அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள கடன்மறுசீரமைப்பு செயற்திட்டமானது இதுவரைகாலமும் உள்நாட்டு வங்கிக்கட்டமைப்பு தொடர்பில் நிலவிய நிலையற்ற தன்மைக்குத் தீர்வுகாண்பதற்கான மிகமுக்கிய முதற்படியாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம், இருப்பினும் வேறுசில விடயங்களில் சிக்கல்கள் தோற்றம்பெறக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
‘இலங்கையின் அபிவிருத்தி பிணையங்கள் தொடர்பில் அரசாங்கம் 3 விதமான மறுசீரமைப்புக்களை முன்மொழிந்திருக்கின்றது. இருப்பினும் பிணையங்கள் வடிவிலான அக்கடன்களை உள்நாட்டு நாணயமாக மாற்றுகின்ற தெரிவையே வங்கிகள் பெரும்பாலும் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கின்றோம்’ என சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, இவ்வாறு நிர்ணயிக்கப்படும் பங்களிப்பானது கடன்மறுசீரமைப்பின் விளைவாக வங்கி நிதிக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்கும் வகையில் அமையவேண்டியது அவசியம் என்று அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
‘தற்போது முன்மொழியப்பட்டுள்ள செயற்திட்டத்தின் பிரகாரம் மறுசீரமைப்பை மேற்கொள்ளும்போது, அது வங்கிக்கட்டமைப்பின்மீது வைப்பாளர் நம்பிக்கை இழப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்தாது என்றே நாம் நம்புகின்றோம்.
இருப்பினும், நிதியீட்டல் மீதான அழுத்தங்கள் வங்கி தொடர்பான தரப்படுத்தல்களில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். எனவே, இந்தத் தாக்கத்தை சீர்செய்வதற்கு, கடன்மறுசீரமைப்பு நடைமுறைகள் குறித்த இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அதன்விளைவாக வங்கி நிதியில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் மதிப்பீடு செய்யவேண்டும்’ என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வலியுறுத்தியுள்ளது.
மேலும், உள்ளகக் கடன்மறுசீரமைப்பு தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பானது இலங்கையின் வங்கிக்கட்டமைப்பை சூழ்ந்து காணப்பட்ட நிலையற்றதன்மைக்குத் தீர்வுகாண்பதற்கு வழிகோலியிருந்தாலும், சில அச்சுறுத்தல்கள் இன்னமும் தொடர்வதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
