பாராளுமன்றம் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் நடைபெறவில்லை என ஜனாதிபதி சபாநாயகருக்குக் கடிதம்

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை  மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட  முன்மொழிவுகளை  அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு  ஜனாதிபதி எழுத்து மூலம்  அறிவித்துள்ளார்.

இந்த  முன்மொழிவுகளில், தேசிய சபையை ஸ்தாபிக்கும் நடவடிக்கை  மாத்திரமே இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி  இன்று  (03)    அனுப்பியுள்ள இந்த  எழுத்துமூல    அறிவிப்பில்   சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீண்டகால முறைமை மாற்றங்களை ஏற்படுத்தும்  நோக்கில் முன்மொழியப்பட்ட யோசனைகளில்  வங்கி விவகார  மற்றும் நிதிச் சேவைகள்  தொடர்பான குழு  (Committee on Banking and Financial Services), பொருளாதார ஸ்திரப்படுத்தல்  தொடர்பான குழு (Committee on Economic  Stabilization) மற்றும் வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான  குழு  (Committee on Ways and Means) ஆகியவற்றை வங்கி விவகாரங்கள் தொடர்பில் நியமிப்பதற்கு முன்மொழியப்பட்டாலும் அவை இதுவரை  முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி  சபாநாயகருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்கவும், பாராளுமன்ற  வரவுசெலவுத் திட்ட  அலுவலகத்தை நிறுவவும் முன்மொழியப்பட்ட போதும் அவையும் செயற்படுத்தப்படவில்லை.

இந்த  பரிந்துரைகளின்படி 17 பாராளுமன்ற துறைசார்  மேற்பார்வைக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டியுள்ள  போதிலும் அவற்றுக்கான தலைவர்கள்  இது வரை நியமிக்கப்படவில்லை எனவும் அவற்றுக்கு நியமிக்கப்படும் இளைஞர் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான அளவுகோல் இன்னும் தயாரிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்   தெரிவித்துள்ளார்.

அடுத்த வருட வரவு செலவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் இதனால் அரசாங்கம் எதிர்பார்க்கும்  முறைமை  மாற்றம் (System Change)  மிக விரைவாக எட்டப்படும் எனவும் ஜனாதிபதி   நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகத்துக்கான சட்டமூலத்துக்கும் அமைச்சரவை  அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, சட்டமா அதிபரின்  அனுமதியைப் பெற்ற  பின்னர்  அதனை பாராளுமன்றத்தில் சமர்பிக்க உத்தேசித்துள்ளதாக  சுட்டிக்காட்டியுள்ள  ஜனாதிபதி , இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எட்வின் ஷார்க், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். கடந்த வாரம், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பில், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

இரு நாடுகளின், பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்களின் ஊடாக, இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையிலான, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக, பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது

இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்குழுவின் 6ஆவது கூட்டத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளது. எவ்வாறாயினும், அந்தச் சட்டத்தின் அண்மைய பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் பொறிமுறைகளுடன் தொடர்ந்தும் செயற்படுமாறு இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொசவில் 5 அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

200 ரூபாயினால் குறைக்கப்பட்ட நெத்தலியின் புதிய விலை 1300 ரூபாய்,

96 ரூபாயினால் குறைக்கப்பட்ட கோதுமை மாவின் புதிய விலை 279 ரூபாய்,

22 ரூபாயினால் குறைக்கப்பட்ட வெள்ளை சீனியின் புதிய விலை 238 ரூபாய்,

105 ரூபாயினால் குறைக்கப்பட்ட டின் மீனின் புதிய விலை 585 ரூபாய்,

17 ரூபாயினால் குறைக்கப்பட்ட சிவப்பு பருப்பின் புதிய விலை 398 ரூபாய்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு உதவ ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தால் நிதி சேகரிப்பு

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்’ என்ற மகுடத்தில் நிதி சேகரிப்புத்தளமொன்றை ஆரம்பித்திருக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டம், அத்தளத்திற்குத் தம்மால் இயன்ற நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கை மக்களுக்கு உதவமுன்வருமாறு உலக மக்களிடம் கோரிக்கைவிடுத்திருக்கின்றது.

இதுகுறித்துத் தெளிவுபடுத்தி ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

இந்து சமுத்திரத்தின் முத்தாக அறியப்படும் இலங்கை இப்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. கடந்த 1948 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகப்பாரிய நெருக்கடி இதுவாகும்.

இதன்விளைவாக பல மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், மொத்த சனத்தொகையில் சுமார் 5.7 மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்ற துரதிஷ்டவசமான நிலையில் இருக்கின்றனர். அதுமாத்திரமன்றி சுமார் 6.3 மில்லியன் மக்கள் அவர்களின் அடுத்தவேளை உணவு எங்கிருந்து கிடைக்கப்பெறும் என்று தெரியாத நிலையில் உள்ளனர்.

எனவே இந்நிலைவரம் தொடர்ச்சியாக மோசமடைந்துவரும் பின்னணியில், நாம் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான ஏனைய முயற்சிகளில் ஒன்றாக நிதி சேகரிப்பு பிரசாரமொன்றை ஆரம்பித்திருக்கின்றோம். இதனூடாக தற்போது இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

உணவு மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டும் இப்பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இரு துறைகளாகக் காணப்படுகின்றன. நிரம்பல் சங்கிலி சீர்குலைந்திருப்பதுடன் குறிப்பிட்ட சில அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்துப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அதன்விளைவாக நாடளாவிய ரீதியில் வழமையான சில சத்திரசிகிச்சைகளைத் தாமதப்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இவை மக்களை வெகுவாகப் பாதித்திருக்கும் பின்னணியில், இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவிகள் அவசியமாகின்றன. அதன்படி இலங்கையர்களுக்கு உதவுவதற்கு எமக்கு உங்களுடைய உதவி தேவைப்படுகின்றது.

இலங்கையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பின்தங்கிய தரப்பினருக்கு அவசியமான உதவிகளை வழங்குவதில் நீங்களும் பங்களிப்புச்செய்யமுடியும். அதன்படி ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்’ என்ற மகுடத்தில் எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதி சேகரிப்புத் தளத்திற்கு உங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கலாம்.

வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு அவசியமான உதவிகளை உலகின் பலதரப்பட்ட நாடுகளைச்சேர்ந்த மக்களிடமிருந்து திரட்டிக்கொள்ளும் நோக்கிலேயே இந்நிதி சேகரிப்புத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனூடாகத் திரட்டப்படும் நிதியானது இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும், விவசாயிகளுக்கு அவசியமான விதைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், குடும்பங்களிடையே வீட்டுத்தோட்ட செயன்முறையை ஊக்குவிப்பதற்கு அவசியமான உபகரணங்களை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கை கப்பல்கள் சீனாவின் போர்க்கப்பல்களிற்கு எரிபொருள் வழங்குகின்றன – இந்தியா அதிருப்தி

சீனாவின் போர்க்கப்பல்களிற்கு இலங்கை நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவது குறித்து இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்த போதிலும் சீனாவின் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான வாங் யுவாங் 5 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரிப்பதற்கு இலங்கை அனுமதி வழங்கியதை தொடர்ந்து இலங்கை தனது துறைமுகத்தில் போர் மூலோபாய கண்காணிப்பு கப்பல்களிற்கு அனுமதி வழங்கக்கூடாது என இந்தியாவும் அமெரிக்காவும் தெளிவாக தெரிவித்துள்ளன.

சீனா குத்தகைக்கு எடுத்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து எரிபொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் எரிபொருட் கப்பல்கள் சீனாhவின் போர்க்கப்பல்களிற்கு நடுக்கடலில் வைத்து மறைமுகமாக எரிபொருட்களை நிரப்புகின்றன என இ;ந்தியா தெரிவித்துள்ளதுடன் இது குறித்து இலங்கையிடம் கடும் கரிசனை வெளியிட்டுள்ளது.

கப்பல்களை தனது துறைமுகத்திற்குள் அனுமதிப்பது மற்றும் அவற்றிற்கு எரிபொருள் நிரப்புவது போன்ற விடயங்களில் வெளிப்படையான தராதர நடைமுறையை பின்பற்றவேண்டும் என இலங்கை இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் போர்க்கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தி;ல் மீள எரிபொருளை நிரப்புவதற்கும் அனுமதிக்கவேண்டாம் என இந்தியா இலங்கையிடம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையிலிருந்து எரிபொருளுடன் செல்லும் இலங்கை கப்பல்கள் இந்திய அமெரிக்க கரிசனைகளை புறக்கணித்து சீன போர்க்கப்பல்களிற்கு எரிபொருளை வழங்குகின்றன என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆபிரிக்க கடலோர பகுதியில் கடற்கொள்ளையர்களிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சீன கப்பல்களை தவிர தற்போது இந்து சமுத்திரத்தில் எந்த சீன கப்பல்களும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

சீன போர்க்கப்பல்கள் தொடர்ந்தும் கிழக்கு ஆபிரிக்க கடலோரம் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன ஆனால் அந்த பகுதியில் கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகள் எதுவுமில்லை. துறைமுகத்தை கைப்பற்றுவதற்காக கடற்கொள்ளையர்களிற்கு எதிரான நடவடிக்கை என சீனா சாக்குப்போக்கு சொல்கின்றது என சீனாவை அவதானிப்பவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும் – பவ்ரல்

அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றதபோதும் புதிய ஆணைக்குழு நியமிக்கப்படும்வரை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவிப்பு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த தடையும் இல்லை அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவாக அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டடி ஆரச்சி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்கு அறிவிப்பு செய்யுமாறு தெரிவித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் 2022 மார்ச் மாதத்துடன் முடிவடைந்ததுடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அமைய, அதன் ஆட்சிக்காலம் நீடிக்கப்பட்ட ஒரு வருடகாலம் 2023 மார்ச் 19ஆம் திகதியுடன் நிறைவடைய இருக்கின்றது என்பது அறிந்த விடயம்.

அதேபோன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு காரணம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு திருத்த யோசனைகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவது இரகசியமான விடயமல்ல. அந்த யோசனைகளில் சில யோசனைகள் நியாயமானதாக இருந்தாலும் அதற்றை செயற்படுத்துவதற்கு எடுக்கப்படும் காலத்துக்கமைய மற்றும் இவ்வாறான திருத்தங்களால் கடந்த காலங்களின் அனுபவங்களைக்கொண்டு பார்க்கும்போது, இந்த நடவடிக்கையின் இறுதி பெறுபேறாக இருப்பது நாள் குறிப்பிடாமல் தேர்தல்லை ஒத்திவைப்பதாகவே அமைந்துள்ளது.

அதனால் இந்த நிலைமையை தவிப்பதற்காக, உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் தற்போது அதிகாரம் இருக்கும் ஒரே நிறுவனமான உங்கள் ஆணைக்குழு, விரைவாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்கு அறிவிப்பு செய்தால் அதனை பிற்போடுவதற்கு எந்த நிறுவனத்துக்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை. இதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தேர்தலை அறிவிப்பு செய்வதற்கு தடையாக இருந்த 2022 தேர்தல் வாக்காளர் இடாப்பு, 2022 ஒக்டோபர் 31ஆம் திகதியாகும் போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என நம்புகின்றோம்.

அதனால் விரைவாக தேர்தலை அறிவிப்பு செய்து, மக்களின் வாக்குரிமையை பாதுகாத்துத் தருமாறு உங்களையும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால், ஏதோ ஒரு முறையில் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கும் நோக்கில் திருத்தம் ஒன்றை கொண்டு வருவதன் ஊடாக, மீண்டும் தேர்தலை பிற்போடவேண்டிய நிலை ஏற்பட்டால், தேர்தல் ஆணைக்குழு மீதும் குற்றம் சுமத்தப்படுவதை தவிர்க்க முடியாமல் போகும்.

அத்துடன் அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றபோதும் ஆணைக்குழுவுக்கு, புதிய ஆணைக்குழு நியமிக்கப்படும்வரை, தங்களின் அடிப்படை கடமை மற்றும் சாதாரண செயற்பாடுகளின் ஒரு பகுதியான உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவிப்பு செய்வதற்கு எந்த தடையும் இல்லை என நம்புகின்றோம். அதனால் இது தொடர்பாக நீங்கள் விரைந்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கு பொலிஸாரிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை – சர்வதேச மன்னிப்புச்சபை

அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் உள்ளிட்ட தமது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.

அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் என்பது ஓர் உரிமையேயன்றி, அதுவோர் சலுகையல்ல. எனவே அந்த உரிமைக்கு இடமளிக்கவேண்டிய கடப்பாடு அதிகாரிகளுக்கு இருக்கின்றது என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டுமக்கள்மீது அரசாங்க்ததினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத்தடைச்சட்டத்தை முழுமையான இரத்துச்செய்யுமாறு வலியுறுத்தியும் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து நேற்று புதன்கிழமை கொழும்பில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதற்கு பொலிஸார் அனுமதி வழங்க மறுத்திருந்த நிலையில், அதனைக் கண்டித்து தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சர்வதேச மன்னிப்புச்சபை மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்றைய தினம் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிவழங்க பொலிஸார் மறுத்துள்ளமை தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.

போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் போன்ற தமது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.

இப்போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுப்பதற்கான காரணமாக பொலிஸாரால் கூறப்பட்டுள்ள விடயங்கள், அமைதிப்போராட்டங்கள்மீது மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அவசியமான சர்வதேச சட்ட நியமங்களைப் பூர்த்திசெய்யவில்லை. குறிப்பாக இப்போராட்டங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஏனெனில் பெரும்பாலான கூட்டங்கள் அன்றாட வாழ்க்கையிலோ அல்லது ஏனையோரின் உரிமைகளிலோ குறித்தளவிலான தடங்கல்களை ஏற்படுத்தும் என்பதே அதன் இயல்பாகும். அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் என்பது ஓர் உரிமையாகும்.

மாறாக அதுவோர் சலுகை அல்ல. எனவே இந்த உரிமைக்கு இடமளிக்கவேண்டிய கடப்பாடு அதிகாரிகளுக்கு உண்டு என்று மன்னிப்புச்சபை அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாகும் என்று தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், எனவே மக்கள் அந்த உரிமையை அனுபவிப்பதற்கு அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பித்தக்கது.

எமது போராட்ட வழிமுறைகளை நாமே தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் – வலி வடக்கு போராட்ட குழு

எமது மக்களின் இருப்பும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் பட்சத்தில் எமது போராட்ட வழிமுறைகளை நாமே தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என ஐனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி. வடக்கில் காணி அபகரிப்பு போராட்டத்திற்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ரதை தொடர்ந்து ஐனாதிபதிக்கான மகஜர் தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் வழங்கப்பட்டது குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இலங்கை தீவின் பூர்வீக இனமான தமிழினம், வரலாற்று ரீதியாக தம்மை தாமே ஆளும் தனி இராசதானியாகவே வாழ்ந்து வந்தனர்.

ஆனால் ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பின் போது இத்தீவில் இருந்த தமிழ் மற்றும் சிங்கள இராசதானிகளை முழுமையாக கைப்பற்றியவர்கள் தமது நிர்வாக ஒழுங்குக்காக வேறு வேறாக இருந்த தமிழ் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் ஒருங்கிணைத்து “சிலோன்” எனும் ஒரு நிர்வாக மையத்தை நிறுவினார்.

இத்தீவை விட்டு வெளியேறும் போது ஆங்கிலேயர்கள் தாம் ஏற்படுத்திய புதிய நிர்வாக ஒழுங்கையும், தமிழராகிய எமது இறைமையையும் சேர்த்து சிங்கள தேசத்திடம் கையளித்து விட்டு வெளியேறிவிட்டனர்.

இவ்வாறு தமிழினத்தின் இறைமையை குறுக்கு வழியில் கையகப்படுத்திக் கொண்ட சிங்கள பேரினவாத தேசம், அன்று முதல் தமிழினத்தின் இருப்பை அழிப்பதையே தனது முழுமுதற் கொள்கையாக கொண்டு இயங்கி வருகின்றது.

ஏறத்தாழ 450 வருடங்களாக தொடராக நிகழ்த்த ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்புகளின் போதும் கூட தமிழினமாகிய நாம் எமது தொடர்ச்சியான நிலப்பரப்பினையும் ஆட்புலத்தினையும் பாதுகாத்தே வந்தோம்.

ஆனால் சிங்கள பேரினவாதம், தமிழர்களில் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள பெளத்த மயமாக்குவதை தொடர் நடவடிக்கையாகவே மேற்கொண்டு வருகின்றது.

ஆங்கிலேயர்கள் வெளியேறும் முன்பே 1930 ஆண்டளவில் சிறிது சிறிதாக ஆரம்பித்த ஆக்கிரமிப்பானது 1949 ம் ஆண்டு ஆரம்பமான கல்லோயா குடியேற்றத்தின் மூலம் பாரியளவில் திட்டமிட்ட குடியேற்றங்களாக மாறத் தொடங்கின. பின் மகாவலி திட்டத்தின் ஊடக தமிழினத்தின் நில பரம்பல் பாரியளவில் மாற்றப்பட்டு எமது இருப்பையே கேள்விக்கு உள்ளாகும் வகையில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.

தமிழர் தாயகம் எங்கும் முளைக்கத் தொடங்கிய சிங்கள பெளத்த மயமாக்களை தடுக்க நாம் மேற்கொண்ட அகிம்சை போராட்டங்கள் பலனளிக்காது போகவேயே ஆயுத போராட்டம் ஆரம்பமானது. இப்போராட்டம் வலுப்பெறத் தொடங்கிய பின்னர்தாம் எமது நிலங்களை ஓரளவாவது பாதுகாக்க முடிந்தது. ஆனாலும் எமது உரிமை போராட்டமானது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு உலக நாடுகளின் துணையுடன் மெளனிக்கப்பட்ட பின்னர் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புகள் மிக வேகமாக தமிழர் தாயகத்தை மீண்டும் விழுங்கத் தொடங்கிவிட்டது.

சிங்கள பெளத்த மக்கள் எவருமே வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து பெளத்த விகாரைகளை அமைத்து, அதனூடாக சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி எமது நிலங்களை ஆக்கிரமிக்கும் செயல்பாடுகள் மிகவேகமாக நடைபெற்று வருகின்றது.

இன்று தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய அரச திணைக்களங்கள், சிங்கள பௌத்த பேரினவாத அரசின் நேரடி நெறிப்படுத்தலில் நில அபகரிப்பை பல்வேறு வடிவங்களிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கு மேலதிகமாக சிறிலங்காவின் சிங்கள ஆயுதப்படையினரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் நிலையாக நிலைநிறுத்தும் நோக்கத்துடன் தமிழ் மக்களின் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.

தனி தமிழ் பிரதேசமாக இருந்த அம்பாறை மாவட்டத்தில் இன்று சிங்கள ஆக்கிரமிப்பினால் இன்று எமது பெரும்பான்மையை இழந்து நிற்கின்றோம்.

அதேபோல் திருகோணமலை மாவட்டத்தின் தமிழினம் ஓரம் கட்டப்பட்டு எமது நிலங்களையும் இழந்து கொண்டிருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திலும் மயிலைத்தானை-மாதவனை தமிழரின் மேய்ச்சல் தரை நிலங்கள் உட்பட பல பகுதிகளை ஆக்கிரமிக்க பல்வேறு முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் தமிழரின் நிலங்களை விழுங்கிய சிங்கள பேரினவாத பூதம், வடமாகாணத்தில் எமது நிலங்களை விழுங்குவதில் இன்று தீவிரமாக உள்ளது. வவுனியாவில் எல்லைப்புற கிராமங்கள், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களும், கரையோர கிராமங்களும் தொடராக ஆக்கிரமிக்கப்படுகின்றது.

வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நீராவியடி பிள்ளையார் கோவில், கன்னியா வெந்நீர் ஊற்று உட்பட்ட சுமார் 200 ற்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழரின் பாரம்பரிய வழிபாட்டு தளங்களை வடக்கு-கிழக்கு எங்கிலும் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறன. தற்போது வலிகாமம் வடக்கில் 2 ஆயிரத்து 467 ஏக்கர் நிலத்தை சிங்கள தேசத்தின் சட்டத்தினூடாக அபகரிப்பதற்கு முனைந்து வருகின்றது.

இவ்வாறு பல்வேறு வகையிலும் தமிழினத்தின் தொடர்ச்சியான புவியியல் ரீதியான இனப்பரம்பலை மாற்றியமைப்பதினூடாக ஐ.நாவின் சுயநிர்ணய சாசனத்தில் வரையறுக்கப்பட்ட ஓர் தேசிய இனத்திற்குரிய தகைமையை தமிழினம் இழக்கச் செய்வதில் சிங்கள பெளத்த பேரினவாதம் மும்முரமாக உள்ளது.

தமிழினம் தனது தலைவிதியை தானே தீர்மானிக்கும் உரிமையை மறுதலிப்பதில் சிங்கள தெளிவாக திட்டமிட்டு வேலை செய்து வருகின்றது. எமது நிலங்களை நாம் பாதுகாக்க தவறுவோமேயானால் தமிழினத்தின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும்.

வடக்கு கிழக்கு எங்கும் பரந்து வாழும் மாணவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் சமூகத்தினர், அரசியல் கட்சிகள், பொதுமக்களாக கூடியுள்ள நாம், இன்று முன்வைக்கும் கோரிக்கையாவன

1. வலிகாமம் வடக்கு உட்பட தமிழர் தாயகம் எங்கும் அபகரிக்கப்பட்ட, அபகரிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு, அனைத்து காணிகளும் சட்டபூர்வ உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவேண்டும்.

2. தமிழர் தாயகம் எங்கும் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள ஆயுத படைகள் உடனடியாக வெளியேற்றப்படவேண்டும்.

3. தமிழினத்தின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமை தமிழ் மக்களிடம் மட்டுமே உள்ளது. தமிழ் மக்களுக்கான நிரந்திர அரசியல் தீர்வு தொடர்பான தீர்மானங்களை சிங்கள அரசோ, ஏன் தமிழ் அரசியல்வாதிகள் கூட தீர்மானிக்க முடியாது. ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களே தீர்மானிப்பதற்கான வழி ஏற்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் நாம் எமது பாதுகாப்பு அரண்களை இழந்து சிங்கள பெளத்த அரச பேரினவாதத்தின் ஆயுதமுனையின் முன் நிராயுதபாணிகளாக நிற்கின்றோம்.

எமது இந்த நிலைக்கு எமது அயல் நாடான இந்தியாவும் சர்வதேசமும் பொறுப்பு கூறவேண்டிய நிலையிலேயே உள்ளார்கள். இந்த பொறுப்பு நிலையில் இருந்து இவர்கள் உரிய தீர்வினை இவர்கள் பெற்றுதராது, இந்நிலை தொடர் கதையாகி, நாம் தொடர்ந்தும் ஏமாற்றபட்டு, எமது மக்களின் இருப்பும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் பட்சத்தில் எமது போராட்ட வழிமுறைகளை நாமே தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்றுள்ளது.

பௌத்த மத மேம்பாட்டுக்கு இந்தியா 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

இந்திய அரசினால் நன்கொடை அடிப்படையிலான உதவித்திட்டத்தின் கீழ் அமுலாக்கப்படும் பௌத்த மத மேம்பாட்டுக்கான 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி மற்றும் யாழ்ப்பாணக் கலாசார நிலைய செயற்பாடுகள் ஆகியவற்றின் அமுலாக்கம் குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்ரமநாயக்கவும் , இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இருவேறு பிரத்தியேக சந்திப்புகளை நேற்றுமுன்தினம் மேற்கொண்டிருந்தார்.

2020 செப்டெம்பர் 26 ஆம் திகதி இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின்போது பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான விசேட நன்கொடையாக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவித் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்ததுடன் அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின்போது கடந்த மார்ச் 28 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளப்பட்டவேண்டியதாகும்.

பௌத்த மதத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்களின் அடிப்படையில் கூட்டாக அடையாளப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் திட்டங்களை துரிதமாக அமுலாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென உயர் ஸ்தானிகரும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவும் இச்சந்திப்பின்போது இணங்கியிருந்தனர்.

அத்துடன் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள வணக்கஸ்தலங்கள் மற்றும் பிரிவேனாக்களில் சூரியக்கல மின் வசதிகளை அமைத்தல் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்தும் இப்பேச்சுக்களின்போது அடையாளம் காணப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணக் கலாசார நிலையம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, நவீன வசதிகளுடனான இக்கலாசார நிலையத்தினை மக்கள் பாவனைக்காக அனுமதிப்பது குறித்த கூட்டு கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

11 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய நன்கொடை உதவித்திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த கலாசார நிலையம் இந்திய இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பினை பிரதிபலிக்கும் சிறந்த உதாரணமாக உள்ளதுடன் இதில் இரு தள நூதனசாலை, 600க்கும் அதிகமான பார்வையாளர்களுக்கான வசதியினைக் கொண்ட கேட்போர் கூடம், 11 மாடிகளைக் கொண்ட கற்றல் நிலையம், திறந்த அரங்கமாக பயன்படுத்தக்கூடிய வசதியுடனான பொது சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.

மக்களை மையமாகக் கொண்ட இந்த நன்கொடைத் திட்டங்கள் ஊடாக மக்களின் நாளாந்த வாழ்வில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் இந்தியாவின் திடசங்கற்பத்தினை சுட்டிக்காட்டுவதாக இந்த இரு சந்திப்புகளும் அமைகின்றன.

இலங்கை அரசினால் முன்னுரிமைப்படுத்தப்பட்டதும் இலங்கையின் சகல சமூகங்களினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த திட்டங்கள் அமைந்துள்ளன.

இதுவரை இலங்கையில் இந்தியாவால் 85 நன்கொடைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் புதிய திட்டங்களில் இலங்கையின்  பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமை திட்டமும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.