பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

கொழும்பு, ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸூடன் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது துணைவேந்தர்கள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சந்திப்புக்களின் போது, பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள், மற்றும் திருட்டு சம்பவங்களின் அதிகரிப்பு போன்ற விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வர இனவாதம்,மதவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் – அனுர குமார

மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர இனவாதம்,மதவாத கருத்துக்கள் சமூகத்தின் மத்தியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

களனி விகாரையில் நாக பாம்பு தோற்றம் பெற்றதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத போதகர் குறிப்பிட்ட கருத்துக்கு முன்னுரிமை வழங்குவது சிறந்ததல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

குருநாகல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் மக்கள் விடுதலைக்கான மக்கள் அலை குறைவடைந்துள்ளது.மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டமும் முடிவடைந்து விட்டது என அரசியல் களத்தில் குறிப்பிடப்படுகிறது.

மக்கள் கூட்டத்தால் மக்கள் முன்னணி தோற்றம் பெறவில்லை.மக்களின் நம்பிக்கையை கொண்டு மக்களாதரவை தற்போது ஒன்றுத்திரட்டியுள்ளாம்.எம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஒருபோதும் சிதைவடைய செய்ய மாட்டோம்.

வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இயற்றை அனர்த்தத்தினால் நாட்டு மக்களுக்கு இந்த நிலை ஏற்படவில்லை.அரச தலைவர்களின் தவறான நிர்வாகத்தினால் நாட்டு மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே இந்த நிலையை இனியாவது மாற்றியமைக்க வேண்டும்.நாட்டுக்கு பொருத்தமான அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கையை செயற்படுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் மொத்த சனத்தொகையில் 68 சதவீதமானோர் மூன்று வேளை உணவை இரு வேளையாக குறைத்துள்ளார்கள்.40 சதவீதமானோர் அத்தியாவசிய மருந்து கொள்வனவை புறக்கணித்துள்ளார்கள்.40 சதவீதமானோர் அத்தியாவசிய தேவைகளை வரையறைத்துள்ளார்கள்.ஆகவே பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்துக்கும்,சமூக கட்டமைப்பின் உண்மை தன்மைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

பொருளாதார பாதிப்பு காரணமாக சுமார் 5 இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள்.இதனால் சமூக விரோத செயல்கள் தீவிரமடைந்துள்ளன.ஒரு நாடு பொருளாதார பாதிப்புக்கு முகம் கொடுக்கும் போது சமூக விரோத செயற்பாடுகள் இயல்பாகவே தோற்றம் பெறும்.பிரேசில் நாட்டிலும் இவ்வாறான தன்மையே காணப்படுகிறது.

யுத்த காலத்தில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதை போன்று பொருளாதார அநாதைகளாக மக்கள் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக இரவு பகலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.2021 ஆம் ஆண்டு 13 இலட்சம் பெண்கள் வெளிநாட்டு பணி பெண்களாகவும்,2022 ஆம் ஆண்டு 74 இலட்சம் பெண்கள் பணி பெண்களாகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்கள்.இதுவே சமூக கட்டமைப்பின் தற்போதைய நிலை.ஆனால் ஜனாதிபதியோ சுபீட்சமான எதிர்காலம் என்று பொருளாதாரத்தை முன்னேற்றி விட்டதாக கருத்து தெரிவித்து தன்னை காட்சிப்படுத்தி உலகத்தை வலம் வருகிறார்.

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு கண்டு விட்டோம் என ஜனாதிபதி குறிப்பிடுவது அடிப்படையற்றது.வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.வெளிநாட்டு அரச முறை கடன்களை செலுத்தல்,டொலர்களை மத்திய வங்கி கொள்வனவு செய்தல்,அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி ஆகிய மூன்று காரணிகளுக்காகவே டொலர் அத்தியாவசியமானது.

அரசாங்கம் இந்த மூன்று செயற்பாடுகளிலும் இருந்து விலகியுள்ளது.ஆகவே டொலர் கையிருப்பு மிகுதியாகும்.அதை கொண்டே எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.ஆகவே இது நிலையான பொருளாதார தீர்வு அல்ல பெற்றுக்கொண்ட அரசமுறை நிச்சயம் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய அரசியல்வாதிகளை மக்கள் துரத்தியடித்தார்கள்.மக்களால் வெறுக்கப்பட்ட தரப்பினரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர இனவாதம் மற்றும் மதவாத கருத்துக்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.ஜெரோம் பெர்னாண்டோ என மதபோதகர் குறிப்பிட்ட கருத்து தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

இவர் பல முரண்பட்ட கருத்துக்களை ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டுள்ளார்.அப்போது எவரும் கவனம் செலுத்தவில்லை.களனி விகாரையில் நாக பாம்பு தோற்றம் பெற்றதாக குறிப்பிட்ட ஊடகங்கள் இவர் விடயத்துக்கு முன்னுரிமை வழங்குவது சிறந்ததல்ல ஆகவே மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

யாராவது தும்மினால் கூட கருத்து வெளியிடும் ஜூலி சங் திருந்திவிட்டார் – விமல் வீரவன்ச

ஜூலி சங் திருந்திவிட்டார் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை அவர் வெளியிடுவதில்லை- விமல்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலிசங் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டார் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரகலய பிளான் பி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தற்போது சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதில்லை, அவர் நல்லவராக மாறிவிட்டார் யாராவது தும்மினால் கூட டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார் என விமல்வீரவன்சதெரிவித்துள்ளார்

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிப்பேன்; பதவியேற்ற பின் வட மாகாண ஆளுநர் அறிவிப்பு

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தர முயல்வேன் தெரிவித்தார்.

அனைத்து மதங்களும் தங்களுடைய மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்றும் அதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுக்க தான் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல மாகாண மக்கள் குறிப்பாக யாழ் மாவட்ட மக்களின் கொண்ட குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக வடக்கு மாகாண அவைத்தலைவர் எடுத்துக் கூறியிருந்த நிலையில் அது சம்பந்தமாகவும் நான் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியாக தான் உணர்ந்திருப்பதாகவும் எனவே அந்த பிரச்சனையயை தீர்க்க நிச்சியமாக முக்கியமாக கவனம் எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

சீன நிறுவனம் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் கைச்சாத்து

உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைக்கு அமைய, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பாக இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சினோபெக் ஃப்யூயல் ஒயில் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சீனா, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முடித்துள்ள நிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக அதிபர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

போலிக்கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்காவில் கைதான சீன பிரஜைகள் இராஜாங்க அமைச்சரின் தலையீட்டில் விடுதலை

போலி கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட சீன பயணியை இராஜாங்க அருந்திக பெர்ணாண்டோ தலையிட்டு விடுதலை செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலிகடவுச்சீட்டுடன் சீன பயணியொருவரும் அவரது இரு நண்பர்களும் கொழும்பு விமானநிலையத்திற்குள் நுழைய முயற்சி செய்ததாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்த வேளை அவர்கள் அடாவடியான விதத்தில் நடந்துகொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகள் அவர்களை நாடு கடத்துவதற்காக தடுத்துவைத்திருந்தவேளை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தலையிட்டு விடுவித்துள்ளார்.

18ம் திகதி கொழும்பு விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்த சீன பயணிகள் வேறு நாட்டொன்றின் கடவுச்சீட்டை கையளித்துள்ளனர் அவை போலியான கடவுச்சீட்டுகள் என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் விடயத்தில் தலையிட்ட இராஜாங்க அமைச்சர் போலி கடவுச்சீட்டுடன் கைதுசெய்யப்பட்டவர் ஒரு முதலீட்டாளர் என தெரிவித்து அவரை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இரண்டு சீன பிரஜைகளும் ஒரு எகிப்திய பிரஜையும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முதலீட்டாளர்கள் போலிகடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டமை குறித்து அதிகாரிகள் ஆச்சரியம் வெளியிட்டனர்.

கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவ சீனா கிழக்கு பல்கலையுடன் ஒப்பந்தம்

கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவுவதற்கு கிழக்கு பல்கலைக்கழகத்துடன் யுனான் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

அண்மையில் இந்த இரு பல்கலைக்கழகங்களும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே ஆசிரியர் உறுப்பினர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள், கூட்டு ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள், கன்பூசியஸ் நிறுவனம் நிறுவுதல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் முழுவதிலும் உள்ள பல்கலைக் கழகங்களில் சீனா கன்பூசியஸ் நிறுவனத்தை நிறுவி வருகின்றது.

இந்த நிறுவனத்தை உளவு நடவடிக்கைக்காக அந்த நாடு பயன்படுத்துகிறது என்று சர்ச்சை கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் காந்தியை கொலைசெய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன் அழித்தோம்! – அலி சப்ரி பெருமிதம்

32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அழித்தது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட தினத்தை குறிக்கும் விதத்தில் டுவிட்டரில் அலி சப்ரி இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.

32 வருடங்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அவர்களின் நிதிதிரட்டும்  சர்வதேச வலையமைப்பினர் அரசியல் ஆதரவாளர்கள் புலனாய்வாளர்கள் இணைந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் முன்னாள் பிரதமரை கொலை செய்தனர் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத இயக்கத்தை 14 வருடங்களிற்கு அழித்தது, இலங்கையில் அமைதி சமாதானத்தை ஏற்படுத்தியது என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாணய நிதியத்தின் 2ஆவது தவணை கடன் கிட்டியதும் ஜனாதிபதித் தேர்தல்!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது தவணை கடன் கிடைத்ததும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலை விரைவுபடுத்தும் வகையில் அரசமைப்பு திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன. இதையடுத்து, அதனை விரைவாக உருவாக்கி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று உயர்மட்ட அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் திட்டமாக உள்ளது. எதிர்வரும் செப்ரெம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக் கொள்ளப்படும். இதன் பின்னர் மக்களுக்கு சலுகைகளை வழங்கி – ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண் டும்.

ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் மூன்று மூத்த சட்ட வல்லுநர்கள், அதற்கு தேவையான அடிப்படை செயல்பாடுகளை ஏற்கனவே தொடங்கி விட்டனர் என்றும் அறிய வருகின்றது.

செப்ரெம்பருக்கு முன்னர் கடன் சீரமைப்பு நிறைவு

‘கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்து பொருளாதாரத்தை ஒரு நிலையான நிலைக்கு கொண்டு வர முடியும்” என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த பொருளாதாரக் கொள்கைக்கு பொதுஜன பெரமுனவும் தேவையான ஆதரவை வழங்கியது.

இந்த நாடு மீள வேண்டுமானால் அந்த ஆதரவு மிகவும் முக்கியமானது. இந்தநிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து. திவால் நிலையில் இருந்து வளமான நாட்டைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கை வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதலீட்டாளர்கள் எவரும் நாட்டுக்கு வரவில்லை.

இந்த சூழ்நிலையிலேயே நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவேண்டியேற்பட்டது.

சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் பிச்சைக்காரர்களாக வாழ விரும்புவதில்லை. அவர்கள் கண்ணித்துடனேயே வாழ விரும்புகின்றனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால் இலங்கைக்கு அவற்றை நிறைவேற்றுவதை தவிர வேறு வழிகள் இல்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.