வடக்கில் சரணாலயம் அமைக்க பொருத்தமான காணியை அடையாளம் காணுங்கள் – ஜனாதிபதி பணிப்பு

வடக்கு மாகாணத்தில் 1000 ஏக்கர் அளவில் சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், சரணாலயங்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட தெற்கிற்கு வர வேண்டிய சூழல் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பொருத்தமான காணிகளை ஆராயுமாறு வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்

ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில்அமெரிக்க தூதுவர் விடுத்துள்ள வேண்டுகோள்

ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் உரிமைகளை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்திற்கு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரஜைகளின் உரிமைகளிற்கு ஆதரவளிப்பதற்கான தளத்தினை உறுதி செய்யுமாறு நாங்கள் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் உரிமைகளை அமைதியாக பயன்படுத்தவேண்டும் எனவும் கேட்டுகொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றும் அரசாங்கத்துக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை – சஜித்

அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றும் அரசாங்கத்துக்கு ஒருபோதும் நாம் அஞ்சப்போவதில்லை என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரச அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரச அடக்குமுறைக்கான இந்த எதிர்ப்பு பேரணியானது கொழும்பு கோட்டை ரயில் நிலைய பகுதிவரை செல்வதற்கு இருந்தது. எனினும் சட்டத்துக்கு மதிப்பளித்து கொழும்பு வர்த்தக மையப்பகுதியிலேயே எமது இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்கின்றோம்.

ஜனநாயகத்தை வெற்றிக்கொள்வதறகான இந்த பயணத்தில், தேர்தலை நடத்த செய்வதற்கான பயணத்தில், அரசாங்கத்தை மாற்றும் பயணத்தில் முதலாவது சிறிய நடவடிக்கையாக இன்றைய இந்த பேரணி அமைந்துள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்க வேண்டாம், பேரணிக்காக வீதியில் நடந்து திரிய வேண்டாம் என்று எமக்கு கடிதம் அனுப்பினர்.இளைஞர் சமூகத்தின் விடுதலைக்காக நாம் தொடர்ச்சியாக போராடுவோம்.பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி எமது ஜனநாயக உரிமையை, வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர் ஆகியோரின் உரிமைகளை இன்று பறித்துள்ளனர்.தற்போது மிலேச்சத்தனமான அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது. திரிசங்கு நிலையில் உள்ள அரசாங்கமாகும்.

அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியல் இருக்கின்றது. எனினும் இவற்றுக்கு நாம் அஞ்சப்போவதில்லை.

நாம் எந்த நேரத்திலும் எதற்கும் முகங்கொடுக்க தயாராகவுள்ளோம். எனவே எமது அஹிம்சை ரீதியான, ஜனநாயக ரீதியிலான இந்த போட்டம் வெற்றிபெறும்.

இன்று இந்த பேரணியை நாம் மிகவும் அமைதியான முறையிலேயே முன்னெடுக்கின்றோம்.நாட்டின் பாதுகாப்பு துறையுடன் மோதுவதற்கு நாம் தயாரில்லை.எனினும் மக்கள் பிரநிதித்துக்கான கடமைகளை ஆற்றாது நாட்டை சீரிழிக்கும் வரிச்சுமையை திணிக்கும் மக்களின் வறுமை நிலையை அதிகரிக்கும் அரசாங்ததுடனயே எமது போராட்டம் உள்ளது.

அரச அடக்குமுறைக்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு மருதானையில் எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், எதிர்க் கட்சி அரசியலை முன்னெடுக்கும் தரப்பினர் ஒன்றிணைந்து இந்த பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

மருதானை எல்பிஸ்ட்ன் அரங்குக்கு முன்பாக ஆரம்பமாகிய இந்த பேரணி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை பயணித்தது.

ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் ஒன்று திரள்வோம், உரிமைக்காக போராடுவோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.

பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

ஆர்ப்பாட்டப்பேரணியானது கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி சென்ற போது, கொழும்பு வர்த்தக மையப்பகுதியில் பொலிஸ் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதன்போது பொலிஸாரை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பொலிஸாரிடம் முறுகலில் ஈடுபட்டதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அடக்குமறையை நிறுத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸாரின் தடைவிதிப்பு மத்தியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பளையில் போராட்டம்!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் புதன்கிழமை தெல்லிப்பழையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வட கிழக்கில் காணி சுவீகரிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே உள்ளது.

இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். அந்தவகையில் வலி வடக்கு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி போராடவேண்டிய தேவையுள்ளது.

 

ஆகவே தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கூடிய மதகுருமார், சிவில் அமைப்புக்கள்,அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரையும் கட்சி பேதமின்றி பங்கெடுக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்து இருந்த நிலையில் , இன்றைய தினம் போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு இருந்தனர்

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமாஉச்ச நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் கேள்வி

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா என உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னதாக இந்தியா சென்று குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டம் 2019 டிசம்பரில் இயற்றப்பட்டது.

இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து, 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தலைமை நீதியரசர் யு.யு.லலித் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், நேற்று முன்தினம் (31) இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சட்டத்தரணி வில்சன் வாதங்களை முன்வைத்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தின் பலனை மூன்று நாடுகளுக்கு மட்டும் என கட்டுப்படுத்துவதில் நியாயம் இல்லை எனவும்
இதர அண்டை நாடுகளிலும் இதேபோன்ற துன்புறுத்தலை எதிர்கொள்ளும் சிறுபான்மையினர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளதாகவும் அவர்களுக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படுமா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்த சட்டத்தரணி, இதற்கு சொலிசிட்டர் ஜெனரலிடம் பதில் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மனச்சாட்சியற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட இலங்கையை முன்னேற்றுவது இலகுவான விடயமல்ல : பேராயர்

யாருக்கும் பொறுப்பு கூறுவதற்கு அவசியமற்ற நிர்வாக பொறிமுறையை நாட்டில் ஏற்படுத்தி , சட்டத்தை தமது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளே தற்போது காணப்படுகின்றனர். இவ்வாறான மனசாட்சியற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட முன்னேற்றுவது இலகுவான விடயமல்ல என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக் கொள்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான காப்புறுதி தொகையை 10 இலட்சம் வரை அதிகரித்துக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா – இந்திகொல்ல புனித ஜூட் திருத்தலத்தின் வருடாந்த சிறப்பு ஆராதனை ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றது. இதன் போதே பேராயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

யாருக்கும் பொறுப்பு கூறாத , பொறுப்பு கூற அவசியமற்ற நிர்வாக முறைமையை நாட்டில் ஏற்படுத்தி , நாட்டின் சட்டத்தை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு பொறுப்பற்ற மோசமான தீர்மானங்களை எடுத்து நாட்டை கையேந்தி உண்ணும் நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி தொகை 2 இலடசத்திலிருந்து 10 இலட்சம் வரை அதிகரித்துள்ளது.

நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக் கொள்வதில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் , மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் இவ்வாறே அமைந்துள்ளன. நாட்டில் மனசாட்சியுள்ள மக்கள் பிரதிநிதிகள் எங்கே? அரசியல் தலைவர்கள் எங்கே? இவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமா? சட்டத்தை சிறிதளவேனும் கவனத்தில் கொள்ளாமல் , அநீதியான முறையில் ஆட்சி செய்வதற்காக அரசியல் அதிகாரத்தை பாவிக்கும் அரசியல்வாதிகள் கொண்ட நாட்டை எவ்வாறு முன்னேற்ற முடியும்?

உலகிலுள்ள அபிவிருத்தியடைந்த நாடுகளில் மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பில் எவரேனுமொரு அரசியல்வாதியின் பெயர் வெளியிடப்பட்டால் , குறித்த நபர் உடனடியாக பதவி விலகிவிடுவார். ஆனால் எம் நாட்டிலுள்ளவர்கள் பதவி விலகுவதற்கு பதிலாக , அவர்களது பலத்தை மேலும் அதிகரித்துக் கொள்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகின்றனர். அவரவருக்கு தேவையான வகையில் சட்டத்தை வலைத்துக் கொள்கின்றனர். தமக்கு ஏற்றாட்போல் அந்த சட்டங்களை பாவித்து நாட்டுக்குள் பாரதூரமான நிலைமையை ஏற்படுத்துகின்றனர். இது போன்ற மோசடிகள் நிறுத்தப்பட வேண்டும். மனசாட்சி கொண்ட தலைமைத்துவமொன்று நாட்டுக்கு அவசியமாகும். ஆனால் நாடு தற்போது செல்லும் முறைமையில் அவ்வாறானதொரு தலைமைத்துவம் இருப்பதாக உணர முடியவில்லை என்றார்.

குருந்தூர் பகுதியில் விகாரை அமைக்க வேண்டுமென 46 அமைப்புக்கள் புத்தசாசன அமைச்சருக்கு கடிதம்

குருந்தூர் மலை விகாரை தொல்பொருள் பகுதியில் சட்டரீதியாக முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளுக்கு தடை ஏற்படுத்துவது நாட்டின் பொதுச் சட்டத்தையும், அரசியலமைப்பையும் சவாலுக்குட்படுத்தும். குருந்தூர் விகாரை அமைந்துள்ள தொல்பொருள் பகுதியில் சட்டத்திற்கு முரணாக கோயில் ஒன்றை ஸ்தாபிக்க முயற்சிப்பது முற்றிலும் தவறானதாகும்.

குருந்தூர் மலை விவகாரம் இனம் மற்றும் மதங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் அளவிற்கு பாரதூரமாக செல்வதை தடுக்க பொறுப்பான தரப்பினர் சட்டத்திற்கமைய செயற்பட வேண்டும். இல்லாவிடின் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என பௌத்த மத அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளடங்களாக 46 அமைப்புக்கள் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

46 அமைப்புக்களை ஒன்றிணைத்த தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்புக்களின் கூட்டமைப்பு இந்த அறிக்கையை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், அரசியல் கட்சிகள் தலைவர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளது. 46 பௌத்த மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளதாவது,

1933ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ஊடாக சிலைகள் மற்றும் தொல்பொருள் சின்னங்களை கொண்ட குருந்தூர் மலை பகுதியின் 78 ஹேக்கர் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் காணி என அறிவிக்கப்பட்டது. அத்துடன் 1924ஆம் ஆண்டு நிலப்பரப்பின் விசேட தொல்பொருள் சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. இந்த வரைப்படத்திற்குள் கோயில் மற்றும் தேவாலயத்தின் சிலை சின்னங்கள் விகாரைக்கு ஒதுக்கு புறத்தில் உள் குருந்தூர் குள பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

‘குருந்தக’ என்ற பெயரில் இந்த பௌத்த விகாரை கி.பி 100 – 103 காலப்பகுதியில் பல்லாடநாக என்ற அரசனால் நிர்மானிக்கப்பட்டது. மகாவம்சத்தின் சான்றுப்படி கி.பி 1055-1110 காலத்தில் முதலாவது விஜயபாகு அரசனால் இந்த விகாரை புனரமைக்கப்பட்டது. ஹென்ரி பாகரின் 1886 ஆண்டின் வருடாந்த அறிக்கையில் இந்த தொல்பொருள் பூமி தொடர்பில் ‘ காலம் காலமாக நேர்ந்த அழிவுகளை காட்டிலும், இந்த பகுதிக்கு குடியமர்வதற்காக வருகை தந்த தமிழர்களினால் இந்த தொல்பொருள் சின்னங்கள் அழிக்கப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குருந்தூர் விகாரை மற்றும் அதனை சூழ்ந்துள்ள பகுதி முக்கியமான தேசிய மரபுரிமையாகும் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் ஒன்பதாவது உறுப்புரை மற்றும் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தில் 1990 தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவம் தொடர்பில் சர்வதேச கொள்கைக்கமைய இந்த இடத்தை தேசிய மரபுரிமையாக பாதுகாக்க மற்றும் இந்த பூமியின் அபிவிருத்தி பணிகளை தடையின்றி முன்னெடுத்து செல்வதை உறுதிப்படுத்துவது பொறுப்பான தரப்பினது கடமையாகும்.

தொல்பொருள் திணைக்களத்தின் சட்டப்பூர்வமான திட்டத்திற்கமைய விகாரையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.இதனை தொடர்ந்து இப்பகுதியின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கருத்திற் கொண்டு தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை மீறி அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்ட அரசியல் தரப்பினருக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அரச கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது.பிரச்சனைகளை தோற்றுவிப்பவர்கள் பொது சட்டத்தை தமது கைகளில் எடுப்பது தவறான எடுத்துக்காட்டாக அமையும். இனவாதம் மற்றும் மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இவர்கள் அடாவடித்தனமாக செயற்படுகிறார்கள்.

இதற்கு மேலதிகமாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நீதிமன்றத்திற்கும், சட்டமா அதிபருக்கும் இந்த விவகாரம் தொடர்பில் தொழில்நுட்ப அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இது பாரியதொரு குற்றமாகும். சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட பௌத்த விகாரை உள்ள பூமியில் சட்டவிரோதமான முறையில் கோயிலை நிர்மாணிப்பதற்கு அவதானம் செலுத்தப்படுகிறது.

தேசிய தமிழ் அரசியல் டயஸ்போராக்களுக்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும், போராட்டகாரர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட தரப்பினருக்கும் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி சாதகமாக உள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள் பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது.

குருந்தூர் மலை பகுதில் சட்டரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்லாவிடின் நீதிமன்றத்தை நாடுவதற்கு தீர்மானித்துள்ளோம். தேசிய மரபுரிமைகளை பாதிப்பிற்குள்ளாக்குபவர்கள் தேசிய மரபுரிமைகளை காட்டிக் கொடுத்தவர்களாக வரலாற்றில் அடையாளப்படுத்தப்படுவார்கள்

மரங்களை நடுகை செய்தல்,ஒரு தேசியச்செயற்பாடு – பொ. ஐங்கரநேசன்

கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல அது தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014 ஆம் ஆண்டுமுதல் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடகஅறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு பூமி சூடேறி வருவதால் காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்படத்தொடங்கியுள்ளன. கடும் வறட்சி, காலம்தப்பிய பெருமழை, வேகமெடுக்கும் சூறாவளிகள், கடல்மட்ட உயர்வு, உயிரினங்களின் அழிவு என்று காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம்.

இதனால், வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கவேண்டிய கட்டாயநிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு கூடுதலான மழைவீழ்ச்சியைப் பெறும் கார்த்திகை மிகப்பொருத்தமான மாதமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது. இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த மறவர்களைக் கூட்டாக நினைவிற்கொள்ளும் நாள் அடங்குகிறது.

மரவழிபாட்டைத் தமது தொல்வழிபாட்டு முறையாகக்கொண்ட தமிழர்கள், இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச் சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கின்றனர்.

தேசியம் என்பது வெறுமனே தட்டையான ஒர் அரசியற் சொல்லாடல் அல்ல. இது ஒரு இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில், கார்த்திகைமாத மரநடுகை என்பது தமிழ்த்தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும்.

எனவே தமிழ்மக்கள் கார்த்திகை மரநடுகையை ஒரு சூழல்பேண் நடவடிக்கையாக மாத்திரமல்லாது உணர்வெழுச்சியுடன்கூடிய ஒரு தமிழ்த்தேசியச் செயற்பாடாகவும் கொண்டாட வேண்டியது அவசியமாகும்.

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகைமாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும்.

கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரமல்ல அது தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும். – இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்க ரெலோ தலைவர் கோரிக்கை

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடிதம் மூலம் நேற்று (31.10.2022) பிரதமரிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குமாறு நான் பலமுறை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். இந்த விடயம் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேற்குறிப்பிட்ட விடயத்தில் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட சாதகமான முடிவு அனைவராலும் வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியதாகும்.

இந்த முடிவு இளைஞர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தருணத்தில் இந்த தீர்வை நான் சரியானதாகவே பார்க்கிறேன்.

இந்த முடிவை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.