பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதிகோரி போராட்டம்

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சித்தங்கேணி சந்தியில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நடைபெற்றது

குறித்த இளைஞனின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.

அலெக்ஸின் மரணமானது வட்டுக்கோட்டை பொலிஸாரின் கோர முகத்தை எடுத்துக் காட்டுவதுடன், சம்பந்தப்பட்ட பொலிஸார் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்து கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக சீன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுலா, விளையாட்டு, விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் என்பன இன்று முதலீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் அதிக பங்களிப்பை வழங்கக் கூடிய பெல்ட் என்ட் ரோட் (Belt & Road) திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்குப் பிரவேசிப்பதற்கு அதன் பங்காளரான இலங்கை போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் .

பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்திற்குள் (RCEP) பிரவேசிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.

இந்துசமுத்திரம், கடற்பயணத்திற்கான சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் எனவும் புவிசார் அதிகாரப் போட்டியின்றி அமைதியான வலயமாக பேண இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தவும் இரு தரப்பும் உடன்பாடு தெரிவித்தன.

இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஷென் யிங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

வரவு செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் பதிவாகின.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (22) முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கையில் 200 Shell எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

அமெரிக்காவின் RM Parks Inc நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் விநியோகஸ்தரான RM Parks Inc., Shell PLC தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது

“RM Parks Inc. மற்றும் Shell இணைந்து 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை செயல்படுத்தவுள்ள நிலையில் EV சார்ஜிங் வசதிகளுடன் கூடிய மினி-சூப்பர் மார்கெட்டுகளின் சேவைகளை வழங்கவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

நீர் வழங்கல் துறையின் அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நீர் வழங்கல் துறையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கொள்கைத் திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் கட்டமைப்பு பற்றி இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

காலநிலைக்கு ஏற்ற, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான நீர் வழங்கல் கட்டமைப்பு முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல் மற்றும் நீர் செயல்பாடுகளின் கட்டுப்பாடு, நிலைத்தன்மை, செயல்திறன், தாங்கும் திறன் மற்றும் கொள்ளளவு தொடர்பாக கொள்கைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்த மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுப்பது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் பிரதமர் அலுவலகம், நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை ஆகியவற்றால் செயல்படுத்தப்பட உள்ளது.

இலங்கையுடனான பங்களிப்பை அமெரிக்கா தொடரும்; சமந்தா பவர் ரணிலிடம் உறுதி

இலங்கையுடனான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிப்பதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்சியின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்தார்.

மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முய்ஸு பதவியேற்பு நிகழ்விற்காக மாலைதீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் அரசியல் சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை இதன்போது வலியறுத்தியதாக சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் இலங்கையின் துறைமுக உள்கட்டமைப்பில் அண்மையில் 550 மில்லியன் முதலீடு செய்தது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய சமந்தா பவர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் நிலைப்பாடு இதில் வெளிக்காட்டப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுபணிகள் திட்டமிட்டபடி நாளை இடம்பெறும்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

அகழ்வுப்பணி தொடர்பாக இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அகழ்வு பணி நாளை 20 ஆம் திகதி காலை 8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற இருப்பதாகவும் புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது எனவும், இம்முறை அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளதாகவும். இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாகவும் அவ் நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார்- கோப் குழு தலைவர்

எதிர்க்கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாகவும் இது குறித்து சபாநாயகருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார இன்று பாராளுமன்றத்தில் கூறினார்.

பாராளுமன்றத்தில் தான் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில், தன் மீதும் தன்னுடைய குழுவை சேர்ந்த இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றசசாட்டுக்களை மறுப்பதாகவும், முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டை விசாரணை செய்வதன் மூலம் அது நிரூபிக்கப்பட்டால் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தாயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், என் மீது குற்றம் சுமத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதாரன, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக இனம்காணப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார கூறினார்.

உடல் முழுவதும் அடிகாயங்கள்! நுரையீரல் பாதிக்கப்பட்டே இளைஞர் உயிரிழப்பு – மருத்துவ அறிக்கையில் நிரூபணம்

சித்தங்கேணியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரின் சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உடல் முழுவதும் அடிகாயங்கள், இயற்கையான மரணம் இல்லை, உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இன்று நண்பகல் உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே நேற்றைய தினம் உயிரிழந்தார்.

சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்பவரே உயிரிழந்தார்.

சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் அண்மையில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாள்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுமில்லை விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

உயிரிழந்தவரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.

அதனால் சந்தேக நபர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சவ அறையில் வைக்கப்பட்டிருந்தது.

உடற்கூறு பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வரிச்சுமைகள் குறைக்கப்பட வேண்டும் – ரவி கருணாநாயக்க

பொது மக்களின் வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

திவால் நிலையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றாலும் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே வரிகளை குறைப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே வரி செலுத்தி வருபவர்களுக்கு சுமையை ஏற்படுத்தாமல் வரி வலையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.