நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவி குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை பிரதிநிதிகள் இன்று ஆராய்வு

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி குறித்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் இன்று சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர்.

இலங்கைக்கு எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணயநிதியம் இணங்கியது என்பது குறித்து அறிந்துகொள்வதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது சர்வதேச மன்னிப்புச்சபையின் இலக்குகளை தெளிவுபடுத்தும் அதேவேளை இலங்கை அரசாங்கத்துடனான சர்வதேச நாணயநிதியத்தின் இணக்கப்பாடு குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் சிறந்த விதத்தில் அறிந்துகொள்ள விரும்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்;ளார்.

நெருக்கடியான தருணங்களில் சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து உதவிகளை பெற்ற நாடுகள் மனித உரிமைகளை பாதுகாக்கும் விதம் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை எப்போதும் கரிசனை வெளியிட்டு வந்துள்ளது என தெரிவித்துள்ள யாமினி மிஸ்ரா இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார சமூக அரசியல் உரிமைகள் உட்பட மனித உரிமைகளிற்கு முன்னுரிமை வழங்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறான உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றாலும் அவை சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கீழ் உத்தரவாதம் செய்யப்பட்ட பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவதாக காணப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்பாட்டில் இலங்கை மக்களிற்கான தனது நலன்புரிசேவைகளை குறைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படக்கூடாது என தெரிவித்துள்ள யாமினி மிஸ்ரா கடன் வழங்கிய அனைவரும் மனித உரிமை கடப்பாட்டினை பின்பற்றவேண்டும்,அனைத்து செயற்பாடுகளும் வெளிப்படை தன்மை மிக்கவையாகவும் பொதுமக்களிற்கு தெரியப்படுத்தப்படுபவையாகவும் காணப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய எதிர்ப்புச்சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குகிறது

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல் என்ற பெயரில் நபர்களை முறையற்ற விதத்தில் நடத்தும் கலாசாரத்தை மாற்றுவதற்கான வலுவான அரசியல் நிலைப்பாடின்றி, வெறுமனே சட்டமறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரம் எதனையும் சாதிக்கமுடியாது என்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்நிலையம் மேலும் கூறியிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அவசரகாலநிலை பிரகடனம் ஆகியவற்றின் மூலமான அதிகாரங்களைக் கடந்தகால அரசாங்கங்கள் பயன்படுத்திய விதத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்கின்றது.

சிறுபான்மையினத்தவர், விமர்சகர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்குவைப்பதற்கும் சித்திரவதைகள் மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கங்களால் பாதுகாப்புச்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் பின்னணியில், இச்சட்டமூலம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும்.

அதேவேளை பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல் என்ற பெயரில் நபர்களை முறையற்ற விதத்தில் நடத்தும் கலாசாரத்தை மாற்றுவதற்கான வலுவான அரசியல் நிலைப்பாடின்றி, வெறுமனே சட்டமறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரம் எதனையும் சாதிக்கமுடியாது என்பதை மீளவலியுறுத்துகின்றோம்.

மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள சட்டமூலமானது பெருமளவிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை ஒத்ததாகக் காணப்படுகின்றது.

இருப்பினும் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருக்காத பல்வேறு குற்றங்கள் இப்புதிய சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டிருப்பதுடன், அவற்றில் சில விடயங்கள் கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரம் தொடர்பில் தீவிர கரிசனையைத் தோற்றுவித்திருக்கின்றன.

இருப்பினும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் பொலிஸ் அதிகாரியொருவரின் முன்னிலையில் வழங்கும் வாக்குமூலம் ஆதாரமாகக் கருதப்படமாட்டாது என்பது மாத்திரமே ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்துடன் ஒப்பிடுகையில் இப்புதிய சட்டமூலத்திலுள்ள ஒரேயோரு முன்னேற்றகரமான மாற்றமாகும்.

ஆனால் தடுப்புக்காவல் உத்தரவு தொடர்பான தீவிர கரிசனை இன்னமும் தொடர்கின்றது. குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் பாதுகாப்பு அமைச்சரிடம் காணப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு வழங்கும் அதிகாரம், இப்புதிய சட்டமூலத்தில் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இதனூடாக வரையறுக்கப்பட்டுள்ள தடுப்புக்காவலில் வைப்பதற்கான காலப்பகுதி மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகளும் கரிசனைக்குரியவையாகவே காணப்படுகின்றன.

அத்தோடு இச்சட்டமூலத்தின் ஊடாக அமைப்புக்களுக்கு எதிராகத் தடையுத்தரவு விதிப்பதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்வதிகாரங்கள், நாட்டில் நிலவும் சட்டபூர்வமான கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற சந்தேகம் நிலவுகின்றது.

மேலும் இப்புதிய சட்டமூலத்தில் ‘பயங்கரவாதக்குற்றங்களுக்கு’ வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் மிகவும் பரந்துபட்டதாகக் காணப்படுவதுடன், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இலங்கையின் நீண்டகால ஒடுக்குமுறை வரலாற்றை நினைவூட்டுகின்றது.

இலங்கையானது மீட்சியையும், அபிவிருத்தியையும் நோக்கிப் பயணிக்கும் தற்போதைய சூழ்நிலையில், மீறல்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடுதல் போன்றவற்றை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் ஏற்றவாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான ஐ.எம்.எவ் உதவி தமிழ் மக்களுக்கு எதிரான கலாசார இனவழிப்பை மேற்கொள்வதற்கான உந்துசக்தியை வழங்கியுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டமானது, தமிழ்மக்களுக்கு எதிராகக் கலாசார ரீதியிலான இனவழிப்பை மேற்கொள்வதற்கான வலுவான உந்துசக்தியை மீண்டும் இலங்கைக்கு வழங்கியிருப்பதுபோல் தெரிவதாக ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

அண்மையகாலங்களில் நீராவியடி பிள்ளையார் கோயில், குருந்தூர்மலை சிவன்கோயில், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் என்பன உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் சைவசமய வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டுவரும் சம்பவங்களை அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு கடுமையாகக் கண்டித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டமையானது, தமிழ்மக்களுக்கு எதிராகக் கலாசார ரீதியிலான இனவழிப்பை மேற்கொள்வதற்கான வலுவான உந்துசக்தியை இலங்கைக்கு மீண்டும் வழங்கியிருப்பதுபோல் தெரிகின்றது என்றும் அக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டுமொருமுறை சர்வதேச சமூகத்தை வெற்றிகரமாக ஏமாற்றிவிட்டார் என்று சுட்டிக்காட்டியுள்ள ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு, இந்த அட்டூழியங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் பாராமுகமாக இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாறும் அக்குழு அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடன் தென்னாபிரிக்காவின் நல்லிணக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தயார் – தென்னாபிரிக்க ஜனாதிபதி

இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் நோக்கில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோஷா உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான குழுவினர் கடந்த 21 – 25 ஆம் திகதிவரை தென்னாபிரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை உபகுழுவினால் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்கப்பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு இவ்வாண்டு ஜனவரி மாதம் அமைச்சரவை அனுமதியளித்தது.

மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை, நிலையான சமாதானத்தை நோக்கிப் பயணிக்கவேண்டுமெனில் உண்மையைக் கண்டறிவதற்கான சுயாதீன உள்ளகப்பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது அர்த்தமுள்ளதோர் வழிமுறையாக அமையுமென அம்முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் இம்முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கும், உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சட்டத்தைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதியமைச்சருக்கு அமைச்சரவை அதிகாரமளித்துள்ளது.

எனவே அச்செயன்முறைக்கு ஆதரவளிக்கும் வகையில் தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரமே இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்விஜயத்தின்போது தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷாவை சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர், அந்நாட்டின் சர்வதேச விவகாரங்கள், ஒருங்கிணைப்பு அமைச்சர் நலேடி பன்டோர் மற்றும் நீதி, அரசியலமைப்பு மேம்பாட்டு அமைச்சர் ரொனால்ட் லமோலா ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களையும் நடாத்தியிருந்தனர். அதுமாத்திரமன்றி தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் அரசியலமைப்பு மேம்பாட்டு அமைச்சர், தென்னாபிரிக்க அரச வழக்குரைஞர்கள் அலுவலக அதிகாரிகள், தென்னாபிரிக்க சட்டத்தரணிகள் சங்க அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தரப்பினருடனும் சந்திப்புக்கள் இடம்பெற்றன.

அந்தவகையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷாவுடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான நட்பை நினைவுகூர்ந்த அவர், இலங்கையுடனான இருதரப்புத்தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குத் தான் விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

அதேபோன்று இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் நோக்கில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சிரில் ரமபோஷா உறுதியளித்தார்.

அதேபோன்று அமைச்சர் அலி சப்ரிக்கும் தென்னாபிரிக்க சர்வதேச விவகாரங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் நலேடி பன்டோருக்கும் இடையிலான சந்திப்பின்போது இருதரப்பு விவகாரங்கள் குறித்தும், இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. மேலும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி, மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான முயற்சிகளில் இலங்கை அரசாங்கத்தினால் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் அலி சப்ரியினால் தென்னாபிரிக்க அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு இலங்கை விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் செயன்முறை பின்பற்றப்படவேண்டும் என்றும், அதன்படி இலங்கை மக்களுக்குப் பொருந்தக்கூடிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கும் இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலகு ரயில் வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை – ஜப்பான் தூதுவர்

கொழும்பு – மாலபே இடையிலான இலகு ரயில் சேவைத்திட்டத்தினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி தெரிவித்துள்ளார்.

இலங்கை மோட்டார் வர்த்தக சங்கத்தினால் நேற்று புதன்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலகு ரயில் புகையிரத திட்டம் தொடர்பில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது மற்றும் ஜப்பான் வர்த்தக சமூகத்தின் நம்பிக்கையை இலங்கையால் மீண்டும் பெற முடியுமா என்பதை பொறுத்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தினால் 2.2 பில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் கொழும்பு, கோட்டையிலிருந்து மாலம்பே வரையான இலகு ரயில் சேவைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு ஜப்பான் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை 2020ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக இரத்து செய்தது.

ஜைக்கா நிறுவனத்தினால் 12 ஆண்டுகள் சலுகை காலம் உள்ளடங்கலாக, 40 ஆண்டுகளுக்கு 0.1 சதவீத வட்டியுடன் கடனை மீள செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், இதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய எவ்வித காரணமும் இன்றி, இலங்கை அரசாங்கம் இரத்து செய்துள்ளது. 2020 செப்டெம்பர் 24ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கமையவே இத்திட்டம் இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், இந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜப்பான் இணங்கியுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், ஜப்பான் தூதுவர் அதற்கு மாறுபட்ட கருத்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாவை ஜனாதிபதியாக்கிய முடிவு தவறானது – ரோஹித அபேகுணவர்த்தன

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிக்க எடுத்த முடிவு மிகத் தவறானது என்று ராஜபக்சக்களின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன பகிரங்கமாகத் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதிப் பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவை நியமிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த முடிவு சரியானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த முடிவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைத்து வீசப்பட்டமை தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஜீவன் தொண்டமான் கோரிக்கை

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தான் வவுனியா, வெடுக்குநாறி மலைக்கு செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சேதமாக்கப்பட்ட சிலை மீள் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வவுனியா, நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்டுள்ளன.

அதேபோன்று விக்கிரகங்களும் மாயமாகியுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த பின்னர் தானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு,கிழக்கில் பெளத்த மரபுரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் கொழும்பில் விசேட கூட்டம்

‘வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில், கொழும்பில் இன்று(புதன்கிழமை) விசேட கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

வட மாகாணத்தின் பிரதான பௌத்த தேரர், கல்கமுவே சந்தபோதி தேரர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

‘சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள கூட்டமைப்பின்’ ஏற்பாட்டில், கொழும்பு – 07 இல் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில், பௌத்த மரபுரிமைகள் சேதமாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அவற்றைப் பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு பௌத்த அமைப்புகள், பௌத்த பிக்குகள், பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது – சுனில் ஹந்துனெத்தி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர்.

சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது.

பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால் எங்கும் மீண்டுள்ளதா?

நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார்.

“வெடியரசன் கோட்டை தமிழர்களின் சொத்து“: நெடுந்தீவில் போராட்டம்

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டை அருகில் மக்கள் இன்றைய தினம்(புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையை அடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது.

தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றினரின் செயற்பாட்டை கண்டித்தும், வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து என வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.