குற்றவாளிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுவது அவசியம்

நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது தொடர்பிலான வழிகாட்டுதல்களை வெளியிடுவது முக்கியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவை விடுதலை செய்வதற்கான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி பெண்கள் ஊடக அமைப்புக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

ரோயல் பார்க் கொலை வழக்கு எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பில் விவாதம் செய்ய முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சட்ட விதிகளுக்கு அமைவாக அதிகாரம் பயன்படுத்தப்பட்டாலும் ஜனாதிபதிகள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்ப்பதற்கு தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இல்லை என சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆகவே ஆவணங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நீதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மேலதிக விசாரணை ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மேலதிக சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளார்.

அரச நிறுவனங்கள் அரச நிதியை வீணடிக்கின்றன – பிரதமர் தினேஷ் குணவர்த்தன

திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் காணப்படுவதாகவும் இது நாட்டுக்கு பாரிய பிரச்சினை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகம் சட்டமூலம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த வீண் விரயங்களை கட்டுப்படுத்த முன்னுரிமையளித்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வீண் விரயங்களை குறைத்துக் கொள்வதே எமது இலக்காகும். அதனை முக்கியமான இலக்காகக் கொண்டு அதற்கு முன்னுரிமையளித்து நாம் செயற்படவேண்டியது அவசியமாகும்.

யார் என்ன சொன்னாலும் திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் கிடையாது என எவராலும் கூற முடியாது. இது நாம் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினையாகும்.

சில புள்ளி விபரங்களில் காணப்படும் பிழைகள் மற்றும் அதிலிருந்து திசை திருப்பும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடிகள் குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறான மோசடிக்காரர்களின் சுமையையும் இறுதியில் திறைசேரி அல்லது நாடாளுமன்றத்திற்கே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அது பொது மக்களுக்கான பாரிய பாதிப்புகளுக்கே வழிவகுக்கும் எனக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த இந்தியா மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மற்றும் காங்கேசன்துறை இடையில் ரயில் கடவைகளில் உள்ள சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போது அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாதையை நவீனப்படுத்துவதற்கு வசதியாக கொழும்பில் – காங்கேசன்துறைக்கான சேவைகள் இந்த வருடம் ஜனவரி மாதம் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இந்தியாவால் நீடிக்கப்பட்ட கடன் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் இம்மாதத்தில் முடிவடைய இருந்தபோதிலும் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது.

இதேவேளை, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பயண நேரத்தை ஒன்றரை மணி நேரத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்க இந்தியா நிதியுதவி

காலி மாவட்டத்திலுள்ள 200 பாடசாலைகளில் இந்தியாவின் நிதியுதவியின் கீழ் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைகளை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க ஆகியோருக்கிடையில் திங்கட்கிழமை (19) இத்திட்டம் தொடர்பான இராஜதந்திர குறிப்புக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன , துணை உயர் ஸ்தானிகர், வினோத் கே. ஜேக்கப் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்திய அரசின் மானிய உதவியின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், வசதி குறைந்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையின் கல்வித் துறையில் இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல மானியத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இலங்கைக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த உதவி தற்போது சுமார் 5 பில்லியன் டொலர்களாகவுள்ளது.

அதில் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானியமாகும். நாட்டின் 25 மாவட்டங்களில் 65க்கும் மேற்பட்ட மானியத் திட்டங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 20க்கும் மேற்பட்ட மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன.

இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் 1990 சுவசேரிய ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை இலங்கையில் இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட முதன்மையான மானியத் திட்டங்களாகும்.

ஒரு தசாப்தகாலப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள் – ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்

இலங்கைக்குக் கடந்த ஒரு தசாப்தகாலமாக விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட ஆணையாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க்கின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (19) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் முதல்நாள் அமர்வில் தொடக்கவுரை ஆற்றுகையிலேயே இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இலங்கையை எடுத்துநோக்குமிடத்து, பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் கூறுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பது கவலைக்குரிய விடயமெனச் சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க், ‘இருப்பினும் இலங்கை தொடர்ச்சியாக எம்மோடு இணைந்து செயலாற்றிவருகின்றது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஒரு தசாப்தகாலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணைபெற்ற பலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததாகவும், அவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டுமெனத் தாம் ஊக்குவிப்பதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் திங்கட்கிழமை (19) ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தொடரின் திங்கட்கிழமை (19) ஆரம்ப அமர்வில் இலங்கை குறித்து மிகச்சொற்பளவான விடயங்கள் மாத்திரமே பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை (21) இலங்கை நேரப்படி மாலை 6.30 மணி (ஜெனிவா நேரப்படி பி.ப 3 மணிக்கு) இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை வாசிக்கப்படவுள்ளது.

இவ்வறிக்கையில் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற 51/1 தீர்மானத்தின் பிரகாரம் நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல்மோசடிகள் என்பன மனித உரிமைகள்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகள் தமது கரிசனைகளை வெளிப்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டாலும், இம்முறை இலங்கை தொடர்பில் புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படமாட்டாது.

உயர் இராணுவ அதிகாரியின் பாதுகாப்பிற்கு 7 வாகனங்கள்

உயர் இராணுவ அதிகாரி ஒருவரின் வாகனத்துடன் ஏழு வாகனங்கள் பாதுகாப்பிற்காக சென்றமை குறித்து காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கேள்வியெழுப்பியுள்ளார்.

உணவு கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் இந்த சந்தர்ப்பத்தில் இதுபோன்ற உயர் அதிகாரிகளுக்கு அதிகளவு பணத்தை செலவழிப்பது சரியா என்றும் அவர் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

மூன்று மாதங்களாக முதியோருக்கான உதவித்தொகையும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறான சூழலில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு ஏழு வாகனங்களை அணிவகுப்புக்கு அழைத்துச் செல்ல பணம் ஒதுக்கியது யார் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்க அரசாங்கம் தீர்மானம்

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ள உலக வங்கி

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் கூட்டத்தில் இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் டொலர்களை உலக வங்கி அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கிடைக்கும் மிகப்பெரிய நிதி இதுவென ரொய்ட்டர்ஸ், செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிதியில், 500 மில்லியன் டொலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காகவும் 250 மில்லியன் டொலர்கள் இரண்டு தவணைகளில் கிடைக்கும் என்றும் உலக வங்கி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வு ஆகியவற்றை உலக வங்கி அவதானித்து வருகின்றது.

இதனை அடுத்து நிர்வாகக் கூட்டத்தில்அனுமதி கிடைத்தவுடன் முதல் தவணை இலங்கைக்கு உடனடியாக வழங்கப்படலாம் என உலக வங்கி வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுப் பயணங்களுக்காக 5 கோடி ரூபாய் செலவிட்டமையை அலி சப்ரி மறுப்பு

வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 5 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் கணக்கான ரூபாவை செலவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அமைச்சர் இந்த பணத்தை 7 வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த தகவல் தவறானது என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட ஐந்து உத்தியோகபூர்வ தேசிய தூதுக்குழு பயணங்களுக்கும், அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்குமான இரு தரப்பு பயணங்களின் மொத்த செலவாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயணங்களின்போது தாம் தூதுக்குழுக்களுக்கு தலைமை ஏற்றுச் சென்றதாக தெரிவித்துள்ள அலி சப்ரி, தம்மை தவிர மேலும் 22 அதிகாரிகள் இந்த பயணங்களில் இணைந்திருந்ததாகவும் ட்விட் செய்துள்ளார்.

இந்திய ரூபாயை இலங்கையின் பயன்படுத்த அனுமதிக்க கூடாது – விமல் வீரவன்ச

நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைக்கு காரணமான தரப்பினரால், அதனை மீட்டெடுக்க ஒருபோதும் முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த நல்லாட்சி காலத்தில்தான் மத்திய வங்கி பிணை முறி மோசடி மேற்கொள்ளப்பட்டது.

இவர்தான் நாட்டின் பிரச்சினையை ஏற்படுத்திய பிரதான நபர். நாட்டில் இவரால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரப் பிரச்சினையானது, கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் தீவிரமடைந்தது.

இதனை நாம் சுட்டிக்காட்டியபோதுதான், அரசாங்கத்திலிருந்து நாம் அன்று ஒதுக்கப்பட்டோம்.
இந்த நிலையில், நாட்டின் இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி தங்கள் நாட்டு ரூபாயை இலங்கையில் பயன்பாட்டுக்கு விடுவதற்காக இந்தியா தற்போது முயற்சித்து வருகிறது.

இப்போதும் யாழில் சில கடைகளில் இந்தியா ரூபாய்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ரூபாயை இங்கே பயன்படுத்தினால், அந்நாட்டின் சுங்கத்தையும் எமது நாட்டின் சுங்கத்தையும் ஒன்றாக இணைந்து விடுவார்கள்.

அப்படியானால், இந்திய பொருட்கள் எதற்கும் சுங்கவரி அறவிடப்பட மாட்டாது. இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பாரிய நன்மையாக அமைந்துவிடும்.

இதற்கு தான் விக்கிரமசிங்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. நாட்டில் பிரச்சினையொன்றை ஏற்படுத்திய இந்தத் தரப்பினரால் ஒருபோதும் அந்தப் பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.