தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49ஆவது நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்விதபேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென்றும், காலை 10 மணிக்கு நினைவேந்தல் நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னராக அறிவிக்கப்பட்டமைக்கு இணங்க தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் காலை பத்து மணியளவில் பிரதான நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பாக ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் கோப்பாய் தவிசாளருமான நிரோஷ், புளொட் அமைப்பை சேர்ந்த சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிசோர், ரெலோவின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ் உள்ளிட்டவர்களுடன் தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டணி குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சு – செல்வம் எம்.பி

தமிழரசுக்கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ்தேசிய மக்கள் கூட்டணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்த கூட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள பேச்சு நடத்தப்படும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்

புகையிரத திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்வது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தேவையின் அடிப்படையில் அவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்ப்பதற்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி இன்று கிடைக்குமென தாம் நம்புவதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 31ஆம் திகதி புகையிரத திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 450 பேர் ஓய்வு பெற்றதையடுத்தே அத்தியாவசிய சேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் சுமார் 400 ஊழியர்களை மீளப் பணிக்கமர்த்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது

யாழ். கலாச்சார மத்திய நிலையத்தினை திறந்துவைக்கிறார் ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளதோடு கலாச்சார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைக்க உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

அடுத்த மாதம் 11ஆம் திகதி ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்போடு இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அது தொடர்பான முன்னேற்பாட்டு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தலைமையில் இடம்பெற்றது.

அதில் முப்படைகளின் பிரதிநிதிகள், துறைசார் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக உத்தியோத்தர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறிய இலங்கைத் தமிழரசுக் கட்சி

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ சுமந்திரன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டமைப்பிற்கு வெளியிலுள்ள தமிழ் கட்சிகளை இணைத்துக் கொண்டு போட்டியிடுவதா என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலை எதிர்கொண்டதை போல எதிர்கொள்ளலாம் என ரெலோ கூறியுள்ளது.

எனினும், கடந்த முறை தமக்கு உறுதியளிக்கப்பட்ட சபைகள் வழங்கப்படாததால் அது பற்றி மீள பேசப்பட வேண்டுமென புளொட் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தேர்தல் நெருங்கி விட்டதால், அதைபற்றி பேச அவகாசமில்லையென தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

இறுதியில், தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பங்காளிக்கட்சிகள் எப்படி போட்டியிடுவதென விரைவில் அறிவிப்பார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரினை பயன்படுத்தி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி முதல் புதிய மின்கட்டணங்கள் அமுலுக்கு வரும் – பந்துல குணவர்தன

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய கட்டணங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்று முன்மொழிவுகளை வழங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பிற அமைப்புகளுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாகாண அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்த அரசுக்கு ஒரு வார கால அவகாசம் : இல்லையெனில் பேச்சில் இருந்து வெளியேறவும் தமிழ்க் கட்சிகள் தீர்மானம்

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட மாகாண அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதென்றும், அந்த காலஅவகாசத்திற்குள் அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், அரசாங்கத்துடனான பேச்சை தொடர்வதில்லையென்றும் தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இரா.சம்பந்தனின் வீட்டில் இன்று (9) மாலை கூடிய தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. நாளை 10ஆம் திகதி அரசாங்கத்திற்கும், தமிழர் தரப்பிற்குமிடையில் பேச்சுக்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில், பேச்சின் போது முன்வைக்கப்பட வேண்டிய விடயங்களை ஆராய இன்று தமிழ் தேசிய கட்சிகள் சந்திப்பில் ஈடுபட்டன. இதன்போது, அரசியலமைப்பின்படி மாகாணங்களிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், பிடுங்கப்பட்ட அதிகாரங்களை மீளளிக்கவும் அரசாங்கத்திற்கு குறுகிய கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அரசியலமைப்பின்படி மாகாணங்களிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், பிடுங்கப்பட்ட அதிகாரங்களை மீளளிக்கவும் அரசாங்கத்திற்கு குறுகிய கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதிக்கள்- ஒரு வாரத்திற்குள்- மாகாண அதிகாரங்கள், ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தின் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ முழுமையாக மீளளிக்கப்பட வேண்டும்.

ஏற்கெனவே வழங்கப்பட்ட அதிகாரங்களை ஒரு வாரத்திற்குள் மீளளிக்கவில்லையென்றால், இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கி தீர்வை தருமென்பது பகல் கனவாகவே அமையும் என்ற அடிப்படையில், அரசாங்கத்துடனான பேச்சை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (ஜன. 10) காலை 10.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள கோரி முன்னாள் போராளி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் போராளியொருவர் ஆரம்பித்துள்ளார். இன்று (9) காலை முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

புதுக்குடியிருப்பு சந்தியில், இலங்கை வங்கி கட்டிடத்திற்கு அண்மையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளும் தமக்கிடையிலான ஆசன பங்கீட்டு பிரச்சினைகளை கைவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை வென்றெடுப்பதற்காக ஓரணியில் திரள வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

சாகும் வரையான போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த நபர், இதுவரை நீராகாரமும் அருந்தாமல் போராட்டத்தை தொடர்கிறார். முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த, முன்னாள் போராளியான வேலுப்பிள்ளை மாதவமேயர் என்பவரே போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். தனது தந்தை நாட்டுப்பற்றாளர் கௌரவமளிக்கப்பட்டவர் என்றும், 3 உடன்பிறப்புக்கள் மாவீரர்களாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணி- மணிவண்ணன் அணி இணைந்து போட்டியிட தீர்மானம்

உள்ளூராட்சி தேர்தலில் மணிவண்ணன் அணியுடன் ஒன்றாக இணைந்து போட்டியிட நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் விக்னேஸ்வரன் சந்திப்புக்கு பின்னர் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் மணிவண்ணன் மற்றும் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கை – இந்திய மத்தியஸ்தம் கோரி இந்திய துணை தூதுவரிடம் மகஜர்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு யாழில் மேற்கொண்டு வருகின்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது அரசுடனான பேச்சுவார்த்தையின் போது சமஸ்டி அடிப்படையிலான தீர்வை தமிழ் தரப்புகள் ஒருமித்து வலியுறுத்த வேண்டுமென கோரி யாழ்ப்பாணம் நாவற்குழியில் கடந்த வியாழக்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் துணைத் தூதரை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தி இருந்தனர். இதன்போது தூதுவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்து வெளியிடும் போது- தமிழ் மக்கள் தேசிய இன பிரச்சனைக்கு தீர்வான சமஸ்டி அடிப்படையிலான தீர்வுக்கு அனைத்து தமிழ் தரப்புக்களும் ஓரணியில் திரள வேண்டும் என்பதால் அத்தகைய ஒற்றுமைக்கு உதவ வேண்டுமென தூதுவரிடம் வலியுறுத்தியதாக கூறினர். மேலும் அரசிற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டுமெனவும் தூதுவரிடம் வலியுறுத்தியதாகவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.