முன்னாள் பரிசுத்த பாப்பரசரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உயிர்நீர்த்ததையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன் கிழமை (ஜன 04) முற்பகல் கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்டின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உயிர்நீர்த்ததையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை (05) கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.

இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்டின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தைக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வியாழக்கிழமை (ஜன.05) விஜயம் செய்தார்.

அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுக்குறிப்பேட்டில் குறிப்பொன்றையிட்டதுடன், பதினாறாம் பெனடிக்ட் பரிசுத்தப் பாப்பரசரின் நினைவுப் புகைப்படத்திற்கு அஞ்சலியும் செலுத்தினார்.

இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையையும் சந்தித்து தனது இரங்கலையும் தெரிவித்தார்.

நீதிமன்றில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தமையால் வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளருக்கு சிறைத் தண்டனை

வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் நிமல் அதிகாரி, நீதிமன்ற நடவடிக்கையின் போது அவமரியாதையான முறையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த குற்றத்திற்காக சில மணித்தியாலங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக பொலன்னறுவை நீதவான் நிமால் அதிகாரியை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்குள் வைத்ததாக லங்காதீப பத்திரிகை தெரிவித்துள்ளது.

தனது பிரதேச சபையின் மின்சார ஊழியர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நிமால் அதிகாரி நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

ருஹுனுகெத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரம் எடுத்தமை தொடர்பில் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நிமால் அதிகாரி விசாரணைக்கு ஆஜராகியிருந்ததுடன், அவமரியாதையாக நடந்துகொண்டதால், மூன்று மணித்தியால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, நீதிபதியால் அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

களுத்துறையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணத்தை செலுத்தியது பெரமுன

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முதலாவது கட்டுப்பணத்தை களுத்துறை மாவட்ட தேர்தல் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை செலுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினர் தேர்தல் செயலகத்திற்குச் சென்றுள்ளதோடு, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரப் பணிகளையும் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளில் கலந்து கொள்வதில்லை – ரணில்

மாநகரசபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்.

இரண்டு வருடங்களுக்குள் வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து நாட்டை மீட்பதற்காகவே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதே தவிர, வாக்களிப்பதற்கு அல்ல என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த ஆணைக்கு புறம்பாக செயற்பட தாம் ஒருபோதும் தயாரில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை வலியுறுத்தியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட வேண்டுமாயின், அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் செயற்குழுக் கூட்டத்தின் தலைமைப் பதவியை மரபு ரீதியாக மாத்திரமே ஏற்பேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இதனைத் தவிர உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு செயற்பாடுகளிலும் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஐக்கிய தேசிய கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதானால் வேட்பாளர் பட்டியலில் 40 சதவீதமானோர் புது முகங்களாக இருப்பது பொறுத்தமானதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு நியமனம் செய்யப்படும் நான்காயிரம் உறுப்பினர்களுக்கு மாத்திரமே சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எஞ்சியவர்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இன்றி இலவசமாக பணியாற்றுவார்களா என்பதை தெரிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீர்வுக்காக அரசியல் கட்சிகளை ஒன்றிணையக் கோரி நாவற்குழியில் போராட்டம்

இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவற்குழியில் போராட்டமொன்று இடம்பெற்றது. நாவற்குழி சந்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சம்ஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும்ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கப்பல் சேவை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் – யாழ் வணிகர் கழக தலைவர்

கப்பல் சேவை மூலம் வடமாகாணத்தை பொருளாதாரத்தில் முன்னேற்ற கூடிய சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார்.

இன்று யாழ் வணிகர் கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான காகோ சிப் கப்பல் சேவை இந்த மாதம் (தை மாதம்) இறுதியில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

நீண்டகாலமாக வணிகர் கழகம் இவ் காகோ சிப் கப்பல் சேவையை கேட்டதன் தொடர்சியாக இந்திய இலங்கை அரசாங்கம் தற்போது இணங்கி இந்த சேவையை முன்னெடுக்கவுள்ளனர் எனவும் கப்பல் சேவையிலே ஈடுபட இருக்கின்ற நிறுவனம் எதிர்வரும் சனிக்கிழமை 07ஆம் திகதி வணிகர் கழகத்திற்கு வருகை தரவுள்ளனர் அவர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுவரையில் யாழ்ப்பாண வர்தகர்கள் இந்தியாவில் இருந்து கொழும்பு ஊடாக பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களை தற்போது காங்கேசன்துறை வழியாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.

வட மாகாணத்தில் இருந்து தென்னை பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் இதேவேளை இந்தியாவினுடைய சந்தை நிலவரத்தை சரியாக அறிய வேண்டும் இந்தியா வர்த்தக சங்கங்கள் கூடி கலந்துரையாடி அது சம்பந்தமான முன்னெடுப்புக்களை முன்னெடுக்க முடியும்.

நீண்ட காலம் எதிர்பார்த்த இந்த நிகழ்வு தற்போதைய காலத்தில் நடைபெற இருக்கின்றது அதை நாங்க இந்திய இலங்கை சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் முக்கியமாக வர்த்தகர்களுக்கு விடுகின்ற வேண்டுகோள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதிலிருந்து முன்னேற வேண்டும் என்பதே வேண்டுகோள் ஆகையால் இந்த சந்தர்ப்பத்தை தயவுசெய்து ஒவ்வொருவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தற்போதய அரசாங்கம் ஒரு சில பொருட்களுக்கான தடைகளை விதித்துள்ளது தடை செய்யாத பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்யலாம் அத்துடன் தடை செய்யாத பொருட்களுக்கான இறக்குமதி கட்டளைக்குரிய டொலர்களை அவர்கள் வங்கி மூலம் விடுவிக்கிறார்கள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களுக்கான தடைகள் நீக்கப்பட்டும் வருகின்றது.

ஏற்றுமதி இறக்குமதிக்கு இந்திய ரூபாய் பயன்படுத்தலாம் என்ற தகவல் வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வங்கி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இருக்கின்றோம் என தெரிவித்தார்

தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடாது

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் தலையிட மாட்டோம் எனவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலை திருத்த முயற்சிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரமான அமைப்பான தேசிய தேர்தல் ஆணையம் தனது செயல்பாடுகளை தொடர வேண்டும் என்றும், அரசின் தலையீடு இருக்காது என்றும் அவர் கூறினார்.

‘எதிர்க்கட்சிகளின் உதவியுடன், தேர்தல்கள், தேர்தல் திகதி மற்றும் தேர்தல் செயல்முறைகளை விவரிக்கும் அரசியலமைப்பின் 21 வது திருத்தத்தை நாங்கள் நிறைவேற்றினோம். இதன் மூலம், இந்த விவகாரங்களில் சுதந்திரமான தேர்தல்கள் ஆணைக்குழு செயல்படும்’ என கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் திருத்துவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.

பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி அறிக்கை

உத்தேச பண வீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் எதிர்கால நாணய, நிதியியல் துறை கொள்கைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல், 2020ஆம் ஆண்டில் பரவிய கொரோனா தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது கூட்டமைப்பின் இலட்சியம் இல்லை-செல்வம் எம்.பி

தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தேர்தலில் கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

-மன்னாரில் வைத்து நேற்று புதன்கிழமை(4) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த தேர்தலையும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம்.அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலையும் நாங்கள் சந்திக்க வேண்டும்.எனினும் தேர்தல் முறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த முறையானது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆளுகின்ற நிலை இல்லாத முறையாக இருக்கிறது.மக்களினுடைய எண்ணங்கள் புறக்கணிக்கப்படுகின்றது. அந்த வகையில் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளது.ஒற்றுமையாக சந்திக்க வேண்டும் என்பது எமது நோக்கம்.
இந்த கால கட்டத்தில் இந்த தேர்தல் வருகிறது என்பதை பார்க்கின்ற போது அரசாங்கம் நடக்க இருக்கின்ற தேர்தலுக்கான நிதி யை உலக நாடுகளிடம் இருந்து பெற்று மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை மக்கள் செலுத்துகின்ற வாக்கின் ஊடாகவே அறிந்து கொள்ள முடியும்.

எனவே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.இந்த தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதும் எமது பிரதான கருத்து.

இத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

தேர்தலில் கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை.தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட வேண்டும்.தேர்தலுக்கான அமைப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு இல்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

ஒற்றுமையாக எமது இனப்பிரச்சினை,மக்களின் பிரச்சினைகள் போன்றவற்றை நாங்கள் தட்டிக்கேட்கும்,அதனை செயல் படுத்துகின்ற விடையங்களை கையாளுகின்ற ஒரு அமைப்பாக தொடர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயல்பட வேண்டும்.

நாங்கள் முன் வைத்த கோரிக்கை மட்டக்களப்பில் இடம் பெற இருக்கும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன்.
ஒற்றுமையை வலியுறுத்துகின்ற வகையில் எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின் நாங்கள் என்ன செய்வது என்ற நிலைப்பாட்டை தெரிவித்துக் கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

பிரித்தானிய முன்னாள் பிரதமர் போர்ட் சிற்றிக்கு விஜயம்

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பு போர்ட் சிட்டிக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு போட்டிசிட்டியின் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரெயாஸ் மிகுலர் ஆணைக்குழுவின் சட்டம் மற்றும் நிறுவன விவகாரங்களிற்கான இயக்குநர் விந்தியா வீரசேகர, போட் சிட்டி கொழும்பின் முகாமைத்துவ பணிப்பாளர் யாங் லு ஆகியோரை சந்தித்த டேவிட் கமரூன் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் திட்டத்தின் தனியார் கூட்டான்மை மற்றும் பங்களிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுக வீரக்கோனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.