நாகபூசணி அம்மன் சிலையை அகற்றக்கோரிய பொலிசாரின் மனு தள்ளுபடி

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த வழக்கை தொடர பொலிசாருக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸாரின் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகி கடந்த ஏப்ரல் 18ம் திகதி வழக்கு விசாரணையின்போது நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Posted in Uncategorized

விகாரைகளுக்கு எதிராகத் தமிழ் இனவாதிகள் நடத்தும் போராட்டம் இனமோதலுக்கான சதி – அஸ்கிரிய பௌத்த பீடம்

இன மோதலை உருவாக்கும் திட்டமிட்ட நோக்கத்துடனேயே வடக்கு கிழக்கில் விகாரைகளுக்கும் தொல்பொருள் இடங்களுக்கும் எதிராக தமிழ்த் தேசிய இனவாத அரசியல்வாதிகளும் கடும்போக்குவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்கள் என்ற கடுமையாகச் சாடியிருக்கிறார் இலங்கையின் பௌத்த உயர் பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீட பிரதிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர்.

அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதற்கெதிராக ஒன்றிணைந்து நிற்கும் சிங்கள பௌத்த மக்களால் ஒருநாள் ஏற்படும் பிரச்சினைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் பொறுப்பு என்றும் அவர் எச்சரித்தார்.

திருகோணமலையில் இருந்து ஆளுநரை மாற்றியிருப்பதும் பெளத்த சிங்கள மக்களுக்கு எதிரான ஆட்சியாளர்களின் செயற்பாடு என்றும் அவர் விமர்சித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

அண்மைக் காலமாக வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகள் மற்றும் தொல்பொருள் இடங்களுக்கு எதிராக கடும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இனவாத வெறி பிடித்த சில அரசியல்வாதிகளும் கடும்போக்குவாத அமைப்புகளும் நாட்டில் இனவாத, மதவாத நெருக்கடியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் மிகவும் திட்டமிட்டு இந்த இடங்களில் போராட்டம் நடத்தி வருவதாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இது போன்ற மிக அண்மைச் சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தில் இருந்து 270 வருடங்களுக்கு முன்னர் பிக்குகள் இலங்கைக்கு வந்திறங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தை நினைவுகூரும் வகையிலான நிகழ்வுக்காக சியாமியத் துறவிகள் (பிக்குகள்) அங்கு வந்திறங்கினர். தமிழ் இனவாத அமைப்புக்களைச் சேர்ந்த சில பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் இந்த இடத்திற்கு வந்து கடும் எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றன.

இந்த நிலமையை இன்றைய ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் பாரதூரமான மத மற்றும் தேசிய நெருக்கடி உருவாகுவதைத் தடுக்க முடியாது. இன்று இந்த விடயம் தொடர்பில் தற்போதைய ஆட்சியில் உள்ள எவரும் பேசுவதில்லை. இந்த ஆட்சி ஆளுநர்கள் நியமனத்தில்கூட சிங்கள பௌத்த மக்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போது செயற்படுவதையே நாம் காணமுடிகிறது.

வடக்கு – கிழக்கின் பௌத்த பாரம்பரியம் பாதுகாக்கப்பவேண்டும். அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கு மட்டுமன்றி, அனைவரினதும் சமய நல்லிணக்கத்திற்காக ஒன்றிணைந்து செயற்படும் வகையில், இவ்வாறான தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் அடிப்படைவாத மதக் குழுக்களைக் கட்டுப்படுத்தி ஆட்சியாளர்கள் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்பதை ஆணித்தரமாக நினைவூட்ட விரும்புகின்றோம். சட்டம் தீவிரமாகச் செயற்படுத்தப்படவேண்டும் இந்தப் பின்னணியில் இந்நாட்டு சிங்கள பௌத்த மக்கள் அனைவரும் இணைந்து தமிழ் இனவாதத்திற்கு எதிராக நிற்கின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பில் ஒரு நாள் ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால் இன்றைய ஆட்சியே அதற்கு நிச்சயமாகப் பொறுப்பு என்றார்

நில அபகரிப்புகளைத் தடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் – கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம்

வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் மற்றும் நில அபகரிப்புகளை தடுப்பதற்கு அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும், கட்சி பேதங்களை கடந்து ஒன்றிணைந்து போராடமுன்வரவேண்டும் என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாதன் குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நொச்சிமுனையில் உள்ள ஒன்றியத்தின் அலுவலகத்தில் இன்றைய தினம் நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ லோகநாதன் குருக்கள் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருகோணமலை மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து இந்துக்குருமார்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் அலுவலகத்தில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, தென்னை மரத்திற்கு உயிர்நீர்த்தவர்களின் நினைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், படுகொலைசெய்யப்பட்ட மக்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டு, அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கல்லடி, சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக உப்புக் கஞ்சி காய்ச்சப்பட்டு அதனை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இந்துக்குருமார் ஒன்றிய உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாதன் குருக்கள்,

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் உப்புக்கஞ்சியை மட்டுமே தமது உணவாக கடைப்பிடித்தனர். அதனை மீட்டிப்பாக்கும் வகையிலும் எதிர்கால சமூகத்திற்கு இந்த விடயம் தெரியவேண்டும் என்பதற்காகவும் இதனை வருடாந்தம் நாங்கள் நினைவுகூர்ந்து வருகின்றோம்.

அனைவரும் இவ்வாறான நிகழ்வுகளில் இணைந்துகொள்ளவேண்டும் என்ற கோரிக்கையினை நாங்கள் முன்வைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் தேசியத்தில் பற்றுக்கொண்டவர்களுக்கு ஒரு கோரிக்கையினை கிழக்கிலங்கை இந்தக்குருமார் ஒன்றியத்தினூடாக முன்வைக்க விரும்புகின்றோம்.

தற்போது தையிட்டி, திருகோணமலை போன்ற இடங்களில் பௌத்தமயமாக்கலை மூலாதாரமாக கொண்டு பௌத்தர்கள் இல்லாத இடங்களிலெல்லாம் தற்போது புதுசுபுதுசாக பௌத்த ஆலங்கள் நிறுவப்படுகின்றன.

இந்த நேரத்தில் தமிழ் தேசியம் சார்ந்த அனைவரும் கட்சி பேதங்களை மறந்து எமது நிலப்பிரதேசத்தினை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.

ஆகவே தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு எமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல், நில அபகரிப்புகளை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

வடகிழக்கு தமிழர்களின் தாயகப்பிரதேசம். இதனை யாருக்கும் விட்டுக்கொடுக்க நாங்கள் தயாரில்லை. அவ்வாறான சிந்தனையுடன் செயலாற்ற முன்வரவேண்டும் என அனைத்து தமிழ் கட்சிகளிடமும் வேண்டிக்கொள்கின்றோம்.

வவுனியாவில் நடராஜர் சிலையை திருடிய இராணுவ வீரர் கைது

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயமொன்றில் இருந்து பித்தளை நடராஜர் சிலையை திருடியதாக சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கராயன்குளத்திலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் மாதாந்த விடுமுறையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் கோவிலில் உள்ள விக்கிரகத்தை திருடி விற்பனைக்காக பையில் வைத்துக்கொண்டிருந்த போது முச்சக்கரவண்டி சாரதிகள் குழுவினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து திருடப்பட்ட 50,000 ரூபாய் பெறுமதியான சிலையும் சந்தேகநபரும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி செயற்பாடுகள் இடைநிறுத்தம்-காஞ்சன விஜயசேகர

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி கட்டமைப்பை 100 நாட்களுக்கு செயலிழக்கச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்

இதன்படி எதிர்வரும் மூன்றாம் திகதி முதல் 100 நாட்களுக்கு இந்த கட்டமைப்பு செயலிழக்க செய்யப்படவுள்ளது.

மேலும் குறித்த காலப்பகுதியில் நாட்டில் மின்சார தடையை ஏற்படுத்தாது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மஹிந்த பிரதமராவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது – மனோ கணேசன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தை கலைத்து விரைவில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை கோருவதாக நாட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிற நிலையில் அவரை பிரதமராக நியமிப்பதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என கூறியுள்ளார்.

ஆனால் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துங்கள் என்றும் அதற்கான அரசாங்கத்தை அமைக்க தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் மூலமே மக்களின் ஆணை யாருக்கு உள்ளது என்பதை கண்டறிய முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் பதவியில் இருந்து நீக்கம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வடக்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜாவும் கிழக்கு ஆளுநராக அனுராதா யஹம்பத்தும் வயம்ப ஆளுநராக கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னகொடவும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்த்க்கது.

ஜனாதிபதி – தமிழ் எம். பிக்கள் பேச்சில் ஆக்கபூர்வமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை

இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற அதிகார பகிர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தை எந்த விதமான தீர்க்கமான நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலைமையில் முடிவடைந்தது.

தமிழ் தரப்பு தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய அதிகாரங்களை முழுதாக நடைமுறைப்படுத்தி மாகாண சபை தேர்தல்களை நடத்துவதன் மூலம் தான் ஒரு அரசியல் தீர்வுக்கான, பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கையை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க முடியும் என்ற அடிப்படையில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இருந்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது.

இடையிலே நிறுத்தப்பட்டது திரும்பவும் ஆரம்பிக்கப்பட்ட பொழுது இன்று அந்த பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் தரப்பினாலே வலியுறுத்தப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் பக்கத்திலிருந்து அதற்கு உறுதியான நிலையான செயல்பாடுகள் தொடர்பில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படாத நிலைமையில் அது நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கவில்லை.

இருப்பினும், அதிகார பகிர்வு தொடர்பில் ஒரு குழுவை அமைப்பதாகவும் அந்த குழுவின் இருக்கக்கூடிய பிரதிநிதிகளை தமிழ் தரப்பில் இருந்தும் அவர் கூறியிருந்தார். அந்த குழுவை அமைத்துக் கொண்டு இந்த அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக மேலும் கலந்துரையாடி தீர்க்கமான முற்றுமுழுதான அதிகாரப்பகிர்வை நிறைவேற்ற முடியும் அன்பு ஜனாதிபதியில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இருப்பனும் தமிழ் தரப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கின்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் பேச்சுவார்த்தை குழுக்கள் அமைப்பது என்பது காலநீடிப்பாக இருக்கும் தவிர ஆரோக்கியமானதா இருக்காது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது எனவே எந்த விதமான ஆக்கபூர்வமான முடிவுகள் இன்றி இந்த கூட்டம் என்று முடிவடைந்துள்ளது

ரெலோவின் வவுனியா அமைப்பாளர் கிறிஸ்ரி குகராஜா 24ம் ஆண்டு நினைவஞ்சலி

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் வவுனியா மாவட்ட அமைப்பாளரும்,மத்தியகுழு உறுப்பினருமான அமரர்.கிறிஸ்ரி குகராஜா மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிதிச்செயலாளர் அமரர்.சிவதாசன் அவர்களினதும் 24வது ஆண்டு நினைவு அஞ்சலிகள் வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னார்களின் நினைவிடத்தில் நடைபெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.

கடவுச்சீட்டுக்களுடன் பிரான்ஸில் தலைமறைவான இலங்கை முப்படை வீரர்கள்

2023ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ டிரையத்லான் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் முப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பிரான்சில் காணாமல் போயுள்ளனர்.

அதன்படி, நிகழ்விற்காக பிரான்ஸ் சென்ற 13பேர் கொண்ட தூதுக்குழுவின் தலைவரிடமிருந்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இலங்கை விமானப்படையின் இரண்டு அதிகாரிகள், தமது கடவுச்சீட்டுகளை திருடி, குழுவிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முப்படையைச் சேர்ந்த ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் மூன்று அதிகாரிகள் அடங்கிய 13 பேர் கடந்த 04 ஆம் திகதி அன்று பிரான்ஸ் சென்றனர்.

கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால், போட்டியாளர்களின் கடவுசீட்டுக்கள் மூத்த அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. எனினும் குறித்த ஏழு பேரும் தங்களது கடவுச்சீட்டுக்களை திருடிச் சென்றதாக நம்பப்படுகிறது.