உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ஐ.நா பரிந்துரைகள் உள்வாங்கப்படவில்லை; நிபுணர்கள் கவலை

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் நாங்கள் முன்வைத்த பரிந்துரைகள் உள்வாங்கப்படவில்லை என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் மிகவும் கடுமையான பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படும் பலவீனங்களை நிவர்த்தி செய்வதாக காணப்படவில்லை எனவும் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய சட்டம் சர்வதேச தராதரத்தை பூர்த்தி செய்வதாக காணப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச சட்டங்களை மீறுகின்றது அடிப்படை மனித உரிமைகளிற்கான பாதுகாப்பற்றது மற்றும் சுயாதீன மேற்பார்வையற்றது என பலவருடங்களாக ஐநா நிபுணர்களும் சர்வதேச அமைப்புகளும் தெரிவித்து வந்துள்ளன என தெரிவித்துள்ள ஐநா நிபுணர்கள் உத்தேச சட்டமூலம் இந்த குறைபாடுகளிற்கு தீர்வை காணமுயலவில்லை என்பது ஆழ்ந்த கவலைக்குரிய விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கோத்தாவின் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இல்லை – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின்  அறையில் 17.85 மில்லியன் பணத்தைக் கைப்பற்றியமை தொடர்பிலான வழக்கில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதில்லை என, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கே நேற்று புதன்கிழமை (18) இவ்வாறு அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில்  போதிய  ஆதாரங்கள் இன்மையால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்குமாறு திருகோணமலையில் கோரிக்கை

மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் அநீதிகளையும், நீதி மறுக்கப்படுவதையும் உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கத்துடனும், எமது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்தும், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரவையை ஆக்கிரமித்து இருப்போரை வெளியேற்றக் கோரியும், எமது தாயகமான வட- கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்திற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளாகிய நாம் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கின்றோம்.

கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதற்கு  ஆதரவு தர முன்வந்துள்ளன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நிகழவுள்ள இந்த பொது முடக்கத்திற்கு, வட- கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம்.

மேலும், எம் மக்கள் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மனித உரிமை இயக்கங்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் உட்பட மாணவர் அமைப்புக்கள், மகளிர் உரிமை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் கழகங்கள், சிவில் சமூக சங்கங்கள் மற்றும் மத ஸ்தாபனங்கள் உட்பட, பல்துறை சார்ந்த செயற்பாட்டு அமைப்புக்களின் ஆதரவையும் பங்களிப்பையும் இந்த மக்கள் போராட்டத்தில் நாம் நாடி நிற்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இலங்கைத் தமிழரசுக் கட்சி , தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,  தமிழ்த் தேசியக் கட்சி,  ஜனநாயகப் போராளிகள் கட்சி , ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு நீதிப் பொறிமுறை தீர்வாகாது என‌ வெளிப்டுத்தப்படும்‌ என்பதால் ஹர்த்தாலை குழப்ப அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம் – ரெலோ நிரோஷ்

ஹர்த்தாலின் வாயிலாக தமிழ் மக்களுக்கு எதிரான இன ரீதியிலான ஒடுக்கு முறைகளுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறை தீர்வாகாது என்ற யதார்த்தம் வெளிப்படுத்தப்படும் என்பதனால் அதனை சோபையிழக்கச் செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை அரசாங்கம் எடுக்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்‌(ரெலோ) யாழ். மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நேற்று (18) அச்சுவேலி ஹர்தாலுக்கான தெருவோர மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இன்று அச்சுவேலியில் கர்த்தாலை எதிர்த்து தனிநபர் போராட்டத்தை ஒருவர் நடத்துகின்றார். அவரை இன்று தான் அச்சுவேலியில் நாம் முதன்முதலில் காண்கின்றோம். அரசு உள்நாட்டு நீதி பரிபாலனத்தின் வாயிலாக தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு தீர்வை வழங்க முடியும் என்று கூறி சர்வதேசத்திடமிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றது. இந் நிலையில் நாட்டில் நீதித்துறை சுதந்திரமற்றுள்ளது என்ற உண்மைச் செய்தியைச் சொல்வதற்கு குருந்தூர் மலை விவகாரத்தில் பணியாற்றி அச்சுறுத்தல் காரணமாக பதவியையே விட்டு வெளியேறியுள்ள நீதிபதியின் நிலைமை சிறந்த உதாரணமாகும். எமது இனத்திற்கு உள்நாட்டு பொறிமுறைகள் எதுவும் தீர்வைத்தராது என்ற உண்மையை வெளிப்படுத்துவதற்கு இச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

அவ் வகையில் ஏனைய ஹர்த்தால்களைக் காட்டிலும் நீதித்துறையின் சுதந்திரத்தினை மையப்படுத்திய இக் ஹர்த்தால் முக்கியத்துவமுடையது. வெளிநாட்டு ஜனநாயக சக்திகளை திரும்பிப் பார்க்க வைப்பதற்கானது.

இதனால் எப்படியாவது இந்த ஹர்த்தாலை சோபையிழக்க வைக்கவேண்டும் என அரசதரப்பு செயற்படுகின்றது. அரச இயந்திரம் ஹர்த்தாலை சோபையிழக்க வைக்க கடுமையான முயற்சிகளை எடுக்கும். இந் நிலையில் தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட்டு ஹர்த்தாலினை வெற்றியடையச் செய்ய வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் டெலோவின் யாழ் மாவட்டப் பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வியாபாரிகளை மிரட்டுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கேட்டு இடம்பெறவுள்ள ஹர்த்தால் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை (18) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

20 ஆம் திகதி ஹர்த்தாலை அனுஸ்டிக்குமாறு கோருகின்றோம். எங்களுடைய மக்கள்  போராட்டத்தின் ஊடாக முன்னுக்கு வந்தவர்கள். போராட்டத்தின் குணாதிசயங்களை கொண்டவர்கள். இருந்தாலும் நீதித்துறை, நில அபகரிப்பு, புத்த கோவில்களுடைய ஆக்கிரமிப்பு  என்பன வடக்கு – கிழக்கில் மிக மோசமாக நடந்து வருகின்றது. எங்களது மக்களின் பூர்வீகம் மற்றும் அவர்களின் நிலங்களை அபகரிப்பதன் ஊடாக எங்களுடைய மக்களின் வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டை தடுத்து நிறுத்தும் வகையில் இந்த கர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

எமது மக்கள் போராட்டத்தின் ஊடாக வந்தவர்கள் ஆகையால் இதற்கு ஆதரவு தருவார்கள் என நம்புகின்றோம். இருந்தாலும் சில சங்கடங்கள் இருக்கின்றது. அன்றாடம் உழைக்கின்ற மக்கள் தமது அன்றைய தேவைக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தற்போது புதிதாக அடாவடித் தனமான, ஜனநாயக விரோதமான செயற்பாடு நடக்கிறது. இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் வலர்த்தக நிலையங்களை நடத்துவோர், சிறுதொழில் செய்வோர், மரக்கறி வியாபாரம் செய்வோர் என அவர்களை மிரட்டி அவர்களை கர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் எனக் கூறி வருகிறார்கள். அதற்கு எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

அனைத்து தமிழ் பேசும் மக்களும் இதற்கு ஆதரவு தருவார்கள். அரசாங்கம் கூடுதலான திணைக்களங்கள் மற்றும் பிக்குகளை வைத்து எமது மக்களை அடக்கி ஒடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கிறது. அதனால் அனைவரும் ஆதரவு தர வேண்டும் எனத் தெரிவித்தார்.

எதிர்வரும் 20ஆம் தேதி ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி யாழில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

வடகிழக்கு முழுவதும் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ள ஹர்த்தாளுக்கு ஆதரவு கோரி யாழில் இன்று துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ள இக் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கக் கோரி வடக்கு கிழக்கு முழுவதும் துண்டுப் பிரசுர விநியோகம் ஆரம்பிக்கப்கட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி மற்றும் மருதனார் மடம் சந்தைகளில் முதற்கட்டமாக இன்று காலை துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்கட்டது.

இதன் போது புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்டத் தலைவர் தி.நிரோஷ், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் தமிழ்க் கட்சிகளினால் இத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கில் கிழக்கில் பூரண ஹர்த்தால்; தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழில் கூட்டாக அழைப்பு

பொது முடக்கத்திற்கு, தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம் என எட்டு கட்சிகள் கூட்டாக கோரியுள்ளன. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அறிக்கையை வெளியிட்டனர்.அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்து, 75 வருடங்கள் கடந்து விட்ட போதிலும், தமிழ் பேசும் மக்களாகிய நாம், உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நீதி கோரி நிற்கின்றோம்.

 

போர் முடிந்து 14 வருடங்கள் உருண்டோடி விட்டன. இருந்தும், இதுவரையில் எமக்கு நீதி வழங்கப்படவில்லை. மாறாக, எமது துன்பங்களும் துயரங்களும் நீடித்து நிற்கின்றன.

 

எம் மீதான அழுத்தங்களும் நெருக்குதல்களும் தொடர்கின்றன. எமது தாயகமான வட-கிழக்கு மாகாணங்களில் எமது பெரும்பான்மைப் பலத்தை சிதைத்து. இருப்பை பலவீனப்படுத்தி. உரிமை கோரி நாம் எழுந்து நிற்க முடியாத நிலைமையை காலப்போக்கில் ஏற்படுத்தும் இலக்குடன், அரசாங்க மட்டத்திலும் – அதன் ஆதரவோடும் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  எமது தாயகத்தில், வரலாற்று ரீதியாக எமது வழிபாட்டு தலங்கள் அமைந்திருந்த பல்வேறு இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

 

இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய கட்டளைகள் மீறப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் குருந்தூர்மலை. திருகோணமலையில் கன்னியா மற்றும் விளையாட்டரங்க சுற்றாடல். யாழ்ப்பாணத்தில் தையிட்டி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. குருந்தூர்மலையிலும். தையிட்டியிலும் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன.

 

 திருகோணமலையில் இலுப்பைக்குளத்தில், விகாரை ஒன்றுக்கான முன் நடவடிக்கைகள், ஆளுநரின் கட்டளையையும் மீறி. மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொல்பொருள் திணைக்களம், வனத் திணைக்களம். வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன எமது பெருந்தொகையான காணிகளை ஆக்கிரமித்து அபகரித்துள்ளன. காணிகள் மீளக் கையளிக்கப்படும் என்று அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இதேவேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில். மயிலத்தமடு – மாதவனை பிரதேசத்தில் தமிழ்ப் பண்ணையாளர்களின் பல்லாயிரக்கணக்கான கால் நடைகளின் மேய்ச்சல் தரவையாக மிக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த பாரிய பிரதேசத்தை, சிங்களக் குடியேற்ற வாசிகள் ஆக்கிரமித்து பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

தமிழ்ப் பண்ணையாளர்களின் கால் நடைகள் ஆக்கிரமிப்பாளர்களால் பெருந்தொகையில் பிடிக்கப்பட்டும். சுடப்பட்டும். கொல்லப்பட்டும் உள்ளன. இதனால் பண்ணையாளர்களின் வாழ்வே இருண்டு போய் உள்ளது. பயிர் அறுவடை முடிந்தவுடன் குடியேற்ற வாசிகள் வெளியேறி விடுவார்கள் என்று அரசாங்கத் தரப்பில் கடந்த வருடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதி காற்றோடு கலந்து போய் பல மாதங்கள் ஆகிவிட்டது.

 

ஆக்கிரமிப்பு தொடர்கின்றது. மறுபுறத்தில், குருந்தூர்மலை ஆலய வழக்கில் எமது மக்களின் வழிபாட்டு உரிமையை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்த முல்லைத்தீவு நீதிபதி, அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை மிரட்டல்களின் விளைவாக நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளார்.

 

யுத்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட பல நூற்றுக்கணக்கான படுகொலைகளில், சர்வதேசத்தை திருப்திப்படுத்த, சிலவற்றுக்கு வழக்குகள் தொடுக்கப்பட்டதனை நீங்கள் அறிவீர்கள்.

 

 மூதூர் – குமாரபுரம் படுகொலைகள் தொடர்பான வழக்கு அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு, சிங்கள யூரி சபையினர் முன்பு விசாரணை செய்யப்பட்டதன் முடிவில், எதிரிகளான இராணுவத்தினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை யார்தான் மறக்க முடியும்? அதைப்போலவே, மிருசுவில் படுகொலைகள் பற்றிய வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த இராணுவ அதிகாரிக்கு, கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்த பின், பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டதை எவரும் மறந்துவிட முடியாது.

 

மேலும், யுத்தம் மீண்டும் வெடித்த போது, 5 தமிழ் மாணவர்கள் திருகோணமலை கடற்கரையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும் நீதி மறுக்கப்பட்டது. கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவங்களிலும் உண்மை புதைக்கப்பட்டு விட்டது.

இவை எல்லாம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்வோர் தண்டிக்கப்படாமல், தப்பிவிடுவார்கள் என்பதற்கு உறுத்தும் உதாரணங்கள் ஆகும்.

இப்பொழுது, நீதிக்காக துணிந்து நின்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நேர்ந்திருக்கும் கதி தொடர்பிலும் உண்மை மழுப்பப்பட்டு, மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது

 

இந்தச் சூழ்நிலையில், இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் அநீதிகளையும், நீதி மறுக்கப்படுவதையும் உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கத்துடனும், எமது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்தும், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரவையை ஆக்கிரமித்து இருப்போரை வெளியேற்றக் கோரியும், எமது தாயகமான வட- கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்திற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளாகிய நாம் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கின்றோம்.

கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதற்கு வட- ஆதரவு தர முன்வந்துள்ளன. இந்நிலையில், நாளை மறுதினம்வெள்ளிக்கிழமை நிகழவுள்ள இந்த பொது முடக்கத்திற்கு, வட- கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம்.

 

மேலும், எம் மக்கள் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மனித உரிமை இயக்கங்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் உட்பட மாணவர் அமைப்புக்கள், மகளிர் உரிமை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் கழகங்கள், சிவில் சமூக சங்கங்கள் மற்றும் மத ஸ்தாபனங்கள் உட்பட, பல்துறை சார்ந்த செயற்பாட்டு அமைப்புக்களின் ஆதரவையும் பங்களிப்பையும் இந்த மக்கள் போராட்டத்தில் நாம் நாடி நிற்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,  தமிழ்த் தேசியக் கட்சி ஜனநாயகப் போராளிகள் கட்சி , ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பில் வடக்கு,கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு‌ தமிழ்த் தேசியக் கட்சிகள்‌ கோரிக்கை

மட்டக்களப்பில் வடக்கு கிழக்கில் எதிர்வரும் 20 ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறும் ஹர்த்தால் கடையடைப்பிற்கு வர்த்தக சங்கம் அரச ஊழியர்கள் போக்குவரத்து துறையினர் பொதுமக்கள் ஆனைவரும் ஆதரவு வழங்குமாறு  கோரி இன்று செவ்வாய்க்கிழமை (17) தமிழ்தேசிய கூட்டமைப்பில் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கின்ற அனைத்துகட்சிகளும் ஒற்றுமையாக இணைந்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், பா.அரியேந்திரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் தவிசாளரும் ரெலோ, அமைப்பின் பிரதி தலைவருமான பிரசன்னா இந்திரகுமார், புளொட் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் கேசவன்,  ஈ.பி,ஆர்.எல்.எப், அமைப்பின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உநுப்பினருமான இரா.துரைரெட்ணம், ஜனநாயக போராளிகள் கட்சி பிரதி தலைவர் நகுலேஸ் ஆகியோர் கலந்துகொண்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்

இந்த நாட்டில்  நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் என்றால்  இந்த நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு பயணிக்கின்றது என்பதை சிந்திக்கவேண்டு ஜனநாயக ஆட்சி இல்லாமல் 74 சதவீதமான சிங்கள மக்களின் இன நாயக ஆட்சி நடைபெறுகின்றது இதனை சுட்டிக்காட்டுவதற்கும் நீதிதுறையை பாதுகாப்பதற்கும் நீதிபதி சரவணராஜாவுக்கு எதிரான அச்சுறுத்தல்.

மற்றும் தொல்லியல் திணைக்களம் என்ற பெயரில் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றது அதேபோன்று வனஜீவராசிகள் திணைக்களம் வனவிலங்கு திணைக்களம் மாகாவலி திணைக்களம் ஊடாக பல்வேறுபட்ட ஆக்கிரமிப்பு வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்றது

எனவே இதனை கண்டித்து வடக்கு கிழக்கில் ஜனநாயகத்தையும்  சட்டஆட்சியையும்  மனித உரிமையையும்  நீதிதுறையின் கௌரவத்தை பாதுகாப்பதற்காக ஹர்த்தால் கடையடைப்பு பொது வேலை நிறுத்தத்திற்கான  அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

தமிழர்களின் குடிப்பரம்பலை சிதைத்தால் தமிழீழ கனவு எவ்வாறு இல்லாமல் போகும் – ஜனா எம். பி கேள்வி

2009ல் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்ற கூறும் நீங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வைக் காண்பதற்கு முயற்சி செய்யாமல் வடக்கு கிழக்கிலே புத்த சிலைகளை நிறுவி, பெரும்பான்மையினரைக் குடியேற்றி தமிழ் பேசும் மக்களின் குடிப்பரம்பலைக் குறைப்பதையே அரசு நிகழ்ச்சி நிரலாக வைத்துக் கொண்டால் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து தமிழீழக் கனவு எவ்வாறு இல்லாமல் போகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்ரர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய தொலைக்காட்சி நிறுவனமான சனல் 4 குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழு ஒன்றினை நியமிப்பதற்காக யோசனை அரச தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன? இது தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்காகவா? இல்லை காலம் கடத்துவதற்காகவா? விசாரணை என்ற போர்வையில் உண்மையை மூடி மறைப்பதற்காகவா? என்ற ஐயம் எனக்குள் எழுகிறது.

ஏனெனில் எமது கடந்த கால அனுபவங்களின் படியும், ஆட்சியாளர்களின் கடந்த கால செயற்பாடுகளின் படியும், இதனை நோக்கின் பாராளுமன்ற விசேட குழுவின் நோக்கமானது இந்தப் பிரச்சினையை இழுத்தடிப்பதைத் தவிர இது தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்காக அல்ல என்ற உண்மையை அனைவரும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.

நாட்டில் அவ்வப்போது பாரதூரமான பிரச்சினைகள் எழுகின்றபோதெல்லாம் ஏற்படும் எதிர்க் கட்சியினரின் அழுத்தம் அல்லது சர்வதேச அழுத்தம், தமிழ்த் தரப்பின் அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் அரசு செய்கின்ற விடயம் இது தொடர்பாக ஆராயந்து அறிக்கை சமர்ப்பிக்கவென ஒரு குழுவினை நியமிப்பதாகும். ஆந்தக் குழுவின் அறிக்கை அரசுத் தலைவரிடம் கையளிப்பதாக ஊடகங்களில் ஒரு செய்தியும் வெளிவரும். அத்தோடு அந்தச் சம்பவம் அடியோடு மறக்கப்பட்டுவிடும். இதுவே அரசு நியமித்த ஆணைக்குழுக்கள் தொடர்பிலான கடந்தகால வரலாறு. அந்த விசாரணைக்குழு அறிக்கையினை அடிப்படையாக வைத்து எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக வரலாற்றில் எவ்வித பதிவுகளும் இல்லை. குறைந்த பட்சம் இத்தகைய அறிக்கைகள் பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பார்வைக்கோ அல்லது பொது மக்கள் பார்வைக்கோ சமர்ப்பிக்கப்படுவதும் அரிதாகவே காணப்படும் நிகழ்வாகும்.

உண்மையைக் கூறப்போனால் சில அறிக்கைகள் திறந்து பார்க்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுக் கிடந்ததே வரலாறாகும். சன்சோனி ஆணைக்குழு காலத்திலிருந்து அண்மைய ஈஸ்ரர் குண்டுத் தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவரை இது பொருத்தமானதாகும். ஏற்கனவே அரச தரப்பால் நியமிக்கப்பட்ட ஈஸ்ரர் தாக்குதல் தொடர்பாக விசாரணைக்குழு அறிக்கையில் அரசு திருப்திப்படவில்லையா? அவ்வறிக்கையினை முழுமையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காததன் பின்னணி என்ன? அவ்வாறு முழுமையாக சமர்ப்பித்தால் அப்போது அரச தரப்பினராக இருந்தவர்களது அல்லது ஒரு குண்டுவெடிப்பொன்றுக்காகக் காத்திருந்த பல அரசியல்வாதிகளது இராணுவ, பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளது வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடுமென்ற பயமா? இவ்வறிக்கைகள் முழுமையாக வெளியிடப்படாமலிருப்பதன் காரணமாகவே சமூக ஊடகங்களும் வெகுசனத் தொடர்பு சாதனங்களும் இவை தொடர்பான நியாயமான சந்தேகங்களை கேள்விகளாக வைக்கின்றன. இதற்காக புதிய ஒரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஆக்குவதன் மூலமோ, நிகழ்நிலைக் காப்பு பற்றிய சட்டங்களை இயற்றியோ இவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அரசு தப்பிக்க முயலக்கூடாது.

உண்மையில் பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 கூறுவதென்ன? அதில் முக்கிய கருத்தாளரான ஆசாத் மௌலானா கூறியது என்ன? உண்மையில் நான் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படமும் அதன் கருத்தாளர் ஆசாதா மௌலானா கூறிய வாக்குமூலமும் வேத வாக்கியங்கள் போல தம்ம பத வாக்கியங்கள் போல, அல் குர்ஆன் வாக்கியங்கள் போல, பைபிள் போல புனித வாக்கியங்கள் என்று கூற வரவில்லை. இதற்காக அந்த ஆவணப்படமும் அதன் கருத்தாளர் ஆசாத் மௌலானா கூறியவற்றில் உண்மைத் தன்மை எதுவுமில்லையென்று இலகுவாகப் புறமொதுக்கவும் முடியாது. உண்மையில் ஆசாத் மௌலானா பாதுகாப்புத் துறை, நீதித்துறை, உளவுத்துறை தொடர்பான உயர் அதிகாரிகளின் பெயர்கள், அவர்கள் வகித்த பதவிகள், யாவற்றையும் துல்லியமாகக் கூறியுள்ளார்.

இவற்றில் எவையும் பொய்யாகக் காணமுடியாது. அதே போல மட்டக்களப்புச் சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவங்கள், சட்டமா அதிபர் திணைக்கள உயர் அதிகாரிகள், சில நீதிபதிகளின் பெயர்கள், குறிப்பிட்ட ஒரு வழக்கின் போது நீதிபதிகள் மாற்றப்பட்ட சம்பவம் போன்ற பலவற்றைக் கூறுகின்றார். உண்மையில் இவைகள் நடைபெற்றேயுள்ளன. எந்தவிதமான தொடர்பற்ற ஒருவரால் இவ்வாறு நபர்களின், திணைக்களங்களின், பெயர்களைக் கூறி, நடைபெற்ற சம்பவங்களைக் கூறி கற்பனையாக புனைய முடியாது என்பதே உண்மையாகும்.

அதனால்தான் இன்று இவை தொடர்பான உண்மைத் தன்மையினை அறிவதற்காக நீதியான நடுநிலையான சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்று தேவையென்ற கோரிக்கை இன்று எழுந்துள்ளது. இதுவரை உள்ளக விசாரணையின் நம்பிக்கையீனம் பற்றி தமிழ்த் தரப்பே கூறிவந்தது. ஆனால், இன்று உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை சர்வதேச விசாரணை இது தொடர்பாகத் தேவையென எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் அனைவரும் கத்தோலிக்க ஆயர் உட்பட ஆயர் பேரவையினரும் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

தமக்குச் சார்பான தீர்ப்;பினைப் பெறுவதற்காக நீதித்துறையினை அரச தரப்பு பாவித்த முறை தொடர்பாக புதிதாக ஏதும் கூறத் தேவையில்லை. இது நமது நாட்டில் இடம்பெறாத சம்பவமும் இல்லை. முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவரே தமது பக்கச்சார்புத் தீர்ப்புப் பற்றி தாம் பதவி விலகிய பின்னர் திறந்த வாக்குமூலம் அளித்த வரலாற்றைக் கண்டது நம் நாடு.

எனவே சனல் 4 தொடர்பான குற்றச்சாட்டுக்களை இலகுவாக, வழமைபோல ஏற்க முடியாது என வேண்டுமானால் உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால் உண்மையை மறைக்க முடியாது. என்றோ ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கும் மேலாக கடந்த கிழமை ஜனாதிபதி செயலகத்திலே தமிழீழ விடுதலைப் புலிகளை நாங்கள் அழித்துவிட்டோம். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழக் கனவு இன்னும் ஓயாமல் இருப்பதாக முன்னாள் அமைச்சார் ஒருவர் கூறியிருக்கின்றார்.

நானும் ஒரு விடுதலைப் போராளி என்ற வகையிலே எமது மக்களின் மனநிலையில் இருந்து கூறுகின்றேன் உண்மையிலேயே தமிழீழக் கனவு தனிநாட்டுக் கனவு என்பது இன்னும் எமது மக்கள் மத்தியில் இருந்து இல்லாமல் செல்வதற்கு, அழிவதற்கு உங்களைப் போன்ற ஒரு சில அமைச்சர்கள் விரும்பவில்லை என்பதைத் தான் நான் கூறுகின்றேன.

இதனையே வடக்கு கிழக்கில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் கட்டியம் கூறுகின்றன. இன்று வடக்கில் இருந்து கிழக்கு வரை தயிட்டி விகாரை, வெடுக்குநாறிமலை விகாரை, குருந்தூர்மலை விகாரை, திருகோணலையில் பல விகாரைகள், அம்பாறையில் தமிழர் பிரதேசங்களில் பல விகாரைகள் என அமைக்கப்படுகின்றன. இதற்கும் மேலாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே பண்ணையாளர்கள் ஒரு மாத காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

தங்கள் மாடுகளை மேய்ப்பதற்கான பாரம்பரிய மேய்ச்சற் தரையினை அயல் மாவட்ட பெரும்பான்மையின மக்கள் பயிர்செய்வதென்ற கோதாவிலே அந்தப் பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்று அந்தப் பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளை மேய்க்க முடியாமல் அதனால் ஈட்டும் வருமானங்;களை இழந்து தவிக்கின்றார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடி உடனடியாக அத்துமீறிக் குடியேறியிருப்பவர்களை நீதிமன்ற உத்தரவைப் பெற்று அங்கிருந்து அகற்றுமாறு பொலிசாருக்கும், மகாவலி அதிகாரசபைக்கும் உத்தரவு வழங்கியிருக்கின்றார். அதேபோன்று அந்தப் பிரதேசத்தில் ஆக்கிரமித்துள்ள அயல் மாவட்ட மக்களுக்கு அந்த அந்த மாவட்டங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கு இடம் வழங்குமாறும் கூறியிருக்கின்றார்.

ஆனால் நேற்று அங்கு என்ன நடந்திருக்கின்றது. முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத் அவர்களும், அடாவடி பிக்கு அம்பிட்டிய தேரர் அவர்களும் புதிதாக ஒரு புத்த சிலையை அங்கு கொண்டு சென்று வைத்துள்ளார்கள். ஜனாதிபதி ஒரு முடிவினை எடுக்கின்றார். அவர் முடிவினை அறிவித்து மறுநாளே இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் நாங்கள் என்ன சிந்திக்க வேண்டும். இந்த நாட்டை ஆள்வது ஜனாதிபதியா? பாராளுமன்றமா? அல்;லது புத்த பிக்குகளா? வியத்மக அமைப்பினரா? என்ற சந்தேகமே எழுகின்றது.

இவ்வாறான விடயங்களை நோக்கும் போது தமிழீழக் கனவு எவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இல்லாமல் செல்லும். அந்த வகையில் இனப்பிரச்சனை தீரவேண்டும் என்பதற்காக 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்ற கூறும் நீங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வைக் காண்பதற்கு முயற்சி செய்கின்றீர்களா என்றால் இல்லை. மாறாக வடக்கு கிழக்கிலே புத்த சிலைகளை நிறுவி, பெரும்பான்மை மக்களைக் குடியேற்றி வடக்கு கிழக்கிலே வாழும் தமிழ் பேசும் மக்களின் குடிப்பரம்பலை குறைப்பதே உங்களது நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றது. இந்த நிலை தொடருமானால் இந்த நாடு பிளவுபடுவதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

யாழ். பொது நூலகத்தில் அப்துல் கலாமின் 92-வது பிறந்த தின நிகழ்வு

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் 92-வது பிறந்த தினம் இன்றையதினம் பொது நூலகத்தில் நடைபெற்றது.

அவரது சிலைக்கு யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

மேலும், யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், தலைமை நூலகர், நூலக அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளும் இணைந்து அன்னாருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாண பொது நூலகத்தில் Dr. A. P. J அப்துல் கலாமின் மார்பளவு திருவுருவச் சிலையை நிறுவிய இந்திய அரசுக்கு யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் ஜெயசீலன் நன்றி தெரிவித்தார்.

டாக்டர் கலாம் யாழ்ப்பாணத்துடனான தொடர்புகள் குறித்து பேசிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் சந்திரயான் – 3 விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியாவை மிகப் பெரிய சாதனைக்கு இட்டுச் செல்கின்றது என்றும் கூறினார்.