சீன நிறுவனம் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் கைச்சாத்து

உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைக்கு அமைய, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பாக இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சினோபெக் ஃப்யூயல் ஒயில் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சீனா, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முடித்துள்ள நிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக அதிபர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

போலிக்கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்காவில் கைதான சீன பிரஜைகள் இராஜாங்க அமைச்சரின் தலையீட்டில் விடுதலை

போலி கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட சீன பயணியை இராஜாங்க அருந்திக பெர்ணாண்டோ தலையிட்டு விடுதலை செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலிகடவுச்சீட்டுடன் சீன பயணியொருவரும் அவரது இரு நண்பர்களும் கொழும்பு விமானநிலையத்திற்குள் நுழைய முயற்சி செய்ததாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்த வேளை அவர்கள் அடாவடியான விதத்தில் நடந்துகொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகள் அவர்களை நாடு கடத்துவதற்காக தடுத்துவைத்திருந்தவேளை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தலையிட்டு விடுவித்துள்ளார்.

18ம் திகதி கொழும்பு விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்த சீன பயணிகள் வேறு நாட்டொன்றின் கடவுச்சீட்டை கையளித்துள்ளனர் அவை போலியான கடவுச்சீட்டுகள் என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் விடயத்தில் தலையிட்ட இராஜாங்க அமைச்சர் போலி கடவுச்சீட்டுடன் கைதுசெய்யப்பட்டவர் ஒரு முதலீட்டாளர் என தெரிவித்து அவரை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இரண்டு சீன பிரஜைகளும் ஒரு எகிப்திய பிரஜையும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முதலீட்டாளர்கள் போலிகடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டமை குறித்து அதிகாரிகள் ஆச்சரியம் வெளியிட்டனர்.

கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவ சீனா கிழக்கு பல்கலையுடன் ஒப்பந்தம்

கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவுவதற்கு கிழக்கு பல்கலைக்கழகத்துடன் யுனான் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

அண்மையில் இந்த இரு பல்கலைக்கழகங்களும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே ஆசிரியர் உறுப்பினர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள், கூட்டு ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள், கன்பூசியஸ் நிறுவனம் நிறுவுதல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் முழுவதிலும் உள்ள பல்கலைக் கழகங்களில் சீனா கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவி வருகின்றது.

இந்த நிறுவனத்தை உளவு நடவடிக்கைக்காக அந்த நாடு பயன்படுத்துகிறது என்று சர்ச்சை கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் காந்தியை கொலைசெய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன் அழித்தோம்! – அலி சப்ரி பெருமிதம்

32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அழித்தது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட தினத்தை குறிக்கும் விதத்தில் டுவிட்டரில் அலி சப்ரி இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.

32 வருடங்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அவர்களின் நிதிதிரட்டும்  சர்வதேச வலையமைப்பினர் அரசியல் ஆதரவாளர்கள் புலனாய்வாளர்கள் இணைந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் முன்னாள் பிரதமரை கொலை செய்தனர் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத இயக்கத்தை 14 வருடங்களிற்கு அழித்தது, இலங்கையில் அமைதி சமாதானத்தை ஏற்படுத்தியது என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாணய நிதியத்தின் 2ஆவது தவணை கடன் கிட்டியதும் ஜனாதிபதித் தேர்தல்!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது தவணை கடன் கிடைத்ததும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலை விரைவுபடுத்தும் வகையில் அரசமைப்பு திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன. இதையடுத்து, அதனை விரைவாக உருவாக்கி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று உயர்மட்ட அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் திட்டமாக உள்ளது. எதிர்வரும் செப்ரெம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக் கொள்ளப்படும். இதன் பின்னர் மக்களுக்கு சலுகைகளை வழங்கி – ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண் டும்.

ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் மூன்று மூத்த சட்ட வல்லுநர்கள், அதற்கு தேவையான அடிப்படை செயல்பாடுகளை ஏற்கனவே தொடங்கி விட்டனர் என்றும் அறிய வருகின்றது.

செப்ரெம்பருக்கு முன்னர் கடன் சீரமைப்பு நிறைவு

‘கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்து பொருளாதாரத்தை ஒரு நிலையான நிலைக்கு கொண்டு வர முடியும்” என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த பொருளாதாரக் கொள்கைக்கு பொதுஜன பெரமுனவும் தேவையான ஆதரவை வழங்கியது.

இந்த நாடு மீள வேண்டுமானால் அந்த ஆதரவு மிகவும் முக்கியமானது. இந்தநிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து. திவால் நிலையில் இருந்து வளமான நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கை வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதலீட்டாளர்கள் எவரும் நாட்டுக்கு வரவில்லை.

இந்த சூழ்நிலையிலேயே நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவேண்டியேற்பட்டது.

சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் பிச்சைக்காரர்களாக வாழ விரும்புவதில்லை. அவர்கள் கண்ணித்துடனேயே வாழ விரும்புகின்றனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால் இலங்கைக்கு அவற்றை நிறைவேற்றுவதை தவிர வேறு வழிகள் இல்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ லங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காணி விமானப்படை முகாமுக்கு வழங்க முயற்சி

திருகோணமலை மாவட்டம் குச்சிவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட பகுதியில் உள்ள 298 ஏக்கர் காணியில் உள்ள ஒலிபரப்புக் நிலையம் மூடப்பட்டு விமான படை முகாம் ஒன்றை நிர்மாணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஸ்ரீ லங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் இந்த காணி கடந்த 75 வருடகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காணியில் பிரத்தியேக ஒலிபரப்புக் நிலையம் அமைந்துள்ளது. உலகில் மிகப்பெரிய பிராந்தியங்களை உள்ளடக்கிய சிறு மற்றும் நடுத்தர அலைகளை ஒளிப்பரப்புகிறது.

இவ்வாறான ஒலிபரப்பு நிலையம் ஓமானில் உள்ளதுடன் அது தற்போது முழு நேரமும் இயங்குவதில்லை.குறைந்த செலவில் நீண்ட தூரம் செல்லும் இந்த அலைவரிசைகளை உலகின் பெரும்பாலான நாடுகள் மதம் மற்றும் ஏனைய பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றன. தற்போதைய வானொலியின் கீழ் சுமார் 75 ஆயிரம் டொலர்கள் வருமானம் பெறுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த பகுதி வலுவான அலைகள் இருக்கும் பகுதி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் 2021 ஆம் ஆண்டு வருமானத்தை ஈட்டிக் கொள்ளாத, பயன்படுத்தாத அரச வளங்களை மறுசீரமைப்பது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்த அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு அமைய வானொலி கூட்டுத்தாபனம் முறையான,சிறந்த நடவடிக்கைளை பின்பற்றி கனடா நாட்டு நிறுவனத்துடன் ஒன்றிணைந்து சூரிய சக்தித் திட்டத்தை ஆரம்பிக்கும் பணிகளை மேற்கொண்டது.

இதற்கமைய இந்த காணியை இலவச மானியப் பத்திரம் மூலம் ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்துக்கு மாற்றி உரிய செயற்திட்டத்துக்கு அமைய வருமானம் ஈட்டவும்,அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியத்தை இடைநிறுத்தவும் அமைச்சரவை இரண்டாவது அங்கீகாரம் வழங்கியது.

இதன்படி ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மேற்படி விதிவிலக்கு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், அனைத்துப் பரிந்துரைகளையும் பெற்றதன் பின்னர் இறுதி எழுத்துப்பூர்வ அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்களை காணி அமைச்சு 2023.04.11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் கையளித்தது.இந்த ஆவணங்களை முறையாக ஆராயாமல்,சுற்றுச்சூழல் தொடர்பில் அவதானம் செலுத்தாமல் ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தை மூடி விட்டு விமானபடை முகாம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ஆராய விமானப்படையின் அதிகாரிகளை நியமித்தார்.

இதனடிப்படையில் விமானப்படையின் குழு ஒன்று 2023.05.03 ஆம் திகதி விமானப்படையின் குழுவினர் திருகோணமலைக்கு சென்று நில அளவை நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் படை முகாம்கள் காணப்படுகின்ற நிலையில் இந்த பகுதிக்கு மேலதிகமாக விமானப்படை முகாம் ஒன்று தேவையில்லை என சிவில் உரிமைகள் அமைப்பு குறிப்பிடுகின்றமை கவனத்துக்குரியது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி உட்பட உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக சிவில் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

சம்பிக்க ரணவக்க தலைமையில் ஐக்கிய குடியரசு முன்னணி திங்களன்று அங்குரார்ப்பணம்

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி என்ற புதிய அரசியல் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை (22) மஹரக தேசிய இளைஞர் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் உட்பட முக்கிய தரப்பினர் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ’43ஆவது படையணி’ என்பதை ஆரம்பித்து செயற்பாட்டு ரீதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

இளைஞர், யுவதிகளை முன்னிலைப்படுத்தி புதிய அரசியல் கட்சியான ‘ஐக்கிய குடியரசு முன்னணி’ நாளை மறுதினம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய குடியரசு முன்னணி கட்சியை முன்னிலைப்படுத்தி போட்டியிடுவார் என அரசியல் களத்தில் குறிப்பிடப்படுகிறது.

Posted in Uncategorized

இலங்கையில் முதலீடுகளை செய்யுமாறு புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ரணில் கோரிக்கை

போரினால் ஏற்பட்ட அச்ச நிலை காரணமாக இடம்பெயர்ந்து பன்னாடுகளிலும் வாழும்  புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வர்த்தகங்களை முன்னெடுக்கவும், முதலீடுகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  அதற்கு தேவையான ஒழுங்குகளை செய்யுமாறும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே இந்த விடயத்தை ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதன்போது ஜனாதிபதியிடம் கருத்துரைத்த ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார,

புலம்பெயர் தமிழர்கள் பலர் இலங்கையில் அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைக்க விரும்புகின்றனர். எம்முடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினர்.

குறிப்பாக, ஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க புலம்பெயர் தமிழர்கள் ஆர்வமாக உள்ளனர். உண்மையில், அவர்கள், நெருக்கடியான இந்த நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு தயாராகவே உள்ளனர். சம்பிரதாயபூர்வமான தமிழ் அரசியல் கட்சிகள் மீது புலம்பெயர் தமிழர்களுக்கு தற்போது நம்பிக்கை இல்லை. அவர்கள் அதனை விரும்பவும் இல்லை.

இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் வளமான மாற்றத்தையே புலம்பெயர் தமிழர்கள் விரும்புகின்றனர். வடக்கு, கிழக்கில் உள்ள இளையோரும் அதனையே கோருகின்றனர்.

எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வடக்குக்கு மீண்டும் செல்லவுள்ளேன். எனவே, இந்த நேரத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிப்பது சிறந்தது என்று நீண்ட விளக்கத்தை அளித்தார்.

இதற்கு மறுமொழியளித்து ஜனாதிபதி ரணில் கூறுகையில், புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அழையுங்கள். அவர்களுக்கு தேவையன ஒத்துழைப்புகளை வழங்குங்கள். அரசியலில் ஈடுபடும்போது, உலக அரசியல் போக்கை போன்று தேசிய அரசியல் நகர்வுகள் குறித்தும் மதிப்பாய்வு செய்யுங்கள். இது அனைவருக்கும் முக்கியமானது என கூறினார்.

இலங்கையுடன் புதிய சோபா உடன்படிக்கை எதனையும் முன்னெடுக்கும் திட்டமில்லை- அமெரிக்கா

இலங்கையுடன் மீண்டும் புதிய சோபா உடன்படிக்கை எதனையும் முன்னெடுக்கும் திட்டம் எதுவுமில்லை என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களிற்கான அமெரிக்க பணியகத்தின் துணை உதவிச்செயலாளர் அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வது குறித்து தற்போது அமெரிக்கா சிந்திக்கவில்லை என அவர்தெரிவித்துள்ளார். இது குறித்து நாங்கள் தற்போதைக்கு சிந்திக்கவில்லை என அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளிற்கும் இடையில் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் 2019 இல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் அமெரிக்கா இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமான விதத்தில் செயற்படுகின்றது என தெரிவித்துள்ள அப்ரீன் அக்தர் குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு விவகாரங்களில் மிகவும் நெருக்கமாக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படைக்கு அமெரிக்க கடற்படை கலத்தை வழங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா விசேட கடல்ரோந்து விமானமொன்றை இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அது அடுத்தவருடம் இலங்கைக்கு வந்துசேரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தோபசுபிக் பிராந்தியத்தில் இலங்கையை அமெரிக்க வலுவான சகாவாக கருதுகின்றது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.