ஆசியா எதிர்கொள்ளும் மூன்று சவால்கள் – ஜப்பான் உரையில் ஜனாதிபதி ரணில்

ஜனநாயகவிழுமியங்களும் மனித உரிமைகளும் காலநிலை மாற்றமும் வர்த்தக ஒருங்கிணைப்பும் ஆசியா எதிர்கொள்ளும் சவால்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் இடம்பெற்ற ஆசியாவின்  எதிர்காலம் என்ற நிக்கேய் போராத்தின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ஆசியா எதிர்கொள்ளும் இந்த மூன்று சவால்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகவிழுமியங்களும் மனித உரிமைகளும் காலநிலை மாற்றமும் வர்த்தக ஒருங்கிணைப்பும் ஆசியா எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

ஆசியா முழுவதிலும் உள்ள பல்வேறுபட்ட அரசியல் அமைப்புகள் மற்றும் மனித உரிமைகளின் வரையறைகளுக்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற வகையில் ஆசியாவின் முக்கியத்துவம் உலக சனத்தொகையில் 60வீதமான மக்கள் வாழ்வது  உலக பொருளாதாரத்திற்கு ஆசியாவின் மிகப்பெரிய பங்களிப்பு குறித்தும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவின் மீட்சி இந்தியாவின் உள்நாட்டு கேள்வி போன்றவற்றையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஆசியா உலகளாவிய பொருளாதார சக்தியாகவும் மிகவும் ஆற்றல் மிக்க பிராந்தியமாகவும் மாறியுள்ளது என்றும், அதன் பொருளாதாரம் ஏற்கனவே ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

ஆசிய நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம் குறித்து ‘நிக்கேய்’ மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது ஆசிய நாடுகளின் வெப்பநிலை உயர்வு, கடுமையான  வானிலை நிலைமைகள் மற்றும் கடல் மட்ட உயர்வு , ஆசிய நாடுகளின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை பாதிக்கும் என வலியுறுத்தினார்.

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான  ரயில் சேவை மீண்டும்  ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ரயில் பாதை  திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு ரயில் சேவைகள் கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை மட்டுமே  இடம்பெறுகின்றன.

இந்நிலையில், அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான ரயில் பாதையின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மீண்டும்  ரயில் சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க முடியும் என மஹவ – ஓமந்தை ரயில்வே திட்ட பணிப்பாளர்  அசோக முனசிங்க தெரிவித்தார்.

சீனத் தூதரகத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

சீனத் தூதரகத்தின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு களுவன்கேணி கடற்தொழிலாளர் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

 

வடக்கு – கிழக்கு மீனவர்களுக்கு விரைவில் சீனாவின் மண்ணெண்ணெய் – கடற்றொழில் அமைச்சர்

சீன அரசாங்கத்தினால் கடத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மண்ணெண்ணை விரைவில் வடக்கு கிழக்கில் உள்ள ஏழு கடை தொழில் மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை முழுவதுமான கடற்தொழில் அமைச்சர் என்ற வகையில் மீனவ மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன். மீனவ மக்களின் வாழ்வாதாரம் அன்றாட தொழில் நடவடிக்கை வீட்டு வசதிகள் என்பவற்றை மேம்படுத்தும் முகமாக சீன அரசாங்கம் சுமார் 1500 மில்லியன் ரூபாக்களுக்கான செயற் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

அதன் ஆரம்ப நடவடிக்கையாக இலங்கையில் உள்ள 15 கடற் தொழில் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 27 ஆயிரம் படகு உரிமையாளர்களுக்கு, ஒருவருக்கு 150 லீட்டர் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 75 லீட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுவதோடு இரண்டாம் கட்டமாக எஞ்சியவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

வட மாகாணத்தில் உள்ள நான்கு கடற் தொழில் மாவட்டங்களுக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று கடற்தொழில் மாவட்டங்களுக்கும் விரைவில் மண்ணெண்ணை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் கடற் தொழிலாளர்களுக்கான வீடு மற்றும் கடற்தொழிலாளர்களுக்கான வலைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

அது மட்டுமல்லாது எரிபொருள் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு பற்றியில் இயங்கக்கூடிய படகினை சம்பிரதாயபூர்வமாக கடலில் இறக்கியுள்ளோம்.

எரிபொருளிலும் பார்க்க பற்றியில் இயங்குப் படகு இலாபகரமானதாகவும் சூழலுக்கு மாசு இல்லாத தொழில் நுட்பமாக கருதும் நிலையில் அதனை இலங்கையில் விரிவுபடுத்துவதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆகவே ஜப்பான் அரசாங்கம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கமும் கடற் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு முன் வந்துள்ள நிலையில் விரைவில் அதற்குரிய செயல்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்றொழிலை சர்வதேச நியமங்களுக்கு ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவருடன் ஆராய்வு

சர்வதேச கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஆழ்கடல் படகுகளின் செயற்பாடுகள் மீன்பிடி தொடர்பான சர்வதேச நடைமுறைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபிஷ் அவர்களுக்கும், கடற்றொழில் அமைச்சருக்கும் இடையேயான சந்திப்பு புதன்கிழமை (24) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீன்பிடிப் படகுகளில், VMS எனப்படும் படகுகளை கண்காணிக்கும் கருவி பொறுத்தப்பட்டிருப்பதன் அவசியத்தையும், அதன் பராமரிப்பு மற்றும் சேவைகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினர்.

அத்துடன் மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி கடலில் நடைபெறும் அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் என்பவற்றை கண்காணிப்பது மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலின்போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் ஊழல் மோசடிகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை – அமெரிக்க தூதர் ஜூலி சங்

இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், சாதகமான வணிகச்சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான கொள்கை உருவாக்கத்துக்கான உத்வேகத்தை அமெரிக்க வர்த்தகப்பேரவை வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மேலும் பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க வர்த்தகப்பேரவையின் வருடாந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இவ்வருடம் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்புத்தொடர்புகள் ஆரம்பமாகி 75 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.

இவ்வேளையில் அமெரிக்காவும் இலங்கையில் இயங்கிவரும் அமெரிக்க வர்த்தகப்பேரவையும் இலங்கை பொருளாதாரத்தின்மீது ஏற்படுத்தியுள்ள நேர்மறையான தாக்கம் தொடர்பில் நினைவுகூறவிரும்புகின்றேன்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவானது மக்கள், வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.

எமது இருநாடுகளும் சுமார் 7 தசாப்தகாலமாக பொருளாதார அபிவிருத்தி முதல் தேசிய பாதுகாப்பு வரை பல்வேறு விடயங்கள் தொடர்பில் மிகவும் விரிவாக ஒன்றிணைந்து பணியாற்றிவந்திருப்பதுடன் இருநாடுகளுக்கும் இடையில் வலுவான நட்புறவும் பரஸ்பர நன்மதிப்பும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

அதேவேளை வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவித்ததன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதில் அமெரிக்க வர்த்தகப்பேரவையும் முக்கிய பங்காற்றியுள்ளது.

குறிப்பாக சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட அமெரிக்க வர்த்தகப்பேரவையானது இலங்கையில் அமெரிக்க தனியார்துறை முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தல் ஆகியவற்றைப் பிரதான நோக்கங்களாகக்கொண்டு இயங்கிவருகின்றது. அதன்படி கலந்துரையாடல்கள், ஆலோசனை வழங்கல்கள் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் வளர்ச்சிக்கு அமெரிக்க வர்த்தகப்பேரவை உதவிகளை வழங்கியுள்ளது.

குறிப்பாக இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், சாதகமான வணிகச்சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான கொள்கைகளை உருவாக்குவதற்கான உத்வேகத்தையும் தற்போது இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் மறுசீரமைப்புக்கள் குறித்த ஆலோசனைகளையும் அமெரிக்க வர்த்தகப்பேரவை வழங்கியிருக்கின்றுது.

இதனை முன்னிறுத்திய பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. சிறந்த ஆட்சி நிர்வாகத்தை ஊக்குவிப்பதற்கும், ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் மேலும் பல்வேறு விடயங்களைச் செய்யவேண்டியுள்ளது.

ஆனால் தற்போது அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் இலங்கை மற்றும் அமெரிக்க வணிகங்களுக்கான புதிய வாய்ப்புக்கள் உருவாவதற்கும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீட்சியடைவதற்கும், பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதற்கும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வெடுக்குநாறி மலையில் ஏணிப்படி வைத்தமைக்காக தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து கோவில் நிர்வாகம் விடுதலை

வவுனியா வெடுக்குநாறிமலையில் ஏணிப்படி பொருத்தியமை தொடர்பாக நெடுங்கேணி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கு போதிய சான்றுகள் இன்மையால் குறித்த வழக்கில் இருந்து ஆலயப்பூசகர் மற்றும் நிர்வாகத்தினர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி திருஅருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆலயத்தில் மரத்திலான ஏணிப்படி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனை சீரமைத்து ஏணிப்படி ஒன்று அமைக்கப்பட்டமை தொடர்பாக வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஏணிப்படியை சீரமைத்தமைக்கான சான்றுகள் இல்லை என அரச சட்டவாதிகளால் இன்றையதினம் நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த மூன்று பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர் என்றார்

தையிட்டி விகாரை இரகசியமாகத் திறந்து வைப்பு; வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்களில் சிங்கள பெளத்தர்கள் வருகை

யாழ்ப்பாணம் – தையிட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்ப்புக்களுக்கு மத்தியில் விகாரை இன்று காலை 5.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் தையிட்டி விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பகுதிக்கு பிரவேசிக்க ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேனை தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரியும் 3வது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இரகசியமாக விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் அளவீடுகளை நிறுத்த உத்தரவு

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த அளவீட்டு பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு புத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உத்தரவிட்டார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிற்குமிடையில் இன்று நடந்த சந்திப்பின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் அரச தரப்பில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அமைச்சின் செயலாளர், தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய திணைக்களங்களின் பணிப்பாளர்களும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் கட்சிகள் தரப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோரும், ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் சிங்கள பௌத்தத்திற்கு முன்னதாக தமிழ் பௌத்தம் நிலவியதை சுட்டிக்காட்டிய தமிழ் எம்.பிக்கள், வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லையென்றும், ஆனால், சைவ வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டு, பௌத்த வழிபாட்டிடங்கள் அமைக்கப்படுவதை எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

உருத்திரபுரம் சிவன் கோயில், குருந்தூர் மலை, தையிட்டி விவகாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

குருந்துர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறியும், தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள்ளும் விகாரை கட்டப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியபோது, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் வில்லங்கமான விளக்கங்கள் அளித்தார்.

குருந்தூர் மலையில் முன்னர் விகாரை இருந்ததாகவும், வெளிநாட்டு சிங்கள அமைப்புக்களின் நிதியுதவியிலேயே விகாரை அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு தமிழ் தரப்பினர், வெளிநாட்டிலுள்ள தமிழ் தரப்பிலிருந்து நிதி திரட்டி தந்தால், பொலன்னறுவையில் மிகப்பெரிய சைவக்கோயில் கட்ட முடியுமா என கேள்வியெழுப்பினர்.

தமிழ் தரப்பினர் தொல்லியல் முக்கியத்துவங்களுள்ள பகுதிகளை அபகரிக்க முயல்வதாகவும், அதனாலேயே நில அளவீடு செய்வதாகவும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.

ஆலய காணிகளை தமிழ் மக்கள் அபகரிப்பதில்லையென்பதை தமிழ் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

தமிழ் தரப்பினர் தெரிவித்த விவகாரங்களிற்கு தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நீண்ட விளக்கங்கள் அளிக்க முற்பட்ட போது, கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளியுங்கள் என அமைச்சர் காட்டமாக கூறினார்.

இதன்படி, உருத்திரபுரம் சிவன் ஆலயம் உள்ளிட்ட வடக்கு கிழக்கிலுள்ள சை ஆலயங்கள், வழிபாட்டிடங்களில் அளவீட்டு பணிகளை உடனடியாக நிறுத்த அமைச்சர் உத்தரவிட்டார்.

குருந்தூர் மலைக்கு நீதவான் சென்று பார்வையிட்ட பின்னர் கூடித் தீர்மானம் எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார் ஜனக ரத்நாயக்க

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து தான் அகற்றப்பட்டமை இலங்கை மக்களிற்கு ஏற்பட்ட தோல்வி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தனது தோல்வியில்லை எனவும் இலங்கையின் அனைத்து மக்களினதும் தோல்வி, இதனை பற்றி தனக்கு எந்த பிரச்சினையுமில்லை என்றும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவேன் என முன்னரே உறுதியாக தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.