முன்னாள் யாழ் நகர முதல்வர் மணிவண்ணன் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இரசிய ஒப்பந்தம்

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் டயலொக் நிறுவனம் அமைக்கும் விளம்பரம் தொடர்பில் சபை உறுப்பினர்களின் அனுமதி இன்றி ஒப்பந்தம் செய்தமை தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு உடன் கொண்டு செல்ல மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான ஜனவரி மாத கூட்டம் நேற்று சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய மாநகர சபை எல்லைப்பரப்பிற்குள் 10 இடங்களில் விளம்பரம் அமைக்க 2021 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெற்ற மாதக் கூட்டத்தின் போதும் 2022 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கூட்டங்களின் அடிப்படையிலாக டயலொக் நிறுவனம் அமைக்கும் விளம்பரப் பணங்களில் மேற்கொள்ளும் திட்டம் தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறான தீர்மானங்களிற்கு முரணாக பல விடயங்கள் உட்புகுத்தப்பட்டு சபைக்கு பாதகமாக தனியார் நிறுவனத்தின் நன்மையை மட்டும் முதன்மைப்படுத்தி இரகசியமாக தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் ஒன்றில் சபையின் பார்வைக்கோ அனுமதிக்கோ தெரியாமல் தயாரித்த ஒப்பந்தம் தொடர்பில் சபை அனுமதியும் இன்றி முன்னாள் முதல்வரும் ஆணையாளரும் ஒப்பமிட்டுள்ளனரா என உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் இது தொடர்பில் நான் ஒப்பமிடவில்லை என்பதோடு என்னிடமோ அல்லது எமது அலுவலகத்திலோ அதன் பிரதிகள் எவையும் இல்லையெனப் பதிலளித்தார். இதனால் இதற்கு ஆணையாளர் பதிலளிக்கவேண்டும் என சபையில் கோரப்பட்டபோது அதில் முன்னாள் முதல்வர் ஒப்பமிட்டு நானும் ஒப்பமிட்டேன் என ஆணையாளர் ஜெயசீலன் பதிலளித்தார். அவ்வாறானால் அதன் பிரதி ஒன்றை வழங்குமாறு பல தடவை கோரியபோதும் சபைக்கு சமர்ப்பிக்கவில்லை.

இதனையடுத்து சபைத் தீர்மானங்களிற்கு முரணாகவும், நிதி நடவடிக்கைக்கு முரணாகவும் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் ஒன்றில் சபைக்கு சமர்ப்பிக்காது இரகசியமாக மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு ஒப்பமிட்ட இருவரும் மட்டுமே பொறுப்பு எனவும் சபையில் பேசப்பட்டதற்கு மேலதிகமாக துரையப்பா விளையாட்டரங்கையும் தாரை வார்த்து அவர்களின் விளம்பரங்களில் சேதம் ஏற்படுவது முதல் அத்தனை பராமரிப்பும் சபைக்குரியது. அத்தோடு ஏனைய இடங்களிலும் நாம் விளம்பரம் வழங்க முடியாது என்பதோடு இந்த ஒப்பந்தத்தில் இருந்து மாநகர சபை விலகுவதானால் இரட்டிப்பு பணம் வழங்கவேண்டும் என எழுதியுள்ளபோதும் நிறுவனம் விலகினால் எந்த நட்டஈடும் கிடையாது போன்ற இன்னும் பல மோசமான விடயங்கள் உண்டு.

எனவே இந்த அடிமை சாசனத்திற்கு நிகரான ஒப்பந்தம் தொடர்பில் சபையில் தற்போது பிரசன்னமாகியுள்ள எவருமே பொறுப்பு அல்லர் என்பதோடு இந்த தீர்மானத்தையும் ஒப்பந்த பிரதியையும் உடனடியாக உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாகாண ஆளுநருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க கோருவதோடு அதுவரை இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் சபை மேற்கொள்ளக்கூடாது.

இன்றைய திகதிக்கு இந்த ஒப்பந்தம் சார்பில் நிதி ஏதும் அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு இதனை உடனடியாக மொழி பெயர்த்து அத்தனை உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைப்பதோடு இந்த தீர்மானம் இன்றே நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார். நேற்றைய மாநகரசபை அமர்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் கலந்து கொண் டிருந்தன.

மாவையும் சிறிதரனும் விரைவில் கட்சியிலிருந்து நீக்கம் ; கிளிநொச்சியில் சந்திரகுமாருடன் ஆபிரகாம் சுமந்திரன் கூட்டணியமைப்பார் – பா.கஜதீபன்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியிலிருந்து தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அகற்றப்பட்டு வருகிறார்கள். கட்சித்தலைவர் மாவை சேனாதிராசா அடுத்த ஓரிரண்டு மாதங்களில் கட்சியை விட்டு வெளியே அனுப்பப்படுவார். அதன் பின்னர் சி.சிறிதரன் வெளியே அனுப்பப்படுவார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுாராட்சி தேர்தலில் குத்து விளக்குச் சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று பளையில் நடந்தபோது அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் முதல் முதலில் ஒட்டுக்குழுக்களாக கருதப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் இரண்டு. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரசுமே ஒட்டுக்குழுக்களாக கருதப்பட்டு, அதன் தலைவர்கள் சுடப்பட்டனர். இரண்டு ஒட்டுக்குழுக்களின் தலைவர்களும் இந்தியாவுக்கு தப்பியோடிவிட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால், ஆகக் கடைசியாக தடை நீக்கப்பட்ட இரண்டு ஒட்டுக் குழுக்களும் இவைதான். அதாவது, விடுதலைப் புலிகளினால் அதிக காலம் ஒட்டுக்குழுக்களாக தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் இவை.

போராட்ட காலத்தில் கொழும்பிலிருந்த ஆபிரகாம் சுமந்திரன், யுத்தத்துக்கு பின்னர் வடக்குக்கு வந்து போராளிகளை குற்றம்சாட்டுகிறார். அவர் உண்மையான இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்காரனா என்பது எனக்கு தெரியாது. இந்த மண்ணிலும், மக்களிலும் பற்றுக் கொண்டவரா என்பதும் எனக்கு தெரியாது. ஆனால், ஒரு இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினராக விடுதலைப்புலிகள் மீது வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவரது கட்சியை நீண்ட காலம் தடை செய்து, தலைவர்களைச் சுட்டதால் அவர் புலிகளில் வெறுப்பை வெளிப்படுத்தக் கூடும்.

தனக்கு ஆயுத வழியில் உடன்பாடில்லையென அவர் கூறுவதன் பின்னணி இதுதான். இப்பொழுது அவருடன் இணைந்திருப்பவர்களும் இந்த வகையானவர்கள்தான். 3 வருடங்கள் வரை மகிந்த ராஜபக்ஷவின் அமைப்பாளர்தான் எம். ஆபிரகாம் சுமந்திரனின் வலது கை.

இந்தவகையானவர்கள் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் உண்மையாக இருப்பார்கள் என நம்புவது முட்டாள்தனம். தமிழ் அரசுக் கட்சிக்குள் உண்மையான தமிழ் தேசிய உணர்வுடன் செயற்பட்ட யார் இன்று இருக்கிறார்கள்? அனைவரும் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். பேராசிரியர் சிற்றம்பலம், அருந்தவபாலன் என நீண்ட இந்த பட்டியல், இப்பொழுது கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவில் வந்து நிற்கிறது.

மாவை சேனாதிராசா இன்றும் சில மாதங்களுக்குள் ஆபிரகாம் சுமந்திரன் தரப்பினரால் கட்சியை விட்டு வெளியேற்றப்படுவார். இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் தமிழ்த் தேசிய உணர்வுடன் செயற்படுபவர்களில் ஒருவர் சிறிதரன். அவருக்கு தற்போதைய நிலை மிக சங்கடமாகத்தான் இருக்கும்.

ஆனால் அவராலும் எதுவும் செய்ய முடியாமல் மௌனமாக இருக்கிறார். கிளிநொச்சியில் அவரை தோற்கடிக்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் நுழைந்துள்ள அரச தரப்பு சுயேச்சைக்குழுவொன்றை களமிறக்கியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் அந்த சுயேச்சைக் குழு ஆபிரகாம் சுமந்திரன் தரப்பு இலங்கை தமிழ் அரசுக் கட்சியாக மாறி, சந்திரகுமாரின் சமத்துவ கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கும். இதை நான் சும்மா சொல்லவில்லை. அதற்கான இரகசிய பேச்சுக்கள் எல்லாம் முடிந்து விட்டன என்ற நம்பகரமான தகவல் எமக்கு உறுதியாக தெரியும்.

அப்போது, சிறிதரனும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விட்டு நீக்கப்படுவார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியை அரச ஏஜெண்ட்கள் கைப்பற்றினாலும், கிளிநொச்சி மாவட்ட மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு காப்பாற்றும். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தமிழ் தேசிய அரசியல் இயக்கமாக செயற்படும் – என்றார்.

கூட்டமைப்புக்குள் எதற்காக வந்தாரோ அதை சரியாக செய்துள்ளார் சுமந்திரன்; ரணில் இப்பொழுது சிரித்துக் கொண்டிருப்பார் என்கிறார் தவராசா

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எதற்கு வந்தாரோ அதைச் சரியான முறையில் செய்து முடித்திருக்கிறார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய, அரசியல் குழுக்களின் உறுப்பினரும், கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசா தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் ஒரே நிலைப்பாட்டில் உள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளையும் இணைத்துப் பயணிக்கவேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால் அதிகாரம் பதவி ஆசை காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்தவர்கள் கூட்டமைப்புப் பிளவுக்குக் காரணமாக இருந்துள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்க் கூட்டமைப்புக்குள் இருக்கும் ஆமை சுமந்திரன் என பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் பேசினார்.

அவரது கருத்துத் தொடர்பில் தமிழ் மக்கள் ஆழமாகச் சிந்திக்கவேண்டும். சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒன்றாக இருந்தவர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிடாமல் தூள் வியாபாரிகள் காட்டிக் கொடுப்பவர்கள் என விமர்சனம் செய்துள்ளார். அவர் யாரை குறிப்பிட்டார் என தெரியாது. தூள் விற்பவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஒரு விடயத்தை நேராகச் சொல்ல வேண்டும். செல்வம் அடைக்கலநாதன் சரியாக செயற்பட்டுள்ளார். கூட்டமைப்பிற்குள் ஆமை வந்து விட்டது, சுமந்திரன் வந்து விட்டார் என்றார். சுமந்திரனுக்கு பெயர் சொல்லி விமர்சிக்கும் துணிவில்லை. சிறிய, வட்டார தேர்தலுக்காக இப்படி தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது வெட்கக்கேடு. இப்படி விமர்சித்து விட்டு மீண்டும் இணைய முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் ஒரு கட்சியை குறிப்பிடுவது அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து இருப்பதே கூட்டமைப்பு.

தற்போதைய நிலையை பார்த்து ரணில் சிரிப்பார். சுமந்திரன் எதற்காக வந்தாரோ அதை நிறைவேற்றி விட்டார். அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சில தமிழ் அரசியல்வாதிகள் தடையாக இருப்பதாக நீதியமைச்சர் கூறுகிறார்.

அரசியல்வாதிகளின் வழக்கை கையாளுபவரும், அவருடைய சம்மதமும் ஒப்புதலும் இல்லாததால் நீதிமன்றத்தால் அவர்களை விடுவிக்க முடியவில்லையென்றார். அரசியல்வாதியால் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து தனது சம்ம தத்தை அல்லது எதிர்ப்பை தெரிவிக்க முடியாது. நிச்சயமாக, அரசியல்வாதியான சட்டத்தரணியால் மட்டுமே முடியும். யார் அந்த அரசியல்வாதி, சட்டத்தரணியென்பதை நீதியமைச்சர் வெளிப்படுத்தவேண்டும்.

சுதந்திர தினத்தை கரிநாளாக தமிழ் அரசு கட்சி பிரகடனப்படுத்துவதாக செய்தி வெளியானது. உண்மையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. கட்சியின் மத்திய குழு, அரசியல் குழுவில் அது தீர்மானிக்கப்படவில்லை. இதே சுதந்திர தினத்தில்தான் சம்பந்தன் சிங்கக்கொடி ஏந்தினார். சுதந்திரதினத்தில் தானும், சம்பந்தனும் மட்டுமே கலந்து கொண்டதாக சுமந்திரனும் கூறியிருந்தார். இவர்களுக்கு திடீரென ஏன் கரிநாள்?-என்றார்.

பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்ற திரு சிவகுமார் நடேசன் அவர்களுக்கு கெளரவிப்பு

உயர்திரு சிவகுமார் நடேசன், வீரகேசரி முகாமைத்துவப் பணிப்பாளர் ( எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட் ) அவர்களுக்கு இந்திய அரசால் அதி உயர் விருது வழங்கப்பட்டதைப் பாராட்டி நடாத்தப்பட்ட விழாவில் , அவருக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சிவகுமார் நடேசன் அவர்களை 2023ஆம் ஆண்டுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருதுக்காக (PBSA) இந்திய அரசாங்கம் தெரிவு செய்துள்ளது.

இந்திய புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் அதி உயர் கௌரவமே பிரவாசி பாரதிய சம்மான் விருது என்பது குறிப்பிடத்தக்கது. 17ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின்போது மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் ஸ்ரீமதி திரௌபதி முர்மு அவர்களால் இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது

 

குடியரசுத் துணைத் தலைவர் ஶ்ரீ ஜெகதீப் தன்கர் அவர்களை தலைவராகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்ஷங்கர் அவர்களை துணைத் தலைவராகவும் கொண்ட ஜூரிக்கள் சபையானது, திரு சிவகுமார் நடேசன் அவர்களை இந்த உயர் கௌரவத்துக்காக தெரிவு செய்திருந்தது. உலகளாவிய ரீதியில் பல்வேறு துறைகளிலும் சிறந்துவிளங்கி சாதனைபுரிந்த இந்திய புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களின் சிறப்பை இந்த பிரவாசி பாரதிய சம்மான் விருது அங்கீகரிக்கின்றது.

‘13’ ஐ நடைமுறைப்படுத்த மகாசங்கம் ஒருபோதும் அனுமதிக்காது – தம்மரத்ன தேரர்

13 ஆவது அரசமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த மகா சங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று களனிப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரும் பேராசிரியருமான வணக்கத்துக்குரிய பூஜ்ய இந்துரகரே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் தலைமை பிக்குவான வணக்கத்திற்குரிய முரத்தெட்டுவே ஆனந்த தேரரின் 80 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ உள்ளிட்டோர் பங்கேற்றனர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய வணக்கத்துக்குரிய இந்துராகரே தம்மரத்ன தேரர், 13 ஆவது அரசமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அதற்கு எதிராக நாளையே பிக்குகள் கிளர்ந்து எழத் தயாராக உள்ளனர்.

எனவே, 13 ஆவது அரசமைப்பு சட்டத்தைப் பற்றி விவாதித்தால், அதனையும் வைத்து அரசியல் புரிகின்றோம் என்று எம்மை அழைத்தாலும் பரவாயில்லை. புத்தரின் போதனைகளைப் பாதுகாத்து சம்புத்த பாடசாலையைக் கொண்ட ஒரே நாடு சிறிலங்கா. ஆகவே, அதனை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக உடைத்தால் எமது நாடு தாங்காது என்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உடைவுக்கு தமிழரசின் ஒரு குழுவே காரணம் – கஜதீபன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தமைக்கு, ரணிலின் பின்னணியில் இயங்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஒரு குழுதான் முழு காரணம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கஜதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் மல்லாகத்தில் இடம்பெற்ற வேட்பாளர் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது- அண்மையில் இரண்டு கூட்டங்களிற்காக வடமராட்சி பிரதேசங்களிற்கு சென்றிருந்தோம். அங்குள்ள மக்கள் வீட்டு சின்னத்தை ஒரு சுயேச்சைக்குழு சின்னத்தை போல, நகைச்சுவையாகத் தான் பார்க்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அங்கு இலங்கை தமிழ் அரசு கட்சியை விட பல கட்சிகள் அதிக வாக்கு பெற்றிருந்தன. இப்படியான நிலைமையினால்தான் கடந்த தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு சறுக்கல் ஏற்பட்டது.

ஆனால் மாவை சேனாதிராசா போன்ற தலைவர்களால் வலி வடக்கு உள்ளிட்ட பகுதிகள், வன்னி, கிளிநொச்சி பகுதிகளிலேயே ஓரளவு அதிக வாக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்தது. அப்படியான மாவை போன்ற தலைவர்கள் இன்று இலங்கை தமிழ்த் அரசுக் கட்சியின் நடவடிக்கைகளினால் அதிருப்தியடைந்து ஒதுங்கியிருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தமைக்கு, ரணிலின் பின்னணியில் இயங்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஒரு குழுதான் முழு காரணம். அவர்கள் 2010ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். 35 வருடங்களாக ஆயுத வழியில் போராடி, ஆயுதப் போராளிகளை கதாநாயகர்களாக பார்த்த இனத்தில், 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் கொழும்பிலிருந்து வந்தவர்கள், நாங்கள் ஆயுதப் போராட்டத்தில் சம்பந்தமில்லாதவர்கள் என பெருமையாக பேசி, எமக்கு வாக்களியுங்கள் என கேட்கிறார்கள். இது மக்களை அவமதிக்கும் செயல். மாவீரர்களையும் போராளிகளையும் அவமதிக்கும் செயல்.

இந்த குழுவினர் தான் தமிழ் அரசுக் கட்சிக்குள் முக்கிய பொறுப்பிற்குள் வந்து, கட்சியையும், தமிழ் தேசிய கூட்டமைப்பையும் உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர்தான், கடந்த பொதுத்தேர்தலில் மாவை சேனாதிராசாவை தோற்கடித்தவர்கள்.

இப்போது கட்சியை விட்டு ஒதுக்கியுள்ளனர். மாவை சேனாதிராசாவை தோற்கடித்தவர்களை, தற்போது தமிழ் அரசு கட்சியை விட்டு வெளியேற்ற முயற்சிப்பவர்களை மக்கள் தண்டிக்க வேண்டும்.

நாங்கள் அரசாங்கத்துடன் சில தடவைகள் பேச்சு நடத்தியுள்ளோம். தொடர்ந்து பேசுவோம். காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயங்களில் சில முக்கியமான முயற்சிகளை எடுத்துள்ளோம். அரசியல் தீர்வுக்கான நெருக்கடி அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்த முக்கியமான கட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு தரப்பு முடிவெடுத்து, வெற்றியடைந்துள்ளது. தமிழ் மக்களிற்கு எதையும் செய்யாமல் தப்பிக்க, ரணில் அரசாங்கம்தான் பின்னணியில் இருந்து இதனை செயற்படுத்தியது.

இப்போது, சுதந்திர தினத்திற்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப் போவதாக தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது போலி நாடகம். கடந்த முறை ரணில் அரசாங்கத்துடன் கூடிக்குலாவிக் கொண்டிருந்து, குடும்பத்துடன் சென்று சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்து கொண்டு, சிங்கக் கொடியை ஏந்திய தமிழரசுக்கட்சி தலைவர்கள், இப்பொழுது திடீரென ஞானம் வந்து, கருப்புக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளனர். தேர்தல் வருவதே இந்த ஞானத்திற்கு காரணம். தமிழ் மக்கள் மத்தியில் கே. வி.தவராசா போன்ற நல்ல சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். அவர்கள் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயங்களிற்காக தொடர்ந்து பாடுபடுகிறார்கள். இன்னும் சில சட்டத்தரணிகள் பணத்திற்காக செயற்படுகிறார்கள். அவர்கள் தமிழ் அரசுக் கட்சிக்குள்ளும் இருக்கிறார்கள். நல்லாட்சி காலத்தில் ரணில் அரசுடன் நெருக்கமாக இருந்து, கொழும்பு துறைமுக நகர ஒப்பந்த தயாரிப்பில் ஈடுபட்டு, பெருந்தொகை பணத்தை பெற்ற நமது சட்டத்தரணிகள் பற்றிய விவரங்களையும் நாங்கள் பகிரங்கப்படுத்துவோம்.

தமிழ் அரசுக் கட்சியின் பிரபல சட்டத்தரணியொருவர், ரணில் அரசுடன் வெளிப்படையாகவும், கோட்டா அரசில் மறைமுகமாகவும் டீல் பேசி நிறைய பணம் பெற்றிருந்தார். அவரை நெருக்கமாக கவனித்தீர்கள் என்றால், எப்பொழுதும் வலது கையை மேசைக்கு கீழே வைத்திருந்து பெருவிரல், சுட்டு விரல், நடுவிரலை உரசியபடியே இருப்பார். அது பணம் வாங்கி பழகிய பழக்க தோசம்- என்றார்.

அரசியல் கைதிகள் விடுதலைக்கு யாருடைய ஒப்புதலும் அவசியமில்லை; நீதி அமைச்சருக்கு கூட்டமைப்பு கண்டனம்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு யாருடைய ஒப்புதலும் அவசியமில்லை . அமைச்சர் கதை அளப்பதை நிறுத்தி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்த பிரதிநிதி ஒருவருக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ அவர்கள் நன்றாக கதை அளந்து இருக்கிறார். நேற்றைய அரச ஊடகப் பத்திரிகையில் இதை கண்ணுற்றது வேடிக்கையாக இருந்தது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமையால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாமல் இருப்பதாக கூறியிருப்பது விஷமத்தனமானதும் சிறுபிள்ளைத்தனமானதுமாகும்.

நாட்டின் நீதி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய நீதிப்பொறிமுறைகளை அறியாதவராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகிறது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை பட்டியலிட்டு ஆதாரத்தோடு ஜனாதிபதியிடம் கடந்த ஆவணி மாத சந்திப்பிலே நாங்கள் கையளித்திருந்தோம். அதன் பிரகாரம் 13 அரசியல் கைதிகள் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கது. அதன் அடிப்படையில் மற்ற அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட முடியும் என்பதை அரசியல் யாப்பு தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் வழக்கை மீள பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட முடியும் என்பதையும் சட்டம் சொல்கிறது.

இது இப்படி இருக்க சிறுபிள்ளைத்தனமான ஒரு புதுக் கதையை நீதி அமைச்சர் அளந்து இருப்பதானது அரசியல் கைதிகள் விடுதலையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பற்றிய சட்ட விவகாரங்களை அவர் அறிந்திருக்கவில்லையோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. இதுவரை காலமும் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் யாருடைய ஒப்புதலின் பேரில் அதுவும் எந்த தமிழ் அரசியல்வாதிகளின் ஒப்புதல் பேரில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர் விளக்குவாரா? அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைக்கு நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையிலே விஜயதாச ராஜபக்க்ஷ அவர்கள் வழங்கிய பதில் அந்தக் கோரிக்கையை எள்ளி நகையாடி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நீதி அமைச்சராக தன்னுடைய கடமையை சரியான முறையில் அவர் செயல்படுத்த வேண்டுமே தவிர சிறுபிள்ளைத்தனமான சாட்டுப்போக்குகளைச் சொல்லி தனது கடமைகளை தவிர்த்துக் கொள்வதை அல்லது சட்டத்திலே இருக்கக்கூடிய ஏற்பாடுகளை மூடி மறைப்பதை நாங்கள் கவலையோடு உற்று நோக்குகிறோம்.
அவருடைய இந்த கருத்தானது ஒட்டுமொத்த நாட்டினுடைய நீதிப் பொறிமுறையின் செயல்பாடு எந்த அளவிற்கு சிறுமைப் படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.

ஆறாயிரம் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள் என கடந்த மூன்று வருடங்களில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.

சம்பளத்திற்கு அதிக வரி விதிக்கப்படுவதால் எதிர்வரும் காலங்களில் பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் ஏறக்குறைய 8 இலட்சம் பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாகவும், சுமார் 6 இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் காமினி வலேபொட தெரிவித்தார்.

கடந்த வருடம் 300,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு கல்வி கற்கச் சென்றுள்ளதாகவும், இதனால் நாட்டுக்கு பாரிய தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆகவே இதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட கேட்டுக்கொண்டார்.

நாடளாவிய ரீதியில் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக பிராந்திய அலுவலகங்கள் திறப்பு

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் 50 பிராந்திய அலுவலகங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவிக்கையில் ,

தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய நான்கு பிராந்திய அலுவலகங்கள் மற்றும் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் உள்ளது.

இது தவிர ஏனைய இடங்களில் கடவுச்சீட்டு வழங்கும் பணியை மேற்கொள்வதற்காக 50 புதிய அலுவலகங்கள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், எந்தவொரு விண்ணப்பதாரரும் குறித்த பிராந்திய அலுவலகத்திற்குச் சென்று புகைப்படங்கள் மற்றும் விபரங்களை அதிகாரிகளிடம் கொடுத்து, தங்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தவுள்ளதுடன் அது உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து சார்ள்ஸ் விலக பஸிலே காரணம் : கொழும்பு ஊடகம் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் விலகியதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவே காரணம் என்று சிங்கள ஊடகம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சில நாட்களாக பொது அரசியலில் ஈடுபடாது இருந்து வந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ, கந்தானை எனும் இடத்தில் தங்கியிருந்து பாரிய அரசியல் திட்டத்தை தயாரித்துள்ளதாக எமது ஊடகம் அறிந்துள்ளது.

அதற்கமைவாக, கந்தானையில் இருந்தே பஸில் கொழும்பில் உள்ள பல முக்கியமான அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி சார்ள்ஸ் பதவி விலகியதன் பின்னணியில் பஸிலின் நிழல் வீழ்ந்துள்ளதாக சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஆனால், இது தொடர்பாக இது வரை முக்கியமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.