ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்; உயர் அடுக்கு பாதுகாப்பிற்கு உத்தரவு

விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி நாட்டிற்கு வரும் போது உயர் அடுக்கு வாகன பேரணிக்கு, எதிரான அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் சில வகையான நாச வேலைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆயுதக் குழுக்களின் தாக்குதல் சாத்தியம், சினைப்பர் தாக்குதல் அபாயம், பொது மக்களால் குழப்ப நிலைகளை ஏற்படுத்தும் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் சாத்தியம் உள்ளிட்ட 6 விடயங்கள் தொடர்பான அபாயம் உள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, ஜனாதிபதி மற்றும் பிரமுகர்களுக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எவ்வாறு பாதுகாப்பை வழங்குவது என்பது தொடர்பில் 8 அம்சங்களின் கீழ் நீண்ட விளக்கத்துடன் அறிவுறுத்தல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் – ஜனா எம்.பி

இந்த நாட்டில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கவேண்டும் திட்டமிட்டு  1949 ம் ஆண்டு முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கு மாகாணத்திலே கல்லோயா குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்த காலம் தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் காணிகள் அபகரித்து விகாரைகள் அமைக்கும்  திட்டங்களை செய்து வருகின்றனா் என வடக்கு கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33வது நினைவு அஞ்சலி சனிக்கிழமை (24) அனுஸ்டிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர்  உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை போராட்டத்திலே  பல நாட்டகள் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடுக்கள் நிறைந்த நாளாக இருக்கின்றது.

அந்த நாட்களின் ஒரு நாளாகவே 19 யூன் 1990 ம் ஆண்டு விடுதலைப் போரட்ட பாதையிலே ஒரு கறுப்பு புள்ளி விழுந்த நாளாகும்.

தமிழ் மக்கள் ஆயுத போராட்டத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல ஆயுத போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து நாங்கள் தமிழினம் இரண்டாம் தர பிரஜைகளாக இந்த நாட்டிலே அழைக்கப்பட்டோம் .

இவ்வாறு தனி சிங்களசட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட 1957, 1958, 1978, போன்ற கலவரங்களை தொடர்ந்து மிகவும் மோசமாக83 கலவரத்தை உருவாக்கி கப்பல் மூலம் வட கிழக்கிற்கு சொந்த நாட்டிலே அகதிகளை அனுப்பிய வரலாறு ஆகும்.

இவ்வாறு தமிழர்கள் மீது நடந்தேறிய இனழிப்பிற்கு எதிராக அகிம்சை மூலமாக போரடிய எமது தலைவர்கள் அதில் நம்பிக்கையிழந்து உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் ஆயுத போராட்டத்திற்குள் தள்ளப்பட்டோம் அதனால் 1969 ஆயுத போராட்டம் முதல் முதல் தமிழ்ஈழ விடுதலை இயக்கம் அதில் பிரபாகரன் உட்பட போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் இருந்தார்கள்.

இந்த நிலையில் 83 கலவரத்தை அடுத்து ஈழவிடுதலை போராட்டம் ஒரு வித்தியாசமான பாதைக்குள் சென்றது. முன்னணியில் 5 போராட்ட இயக்கங்கள் இருந்தது அப்போது அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் தான் எமது இலக்கை அடையமுடியும் என 1984 ம் ஆண்டு ஈழ தேசிய விடுதலை முன்னணி என்று ஈரோஸ், ரொலே, ஈபிஆர்எல்எப். என மூன்றும் ரி.என்.எல்.எப். உருவாகியது பின்னர் விடுதலைப் புலிகளும் அதில் இணைந்தனர் என்பது வரலாறுகள்.

ஆனால் விடுதலைப் புலிகள் மாத்திரம் வடகிழக்கிலே இந்த போராட்ட பாதையில் நின்று இருந்தாலும் 2009 மே 18 உடன் இந்த ஆயத போராட்டம் முற்று முழுதாக மௌனிக்கப்பட்டது இந்த போரட்டம் மௌனிக்கப்படும் முன்னர் பல தலைவர்களை இழந்திருக்கின்றோம் அதில் போரட்ட தலைவர்கள் மாத்திரமல்ல மிதவாத கட்சியான தழிழர் விடுதலைக் கூட்டணி தமிழரசு கட்சி போன்றவற்றின் தலைவர்கள் அமிர்தலிங்கம் உட்பட பல தலைவர்களை இழந்திருக்கின்றோம்.

ஜே,ஆர். ஜெயவர்த்தனா காலத்திலே சமாதன பேச்சுக்கே இடமில்லாமல் தமிழ் மக்களின் குரல்வலையை நசுக்கினார் 2009 வரை தமிழ் மக்களை வஞ்சித்துக் கொண்ட அரசு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு வடகிழக்கில் வித்தியதசமான ஒரு திணிப்பை செய்துவருகின்றது

அதுதான் தமிழர் தேசத்தில் விகாரைகள் அமைக்கவேண்டும் தமிழரின் குடிபரம்பலை எவ்வளவு வேகமாக மாற்றி அமைக்கவேண்டும் இணைந்திருந்த வடகிழக்கை வெலிஓயா குடியேற்றம் மூலம் நில தொடர்பற்ற மாகாணங்களாக இரண்டு மாகாணங்களையும் பிரிப்பது போன்ற நடவடிக்கையை திட்டமிட்டு செய்துவருகின்றது

தற்போதைய எதிர்கட்சி தலைவாரான சஜித் நல்லாட்சி காலத்தில் புத்தசாசன அமைச்சராக இருந்தபோது வடகிழக்கில் ஆயிரம் விகாரை அமைக்கவேண்டும் என்ற அவர் தற்போது இலங்கையிலே ஆயிரம் தாது கோபுரங்களை படிப்படியாக அமைக்கவேண்டும் என கூறியுள்ளார்.

ஆகவே தற்போது வடகிழக்கில் நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு தமிழர் பிரதேசங்கள் எங்கும் விகாரைகள் குறிபாக உயர்ந்த மலைகளில் அமைப்பது சுற்றுலா பயணிகள் கூட இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை பறைசாற்றுவதற்காக இந்த திட்டங்களை செய்து வருகின்றனர்.

குருந்தூர் மலையிலே பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த காணிகள் இன்று தொல்பொருள் என்று பெயரில் அபகரிக்கட்டுள்ளது சரத்வீரசேகர, உதயகம்பன்வெல, விமல்வீரன்ச போன்ற அரசியல்வாதிகள் தங்களது நிரச்சி நிழலுக்குள் செயலாற்றிக் கொண்டு வடகிழக்கு மாகாணங்கள் தமிழ் தாயகம் என தம்பட்டம் அடிக்கும் தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக சரத்வீரதேசகர தெரிவித்தார்

எனவே தமிழர்களுடைய தாகம் விடுதலை நோக்கம் இன்னும் தனியவில்லை என அமைச்சருக்கு தெரியவேண்டும். அதேவேளை கோட்பாயாவின் விசுவாசியான புதிதாக தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வந்த வெளிநாட்டு அமைச்சர் ஒரே இரவில் தீர்வை கொடுக்கமுடியாது கிடைப்பதை பெற்றுக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார் எனவே இனப்பிரச்சனை தோன்றி எத்தனை ஆண்டுகள் என அவருக்கு தெரியாமல் இருக்கலாம், ஒரே இரவில் இந்த பிரச்சனைக்கான தீர்வை கேட்கவில்லை

நாடு சுதந்திரமடைந்த காலம் இருந்தே தமிழர்கள் இனப்பரச்சனையை தீர்ப்பதற்காக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் தந்தை செல்வா பேச்சுவார்த்தை , பண்டா செல்வா ஒப்பந்தம்,  டட்லி செல்வா ஒப்பந்தம், மற்றும் திம்பு பேச்சுவார்த்தை, 2001 பேச்சுவார்த்தை 2009 பின் மகிந்தவுடன் 18 சுற்று பேச்சுவார்த்தை. உட்பட தற்போதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

தற்போதைய ஜனாதிபதி ஒரு சர்வதேச அழுத்தத்தின் மத்தியிலே இந்த நாட்டை நடாத்துகின்றார் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது அதன் மூலம் உருவாகிய குறைமாத குழந்தையான மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது இந்த 13 திருத்த சட்டத்தை முற்று முழுதாக தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்காக யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை,

ஆனால் அரசியல் அதிகாரத்தில் ஆசையற்ற பத்மநாபா கிடைப்பதை எற்றுக் கொண்டு அதிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்வோம் என்ற அடிப்படையில் அந்த மாகாணசபை அதிகாரத்தை பெற்றுக் கொண்ட முதல் தலைவர் பத்மநாபா அதிகாரத்தில் ஆசையில்லாத காரணத்தால் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை அப்படிப்பட்ட ஒரு தலைவரது ஞாபகாத்த தினம்தான் இந்த 19 யூன் என்பது.

எனவே நாங்கள் கிடைப்பதை பெற்றுக் கொண்டு எங்கள் மக்களுக்கு துரோகம் செய்வதற்கு நாங்கள் அரசியல் செய்யவில்லை. தமிழ் தேசிய கூட்டடைப்பு விடுதலைப் புலிகள் இயங்கு நிலை இருந்த காலத்திலே 2001 உருவாக்கப்பட்டது அப்போது கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து தமிழ் மக்களுக்கு ஒரு பலமான அரசியல் சக்தி இருக்கவேண்டு என்ற காரணத்திற்காக இந்த கூட்டமைப்பை உருவாகினோம்.

2009 ம் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு அசைக்கமுடியத சக்த்தியாக இருந்தது 2004 தமிழ் விடுதலை கூட்டணி வெளியேறியது 2010 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேறியது 2015 ஈபிஆர்எல்எப் வெளியேறியது அதேபோன்று 2023 தமிழரசு கட்சி வெளியேறியுள்ளது ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பலமான 5 கட்சிகள் கொண்ட அணியாக செயற்படுகின்றோம். என்றார்.

கோட்டாபாய ராஜபக்சவை இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறச்செய்வது என்பது சாத்தியமற்ற விடயம் – ஜஸ்மின் சூக்கா

இலங்கைஅரசாங்கம் கோட்டாபாய ராஜபக்சவை பொறுப்புக்கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் என சர்வதேச உண்மை நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பபாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

ஜூரிஸ்ட் இணையத்தளத்திற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரதூரமான மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது ஜேவிபி காலத்தில் கோட்டாபய ராஜபக்ச மாத்தளைக்கு பொறுப்பாக காணப்பட்டகாலம் வரை நீள்கின்றது என்பதை மனித புதைகுழிகள் குறித்த புதிய அறிக்கை வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அன்று தொடக்கம் இன்றுவரை ஜேவிபி காலத்தில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களோ அல்லது யுத்தத்தின் இறுதியில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களோ பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இடம்பெற்ற சம்பவங்களிற்காகவோ அல்லத யுத்தமுடிவில் இடம்பெற்ற சம்பவங்களிற்காகவோ இந்த அரசாங்கம் கோட்டாபாய ராஜபக்சவை பொறுப்புக்கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அதன் இருப்பிற்காகவும் ஆதரவிற்காகவும் கோட்டாபய ராஜபக்சவிற்கு கடமைப்பட்டிருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஐ.நா முழு ஒத்துழைப்பு வழங்கும் – ஐ.நா. பொதுச் செயலாளர் உறுதி

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸின் பரிஸ் நகரில் நடைபெறுகின்ற ‘புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்’ தொடர்பிலான மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டாரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு உறுதிளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடம் தெளிவுபடுத்தினார்.

நிலையான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுகின்ற போதும் வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

நிலையான அபிவிருத்து இலக்குகளை மேம்படுத்தும் அதேநேரம் காலநிலையினால் ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புக்களை மட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட உபாய மார்க்க திட்டங்களை எடுத்துக்காட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கமைய முன்னெடுக்கப்படும் ‘காலநிலை சுபீட்சத்துக்கான திட்டமிடல்’ தொடர்பிலும் செயலாளர் நாயகத்துக்கு விளக்கமளித்தார்.

பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் , கடன் மறுசீரமைப்பு மற்றும் காலநிலை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களின் போது இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இடையிலான ஒத்துழைப்புகளை பலப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 51 வாகனங்களை காணவில்லை

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு இறுதி வரை ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த வாகனங்களின் பெறுமதியையும் நிர்ணயிக்க முடியாதுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்துக்குச் சொந்தமான 53 வாகனங்கள் ஏனைய அரச நிறுவனங்கள், விஹாரைகள், சமயத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 2022ஆம் ஆண்டு 27 வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவுக்காக அலுவலகம் ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

சீனா இலங்கையின் மிகச்சிறந்த நண்பன் முக்கியமான அபிவிருத்தி சகா – அலிசப்ரி

சீனா இலங்கையின் மிகச்சிறந்த நண்பன் முக்கியமான அபிவிருத்தி சகா என எனவும் இலங்கை எப்போதும் ஒரு சீன கொள்கையை உறுதியாக ஆதரிக்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

சீனாவில் சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கையின் மிகச்சிறந்த நண்பன் முக்கியமான அபிவிருத்தி சகா என தெரிவித்துள்ள அலி சப்ரி சீனாவின் தன்னலமற்ற உதவியை இலங்கை பாராட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

சீன நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

இலங்கையும் சீனாவும் ஒருவரையொருவர் எப்போதும் ஒருவரையொருவர் மதித்துள்ளன ஆதரித்துள்ளன என தெரிவித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் சகவாழ்வு பரஸ்பரம்நன்மைக்குரிய ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான உதாரணமாக திகழ்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் ஆலோசனை !

2023 உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி இவ்விடயத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் முன்மொழியப்பட்டது.

இந்த பிரேரணை தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதால், வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளது.

வேட்புமனுக்களை இரத்து செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்த நிலையில் இதற்காக நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டுமென ஜனக வக்கும்புர கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சர்வதேச சமூகத்திற்கு பொய் சொல்கிறார் என தமிழ்த் தலைவர்கள் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவில் தெரிவித்தமை போன்று இலங்கையில் நிலைமை இல்லை எனவும், அவர் சர்வதேச சமூகத்திற்கு பொய் சொல்கிறார் என்றும் வடக்கு கிழக்கு தமிழ்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் அரசியல் கைதிகள் விடயத்தில் மாத்திரம் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டாலும் காணி விவகாரத்தில் தொல்பொருள் திணைக்களம் ஊடாகப் புதிதாக பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

முன்னைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தால் முடிவுகள் எடுக்கப்படவில்லை என தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கைகளில் இருப்பதாலேயே மக்கள் அதனை நிராகரித்துள்ளனர் என்றும் காணி விடுவிப்பில் எதுவும் முழுமையாக நடைபெறாத நிலையில் லண்டனில் ரணில் விக்ரமசிங்க பொய்யுரைத்துள்ளார் என செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் காலக்கெடுக்களை கூறி தீர்வு வரும் என ஏமாற்றும் ஜனாதிபதியின் உத்திகளை கண்டு ஏமாறாமல், சர்வதேச சமூகம் உண்மைய நேரில் வந்து அறிந்துகொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பேச்சுவாரத்தைக்குச் சென்ற சம்பந்தன், அவர் ஏமாற்றியதாக தெரிவித்துள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க அதை எப்படிப் பயன்படுத்தியிருக்கின்றார் என்பது லண்டன் பேச்சில் தெரிவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கங்களுக்காகவே அரசாங்கத்தால் உதவித்திட்டங்கள் அறிவிப்பு – டலஸ் அழகப்பெரும

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான உதவித்திட்டங்கள் அரசியல் நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதால் அவற்றின் இலக்குகளை அடைய முடியவில்லை என சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த நிலையினுள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் பல முரண்பாடுகளை தோற்றுவித்துள்ள அதேவேளை இத்திட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் வெளிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாவல பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பொருளாதார பாதிப்பால் பலர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நிவாரண திட்டம் சமூக கட்டமைப்பில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் ஏழ்மையில், அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் கொண்டுவரப்படுவதாகவும் இந்த உதவித் திட்டம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை நேரடியாக குறிவைக்கிறதா என்பது சந்தேகமே என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார ரீதியில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி, தேர்தல் ஒன்று அவசியமில்லை என மக்களே குறிப்பிடும் நிலையை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மனிதப் புதைகுழிகள் அகழ்வின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியம் என பிரித்தானிய எம்.பி. க்கள் வலியுறுத்தல்

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் அகழ்வு செய்யப்படும் போது அங்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலையம் ஆகிய 4 அமைப்புக்களும் ஒன்றிணைந்து ‘இலங்கையிலுள்ள பாரிய மனிதப்புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வுப்பணிகளும்’ என்ற தலைப்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

செம்மணி, மாத்தளை, மன்னார், சூரியகந்த உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள மனித புதைகுழிகள் குறித்தும் அவற்றை அகழ்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் தடைகள் என்பன பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக மாத்தளை மனிதப்புதைகுழி அகழ்வின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் அவ்வறிக்கையை மேற்கோள்காட்டியுள்ள சியோபைன் மெக்டொனாக் மற்றும் விரேந்திர ஷர்மா ஆகியோர், இலங்கையில் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் முறையான ஆதார சேகரிப்பு இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு நாம் சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.