கள் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் தாக்கப்பட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மர்மக் குழுவினரால் 400இற்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலங்காலமாக கடந்துபோக முடியாத வடுக்களான காணப்படும் பல படுகொலைகளோடு வீரமுனை படுகொலையும் 33 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட ஒரு சம்பவமாகவே பதிவாகி நிற்கின்றது.

13க்கு எதிராக தென்னிலங்கையை ஒன்றிணைப்போம் – உதய கம்மன்பில

13 பிளஸ் என்ற நோக்கத்துடன் செயற்பட்டதால் தான் 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை புறக்கணித்தார்கள்.

ஜனாதிபதியின் எதிர்கால ஜனாதிபதி கனவுக்காக 13ஐ அமுல்படுத்த இடமளிக்க முடியாது. 13 இக்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பை ஒன்றிணைப்போம் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த புதிய சட்டத்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

நடைமுறை அரசியலமைப்பின் ஒரு திருத்தமாகவே 13 ஆவது திருத்தம் காணப்படுகிறது.ஆகவே புதிதாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. 13 ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்டு 13 பிளஸ் அமுல்படுத்த ஜனாதிபதி முயற்சிக்கிறார்.

விகிதாசார தேர்தல் முறைமையை இரத்து செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். விகிதாசார தேர்தல் முறைமையை இரத்து செய்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையினத்தவர்களாக வாழும் சிங்களவர்கள் உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கான பிரதிநிதித்துவத்தில் பாதிக்கப்படுவார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள் குறித்து கவனம் செலுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்களவர்களை இரண்டாம் பட்சமாக்கியுள்ளார்.

13 பிளஸ் என்ற நோக்கத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டதால் நாட்டு மக்கள் அவரை 2015 ஆம் ஆண்டு புறக்கணித்தார்கள்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 13 அமுல்படுத்த ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றிப்பெறாது. ஆகவே 13 ஆவது திருத்தத்துக்கு எதிரான தென்னிலங்கையின் எதிர்ப்பை ஒன்றிணைப்போம் என்றார்.

கீரிமலை கேணியை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த முயற்சிக்கும் செயற்பாடுகளுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம்

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் மன்றத்தினர் கூறுகையில்,

ஒவ்வொரு சைவ ஆதாரங்களையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த நினைப்பதும், அதற்கான கண்டனங்கள் வெளிநாடுகள் வரை சென்று எதிரொலிக்கும்போது தமது செயற்பாடுகளிலிருந்து திணைக்களம் தற்காலிகமாக பின்வாங்குவதும் என்று சைவ மக்கள் தமது அடையாளங்களை ஒன்றன் பின் ஒன்றாக இழந்துவரும் துர்ப்பாக்கிய நிலைக்கு இட்டுச் செல்வது மிகவும் கவலைக்குரியது.

இவ்வாறான செயற்பாடுகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். இப்படியான சமிக்ஞைகளால் அரசாங்கம் சைவத் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான அதன் முயற்சிகளில் பாரியளவில் பாதிப்பு ஏற்படும்.

கீரிமலை கேணி, தமது நீத்த உறவினர்களின் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற வெளிநாடுகளிலிருந்தும் சைவமக்கள் வந்து செல்கின்ற இடம்.

ஈழத்தில் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேஸ்வரத்தின் அருகில் அமைந்துள்ள இந்த கேணி பல நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது. இது ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக வலி.வடக்கு பிரதேச சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகிற இடம்.

சைவத் தமிழ் மன்னன் இராவணனோடும் இராமாயணத்தோடும் தொடர்புடைய திருக்கோணேஸ்வர ஆலய சுற்றாடலில் வெளியார் ஆக்கிரமிப்பு, கன்னியா வெந்நீரூற்று தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் தலையீடு, அண்மையில் பறளாய் முருகன் கோவிலில் உள்ள ஒரு அரச மரத்தைப் பற்றிய சர்ச்சை, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமை, பின்னர் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சர்ச்சைகள் என சைவ மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்கின்றன.

எனவே, இத்தகைய அநீதியான செயலைத் தடுத்து நிறுத்துவதோடு, சிறுபான்மை மக்களின் மத வழிபாடுகளை தடுக்கின்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் அல்லர். ஆனால், எமது மத வழிபாட்டை தடை செய்ய எவருக்கும் உரிமையில்லை. அத்தகைய செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என மாண்புமிகு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக் கொள்கின்றோம் என்கின்றனர்.

இந்தியா – இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த அதிகபட்ச ஆதரவு – இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த தனது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் கடந்த 10 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போதே பிரதி உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் பல முக்கியமான விடயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, இலங்கை தரப்பில் இருந்து தனது ஆதரவைத் தெரிவித்ததுடன், பிரதி உயர்ஸ்தானிகரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மலையகம் 200 நடைப்பவனி இன்றுடன் நிறைவு

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் மலையகம் 200 எனும் நடைபவனியின் இறுதி நாளான இன்று நாலந்தாவிலிருந்து புறப்பட்டு மாத்தளையை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளையை சென்றடையவுள்ள குறித்த நடைபவணியின் இறுதி நிகழ்வுகள் மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த நடைபவணியின் கோரிக்கைகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றும் வெளியிடப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த ஜூலை 28ஆம் திகதி தலைமன்னாரில் உள்ள புனித லோரன்ஸ் தேவாலயத்தில் ஆரம்பமானது.

அன்றைய தினம் மலையகம் 200இன் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூபிக்கு மக்கள் மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அடுத்த நாள் 29ஆம் திகதி தலைமன்னார் தேவாலய வளாகத்திலிருந்து குறித்த நடைபயணம் ஆரம்பமானது.

இதேவேளை தழிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் நுவரெலியா தொடக்கம் தலவாக்கலை வரையிலும் ஹட்டனிலிருந்து தலவாக்கலை வரையிலும் நடைபவணியொன்று இடம்பெற்று வருகின்றது.

மலையகம் 200 எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த நடைபவணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெளத்த மயமாக்கலை தடுத்து நிறுத்திய ஆளுநருக்கு எதிராக பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை நிலாவெளி வீதியில் இலுப்பைக்குளத்தில் தமிழ் மக்கள் வாழுமிடத்தில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பிக்குகள் சிலர் இன்று (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை புல்மோட்டை வீதியின் ஒரு பாதையை மறித்து பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பொலிஸார் பாதையின் ஒரு பகுதியின் ஊடாக போக்குவரத்தை ஒழுங்கமைத்தனர்.

விகாரை அமைக்க அத்திவாரமிடப்பட்ட பகுதிக்கு சென்ற பிக்குகள் அங்கு தற்போது புதிதாக நடப்பட்ட அரச மரக்கன்றுக்கு முன்பாக சமய அனுஷ்டானங்களை மேற்கொண்டு, பின்னர் வீதிக்கு வந்து இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம், புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை குறித்த பகுதியில் எது வித விகாரையும் இருக்கவில்லை என அக்கிராமத்தில் உள்ள வயோதிப பெண்ணொருவர் உட்பட சிலர் ஊடகங்களுக்கு தமது கருத்துக்களையும் வெளியிட்டு இருந்தனர்.

இதனையஅடுத்து. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களுக்கும், பௌத்த மதகுரு ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம் பெற்ற போதிலும் பொலிஸாரினால் சமரசம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த மொரவெவ மஹா திபுல்வெவ ஸ்ரீ இந்திரராமதிபதி பொல்ஹெங்கொட உபரதன தேரர், இந்த இடத்தில் விகாரை அமைப்பதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆளுநர் செந்தில் தொண்டமான் மகாசங்கத்தை வீதிக்கு இழுத்தார்.இப்போது இப்படி என்றால் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படுமாயின் பிக்குகள் தமது சமய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார்.

இரா.சம்பந்தனின் அறிவுறுத்தலின் பிரகாரமே ஆளுனர் இந்த உத்தரவை பிறப்பித்ததாக பிக்குகள் குமுறினர்.

கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க சட்டவிரோத குடியேற்றங்கள் இடித்து அகற்றப்பட்டன

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் நாவலடி பிரதான கொழும்பு வீதியின் அருகில் உள்ள காணிகளைச் சுற்றி அமைக்கப்பட்ட வேலிகள் மற்றும் தற்காலிக கட்டடங்களை கனரக இயந்திர சாதனத்துடன் அகற்றும் பணியினை பொலிசாரின் பாதுகாப்புடன் மகாவலி அமைச்சின் அதிகாரிகள் இன்று (11) மேற்கொண்டனர்.

இதன்போது பொலிசாருக்கும் காணிகளை அமைத்தோருக்குமிடையில் கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. நிலமைகளை கட்டுப்படுவதற்கு பெருமளவு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நாவலடி- கொழும்பு வீதியில் சட்டவிரோதமான முறையில் மகாவலி அமைச்சுக்குரிய சுமார் 28 ஏக்கர் அளவுடைய காணிகளை அபகரித்து வேலிகளை அமைத்து தற்காலிக குடியிருப்புக்களை அமைக்கும் நடவடிக்கையில் ஓட்டமாவடியைச் சேர்ந்தோர் சிலர் கடந்த ஒரு மாத காலமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனை தடுக்கும் நடவடிக்கையில் பிரதேச செயலக மற்றும் வன இலாகா திணைக்களங்களுக்கு காணி அதிகாரம் இல்லை என்ற காரணம் தெரிவித்து நிர்வாக நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.

இதன் காரணமாக கடந்த 07.08.2023.ஆம் திகதியன்று பிரதேசத்திற்கு வந்த மகாவலி அமைச்சின் அதிகாரிகள் குறித்த இடத்தில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்ட வேலிகள் மற்றும் தற்காலிகக் கட்டடங்களை அகற்றும்படி மகாவலி அமைச்சின் அதிகாரிகள் பொலிசாரின் உதவியுடன் தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

அகற்றுவதற்கான கால அவகாசம் சம்பந்தப்பட்டோரினால் அன்றைய தினம் அதிகாரிகளிடம் வேண்டப்பட்டிருந்தது.

வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த நிலையில் அவர்கள் அகற்றாததினால் மகாவலி அமைச்சிற்குரிய காணி என்ற காரணத்தினால் இன்று அவற்றை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் 5ஆம் திகதியன்று, கிழக்கு மாகாண ஆளுனரின் கவனத்துக்கு கொண்டு சென்றருந்தார். இந்த சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றும்படி ஆளுனர் உடனடியாக உத்தரவிட்டிருந்தார்.

புத்தூரில் குமரகுருபரன் விளையாட்டரங்கு திறந்துவைக்கப்பட்டது

புத்தூர் ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் விளையாட்டரங்க திறப்புவிழா நேற்று புதன்கிழமை (09.08.2023) மலை குமரகுருபரன் மைதானத்தில் வெகு சிறப்புற நடைபெற்றது.

ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் கனடா கிளையின் நிதிப் பங்களிப்பு முயற்சியின் வாயிலாகக் காணி கொள்வனவு செய்யப்பட்டு அக்காணியில் கந்தர் ஐயாத்துரை மற்றும் ஐயாத்துரை அன்னப்பிள்ளை ஆகியோரின் ஞாபகார்த்தமாக இவ் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டு அவை உத்தியோகபூர்வமாக சன சமூகநிலையம் மற்றும் விளையாட்டுக் கழகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் விருந்தினர் வரிசையில் – பிரதம விருந்தினராக ஓய்வுநிலை வைத்திய அதிகாரி திருமதி இரவீந்திர வசந்தமாலா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் அதிபர் சின்னத்தம்பி திரிகரன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும்,வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ், யாழ் போதனா வைத்தியசலையின் வைத்திய கலாநிதி இராசரத்தினம் துஷிந்தன், பொது சுகாதார பரிசோதகர் அனுதர்சன் ஆகியோரும் புலம்பெயர் உறவுகளில் இருந்து புத்தூர் குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் கனடா கிளை சார்பாக அதன் தலைவர் செல்லப்பா சிவராஜா மற்றும் நிர்வாகக் குழுசார்பாக செல்லையா சோதிநாதன், இராதுரை சிவாசம்பு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சனசமூக நிலையத்தின் புதிய விளையாட்டரங்கில் கலை நிகழ்வுகள் மைதான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.