வறட்சியினால் யாழ் மாவட்டத்தில் 69113 பேர் பாதிப்பு

வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது யாழ் மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை 21714 குடும்பங்களைச் சேர்ந்த 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கூடுதலாக சங்கானை, சாவகச்சேரி பிரதேச செயலாளர்  பிரிவுகளில் பாதிப்புகள் உணரப்பட்டுள்ளது.

அந்த வகையில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 15965 குடும்பங்களைச் சேர்ந்த 49160 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 3135 குடும்பங்களைச் சேர்ந்த 11160 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 1028 குடும்பங்களைச் சேர்ந்த 3146 பேரும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 956 குடும்பங்களைச் சேர்ந்த 3067 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குடிநீர் விநியோகத்திற்காக தற்போது 6053 குடும்பங்களைச் சேர்ந்த 19704 பேருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படாமையால் இலங்கையின் ஜனநாயகத்திற்கு பாதிப்பு – மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படாமை ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு விழுந்த பாரிய அடி என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஒன்றையாவது நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் குறைந்தபட்சம் ஒன்றையாவது எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள உலக ஜனநாயக தினத்திற்கு முன்னதாக நடத்த முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களின் கட்டுப்பாடின்றி, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், ஆளுநர்கள், செயலாளர்கள், ஆணையாளர்கள் நடத்தும் இந்த ஆட்சி சட்டத்திற்கு புறம்பானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என இந்திய உள்துறை அமைச்சர் தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளரான அண்ணாமலை தலைமையில் “என் மண் என் மக்கள்” என்ற பாதயாத்திரையில் தொடக்க நிகழ்வு கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை நடந்தது எனவும் தமிழக கடற்றொழிலாளர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள் என அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொலிஸார் அரசியல் மயமாகியுள்ள நிலையில் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் அச்சமான சூழ்நிலை உருவாகும்

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது நாட்டுக்கு அச்சமான நிலைமையை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி பாராளுமன்றின் ஊடாகவே இறுதி தீர்மனம் எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உள்ள பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் எமக்கு தமிழ் மக்களுடன் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் தற்போதைய நிலையில் பொலிஸார் அரசியல் மயமாகியுள்ளதாக பொதுமக்கள் பாரிய குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

அவ்வாறானதொரு நிலையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது பொருத்தமற்றதாகும். ஏனென்றால் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது முதலமைச்சர் இருப்பார்கள்.

அவர்கள் வெவ்வேறு கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவே இருப்பார்கள். பொலிஸ் அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்குகின்ற போது அந்த முதலமைச்சர்களே பொலிஸாரை நிர்வாகம் செய்யும் நிலைமையே காணப்படும்.

தற்போது தேசிய ரீதியில் ஒரு பொலிஸ் கட்டமைப்பே காணப்படுகின்றது. இதன்போதே பொலிஸ் கட்டமைப்பு மீதான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் ஒன்பது மாகாணங்களும் பொலிஸ் அதிகாரத்தை கையாளும்போது நாட்டின் நிலை என்னவாகும் என்ற கேள்வி ஏற்படுகின்றது.

ஆகவே, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதானது அச்சமான நிலையை ஏற்படுத்துகின்றது. எனவே, மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதித்தே இறுதி தீர்மானம் எடுப்பது பொருத்தமானதாகும் என்றார்.

கந்தரோடையில் கி.பி1ஆம் நூற்றாண்டு கால லட்சுமி நாணயங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் கந்தரோடையில் தமிழ் பௌத்த எச்சங்களின் மீது, தற்போது அமைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த விகாரைப் பகுதிக்கு அண்மையாக முன்னெடுக்கப்பட்ட தொல்பொருள் அகழ்வின் போது லட்சுமி நாணயங்கள் 5 மீட்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ரோமன் நாணயங்களும் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான ஆராய்ச்சி இணைப்பாளர், இலங்கையின் புதிய கூட்டத்திட்ட இணைப்பாளர் கலாநிதி அரெய்ன் டி சாக்சே, கலாநிதி நிமால் பெரேரா, இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இந்த அகழ்வுப் பணியை ஒரு மாதமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையிலே கி.பி 1ஆம் நூற்றாண்டுக்கும் 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என்று நம்பப்படும் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் ஐந்தும், ரோம நாணயங்கள் சிலவும் கடந்த வாரம் மீட்கப்பட்டுள்ளன.

வடக்கில் தமிழ் பௌத்தம் நிலவிய காலப்பகுதியில் கந்தரோடையிலும் விகாரை அமைக்கப்பட்டு, தமிழர்கள் வழிபட்டிருந்தனர். இருந்தாலும், தற்போது பிக்குகளின் செல்வாக்கின் கீழான தொல்லியல் திணைக்களம், கந்தரோடையில் விகாரையே இருந்தது என கூறிவந்த நிலையில் அந்தப் பகுதியில் இருந்து இந்து தெய்வத்தின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.

1917 ஆம் ஆண்டு கந்தரோடையில் கள ஆய்வு மேற்கொண்ட போல் பிரிஸ் இவ்வகை நாணயங்களை கண்டுபிடித்து அதில் உள்ள பெண் உருவம் தாமரை மலரில் நிற்பது போல் பொறிக்கப்பட்டுள்ளதை ஆதாரமாக காட்டி அதற்கு லட்சுமி நாணயம் என முதல் முதலாக பெயரிட்டு இருந்தார். அவரால் இடப்பட்ட பெயரே இன்று வரை பயன்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாண கோட்டையின் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்விலும் இவ்வகை நாணயங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும், பறாளாய் வர்த்தமானியை மீளப்பெறவும் கோரி ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்ப முடிவு

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட முழுமையான அதிகாரங்களுடன் 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்தும் படி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவித்திருந்தார்.

13வது திருத்தம் தொடர்பில் ரெலோ, புளொட் என்பன தனித்தனியாக யோசனைகளை சமர்ப்பிக்காமல், தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 கட்சிகளுடனும் கலந்துரையாடி, கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை 10 மணியளவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அபிப்பிராயத்தை ஜனாதிபதி கோரியுள்ளதால், அது தொடர்பில் மட்டும் குறிப்பிடுவதென இன்று தீர்மானிக்கப்பட்டது.

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களுடனும் 13வது திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஜனாதிபதி ரணில் பதவியேற்ற பின்னர் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்பு, மத ஆக்கிரமிப்பு சம்பவங்களை பட்டியலிட்டும், பறாளாய் முருகன் கோயில் அரச மரத்தை உரிமை கோரும் முறையற்ற வர்த்தமானி உள்ளிட்ட- தமிழர்களின் தொல்லியல் சின்னங்களை அபகரிக்கும் வர்த்தமானிகளை மீளப்பெற வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் சீனாவுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் மீள இந்தியாவிடம் கையளிப்பு

வடக்கில் உள்ள அனலைதீவு, நைனாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய தீவுகளில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு இலங்கை அரசினால் சீனாவுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை அழுத்தங்கள் மூலம் இந்தியா கைப்பற்றியுள்ளது.

12 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த திட்டங்கள் 2021 ஆம் ஆண்டு சீனாவின் செனோசர் எச்வின் என்ற நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியிருந்தது. ஆனால் அதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்புக்களை இலங்கை அரசுக்கு தெரிவித்ததால் அன்றைய இலங்கை அதிபர் கோத்தபாயா ராஜபக்சா அந்த திட்டத்தை இடை நிறுத்தியிருந்தார்.

சீனா தனது திட்டத்தை மாலைதீவில் உள்ள 12 தீவுகளில் நடைமுறைப்படுத்தியிருந்ததுடன், இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது. எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக சீனாவின் திட்டத்தை நிறுத்திய இலங்கை தற்போது அதனை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

இதனிடையே, மன்னார், பூநகரி மற்றும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் போன்ற பிரதேசங்களிலும் எரிசக்தி திட்டம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாமலின் திருமண நிகழ்விற்கான ரூ.27 இலட்சம் மின் கட்டணம் செலுத்தப்படவில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்தின் போது, இலங்கை மின்சாரச சபை வழங்கிய சேவைக்கான ரூ.27 இலட்சம் மின் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நளின் ஹேவகே இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவரால் கோரப்பட்ட வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே இலங்கை மின்சார சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை ஜூலை 26ஆம் திகதி கேட்டிருந்ததாகவும், மின்சார சபை இன்று தகவல் வழங்கியதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெட்டியவில் உள்ள வீடொன்றில் இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்வார் எனவும் பாதுகாப்பு விளக்குகளை பொருத்துமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தற்காலிகமாக மின்சாரம் வழங்கப்பட்டு, பாதுகாப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு, பின்னர் உபகரணங்களை அகற்றியதாகவும், இதற்காக 2,682,246 ரூபா செலவிட வேண்டியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

செலவிடப்பட்ட தொகை தொடர்பான மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் தொகை வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக மிஹிந்தலை விகாரையில் மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைப் போன்று மெதமுலன வீட்டிலும் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டுமென நளின் ஹேவகே தெரிவித்தார்.

தமிழர்களின் நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை பொறுத்துக் கொள்ள முடியாது – வேலன் சுவாமிகள்

தமிழர்களின் நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழர்களின் பாரம்பரியத் தொன்மையை எடுத்துச் சொல்லும் பறாளாய் முருகன் ஆலயத்திலே இன்று வர்த்தகமானி என்ற அதிகாரத்தை சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசு கைகளிலே அதிகாரத்தை வைத்துக்கொண்டு மேற்கொள்ளும் செயற்பாடுகள் மூலம் எமது இனத்தின் தொன்மையை அழித்து விட முடியாது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சுழிபுரத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வர்த்தகமானியிலே சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்பொருட் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர்கள் காலங் காலமாக வழிபட்டு வந்த ஆதி வழிபாட்டுமுறைப் பாரம்பரியங்களைக் கொண்டுள்ள தமிழர்களின் வடக்குக் கிழக்குத் தாயகத்திற்கு பௌத்தம் கெண்டுவரப்பட்ட சங்கமித்தை வந்த காலத்தில் சிங்களம் என்ற மொழி, இனம் கிடையாது.

ஆனால் அந்தக் காலத்தில் தமிழர்கள் ஆட்சி புரிந்தும் பாரம்பரியமாக வழிபாடுகளை நடாத்தியும் வந்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரியத் தொன்மையை எடுத்துச் சொல்லும் பறாளாய் முருகன் ஆலயத்திலே இன்று வர்த்தகமானி என்ற அதிகாரத்தை சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசு கைகளிலே அதிகாரத்தை வைத்துக்கொண்டு மேற்கொள்ளும் செயற்பாடுகள் மூலம் எமது இனத்தின் தொன்மையை அழித்து விட முடியாது.

தொல்பொருள் என்பது மிகவும் தொன்மையை எடுத்துக் கூறுவது. அந்த வகையில் இங்கு அனைத்து இடங்களிலும் தமிழர்களின் வழிபாட்டிடங்களே காணப்பட்டிருக்கின்றன. மாறாக சி்ங்கள பௌத்தத்திற்கும் தேரவாத பௌத்தத்திற்கும் எள்ளளவும் இடங்கிடையாது.

தமிழர் தாயகத்தில் பறாளாய் முருகன் ஆலயம், கீரிமலை, குருந்தூர் மலை, தையிட்டி, வெடுக்குநாறி மற்றும் மயிலத்தனைமடு போன்ற இடங்களைத் தொல்லியற் திணைக்களம் அடாவடியாக வர்த்தகமானி மூலமாகவும் ஏனைய விதங்களூடாகவும் கையகப்படுத்தி எமது நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது.

இவ் வர்த்தகமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். தமிழர் தரப்பிலுள்ள அனைவரும் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும்.

சர்வதேசம் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதால் நிச்சயம் நீதி கிடைக்கும். எமக்கென்று ஒரு காலம் வந்து சுயநிர்ணய உரிமை அடிப்படையில் எமக்குரிய தீர்வை நாமே தீர்மானிக்கின்ற பொழுது பார்த்துக்கொள்ளலாம்.

அறம், நீதி என்றோ ஓர் நாள் வெல்லும் என்ற நம்பிக்கையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். ஈழத்தமிழர்களின் நிரந்தரதீர்வு சர்வதேச கண்காணிப்புடன் பொதுசன வா்கெடுப்பாக நடாத்தப்பட்டு எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டும் என்றார்

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்கத் திட்டம்

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா வெள்ளிக்கிழமை (04) தலைமன்னார் பியர் மற்றும் தலைமன்னார் பழைய பாலம் ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது, வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் , மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீபன், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் செயலாளர்கள் கடற்படை அதிகாரிகள் இந்திய நலன்புரியாளர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

குறித்த விஜயத்தின் போது அமைச்சருடன் கலந்து கொண்டோர் தலைமன்னார் பியர் மற்றும் தலைமன்னார் பழைய பாலம் ஆகியவற்றை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் தலைமன்னார் பியர் கடற்படையின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

இங்கு அவர் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பாக இரு பகுதிகளை அவர் இங்கு சுட்டிக்காட்டினார். ஒன்று உடனடி அபிவிருத்தித் திட்டம் அடுத்து நீண்ட காலத்திற்கு செய்யும் திட்டங்களை அவர் வலியுறுத்தினார்.

அதாவது மூன்று மாதங்களுக்குள் குறுகிய திட்டத்தை நிறைவு செய்து தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பித்து மக்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பிரயாணம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என இங்கு வலியுறுத்தியுள்ளார்.