இந்திய நலன்களுக்கேற்ப இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மாற்றப்பட்டுள்ளது – சரத் வீரசேகர

இந்தியாவின் அழுத்தத்தினால் வடக்கு மாகாணத்தில் சீனாவிற்கு அபிவிருத்தி செயற்திட்டங்கள் மறுக்கப்பட்டன. இந்தியாவின் பாதுகாப்பு நிமித்தம் எடுக்கப்பட்ட ஒருசில தீர்மானங்கள் இலங்கையின் வெளிவிவகார கொள்கையின் தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது, ஆகவே வெளிவிவகார கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ. 17) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எமது நாட்டின் வெளிவிவகார கொள்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் சுயாதீனத்தன்மையை பாதிக்காத வகையில் வெளிவிவகார கொள்கை நடுநிலையான தன்மையில் பேணப்பட வேண்டும்.விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் இன்றும் உலக நாடுகளில் வாழ்கிறார்கள்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கும்,ஜப்பான் நாட்டுக்கும் வழங்க முயற்சி எடுக்கப்பட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் வழங்கும் முயற்சி தோல்வியடைந்ததன் பின்னரே அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டது, ஆகவே இலங்கையின் வெளிவிவகார கொள்கை நடுநிலையானது என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது.

இந்தியாவின் பாதுகாப்பு காரணிகள் நிமித்தம் எடுக்கப்பட்ட ஒருசில தீர்மானங்கள் இலங்கையின் வெளிவிவாகர கொள்கையை கேள்விக்குள்ளாக்கியது.

வடக்கு மாகாணத்தில் சீனாவிற்கு ஏதேனும் செயற்திட்டம் வழங்கும் போது அதற்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்கும் போது அந்த செயற்திட்டத்தை அரசாங்கம் நீக்கிக் கொள்கிறது. இது முழு வெளிவிவகார கொள்கைக்கும் எதிரானதாக அமையும்.

அதேபோல் சீனாவின் தொழினுட்ப தகவல் கப்பல் இலங்கைக்கு வருகை தரும் போது இந்தியா கடும் அழுத்தத்தை பிரயோகித்தது.

எமது வெளிவிவகார கொள்கை பொருளாதாரத்தில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகிறது. இந்தியாவின் அன்றைய கொள்கைக்கும், இன்றைய கொள்கைக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் பிராந்தியங்களை ஆட்சி செய்தவர்களின் கொள்கைக்கு அமைய இந்தியாவுடனான இலங்கையின் வெளிவிவகார கொள்கை காணப்பட்டது என்றார்.

தமிழர்களின் காணிகளை அரசாங்கம் அபகரிக்கவே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி – சித்தார்த்தன் எம்.பி

வரவு செலவு திட்டத்தில் கூடுதல் நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்படுவதன் காரணம் தமிழர் பகுதிகளில் உள்ள காணிகளை கையகப்படுத்தவே என்று யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (17) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதார நெருக்கடி நிலையில் நாடு வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளது. இந்த நிலையிலும் கூட இந்த வரவு செலவு திட்டத்திலே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து விட்டது இந்தநிலையிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது என்ற கேள்வி எம்மத்தியில் எழுக்கின்றது. எம்மை பொறுத்தவரை இந்த கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதற்கான காரணம் எங்கள் பகுதிகளிலே உள்ள காணிகளை அபகரிப்பதற்கு, காணிகளை கையகப்படுத்தி அவற்றை வெவ்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு என அந்த நிதிகள் பயன்படுத்தப்படுகின்றது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

”யுத்த காலங்களில் நீங்கள் யுத்தம் புரிவதற்காக நீங்கள் வாங்கிய ஆயுதங்கள், தளவாடங்கள் சம்மந்தமாக செலவுகளை பார்க்கலாம். அவைகள் கூட இன்று இல்லாத நேரத்தில் கூட இந்த நிதிகள் எதற்காக? ஒதுக்கப்படுகின்றது. இன்றும் இந்த நாடு யுத்த மனப்பான்மையில் தான் இருக்கின்றதா? இதனை நாங்கள் மிகத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இந்த பாதுகாப்புக்கு அமைச்சுக்கு ஒதுக்கபப்டுகின்ற நிதி நிச்சயமாக குறைத்துக்கொள்ள வேண்டும்.அரைவாசியாக கூட வெட்டிக்கொள்ள முடியும். அதேபோல் இன்றைய நாளாந்த வருமானத்தினை எதிர்பார்த்து வாழுகின்ற மக்கள் அந்த குடும்பங்கள் பட்டினியாக இருக்கின்ற நிலைமையை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

அவர்களுக்கான நிவாரணங்களை சரியான முறையில் கொடுக்கப்பட வேண்டும். அது சரியாக கவனிக்க வேண்டும். இந்த முறை அதுக்காக நிதி ஒதுக்கப்படவில்லை. இதெல்லாம் இன்று இருக்கக்கூடிய பொருளாதார நிலையிலே மக்களுடைய வறுமையை போக்குவதற்கு முயற்சி எடுப்பது மிக முக்கியமான இருந்தாலும் அவர்கள் அதை செய்வதற்கு கால தாமதம் அல்லது செய்யாது விடுகின்ற நிலைமையை எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டினை பொறுத்த மட்டில் பேராதனை பல்கலைக்கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டு ஏறக்குறைய 40 வீதமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் மிக பாதிப்பான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த முடிவற்ற பொருளாதார நெருக்கடியால் வறுமை நிலைக்கு கீழ் சென்றிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது . அதேவேளையில் உலக வங்கியின் 2020இ2021 அறிக்கையில் வறுமை நிலையில் ஏறக்குறைய 13.1 வீதமான மக்கள் இந்த நாட்டில் வறுமை நிலையில் இருந்திருக்கிறார்கள். ஆனால் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அது 25.6 ஆக உயர்ந்து நிற்கிறது. இவ்வாறு படிப்படியாக மக்கள் வறுமை நிலைக்கு சென்றிருக்கிறார்கள் அவர்களை மீடடெடுப்பதற்கான முக்கியமாக வரவு செலவுத்திட்டத்தினை பொறுத்த மட்டில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

ஆனால் இவைகள் செயற்படுத்தப்பட வேண்டும். இதற்கு நிதி எங்கிருந்து வரும்? ஏனென்றால் இந்த நாட்டின் மொத்த கடன் 51 பில்லியனுக்கு கூடுதலாகும். இதில் இறையாண்மை வரி 35 பில்லியன் இருக்கிறது. ஆனால் இந்த வரவு செலவுத்திட்டம் முழுமையாக ஐ.எம்.எவ் ஊடாக வரக்கூடிய அந்த நிதியினை எதிர்பார்த்து போடப்பட்ட வரவு செலவுத்திட்டமாகவே பார்க்கபப்டுகின்றது. எதிர்பார்க்கின்ற நிதியை 2.9 பில்லியன். இதை பார்க்கின்ற போது எவ்வாறு சாத்தியமாகப்போகிறது நாட்டினை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்ற பல கேள்விகள் இருக்கின்றது. ஒரு விடயத்தினை மறந்து விட கூடாது ஜனாதிபதி அவர்கள் மீண்டும் மீண்டும் பல தடவைகள் சொல்லியிருக்கிறார் கடந்த காலங்களிலே மக்களுக்கு பிரபல்யமான தீர்மானங்களை எடுத்தார்கள்.

சில கடுமையான தீர்மானங்களை எடுக்காமல் விட்டதால் தான் இந்த நாடு இப்படி போய் இருக்கின்றது. ஜனாதிபதி கூறிய கூற்று 100 வீதம் சரிஇ அவர் ஒரு இடத்தில் ஒரு உதாரணம் கூறுகின்றார் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் அவர்கள் கூறியிருக்கிறார் நான் கடுமையான தீர்மானங்களை எடுத்தேன். பண்டார நாயக்க அவர்கள் பிரபல்யமான திருப்திப்படுத்துகின்ற தீர்மானகளை எடுத்தார். அதனால் தான் இலங்கை பின்னடைவுக்கு போய் இருக்கின்றது என்று கூறியிருக்கிறார். இவர் கூறிய விடயம் நிச்சயிக்க இனப்பிரச்சனைக்குரிய விடயம் தான். ஏனெனில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் இந்த 56 சிங்களம் மாத்திர சட்டம் அதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது

தான் இந்த இனப்பிரச்சினை என்பது. அதன் சரித்திரத்துக்கு போக வேண்டாம் அதனால் ஏற்படட் அழிவுகள் தான் பெரிது. அதனால் தான் படிப்படியாக ஒரு யுத்தம் உருவாகி யுத்தத்திற்க்காக அரசாங்கம் கோடிக்கணக்கான மில்லியன் பணத்தினை செலவழித்து இந்த யுத்தத்தினை நடாத்தி அதற்காக கடனை பெற்று அந்த கடனை அடைக்க மீண்டும் கடனைப் பெற்று இந்த நாடும் அழிந்து பின்னடைவுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்தது.

இதனை கூறிய ஜனாதிபதி ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும். அவரும் பிரசித்தமான அல்லது மக்களுக்கு பிரபல்யமான தீர்வை எடுக்க கூடாது .இன்று இருக்கின்ற நிலையில் நியாயமான அரசியல் தீர்வை தான் முழுமையான ஒரு பிரச்சினைக்கு யாருமே தீர்வாக சொல்லுவார்கள். ஏனென்றால் ஒரு இனப்பிரச்சினை இருக்கும் வரை நல்லிணக்கத்தை அடைய முடியாது.” என்றார்.

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்படக்கூடாது – சர்வதேச மன்னிப்புச் சபை

பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் 90நாட்கள் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்தியத்திற்கான ஆய்வாளர் தியாகி ருவன்பத்திரன வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரின் தடுத்து வைக்கும் உத்தரவு மேலும் நீடிக்கப்படக் கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் பிரித்தானியா

டியகோ கார்சியா தீவில் தங்கியுள்ள மூன்று இலங்கை அகதிகளை சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக “The New Humanitarian” இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தீவு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ளது.

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டியகோ கார்சியா தீவுக்கு சுமார் 200 இலங்கையர்கள் வந்தடைந்துள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.அவர்கள்

உயிரைப் பணயம் வைத்து படகில் அங்கு சென்றுள்ளனர். அவர்களில் சிலரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அந்த தீவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மற்றவர்கள் சிலர் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள “ரீ யூனியன்” தீவுக்கு படகுகளில் ஏறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜொன்சன் பதவி வகித்த காலத்தில், ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டம் இருந்தது, அது நீதிமன்றத்தால் கைவிடப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டா நாட்டுக்கு அகதிகளை அனுப்பும் பிரித்தானிய அதிகாரிகளின் முடிவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா விடுதலை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவந்த பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி தலையீட்டில் எதுவித நிபந்தனைகளுமின்றி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி 300 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அன்றைய தினம் அவரது மனைவி சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.

அத்துடன் 2015ஆம் ஆண்டு மேன்முறையீடு செய்ததன் மூலம் 13 வருடங்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. சட்டத்தரணிகளான அனிருத் சில்வா, கணேசராஜா, நீலகண்டன் சரவணன் ஆகியோரினால் இவ்வழக்கு நெறிபடுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா தனது விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு விண்ணப்பித்துள்ளார். இவரின் விண்ணப்பத்தை பரிசீலித்த ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் அம்மையாரின் அனுமதியுடனும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவின் சிபாரிசின் பேரில் எதுவித நிபந்தனைகளுமின்றி உடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

சிறையிலிருந்து விடுதலையாகிய பின்னர் பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

எனது 22 வருட கால சிறைவாசத்திலிருந்து ஜனாதிபதி எதுவித நிபந்தனைகளுமின்றி என்னை விடுதலை செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு இணங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையாரும் அனுமதி வழங்கியதுடன் நீதி அமைச்சரும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

நான் சிறையில் இருந்தபோதும் எனது ஆன்மீக கடமைகளை செய்வதற்கு அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர், செயலாளர் மற்றும் பிரதித் தலைவர் தனபால் ஆகியோரும் எனக்கு பேருதவியாக இருந்துள்ளதுடன் எனது விடுதலைக்காக அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு இன்றைய இந்த விடுதலையை உறுதிப்படுத்தினார்கள்.

முக்கியமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகங்கள், உணர்வாளர்கள் அனைவரும் எனது விடுதலைக்கு தங்களால் இயன்ற ஆதரவை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக கனடா டொரொன்டோவில் உள்ள நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் ஏற்பாட்டாளர் ரோய் சமாதானம், லண்டனைச் சேர்ந்த மனிதநேய செயற்பாட்டாளர் ராஜன் ஆசீர்வாதம் போன்றவர்களுடன் ஏனையவர்களும் எனது விடுதலை தொடர்பாக ஜனாதிபதியுடன் அவ்வப்போது பேசி வந்தார்கள்.

எனது இந்த விடுதலைக்கு முழுமையான காரணம் சிறைத்துறை அதிகாரிகளும் சிறை தலைமை செயலகமுமாகும். ஜனாதிபதிக்கு எனது ஆவணங்கள் முழுமையாக பரிசீலித்து எனது விடுதலைக்கான ஒழுங்குகளை செய்து தந்தார்.

எனது அவ்வப்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்டுமாறு கோரிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுமாறு ரெலோ  மற்றும் புளொட் ஆகியன  கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் எழுத்து மூலமாக கடிதமொன்றை புதன்கிழமை (16) அனுப்பி வைத்துள்ளனர்.

அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூடுவதற்காக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பினும்  அது  தொடர்ச்சியாக பல காலம் நடைபெறாமலே இருப்பது கவலைக்குரியது.

இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் அங்கத்துவ கட்சிகளுக்கு இடையிலான கருத்து பரிமாற்றங்கள் சீர்குலைந்துள்ளது. கருத்து வேறுபாடுகள் தோன்றுவதனால் புரிந்துணர்வு அற்ற சூழலே காணப்படுகிறது.

இதைத் தவிர அங்கத்துவக் கட்சிகளுக்கு உள்ளே ஏற்படுகின்ற பூசல்களும் முரண்பாடுகளும் அக்கட்சிகளை மாத்திரம் பாதிக்காது ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பாதகமாக  உருவாகி வருகிறது.

இந்தச் சூழ்நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாரிய நம்பிக்கை வைத்துள்ள தமிழ் மக்களினுடைய எண்ணங்களில் சந்தேகமும் குழப்பமும் தோன்றுவதை அவதானிக்க முடிகிறது.  வெளிப்படையாகவே மக்கள் கூட்டமைப்பில் நிலவும் குழப்ப சூழ்நிலைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பகிரங்கமாகக்  கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையை தொடர விடாமல் தடுத்து நிறுத்துவதும்,  பாரிய தேசிய இயக்கத்தை தொடர்ந்து சிக்கலுக்கு உட்படுத்துகின்ற நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வரவும் உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதானிகளை கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை கூட்டுவது அவசியம் என்று  நாம் கருதுகிறோம்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மிக விரைவில் அதற்கான கால நேரத்தை அறியத்தருமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்  என்றுள்ளது.

தமிழக முதலமைச்சரை சந்தித்தார் இ.தொ.கா.வின் தலைவர் செந்தில் தொண்டமான்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் ராமேஸ்வரன் ஆகியோர்  நன்றி தெரிவித்ததாகவும் இதன்போது தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் உள்ள மலையக மக்களுடைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவில் தமிழகத்தில் உள்ள  கூடலூரில் TENTEA நிறுவனத்தின் கீழ் வேலைசெய்யும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த மலையக தமிழர்களை அவர்களது குடியிருப்புக்களில் இருந்து வெளியேருமாறு வனத்துறையினர் சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கியுள்ள நிலையில், அங்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அம்மக்களுடன் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான், இப்பிரச்சினைக் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

தற்காலிகமாக அம்மக்கள் அக்குடியிருப்புகளில் இருப்பதற்கும், தமிழக அரசு இலவசமாக 650 புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, TENTEA  தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவும், அவர்களுக்கு தமிழக அரசின் நிதிஒதுக்கீட்டில் 650 வீடுகள் இலவசமாக  அமைத்துக் கொடுப்பதற்கான அறிவித்தலை தமிழக அரசு  விரைவில் வெளியிடும்  என  அறிவித்தார்.

மேலும் கடந்த காலங்களில் இந்தியாவில்  PETA அமைப்பினால் ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை  தமிழக அரசுடன் இணைந்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்கம்  சட்ட ரீதியாக இவ்வழக்கை சந்தித்து உரிய அனுமதியை பெற்றுக் கொடுத்தது.

மீண்டும் PETA அமைப்பினால் தற்போது ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இவ்விடயத்தில் தலையிட்டு நிரந்தர தீர்வு பெற்றுத்தர வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் இந்த வருடம் போன்றே எதிர்காலத்திலும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்  என தெரிவித்தார்.

மேலும் இச்சந்திப்பில் பாரதியார் கவிதைகள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.இலங்கை தொழிலாளர் காங்கிர

முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள ‘கோத்தபாய கடற்படை கப்பல்’ கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்று (16) முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பலதடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள் காணி உரிமையாளர்களான மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்தது.

காணி உரிமையாளர்களான மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க அளவீடுகளை செய்ய எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது.

இதற்க்கு காணி சுவீகரிப்பு தொடர்ச்சியான மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையால் அளவீட்டு பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை இந்த நிலையில் இன்று(16) அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் இதற்க்காக சிறப்பான நில அளவையாளர் குழு ஒன்று கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வருகைதரவுள்ளதாகவும் அறிந்த சில காணி உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு காணியினை வழங்குவதற்கு எதிர்பினை தெரிவித்துள்ளார்கள்.

தமது பூர்வீக காணிகளை அரசாங்கம் தங்களுக்க வழங்கவேண்டும் என்றும் தமது சொந்த நிலத்தில் வாழவே விரும்புவதாகவும் இழப்பீடோ அல்லது மாற்றுக்காணிகளையோ தாம் கோரவில்லை எனவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் காணி அளவீட்டு நடவடிக்கைக்காக எவரும் சமூகமத்திருக்கவில்லை ஆனால் இன்று(16) இரகசியமான முறையில் அளவீடுகள் எவையும் இடம்பெறுகின்றதோ என தாம் சந்தேகிப்பதாகவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் காணி உரிமையாளர்களோடு இணைந்து இந்த எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.a

ஜனாதிபதி கிழக்கு, மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாட வேண்டும் – வே.இராதாகிருஷ்ணன்

நாட்டில் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் பிரச்சினை இருக்கும் போது வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருப்பது, வடக்கில் இருக்கும் தமிழ் தேசியத்தை பிரிப்பதற்கா என்ற சந்தேகம் எழுகின்றது. மலையக மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு மலையக பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி அழைத்து கலந்துரையாட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (நவ. 16) இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்கள் எதிர்பார்த்த வரவு- செலவுத் திட்டம் அமையவில்லை. மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் நிலையில் நிவாரணங்கள் கிடைக்கும் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இன்றைய பொருளாதார நிலையில் மத்திய பொருளாதார நிலையில் இருப்பவர் கீழ் மட்டத்துக்கு சென்றுள்ளார். கீழ் மட்டத்தில் இருப்பவர் பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையை மாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை.

அத்துடன் கஞ்சாவுக்கும் கறுவாவுக்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் தேயிலைக்கு கொடுக்கப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது. இன்று தேயிலை விலை அதிகரித்துள்ளது. உரம் இல்லாததால், உற்பத்தி குறைந்திருப்பதே இதற்கு காரணமாகும். ஆனால் தேயிலை மூலம் 1.3 பில்லியன் வருமானம் கிடைத்திருப்பதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் மலைய மக்கள் தொடர்பில் நன்கு அறிந்த ஜனாதிபதி, வரவு- செலவுத் திட்டத்தில் தோட்ட மக்களின் நலன் தொடர்பில் எந்த பிரேரணையைும் முன்வைக்கவில்லை. அது குறித்து எமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும், மலையக மக்கள் இந்திய வம்சாவளியாக தோட்டங்களுக்கு வந்து அடுத்த வருடம் 200 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை அந்த மக்களின் பிரச்சினை எதற்கும் முழுமையான தீரவு கிடைக்காமல் இருப்பது கவலையளிக்கின்றது. லயனட அறைகளும் தொடர் மலசலகூடங்களுமே இருந்து வருகின்றன. பாடசாலை, வைத்தியசாலை வசதிகள் எதுவும் முறையாக இல்லை. இ்ப்படியான மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி எந்த பிரேரணையையும் முன்வைக்கவி்லலை.

அத்துடன் வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார். வடக்கில் மாத்திரம் அல்ல, கிழக்கிலும் பிரச்சினை இருக்கின்றது. அதனால் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து பேசவேண்டும். ஆனால் ஜனாதிபதி வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் அழைத்திருப்பது வடக்கு கிழக்கை பிரிப்பதற்கா அல்லது வடக்கில் இருக்கும் தமிழ் தேசியத்தை பிரிப்பதற்கா என்ற சந்தேகம் எழுகின்றது.

அத்துடன் மலையக மக்களுக்கும் பிரச்சினை இருக்கின்றது. அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தரையாட மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடவேண்டும என்றார்.

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு ஒதுக்கீடு : எதிராக வாக்களிப்போம் – செல்வம் எம்.பி.

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு ஒதுக்கீடு தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆகவே நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு பாரிய உணவுப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில், பாதுகாப்பிற்கு பெருமளவில் செலவழிக்காமல் இதுபோன்ற விடயங்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உணவு பாதுகாப்பு பிரச்சினைக்கு நிலையான நீண்டகால தீர்வுகளை இரு அமைச்சுக்களாலும் வழங்க முடியும் எனினும் விவசாயம் மற்றும் மீன்பிடி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை என்றும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.