ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை மக்களின் சாபம் எமது பிள்ளைகளையும் பாதிக்கும். அதனால் மக்களின் சாபத்தில் இருந்து எனது பிள்ளைகளை பாதுகாக்கும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீங்கிக்கொள்ள தீர்மானித்தேன். சஜித் பிரேமதாச நாட்டின் அரசியல் அதிகாரத்தை அமைக்கும்போது மீண்டும் அரசியலில் ஈடுபட நடவடிக்கை எடுப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஜமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆரம்ப பாடசாலைக்கு செல்லும் 3 பிள்ளைகள் எனக்கு இருக்கின்றனர். அவர்களை பாடசாலைக்கு அழைத்துச்செல்வும் பாடசாலையில் இருந்து அழைத்து வரவும் நானே செல்கிறேன்.

அந்த விடயத்தில் நான் அடிமையாகி இருக்கிறேன். எனது பிள்ளைகள் என்றதாலே அதனை நான் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சமூகத்தில் ஏற்படும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறேன்.

குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் தொடர்பாக சமூகத்தில் பாரிய விரக்தி ஏற்பட்டிருக்கிறது. 225பேரின் பிள்ளைகளும் மக்களின் சாபத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

அதனால் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து அரசியலில் இருக்கின்றதா என்ற கேள்வி தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் சிந்தித்தே எனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளருக்கு கையளித்தேன்.

பாராளுமன்ற சட்டதிட்டங்கள் புத்தகத்தில் இருந்தாலும் அது நடைமுறையில் செயற்படுவதில்லை. பாராளுமன்றம் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை.

மக்களின் சாபம் எனது பிள்ளைகளையும் பாதிக்கும். அதனால் மக்களின் சாபத்தில் இருந்து எனது பிள்ளைகளை பாதுகாக்கவும் மக்கள் ஆணை இல்லாத பாராளுமன்றத்துக்கு எனது விடைகொடுப்பானது, மக்கள் ஆணையுள்ள புதிய பாராளுமன்றம் ஒன்றை அமைத்துக்கொள்ள ஓரளவு அழுத்தம் கொடுக்கும் என நான் நம்புகிறேன்.

அத்துடன் நான் அரசியலில் இருந்து விலகினாலும் தொடர்ந்தும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருப்பேன். ஐக்கிய மக்கள் சக்தியை தவிர வேறு கட்சி எனக்கு இல்லை. கட்சியில் எனக்கு எந்த அநீதியும் ஏற்படவில்லை. நாட்டின் எதிர்கால சிறுவர்களுக்கு பொறுப்புக்கூற முடியுமான தலைவர் ஒருவர் இருக்கிறார்.

அவர் நாட்டின் அரசியல் அதிகாரத்தை அமைக்கும்போது, எனக்கு முடியுமானால் நான் மீண்டும் அரசியலில் ஈடுபட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

லசந்தவைக் கொன்ற குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சஜித் கோரிக்கை

”ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”15 வருடங்களுக்கு முன்னர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதி வழங்குவோம் என கடந்த தேர்தல்களின் போது அரசியல்வாதிகள் பலர் வாக்குறுதியளித்திருந்த போதிலும் யாரும் அதனை நிறைவேற்றவில்லை.

லசந்த தனது வாழ்நாளில், மக்களுக்கு உண்மையையும், சமூக அநீதிகளையும், நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த அஞ்சாதும் செயற்பட்டவர் ஆவார். இதன் விளைவாக அவர் தனது உயிரை தியாகம் செய்ய நேரிட்டது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதியாக்கும் பயணத்தில் பல்வேறு விதமான பங்களிப்புகளை வழங்கியவர் லசந்த விக்கிரமதுங்க. எனவே லசந்தவின் கொலையாளிகள் யார் என்பது தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துங்கள். நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுங்கள்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான சட்டமூலம் நிறைவேற்றம்

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளினால் நிறை வேற்றப்பட்டது.

 இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 41 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலத்தை  நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபைக்கு செவ்வாய்க்கிழமை (09) சமர்ப்பித்தார். இதனையடுத்து இடம்பெற்ற  விவாதத்தின் முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.  வாக்கெடுப்பைக் கோரினார்.

இதனையடுத்தது இடம்பெற்ற வாக்கெடுப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே .வி.பி. ஆகியன புறக்கணித்த நிலையில் தமிழ் தேசியமக்கள் முன்னணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிராக வாக்களித்தது.   அரச தரப்பினர் ஆதரவாக  வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்மபலம், கஜேந்திரன் ஆகிய எம்.பி.க்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இரா. சாணக்கியன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், வினோநோகராதலிங்கம் , கோவிந்தன் கருணாகரம் ஆகிய எம்.பி.க்களுமே எதிர்த்து வாக்களித்தனர்.

இதேவேளை, இந்த விவாதத்தில் உரையாற்றும்போதே இந்த சட்ட மூலத்தை தான் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்த  முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி. யுமான  சரத் வீரசேகர வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி: 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எழு பேரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி இடம்பெற்ற பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட எழு பேரே வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தியமை, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன், கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலருக்கு எதிரான வழக்கு விசாரணையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

குறித்த இரண்டு வழக்குகளும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (08) எடுத்துகொள்ளப்பட்டது.

வழக்கு தொடர்பாக பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும் என தெரிவித்த போது பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி இரண்டு வழக்குகளையும் கிடப்பில் போட்டு அனைவரையும் விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து இரண்டு வழக்கையும் கிடப்பில் போட்ட நீதிமன்றம் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த வழக்குகளில் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஷ் ஆஜராகியிருந்தார்.

ஜனாதிபதியின் வவுனியா வருகை சம்பிரதாய பூர்வமான ஒரு நிகழ்வே – அதனால் பயன் ஏதும் இல்லை – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

ஜனாதிபதியின் வவுனியா வருகையானது சம்பிரதாய பூர்வமான ஒரு நிகழ்வே தவிர அதனால் பயன் ஏதும் இல்லை என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ) பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

ஜனாதிபதி அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.இதன்போது நிலஅபகரிப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நாம் அவருடன் பேசியிருந்தோம். நாம் கூறும் விடயங்கள் உடனடியாக தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் சென்றிருந்தோம்.

ஆனால் அது நடைபெறவில்லை. நாங்கள் கேட்ட விடயங்களிற்கான சரியான பதிலை அவர் தரவில்லை. சம்பிர்தாயபூர்வமான ஒரு கூட்டமாகவே இது இடம்பெற்றது.

இதேவேளை ஜனாதிபதி வந்துசென்ற பின்னர் வவுனியா புதியபேருந்து நிலையத்தில் இராணுவமுகாம்ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அது என்ன தேவைக்காக அமைக்கப்பட்டது என்ற விடயம் தெரியவில்லை.

எமது மக்களை அச்சுறுத்துவதற்கான செயற்பாடே அது. ஏற்கனவே பொலிஸ் சோதனைசாவடி அங்கு இருக்கின்றது.இந்நிலையில்இராணுவத்தின் தேவை என்ன என்று புரியவில்லை. இது தொடர்பாக நாம் நாடாளுமன்றில்பேசுவோம்.

ஜனாதிபதிதேர்தல் தொடர்பாக பல ஊகங்கள் பேசப்படுகின்றது. வடகிழக்கில் எமது மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாத சூழலில் இந்த தேர்தலை கையாளும் விதம்தொடர்பாக நாம் சிந்திக்கவேண்டும்.

அனைத்து கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக நாம் பரிசீலிக்கவேண்டும்.

எமது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையை நாம் உருவாக்கவேண்டுமானால் இந்த முயற்சியே பலனளிக்கும் என்று நான் நினைக்கின்றேன். அந்த ஒற்றுமை சாத்தியமா என்ற கேள்வி இருக்கிறது.

தமிழ்தேசியகூட்டமைப்பு சிவில் அமைப்புக்களுடனும் தேசியகட்சிகளுடனும் பேசி ஒரு முடிவிற்கு வருவது சாலச்சிறந்ததாக இருக்கும். தென் இலங்கை வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒரு நிபந்தனைக்குட்படுத்தவேண்டும்.

அத்துடன் அரசால் கொண்டுவரப்படவுள்ள புதியபயங்கரவாத தடைச்சட்டம் மோசமானதாகவே உள்ளது. அதன்மூலம் ஜனநாயக போராட்டங்கள் தடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

பத்திரிகை சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பமும் உள்ளது. இதற்கு நாம் பாராளுமன்றத்தில் எதிர்ப்பைக்காட்டுவோம். இந்தசட்டம் ஒழிக்கப்படவேண்டும் என்பதே ஐநாசபையின் நிலைப்பாடாக உள்ளது. எனினும் இலங்கை அரசாங்கம் அதனை ஏமாற்றிவருகின்றது. என்றார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமாவது மாகாண சபைத் தேர்தலை நடாத்திக் காட்டுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜனாதிபதிக்குச் சவால்

13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக கருத்துக்களை வெளியிட்டுவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முதலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமாவது தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சாவால் விடுப்பதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களை முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் தமிழர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதோடு தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றும் வகையில் கருத்துக்களை பகிர்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், 13ஆவது திருத்தச்சட்டமானது பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கு போதுமானது என்றும், புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை செய்வதற்கு வருகை தரவேண்டுமென்றும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் கூறுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடமாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு விடயங்களை கூறுகின்றார். அவருடைய கூற்றுக்களும், செயற்பாடுகளும் அவர் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது பிரசாரத்தின் ஆரம்பத்தை வடக்கிலிருந்து தொடங்குகின்றார் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இதேநேரம், ஜனாதிபதி பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் போதுமானவை என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது இந்தக் கருத்து அடிப்படையற்றதாகும். நாட்டின் நீடித்த இனமுரண்பாடுகளை அடுத்தே இந்திய, இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது என்பது வரலாறு. அவ்வாறான நிலையில், குறித்த திருத்தச்சட்டம் பொருளாதார அபிவிருத்திக்கானது என்று ஜனாதிபதி அர்த்தப்படுத்த முனைவது தவறானதாகும்.

அதேநேரம், மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்து ஐந்தாண்டுகளுக்கும் அதிகமான காலம் கடந்த நிலையில் இன்னமும் தேர்தல் நடத்தப்படாது தாமதிக்கப்படுகின்றது. முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபைகள் இயங்க வேண்டும். அப்போதுதான் மாகாண சபைகள் தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியும்.

அதேநேரம், கடந்த காலங்களில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பல்வேறு வழிகளில் மத்திய அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்டுள்ளது. ஆகவே அந்த அதிகாரங்களை மீள வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையில் பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு மாகாண சபைகளின் நிருவாகத்தினால் முன்னெடுக்க முடியும் என்ற கேள்விகள் காணப்படுகின்றன.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்களை முதலீடுகளைச் செய்யுமாறு அழைப்பு விடுகின்றார். புலம்பெயர் தமிழர்கள் தமது மாகாணங்களில் முதலீடுகளைச் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை முதலில் உருவாக்கி அந்த அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும்.

அவ்வாறில்லாது, புலம்பெயர் தமிழர்கள் தென்னிலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு முன்வரமாட்டார்கள். ஏனென்றால் 1983ஆம் ஆண்டு தமிழர்களையும் அதற்குப் பின்னர் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களையும் இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அந்தந்த இனங்களில் பிரபல்யமான வர்த்தகர்களின் நிலைமைகள் எவ்வாறு மோசமடைந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஆகவே, இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்படுவது இங்கே முக்கியமானதாகின்றது. இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு காணப்படாத வரையில் தமிழர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தென்னிலங்கையில் இல்லை. கடந்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு இன்னமும் பொறுப்புக்கூறப்படாத நிலைமைகளும் நீடிக்கின்றன.

இவ்வாறான நிலையில், புலம்பெயர் முதலீட்டாளர்கள் எவ்வாறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு வருகை தருவார்கள் என்பதை ஜனாதிபதி சிந்திக்க வேண்டும். ஆகவே, ஜனாதிபதி உண்மையில் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளையும், மாகாண சபைகளின் ஊடான அபிவிருத்தியையும் விரும்புபவராக இருந்தால் ஆகக்குறைந்தது வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்காகவாவது தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை வருகை

நாட்டின் சமகால பொருளாதார நிலைவரம் தொடர்பில் மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர் அடுத்த வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

நாட்டின் அண்மையகால பொருளாதார நிலைவரம் குறித்தும், சர்வதேச நாணய நிதியத்தினால் வலியுறுத்தப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டங்களின் அடைவுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்தும் மதிப்பீடு செய்வதற்காகவே இக்குழு வருகைதரவிருப்பதாக நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு கடந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதலளித்தது. அதன்பிரகாரம் முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் கடன்நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட முதலாம் கட்டளமதிப்பீட்டுக்கு கடந்த மாதம் 12 ஆம் திகதி அனுமதி வழங்கிய நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை, அதன்மூலம் இரண்டாம் கட்டமாக 337 மில்லியன் டொலர் நிதியை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான இரண்டாம் கட்ட மதிப்பீட்டை இவ்வருடத்தின் முதல் அரையாண்டுக்குள் நிறைவுசெய்வதற்கு உத்தேசித்திருக்கும் நிலையில், எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கின்றது.

அதேவேளை இரண்டாம் கட்ட மதிப்பீட்டுக்கு முன்பதாக இலங்கை அதன் உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன்வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டவேண்டியது அவசியமாகும்.

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வெற்றுப்பயணம் – தேசிய மக்கள் சக்தி

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாத மக்களின் வரிப்பணத்தை வீணடித்த வெற்றுபயணமாகவே வட மாகாண விஜயம் அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரட்ணாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி தலைமையகத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யாத வகையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

காணி விடுவிப்பு, மீள்கட்டுமானம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு, மற்றும் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு என தமிழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறான ஒரு நிலையில் வடமாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு துண்டு காணியேனும் அந்த மக்களுக்கு விடுவித்துக் கொடுக்கவில்லை.

நான் கொழும்பிலிருந்து வருகை தரும்போது வடக்கு அதிகாரிகள் சிலருடன் கதைத்தேன் ஜனாதிபதி விஜயம் அவ்வாறு இருந்தது என அவர்கள் கூறினார்கள் வாகனப் பவனியை கண்டு இரசித்ததாகக் கூறினார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் விஜயத்தை எதிர்த்து யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் போராட்டம் நடைபெற்றது.

ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பை தெரிவித்த போராட்டக்காரர்களை பொலிசார் இழுத்துச் சென்றதையும் தாக்குதலுக்கு தயாராக இருந்த பொலிசாரையும் ஊடகங்களில் ஊடாகப் பார்த்தேன்.

நாட்டை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதி கதிரையிலிருந்து மக்கள் விரட்டியடித்த போது ரணில் விக்கிரமசிங்க பின் கதவால் ஜனாதிபதியானார்.

நாட்டை முன்னேற்ற போகிறேன் என கூறிக்கொண்டு நாட்டு வளங்களை வெளிநாட்டுக்கு தாரைவாக்கம் செயற்பாட்டில் ரணில் விக்கிரமசிங்காக ஈடுபட்டு வருகிறார்.

நாட்டை பாதுகாப்பதற்காக பொதுமக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் அமைப்பினர் மேற்கொள்ளும் போராட்டங்களை பாதுகாப்பு தரப்பினர் மூலம் அடக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என அரசியல் அமைப்பு கூறுகின்றது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கதிரையில் மீண்டும் அமர்வதற்காக தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது வடக்குக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

வட மாகாணத்தின் வளம் மிக்க பகுதிகளான மன்னார் பூநகரி தீவகம் போன்ற பகுதிகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அப் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை.

நாடு பொருளாதார ரீதியில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி ஆடம்பரமாக வாகன தொடரணிகள் சகிதம் வருகை தந்து நான்கு நாட்கள் வடக்கில் முகாமிட்டமை மக்களின் பிரச்சனையை தீர்க்க அல்ல எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரமே என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் விரைவில் பாரிய மாற்றம் – ரணில் விக்கிரமசிங்க

புதிய பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் யாழ்.பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று சனிக்கிழமை (06) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா உட்பட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்கள் இதில் கலந்துகொண்டதுடன், யாழ்.பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான திட்டமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்துடன் பல்கலைக்கழக துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதற்காக தற்போதுள்ள மனித வளப் பற்றாக்குறையைத் தீர்க்க தொலைக் கல்வி முறைகளைப் பயன்படுத்துவதற்கான இயலுமையையும், அதற்காக பல்கலைக்கழக பேராசிரியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற புலம்பெயர் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான திறனையும் ஜனாதிபதி விளக்கினார். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் விரிவுரையாளர் பரிமாற்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு மாணவர்களையும் கவரக்கூடிய வகையில் இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் புதிய பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதியின் சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் மற்றும் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஷ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அகிலத்திருநாயகியை நேரில் சந்தித்து ஜனாதிபதி பாராட்டு

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்து மதிப்பளித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, வயது என்பது வெறும் இலக்கம் மட்டுமே என்பதை நிரூபித்து அகிலத்தை வென்ற அகிலத்திருநாயகிக்கு ஜனாதிபதி வாழ்த்துகளை தெரிவித்துகொண்டார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் ஆளுநருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான தடகளப் போட்டியில் (National Masters & Seniors Athletics) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த திருமதி அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இவர், 1,500 மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

அப்போட்டிக்கு முன்னர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 22 ஆவது ஆசிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான போட்டியில் பங்கேற்ற இவர், அதில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றார்.

இவர் ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.