கூட்டமைப்பின் அரசமைப்பு பிரதிநிதியாக சித்தார்த்தன் எம்.பி

அரசமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம சித்தார்த்தன் நியமிக்கப் பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கான தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முன்தினம் எடுத்திருந்தது.

21ஆவது திருத் தத்தின் மூலம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ள அரசமைப்பு பேரவையில், 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர். சபாநாயகர் இதன் தலைவராக செயல்படுவார். பதவி வழியாக பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அதன் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பர். ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தலா ஒரு பிரதிநிதியை பெயரிடுவர். பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சி சார்பில் ஒருவரும், சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் அரசமைப்பு பேரவையில் அங்கம் வகிப்பர்.

இந்த வகையில், பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில், அரசமைப்பு பேரவைக்கான உறுப்பினராக த. சித்தார்த்தனை நியமிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றகுழு ஏகமனதாக தீர்மானித்தது என்பது குறிப்பிடத்தக்கது

எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை இருக்குமாயின் பாராளுமன்றத்தை கலைக்கும் பிரேரணையை கொண்டு வரலாம் – பிரதமர்

அரசியலமைப்பின் பிரகாரம் 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு மக்களாணை இல்லை என குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

எதிர்க்கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின் பாராளுமன்றத்தை கலைக்கும் பிரேரணையை அவர்கள் தாராளமாக கொண்டு வரலாம்.

எந்நிலையிலும் பாராளுமன்ற ஐனநாயகத்திற்கு மதிப்பளித்து செயல்படுவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ. 23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்துக் கொள்வதற்கு அரச செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு,அரச செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த காலங்களில் சமூக கட்டமைப்பில் காணப்பட்ட எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான வரிசை யுகத்தை மறக்க முடியாது.

ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்கள் அரச கட்டமைப்பிற்கு சவால் விடுத்தது. இவ்வாறான கடினமான சூழ்நிலைகளை ஒருபோதும் மறக்க முடியாது.

ஜனாதிபதி மாளிகை,ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் மற்றும் சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இதுவா ஜனநாயகம், எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது இவர்கள் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கருத்துரைக்கிறார்கள்.

நாட்டு மக்களின் சர்வஜன வாககுரிமையை பாதுகாக்க அரசாங்கம் பெர்றுப்புடன் செயற்படுகிறது. நாட்டு மக்களின் வாக்குரிமையினால் தோற்றம் பெற்ற ஸ்தாபனங்களை பாதுகாக்க எதிர்க்கட்சியினர் ஒருமித்து செயற்படாமல் இருந்தமை கவலைக்குரியது. ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

பாதுகாப்பு தரப்பினரினால் பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கவும், பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தவும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல்களை பிற்போட்டவர்கள் தற்போது தேர்தல் உரிமை தொடர்பில் குரல் எழுப்புகிறார்கள்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை குற்றஞ்சாட்ட முடியாது,ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுகிறது,இருப்பினும் தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் தொடர்பான அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு உண்டு என்றார்.

மத்திய வங்கியில் ஏனையோரின் தலையீடுகளை நான் விரும்பவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

அரசியலமைப்பின் பிரகாரம் பொது நிதி தொடர்பான இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் காணப்படுகின்ற போதிலும், நாட்டின் நிதிக்கொள்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய வங்கிக்கே காணப்படுகிறது.

அதன் சுயாதீன தன்மையில் எவரும் தலையிடுவதை நாம் விரும்பவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வரவு செலவு திட்ட விவாதத்தின் போது மத்திய வங்கி மீது குற்றம் சுமத்தப்படுகிறது. பொருளதார நெருடிக்களுக்கு மத்திய வங்கியே காரணமென்றும் அதன் விளைவாகவே மக்கள் துன்பத்தினால் அவதிப்படுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

நாட்டு மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் நிவாரணங்கள் சலுகைகளை மத்திய வங்கி வழங்க வேண்டும் என்கிறார்கள்.

இன்று நிதிக்கொள்கை என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொள்கையின் பிரகாரம் வேறொருவரின் விவனாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.

அதேபோன்று சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் மத்திய வங்கி செயல்பட வேண்டும். அதன் நிதி தொடர்பான முடிவுகளை பிறர் எடுப்பதை நான் விரும்பவில்லை.

ஆனால் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பாராளுமன்றம் மற்றும் மத்திய வங்கி இரண்டினதும் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.

வரிகளை விதிக்கவும் செலவினை கட்டுப்படுத்தவும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அதனால் தான் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்ஜெட்டை நிறைவேற்றுவதைப் பார்க்கிறீர்கள். வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.

அரசியலமைப்பிற்கமைய பொருளாதாரம் பாராளுமன்றத்திற்கு உரித்துடையது. எனினும் அனைத்து பலமும் காணப்படுவதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் பாராளுமன்றத்திற்கு பொது நிதி தொடர்பில் மாத்திரமே அதிகாரம் உள்ளது. மத்திய வங்கி தொடர்பில் சிலருக்கு புரிதல் குறைவாகவே உள்ளது என்றார்.

இராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட இடங்களை பார்வையிட 800 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை வர தீர்மானம் – ஹரின்

பழங்கால புராணமான இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை பார்வையிடுவதற்காக 78 இந்திய சுற்றுலாப் பயணிகள் இன்று (23) காலை நாட்டை வந்தடைந்தனர்.

இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, இந்த பயணிகள் ஏனைய பிரசித்தி பெற்ற இந்து மதத் தலங்களுக்கும் செல்லவுள்ளனர்.

அத்தகைய 800 இந்திய சுற்றுலாப் பயணிகள் அடுத்த ஆறு மாதங்களில் இலங்கைக்கு குழுக்களாக வருகை தரவுள்ளனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடலட்டைப் பண்ணைக்கு எதிராக போராடிய மீனவர்கள் கைது

கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி மீனவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகளால் சிறு மீன்பிடிக் கரையோர தொழிலாளர்களாகிய தமது பாரம்பரிய மீன்பிடி தொழிலை முன்னெடுப்பதில் தடைகள் இருப்பதாக தெரிவித்து குறித்த கடல் அட்டை பண்ணைக்கு எதிராக கடந்த 55நாட்களாக தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று பி.ப 2.30 மணியளவில் கிராஞ்சி இலவங்குடா மீனவர்கள் இருவர் ஜெயபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்தினாதர், மற்றும் மகேந்திரன் எனப்படும் இருவரே அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக செயற்பட்டதாக அரச அதிகாரிகள் முறைப்பாடு செய்தவிடத்து இவ்வாறு குற்றம் சாட்டபட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குறித்த போராட்டத்தை முடக்குவதற்காகவே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் அப் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

ஜப்பான் அரசாங்கத்தால் சம்பூரில் குளம் புனரமைப்பு

ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ” சமூக அடிப்படையிலான சிறு குள புனரமைப்பு” திட்டத்தின்கீழ் சம்பூர் பகுதியில் உள்ள பெரியகுளம் எனும் குளம் 91 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று புதன்கிழமை (23) விவசாயிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் உதவிச் செயலாளர்கள் கலந்து கொண்டு குளத்தை விவசாயிகளின் பாவனைக்காக திறந்து வைத்தனர்.

இக்குளத்தை “பீஸ் விண்ட்ஸ்” நிறுவனம் முன்னின்று சிறப்பாக புனரமைப்புச் செய்திருந்தது.

இக்குளம் புனரமைப்புச் செய்யப்பட்டதன் மூலம் சம்பூர் பகுதியைச் விவசாயிகள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சம்பூர் கமநலசேவை நிலையப் பொறுப்பதிகாரி, மூதூர் பிரதேச செயலக உயரதிகாரிகள் ,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய றோ அமைப்பின் தலைவர் ரணில் இடையே சந்திப்பு!

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு’ எனப்படும் ‘றோ’ அமைப்பின் தலைமை நிர்வாகி சமந்த் கோயல் இரகசிய பயணம் மேற்கொண்டு கொழும்பு வந்து சென்றுள்ளார் என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து முக்கிய பேச்சுகளை நடத்தியிருக்கின்றார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘றோ’ இந்தியாவின் நலனைக் கருத்தில்கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதி செயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும்.

முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 ஆம் ஆண்டு முதல் புதிதாக தொடங்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கின்றது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் ஆவார். இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ‘றோ’ அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும், பிரதமருக்கும் தனது அறிக்கைகளை நேரடியாக அனுப்புவார்.

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘றோ’ வின் தலைமை நிர்வாகி ரணிலுடன் பேச்சு நடத்தியிருப்பது அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா வழங்கும் – அலி சப்ரி நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா முன் வந்து வழங்கும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை நீண்ட காலமாக கடனை திருப்பும் செலுத்துவதை இலங்கை நிறுத்தியுள்ள நிலையில் இது கடனாளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை சீனா நன்கு அறிந்துகொண்டிருக்கும் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய போராட்டங்கள் மக்கள் ஆதரவின்றி நடத்தப்படுவதாகவும், போராட்டக்காரர்கள் தீவிரவாதிகள் இல்லையென்றாலும், மறைமுக நிகழ்ச்சி நிரலுடன் போராட்டங்கள் இடம்பெறுவதாகவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர் அலி சப்ரி ஒவ்வொரு முறையும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கும் போது போராட்டங்களும் ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும்போது பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும்

இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும்போது பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன தெரிவித்தார்.

அத்தகைய அனுமதியைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர் எந்தவொரு சட்ட அதிகாரியிடமிருந்தும் பிடியாணை பிறப்பிக்கப்படாதவறாக இருக்க வேண்டும் உள்ளிட்ட இரண்டு நடைமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 10 மாதங்களில் ஆயிரத்து 703 இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்தின் சம்மதத்துடன் வெளிநாட்டவர்களை திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பிரஜைகளை திருமணம் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மன்னார் நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

மன்னார் நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு நேற்றைய தினம் (நவ 23) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபையின் 57 வது அமர்வு இன்று நகர சபையின் தலைவர் என்.அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவு இடம்பெற்றது.

இதன் போது மன்னார் நகர சபையில் 6 கட்சிகளை உள்ளடக்கிய 16 உறுப்பினர்கள் குறித்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதர வை ஏகமனதாக முன் மொழிந்து நிறைவேற்றினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஈழ மக்கள் ஜனநாயக கட்சி,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஆகிய கட்சிகளை சேர்ந்த 16 உறுப்பினர்கள் அமர்வுக்கு வருகை தந்து 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை முன்மொழிந்தனர்.

எதிர்வரும் ஆண்டிற்கான 223 மில்லியன் 4 லட்சத்து 81 ஆயிரத்து 890 ரூபா மன்னார் நகர சபையின் வருடாந்த வருமானத்தைக் கணக்கில் கொண்டு நகர சபைக்கு உட்பட்ட வட்டார ரீதியாகவும் வட்டார உறுப்பினர்களின் பிரசன்னத்தோடு வட்டார சங்கங்களின் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான அமைப்புக்களுடன் கலந்து ஆலோசனையின் பேரில் குறித்த வரவு செலவு திட்டம் மன்னார் நகரத்தின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டு ஏக மனதாக நிறைவேற்றி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.