இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மேம்பட்டு வருவதாக ஐ. நா. தெரிவிப்பு

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டமும் இணைந்து மேற்கொண்ட பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு பணி அறிக்கையின்படி, இலங்கையில் 3.9 மில்லியன் மக்கள் அல்லது சனத்தொகையில் 17 வீதமானவர்கள் மிதமான நிலையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை கடந்த ஆண்டு ஜூன்/ஜூலையில் இருந்து கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது.

இதேவேளை கிட்டத்தட்ட 10,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர், இது கடந்த ஆண்டு 66,000 பேராக இருந்தது.

உணவுப் பாதுகாப்பின் முன்னேற்றம் சிறந்த உணவு நுகர்வில் இருந்து உருவாகிறது என ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. இது உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடை காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவை காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

நேர்மறையான போக்கு இருந்தபோதிலும், சில மாவட்டங்களில் குறிப்பாக கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்றவற்றில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகமாகவே உள்ளது.

தோட்டத் துறையில் உள்ள தேயிலைத் தோட்ட சமூகங்களுக்குள்ளும், சமுர்த்தி போன்ற சமூக உதவித் திட்டங்களை நம்பியிருக்கும் தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியிலும் மிக உயர்ந்த அளவிலான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை காணப்பட்டது.

கடந்த 13 ஆண்டுகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2,793 பேர் கைது

கடந்த 13 ஆண்டுகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2,793 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 2, 474 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதானவர்களில் 184 பேர் சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களில் 44 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 31 பேர் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களிலேயே இந்த தகவல் தெரியவந்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகள் எதிர்காலத்தில் வெளிவரும் – பேராயர்

ஈஸ்டர் தாக்குதலை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஊடாகவே, எதிர்காலத்தில் தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் வெளிவரும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழாவின் விசேட ஆராதனையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று இடம்பெற்றது.

காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய இந்த திருவிழாவின் திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.

விசேட ஆராதனை நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பணத்தை வீசி எறிந்து கொள்கைகளை காட்டி சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது என தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்திலும் இன்னும் சில இடங்களிலும் குண்டுதாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் யாவர்? எவ்வாறு சம்பவித்தது என்று முறையான விசாரணைகளை நடத்தினார்களா? அதன் உண்மை தன்மை குறித்து ஆராய்தார்களா? சட்டம் எங்கே? நீதி எங்கே? இன்று வரையில் எதற்கும் பதில் இல்லை.
எங்களை ஏமாற்றலாம் என்று இவர்கள் நினைக்கின்றார்கள்.

நாங்கள் ஏமாறுவதில்லை. நீங்கள் தான் ஒருநாளில் ஏமாறுவீர்கள். தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் உயிர்களை காவுகொள்ள அனுமதி வழங்கியவர்கள், தைரியத்தை வழங்கியவர்கள், ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இன்று உயர்ந்த பதவிகளில் இருக்கின்றார்கள்.

ஆனால் அதற்கான பலன் உங்களை தேடி வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கூடிய விரைவில் நீங்களே உங்களை காட்டிக்கொடுத்து உங்களுக்கூடாகவே அந்;த உண்மைகள் அனைத்தும் வெளிவரும்.
இந்த தேவாலயத்தில் மிகப்பெரிய உற்சவம் ஒன்றை நடத்துவதற்கு அந்த நாள் வரும் வரை காத்திருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்குவதான கடிதம் மீளப்பெறப்பட்டது

பதவிக்காலம் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றின் அதிகாரங்களை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதம் மீளப் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பொது நிர்வாக செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிடக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருன ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, சமர்ப்பணங்களை முன்வைத்து, பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதம் மீளப்பெறப்பட்டதாக நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் புதிய கடிதம் ஒன்றை வெளியிடுவதற்கான செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக அரசாங்க சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஃபர்மான் காசிம், இந்த மனுவை தாக்கல் செய்த பின்னரே குறித்த கடிதம் நீக்கப்பட்டதாகவும், எனவே இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, அந்த மனுவை எதிர்வரும் 26ஆம் திகதி மீள அழைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் சட்டம், உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பு கட்டளைச் சட்டம், ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது.

எவ்வாறாயினும், சட்டங்களை தனித்தனியாக திருத்துவதற்கு பதிலாக, புதிய தேர்தல் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

சீன கடலட்டை பண்ணைகள்: மோடியிடம் உதவிகோரும் வடக்கு கடற்தொழிலாளர்கள்!

வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜரொன்றை கையளித்தனர்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து இன்று (13) காலை கலந்துரையாடினர்.

இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதி அ.அன்னராசா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 15ம் திகதி இந்தியாவில் மீனவர்களுடைய மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிற நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, தீவக கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பான நடவடிக்கைகள் வெளிப்படையாக இடம்பெற்று வருகின்றது. இதனால் கடற்றொழிலாளர்களும் மீன் சாப்பிடும் மக்களும் பாதிக்கப்படுவர்.

டொலர் வருகிறது ஏற்றுமதி இடம்பெறுகிறது என்பதற்காக அரசாங்கம் சட்டவிரோதமான தொழிலை கனகச்சிதமாக அனுமதிக்கிறது.

கடற்றொழில் இருந்து வடக்கு கடற்றொழிலாளர்களை அந்நியப்படுத்தும் முயற்சி தற்போது இடம்பெற்று வருகின்றது. சீன கடலட்டைப் பண்ணைகளால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சட்டவிரோதமான தொழில் மற்றும் சீன கடலட்டைப் பண்ணை விவகாரங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆறுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்களும் மூன்று கடற்றொழிலாளர் சமாசங்களும் இணைந்து குறித்த மகஜரை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு வழங்கினர்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறும் வாய்ப்பை தவறவிட்டு மஹிந்த ராஜபக்ச தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் – சபா குகதாஸ்

மகிந்த ராஜபக்ச ஜனாபதியாக இருந்தபோது நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெறும் வாய்ப்பை தவறவிட்டு தற்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (12.06.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“தமிழ்க் கட்சிகள் சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் நாட்டைக் குழப்பாமல் உள்நாட்டில் அரசுடன் கதைத்து அரசுக்கு நிபந்தனைகள் விதிக்காது பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஊடகங்களுக்கு மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதுவித நிபந்தனையும் இன்றி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இரண்டாவது தடவை இருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை 18 சுற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டதை மகிந்த மறந்திருக்கலாம் ஆனால் தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.

தமிழர் தரப்பு முன்வைக்கும் உடனடிப் பிரச்சினைகளை நிபந்தனைகளாக தென்னிலங்கை மக்களுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்யும் சிங்கள தலைவர்களால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதற்கு மகிந்த போன்றோரின் அறிக்கைகள் சிறந்த எடுத்துக் காட்டு.

தமிழர்களின் உடனடிப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணுகின்ற நல்லெண்ண வெளிப்பாட்டை ரணில் அரசாங்கம் நியாயமான முறையில் தீர்க்க முன் வராவிட்டால் தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்க செயற்பாட்டை வெற்றிகொள்ள முடியாது.

தென்னிலங்கை மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணம் உள்ள இனவாத சிங்கள தலைவர்கள் இருக்கும் வரை நாட்டில் உள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வுகான முடியாது” என தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தகாலம் நிறைவடைந்ததாலேயே தொல்பொருள் திணைக்கள தலைவர் இராஜினாமா – விதுர விக்கிரமநாயக்க

பேராசிரியர் அநுர மனதுங்கவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் அடிப்படையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் , அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

தொல்பொருளியல் எனக் குறிப்பிட்டு அண்மைக்காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் வரலாற்று சான்றுகள் அழிக்கப்பட்டு வருவதோடு, காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் கடந்த வாரம் இலங்கை தமிழரசுக்கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன் போது தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளால் தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் தொடர்பில் ஆதரங்களுடன் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

விகாரைகளை அண்மித்த பகுதிகளில் தேவைக்கு அதிகமாக காணிகளை கையகப்படுத்துவதை நிறுத்துமாறும் , அரச காணிகளையோ அல்லது தனியார் காணிகளையோ ஆக்கிரமிப்பதற்கும் தொல்பொருளியல் திணைக்களத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் ஜனாதிபதி கடும் தொனியில் எச்சரித்திருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட சர்ச்சைக்குரிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்பாக ஊடகங்களிலும் , சமூக வலைத்தளங்களிலும் வெளியான காணொளிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையிலேயே பேராசிரியர் அநுர மனதுங்க தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்திருந்தார்.

இது தொடர்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வினவிய போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தொல்பொருளியல் தொடர்பில் வடக்கு , கிழக்கில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் எவ்வித தெளிவுபடுத்தல்களும் வழங்கப்படவில்லை. எனினும் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இது தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

தொல்பொருளியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகக் காணப்படுகின்றமையால் ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நியமனம் பெற்றிருந்தார். அதன் பின்னர் அவரது ஒப்பந்த காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய மீண்டும் பேராசிரியராக தனது பணிகளை ஆரம்பிக்க வேண்டுமென்பதால் தொல்பொருளியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார் என்றார்.

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் தேர்தல் சட்டங்களில் திருத்தம்

தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூர் அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய 2023ஆம் ஆண்டின 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகள் வலுவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம், ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூர் அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்திற்கான இடைநேர் விளைவான கருமங்களுக்கான திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த திருத்தங்களை மேற்கொள்வதற்காக கடந்த ஜனவரி 23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமனம்

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் செவ்வாய்கிழமை (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.

சத்தியப் பிரமாண நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவித்த நவீன் திஸாநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிற்காக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

கடந்த காலங்களில் நாடு கடுமையான நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த போதிலும் ஜனாதிபதியால் நடைமுறைப்படுத்தப்பட்ட சரியான திட்டங்களின் பலனாக சாதகமான மாற்றங்களை காண முடிவதாக சுட்டிக்காட்டிய அவர், சப்ரகமுவ மாகாணத்தின் அபிவிருத்திக்காக அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக சப்ரகமுவ மாகாண மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பில் விசேட அவதானம் செலுத்தும் அதேநேரம் அரசியல் கட்சி தலைவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் டிகிரி கொப்பேகடுவ கடந்த 8ஆம் திகதி தனது பதவி விலகலை அறிவித்தார்.

கடந்த மே மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கிழக்கு, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிழக்கு ஆளுனராக செந்தில் தொண்டமான் , வடக்கு ஆளுனராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் வடமேல் மாகாண ஆளுனராக லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோர் புதிய ஆளுனர்களாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized