இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமையை ஏற்றுக்கொள்ளுமாறு பிரித்தானிய பிரதமரிடம் கோரிக்கை

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக்கிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிட்டனிலும் வெளிநாடுகளிலும் வாழும் பாதிக்கப்பட்ட தரப்பினர், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர், இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனாக்கிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர்.

இக்கோரிக்கையை உள்ளடக்கி 900 க்கும் மேற்பட்டோரால் கையெழுத்திடப்பட்ட மனுவையும் அவர்கள் அக்கடிதத்துடன் இணைத்துள்ளனர். அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு 14 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை நினைவுகூருகின்றோம். இருப்பினும் இன்னமும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்படவில்லை.

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணையனுசரணை வழங்கியதன் மூலம் தமிழ்மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக பிரிட்டன் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுகின்றோம்.

அதேபோன்று தற்போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுவருகின்றது என்பதை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திவருவதையும் வரவேற்கின்றோம்.

இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதையும், மேமாதம் 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவு நாளாகப் பிரகடனப்படுத்துவதையும் முன்னிறுத்தி கடந்த ஆண்டு மேமாதம் 18 ஆம் திகதி கனேடியப் பாராளுமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையை உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ்மக்களும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரும் பெரிதும் பாராட்டினர். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை அத்தீர்மானம் வழங்கியது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுமாறு உங்களிடமும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வலியுறுத்துகின்றோம். தேவையேற்படும் பட்சத்தில் இவ்விவகாரம் தொடர்பில் பிரிட்டன் தனியாகவோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ தீர்ப்பாயமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக உடனடியாகப் பயணத்தடை விதிக்கப்படவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை உறுதி செய்த கனடா பிரதமரின் அறிக்கை: இலங்கை கொதிப்பு!

தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை உறுதி செய்து, இனப்படுகொலையின் 14வது ஆண்டை முன்னிட்டு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டதை அடுத்து, இலங்கை மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, உள்நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாத அறிக்கையை இலங்கை கண்டிப்பதாக தெரிவித்தார். எனினும், கனடா அதை கண்டுகொள்ளவில்லை.

கனேடிய தலைவர் தனது அறிக்கையில், “இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளை இன்று நாம் சிந்திக்கிறோம். முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்; காயமடைந்த, அல்லது இடம்பெயர்ந்த. இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழும் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன.

மோதலால் பாதிக்கப்பட்ட தமிழ்-கனடியர்களின் கதைகள் – நான் பல ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் சந்தித்த பலர் உட்பட – மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை ஒரு நிலையான நினைவூட்டல். அதனால்தான் கடந்த ஆண்டு மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக அனுசரிக்கும் பிரேரணையை நாடாளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகளுக்காகவும், அத்துடன் இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் கனடா குரல் கொடுப்பதை நிறுத்தாது.

2022 அக்டோபரில், நாட்டில் மனித உரிமைகள், பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கத்தை அழைக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதில் எமது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து கொண்டோம். இலங்கையில் மதம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவ சுதந்திரம் ஆகியவற்றைக் கோரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பிற தீர்மானங்களை ஏற்றுக்கொள்வதில் கனடா உலகளாவிய முன்னணியில் உள்ளது – வரும் ஆண்டுகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான அத்தியாவசிய கூறுகள் – மேலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எங்கள் பணியைத் தொடருவோம். மேலும் 2023 ஜனவரியில், நாட்டில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில், நான்கு இலங்கை அரசு அதிகாரிகளுக்கு எதிராக எங்கள் அரசாங்கம் தடைகளை விதித்தது.

தமிழ்-கனடியர்கள் நம் நாட்டிற்கு ஆற்றி வரும் – மற்றும் தொடர்ந்து செய்து வரும் – பல பங்களிப்பை அங்கீகரிக்க கனடியர்கள் அனைவரையும் கனடா அரசின் சார்பாக அழைக்கிறேன். இலங்கையில் ஆயுதப் போரின் தாக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ளவும், பாதிக்கப்பட்ட அல்லது இழந்த அன்புக்குரியவர்களுக்கு ஒற்றுமையைத் தெரிவிக்கவும் அனைவரையும் ஊக்குவிக்கிறேன்“ என அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக, கனடாவின் பூகோள விவகார அமைச்சு இலங்கை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்திருந்தது . உள்ளூர் நல்லிணக்க முயற்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிய போதிலும், கனேடிய அதிகாரிகளால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி கனடாவின் ஒன்ராறியோ மாகாணம் தமிழ் இனப்படுகொலை வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது

புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா என இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை

விடுதலை புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா என கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த எட்டு ஆண்டுகளாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் எமது ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு ஒன்றையும் நடத்தி இருக்கின்றது.

இதேவேளை தமிழ் தேசிய அரசியல் கட்சிகளோடு இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் அங்கம் வகிக்கின்றோம். கடந்த 11ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவிலிருந்து எனது வீட்டிற்கு வந்து என்னை விசாரித்தார்கள்.விசாரணையின் பின்னர் 15 ஆம் திகதி மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவு கொழும்ப அலுவலகத்திற்கு வருமாறு கூறினார்கள்.

எனினும் கட்சி பணிகள் உள்ளதால் குறித்த திகதியில் என்னால் வரமுடியாது பிறிதொரு திகதியில் வருவதாக கூறியிருந்தேன்.எனினும் அவர்கள் 16ஆம் திகதி மீண்டும் எனது வீட்டுக்கு வந்து என்னிடம் நான்கு மணித்தியாலமும் 50 நிமிடங்களும் விசாரணைகளை மேற்கொண்டார்கள்.மூன்று பேர் கொண்ட குழுவினர் இந்த விசாரணை நடவடிக்கைகள் ஈடுபட்டிருந்தனர்.என்னையும் எனது குடும்பத்தையும் மிரட்டும் வகையில் இவர்களது விசாரணை அமைந்திருந்தது.குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது என்று அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் நல்லுறவு போன்று காட்டிக் கொண்டாலும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கின்றது.அக்டோபர் மாதம் 10ஆம் தேதி டெல்லியில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் நான் கலந்து கொண்டமை தொடர்பாக விசாரித்தார்கள்.குறித்த மாநாட்டில் பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும்,மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் உரிமை, 13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயங்களை நான் இந்தியாவிடம் வலியுறுத்தி இருந்தேன்.

ஜனநாயக போராளிகள் கட்சி இந்தியா எவ்வாறன ஆலோசனைகளை வழங்குகின்றது.

இந்தியா பணம் வழங்குகின்றதா? போன்றவற்றை இவர்கள் விசாரணைகளின் போது கேட்டிருந்தார்கள்.இந்தியா இங்கு என்ன செய்யுமாறு தங்களை பணித்துள்ளார்கள் போன்ற கேள்விகளையும் அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு நான் கூறினேன். இந்திய அதிகாரிகளை சந்தித்தால் அவர்கள் இலங்கை நாட்டு மக்களின் சுதந்திரமான வாழ்வினை விரும்புவதாக என்று கூறுவார்களேயொழிய தமிழ் மக்கள் தொடர்பாக எந்த விதமான கருத்துக்களை அவர்கள் கூறுவதில்லை என்றேன்.

குறிப்பாக இந்தியா பணத்தினை தந்து இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட சொல்கின்றதா என்ற தொனியில் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்திய அரசாங்கம் இலங்கை பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்தித்தபோது இலங்கைக்கு முதலாவதாக உதவி செய்து இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டிருந்தது. என்பதனையும் நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.

இவர்களின் இத்தகைய விசாரணைகள் தொடர்பாக இந்திய தூதரகம் மற்றும் ஏனைய தூதரகங்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு நாங்கள் இவர்களின் விசாரணை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றோம்.குறிப்பாக சில தமிழ் அரசியல்வாதிகளும் போராளிகளை காட்டிக் கொடுத்து அரசுடன் இணைந்து சதி முயற்சி செய்கின்ற தகவல்களும் எமக்கு கிடைத்திருக்கின்றன.

எனவே தமிழ் அரசியல்வாதிகள் போராளிகள் மீது இவ்வாறு கட்டவிழ்த்து விடப்படும் விசாரணைகள் தொடர்பில் மௌனம் காக்காது அதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம்,தியாகி திலீபன் நினைவு தினம்,மாவீரர் நாள் நினைவு தினங்களை நீங்கள் எவ்வாறு செய்கின்றீர்கள்? பணம் யார் வழங்குகிறார்கள் போன்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்பியிருந்தார்கள்.இதற்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பின் மூலமே நாங்கள் இத்தகைய விடயங்களை செய்கின்றோமேயொழிய எந்த ஒரு நாட்டினுடைய நிதி பங்களிப்பில் இத்தகைய நிகழ்வுகளை செய்வதில்லை என்பது தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.

அவர்கள் மீண்டும் கேட்டார்கள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இந்தியா உங்களுக்கு பணம் வழங்குகின்றதா? என்பது தொடர்பில் அவர்களுடைய கேள்வி அமைந்திருந்தது.

குறிப்பாக ஜனநாயக போராளிகள் கட்சியினுடைய ஆவணங்களையும் தங்களிடம் சமர்ப்பிக்குமாறு கூறியிருக்கின்றார்கள் அதற்கு நான் கூறுகின்றேன் எங்களுடைய ஆவணங்கள் தேர்தல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்று கூறினேன்.தினமும் ஆவணங்களை வழங்குமாறு தொலைபேசி அழைப்பு எடுத்த வண்ணம் உள்ளார்கள்.

இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றோம். ஜனநாயக ரீதியாக செயல்படுகின்ற எங்களை நீங்கள் இவ்வாறான அடக்குமுறைகள் மூலம் எம்மை கட்டுப்படுத்த முயற்சித்தால் அது வேறு விளைவினை ஏற்படுத்தும் என்பதையும் நாம் கூறிவைக்க விரும்புகின்றோம்.

குறிப்பாக இந்தியா விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றதா? என்றும் கொழும்பிலிருந்து வந்த பயங்கரவா தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டார்கள். குறிப்பாக ஆயுதம் பணம் என்பவற்றை வழங்கி மீள் உருவாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுகின்றார்களா? என்றும் அவர்கள் கேட்டார்கள் – என்றார்.

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் சரியான முன் நகர்வை மேற்கொண்டால் தமிழினப் படுகொலைக்கான அங்கீகாரம் கிடைக்கும்- சபா.குகதாஸ் தெரிவிப்பு

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் ஒரே காலத்தில் சரியான முன் நகர்வை மேற்கொண்டால் தமிழினப் படுகொலைக்கான அங்கீகாரம் கிடைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலையை உலகின் முதன்மையான நாடுகள் அங்கீகரிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களினால் முன் நகர்த்தப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நீர்த்துப் போகின்ற அபாயம் கூர்மையடைகிறது.

தாயக புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும்  அரசியல் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்தாலும் அது கைகூட பூகோள நலன் சார்பு நாடுகள்  சாதகமாக பச்சை விளக்கை காட்டவில்லை இதுவும் கால இழுத்தடிப்புக்கு வாய்ப்பாகி விடும்.

சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு குரல் கொடுக்கும் சம நேரம் தமிழினப் படுகொலையை அங்கீகரிக்கும் மிகப் பிரதானமான ராஐதந்திர நகர்வை புலம்பெயர் தேசத்தில் உள்ள அத்தனை அமைப்புக்களும் தத்தமது நாடுகளின் உயர் ராஐதந்திர தரப்புக்கள் ஊடாக விரைந்து கையாள வேண்டும் இதுவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான கதவுகளை திறக்கும் அதன் ஊடாகவே உறுதியான பரிகாரநீதி மற்றும் இன நல்லிணக்கம் ஏற்படும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைவரும் தாம் வாழும் நாடுகளில் ஒரே காலத்தில் சரியான முன் நகர்வை மேற் கொண்டால் தமிழினப் படுகொலைக்கான அங்கீகாரம் கிடைக்கும் அதுவே அரசியல் தீர்வுக்கான இறுதி வழியாகவும் அமையும்.

எழுவான்கரை – படுவான்கரை பாதைப்போக்குவரத்தை இலவச சேவையாக்குமாறு ஜனா எம்.பி கிழக்கு ஆளுநரிடம் கோரிக்கை

கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமனம் பெற்ற செந்தில் தொண்டமானை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா இன்றைய தினம் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஆளுநரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் ஆளுநரிடம் முதற் கோரிக்கையாக அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்த எழுவான் கரையில் இருந்து படுவான் கரைக்கான பாதைப் பயணத்திற்கு பொதுமக்களிடமிருந்து பணம் அறவிடும் விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

முன்னாள் ஆளுநனர் ஏற்கனவே பொருளாதர நிலையில் நலிவுற்றிருக்கும் மக்களைக் கருத்திற் கொள்ளாமல் பாதைப் போக்குவரத்துக்கு கட்டணம் அறவிடுவதற்கான உத்தரவினைப் பிறப்பித்திருந்தார்.

தற்போது புதிய ஆளுநராக வந்திருக்கும் தாங்கள் வறிய நிலை மக்களுக்குள் இருந்து அவர்களின் நன்மை தீமை அனைத்தையும் அனுபவித்து இன்று இந்நிலைக்கு உயர்ந்துள்ள ஒருவர். எனவே எமது மக்களின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு முன்னாள் ஆளுநரால் கொண்டுவரப்பட்ட இப்பாதைப் போக்குவரத்திற்கு கட்டணம் அறவிடுகின்ற விடயத்தை நிறுத்தி முன்னர் இடம்பெற்றது போன்றே இலவச சேவையினை வழங்க வேண்டும் என்று பாரளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததற்கமைவாக இவ்விடயத்திற்குக் கொள்கை அளவில் ஆளுநரால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயமானது வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் முன்நிறுத்தி கலந்துரையாடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

சதொச வழக்கிலிருந்து ஜோன்ஸ்டன் விடுதலை

லங்கா சதொச ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் இருவரையும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சக்கீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த போது சட்டவிரோதமான முறையில் சதொச ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்ததை குறிப்பிடத்தக்கது.

செந்தில் தொண்டமான் ஆளுநராக பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 16ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்ட ஆளுநர் அவர்கள் இன்று திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், வியாழேந்திரன்,கிழக்கு மாகாண சபையின் அரச திணைக்களங்களது செயலாளர்கள், அரச திணைக்கள உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் சீனாவின் யுனான் மாகாண ஆளுநரால் புத்தகப் பைகள் வழங்கி வைப்பு

திருகோணமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை (19) விஜயம் செய்த சீன நாட்டின் யுனான் மாகாண ஆளுநர் “சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து அன்பளிப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ் திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 30 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி வைத்தார்.

இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர், வித்தியாலய அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

புதுடெல்லியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இந்தியாவின் புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) நேற்று(18.5.2023), மே 18 தமிழர் இனப்படுகொலை நினைவு நாளை முற்போக்கு மாணவர் அமைப்பும் (PSA) ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்பும் (JNUTSA) இணைந்து இலங்கையில் இந்நினைவேந்தலை மேற்கொள்ளும் மக்களுக்கான தோழமைக்காக தீபமேற்றியும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியும் நினைவுகூர்ந்தனர்.

எமது மக்களுக்காக ஒன்றாக இணைந்து பயணிக்க உறுதி பூண வேண்டும் ஜனா எம்.பி

எமது உறவுகளின் இழப்பின் மேல் சத்தியம் செய்து ஒன்றாகப் பயணிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இதே அரசாங்கம் கடந்த காலங்களிலே தமிழ்ப் போராட்ட இயக்கங்களைப் பிளவு படுத்தியது போல் மீண்டும் மீண்டும் எங்களைப் பிளவுபடுத்தி வலிமை இழந்தவர்களாக மாற்றக் கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009 மே 18ம் திகதி எங்களது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கின்றது. அதனையொட்டிய ஒரு வார காலத்துக்குள் எமது உறவுகள் சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பொதுமக்கள், போராளிகள் உயிர்நீத்துள்ளதாக முன்னாள் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. இன்றுடன் 14வது ஆண்டை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் செல்ல முடியாத எமது மாவட்ட மக்களுக்காக இந்த நினைவேந்தலை நாங்கள் கல்லடி கடற்கரையிலே செய்துள்ளோம். எமது உறவுகளை நினைத்து அவர்களை நினைவு கூர்வதற்காக இங்கு வருகை தந்துள்ளோம்.

இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த காலம் முதல் எமது மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்ந்ததன் காரணமாக எமது உரிமைகளைப் பெறுவதற்கும், சுயநிர்ணய உரிமையுடன் எங்கள் பிரதேசங்களில் வாழ்வதற்காகவும் அகிம்சை ரீதியாகப் போராடினோம். ஆனால், எமக்கு அந்த உரிமை கிடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மாறாக தொடர்ச்சியாக இனக்கலவரங்களின் ஊடாக எமது உறவுகளின் உயிர்களும் உடமைகளும் இழக்கப்பட்டதே தவிர நாங்கள் சுதந்திரமடைந்த மக்களாக வாழவில்லை என்ற காரணத்தினால் ஆயுதப் போராட்டத்திற்குள் நாங்கள் வலிந்து தள்ளப்படடிருந்தோம்.

அந்த ஆயுதப் போராட்டம் 2009 மே 18ம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும், எமக்கான உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த வகையில் நாங்கள் தமிழ்த் தேசியப் பரப்பிலே ஜனநாயக, இராஜதந்திர ரீதியாக எமது உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

2001ம் ஆண்டு பல முரண்பாடுகளுக்கு மத்தியில் இருந்த தமிழ் போராட்ட இயக்கங்கள், அரசியற் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அரசியல் ரீதியாக எமது பிரச்சனைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு செல்வதற்கும், பாராளுமன்றத்திலே ஒற்றுமையாகப் பொரடுவதற்குமாக ஒன்றிணைந்தோம். ஆனால் 2009ல் ஆயுதப் பேராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு ஜதார்த்தமாகப் பேசப்போனால் நாங்கள் இன்று பல பிரிவுகளாகப் பிளவு பட்டு இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கூட ஒற்றுமையாகச் செய்ய முடியாத ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இந்த நிலைமை தொடரக் கூடாது. ஏனெனில் நாங்கள் முள்ளிவாய்க்காலிலே இழந்த இழப்புகளுக்கு இதுவரை பதில் இல்லை. முள்ளிவாய்க்காலிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குக் கூட இதுவரை என்ன நடந்தது என்று தெரியாமல் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்குக் கூட என்ன நடந்தது என்பது இன்னமும் தெரியாமல் இருக்கின்றது.

2009ற்குப் பின்னர் மூன்றாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருந்து கொண்டிருந்தாலும் கூட இறந்தவர்களுக்கோ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கோ ஒரு நீதி கிடைக்கும் சூழ்நிலையை இந்த நாட்டிலே உருவாக்கவில்லை.

ஆனால், தற்போதைய ஜனாதிபதி புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்திலும் கூறுகின்றார். வடக்கு கிழக்கு தமிழ் எம்பிகளையும் அழைத்து கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றார். 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டாலும் 13வது திருத்தம் எங்களது இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வல்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

எனவே நாங்கள் இந்த உறவுகளின் இழப்பின் மேல் சத்தியம் செய்து கொண்டு இனியாவது ஒன்றாகப் பயணிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் நாங்கள் ஒன்றாகப் பயணிக்காவிட்டால்; கடந்த காலங்களிலே இதே அரசாங்கம் தமிழ்ப் போராட்ட இயக்கங்களை பிளவு படுத்தியது போல் மீண்டும் மீண்டும் எங்களைப் பிளவுபடுத்தி எங்களை வலிமை இழந்தவர்களாக மாற்றக் கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது.

தமிழ்ப் பிரிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்ற போது கூட நாங்கள் வலியுறுத்திக் கூறுவது ஒரு சர்வதேச மத்தியஸ்தத்துடன் தான் ஒரு பேச்சுவார்ததை நடக்க வேண்டும். சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடக்கும் போதே இதற்கு நியாயமான ஒரு தீர்வை சபைக்குக் கொண்டு வரும்.

இன்று நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம் உள்நாட்டுப் பொறிமுறையினூடாக நடைபெறும் எந்தவொரு விசாரணை மூலமும் இழந்த எமது உறவுகளுக்கு ஒரு இழப்பிடோ நீதியோ உண்மையோ கண்டு பிடிக்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது. இதன் காரணமாகவே நாங்கள் கலப்புப் பொறிமுறை மூலமாக சர்வதேச தலையீட்டுடனான நீதியான விசாரணையைக் கோரி நிற்கின்றோம்.

அந்த வகையில் நாங்கள் ஒன்றாக இணைந்து ஒரே குரலாக எமது மக்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கும், இழந்தவர்களுக்கான இழப்பீட்டையும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்குமாக தொடர்ச்சியாகப் போராட வேண்டும் என்று இன்றைய நாளில் நாங்கள் உறுதி பூணுவோம் என்று தெரிவித்தார்.