பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆராயும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆராய்வதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக சம்பந்தப்பட்ட குழு சிபாரிசு செய்தால் அது உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளுக்கு அமைய இந்த சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கமைவாக இருக்க வேண்டும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு விதிகளும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரோஸ் முச்செனா தலைமையிலான குழு மார்ச் 27 முதல் நேற்று வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநாட்டவும் பாதுகாக்கவும் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் கூறியுள்ளது.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அமைப்புக்கள், அவர்களின் நீண்ட கால கோரிக்கையான உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றைக் கேட்க அரசு அவசரமாகவும் உண்மையாகவும் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்துடனான விதிமுறைகளும் நிபந்தனைகளும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் மற்றும் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது

ஐக்கிய மக்கள் சக்தியில் குழுவொன்று ரணிலுடன் இணைந்து கொள்ளும் – அனுர

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளும் என எதிர்பார்ப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொலன்னாவையில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க குறித்த குழு தீர்மானித்துள்ளது என்றும் ஆகவே அவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பணத்திற்காக தமது நாடாளுமன்ற ஆசனங்களை தமது கட்சியினர் தியாகம் செய்ய மாட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பருத்தித்துறையில் கடற்தொழிலாளர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றநிலையில் பருத்தித்துறை வீதி ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கில் 14
கடற்றொழிலாளர் சங்கங்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பருத்தித்துறை பிரதேச செயலக ஊழியர்கள் எவரும் கடமைக்கு உள்ளே செல்லமுடியாதவாறு பருத்தித்துறை பிரதேச செயலக வாயில்கள் மறிக்கப்பட்டு போராட்டகாரர்கள் அமர்ந்திருந்த நிலையில் தீடீரென வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன்போது அவ்வழியே வருகைதந்த நீதவானும் போராட்டம் காரணமாக திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எமக்குரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலீஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணினி குற்றங்களுக்கு திட்டமிட்ட 38 சீனப் பிரஜைகள் அளுத்கமவில் கைது!

கணினி குற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகள் 38 பேர் நேற்று சனிக்கிழமை (1 ) கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

நிதி மோசடி தொடர்பான கணினி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த சீனப் பிரஜைகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சீன தூதரகத்தின் உதவியுடன் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 33 ஆண்கள், 5 பெண்களும் அடங்குவர்.

சந்தேக நபர்கள் வசமிருந்த 40 மடிக்கணினிகள், 120 கையடக்கத் தொலைபேசிகள், பல கணினி உபகரணங்கள் மற்றும் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்- திருகோணமலையில் பொது மக்களின் காணியில் புத்தர் சிலை வைக்க முயற்சி

திருகோணமலை,குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அமளிதுமளி நிலவியுள்ளது .குறித்த சம்பவம் நேற்று (1) இடம்பெற்றுள்ளதுடன் ஒரு வாரகாலமாக இந்த நிலைமை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாதுகாவலருடன் சென்றிருந்த வேளையில் பொதுமக்களை மெய்பாதுகாவர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளார். புல்மோட்டை அரிசி மலை விகாரையினை சேர்ந்த பௌத்த மதகுருவே இவ்வாறான சண்டித்தன வாய்த்தகராறில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகம் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் இணைந்து தங்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சிறிய மாற்றங்களுடன் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் எவ்வித அடிப்படை மாற்றங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பயங்கரவாத தடுப்புச் சட்டங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த யோசனை தயாரிக்கப்பட்டதாக விஜயதாஷ ராஜபக்ஷ கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு உட்பட்டது.

மனித உரிமைகள் பேரவையும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு ஏற்ப புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியது.

இந்தநிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஏற்கனவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் புதிய விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் குறித்து உரையாட ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடுகின்றது

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

இதன்போது தேர்தலை நடத்துவது தொடர்பான உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேநேரம் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேவையான நிதி விடுவிக்கப்பட்டால் தபால் மூல வாக்கெடுப்பு 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று தெரிவித்திருந்தது.

அத்தோடு தேர்தலை நடத்த வேண்டும் என்றால் 10 ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இதற்கிடையில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவரதனவை சந்திப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

தவிசாளர் நிரோஸ், தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்திய வழக்கு யூலை 17க்கு தவணையிடப்பட்டது

யாழ் – நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட அரச கருமங்களுக்கு முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தடை ஏற்படுத்தினார் என தொடுக்கப்பட்ட வழக்கில், காவல்துறையினர் தாம் மேலதிக ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து எதிர்வரும் யூலை மாதம் 17 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது.

வெள்ளிக்கிழமை 31.03.2023 மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையினைப் பெறுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே அச்சுவேலி காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது காவல்துறை தரப்பில் இருந்து தாம் மேலதிக ஆலோசனையினைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மன்றில் தெரியப்படுத்தப்பட்டது.

நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் இராணுவத்திணருடன் இணைந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் அத்திபாரம் போன்று வெட்டிய நிலையில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் நிரோஸ் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட எதிர்பின் காரணமாக இரண்டாது தடவையாகவும் தொல்லியல் திணைக்களத்தினால் நிலாவரையில் நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்த தியாகராஜா நிரோஸ் பெருந்தொகையானோரை அழைத்து வந்து தமது கருமங்களுக்கு தடை ஏற்படுத்தனார் என மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

இதனிடையே கடந்த மாதமும் இராணுவத்தினரால் புத்தர் சிலையுடன் பௌத்த கட்டுமானம் ஒன்று நிலாவரையில் நிறுவப்பட்ட நிலையில், அவை தவிசாளர் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பின் காரணமாக உடனடியாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தகது.

தமிழர்களிடமிருந்து நிலப் பகுதியை குறைக்க வேண்டும் என தென் இலங்கை திட்டமிட்டு செயல்படுகிறது- முன்னாள் யாழ்.பல்கலை துணைவேந்தர்

மகாவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் பத்து லட்சம் காணிகளில் தமிழர்கள் எவருக்கும் ஒரு துண்டு காணியேனும் வழங்கப்படவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ், நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற இந்து சமயம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் துணைப் பொருளில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில்,

இலங்கையில் காணப்படுகின்ற தொல்லியல் திணைக்களம், வனவத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன மிக வேகமாகச் செயற்படுகின்றன.

தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள் மேய்ச்சல் தரவைகள் வழிபாட்டு இடங்களை தொல்லியல் வன ஒதுக்கப்பகுதி என காணிகளை கையகப்படுத்தி காணி அற்றவர்களாக்குவதே திட்டம்.

யுத்த காலப்பகுதியில் தமிழர்களுடைய புராதன அடையாளங்கள் மற்றும் வரலாற்று நிலங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழர்களிடமிருந்து நிலப் பகுதியை குறைக்க வேண்டும் என்பதில் தென் இலங்கை திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.

மகாவலி அதிகார சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் பிரதேச செயலகமோ மாவட்ட செயலகமோ கேள்வி கேட்க முடியாத அளவுக்கு அதிகாரம் உள்ள சபையாக காணப்படுகிறது.

மகாவலி L வலயத்தில் உள்ளடங்கும் முல்லைத்தீவு மாவட்டம் வெலி ஓயா பகுதி மற்றும் முழுதாக சிங்கள மக்களுக்கே குடியேற்ற திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர் காணியற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் காணிகள் வழங்கப்படவில்லை.

இந்து சமயம் பல்வேறு வழிகளிலும் நசுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு தயக்கம் காட்டுகின்றன.

இந்து சமயத்தில் இருக்கின்ற பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து வலுவான ஒரு அமைப்பின் கீழ் செயல்படும்போது தமிழ் மக்களின் நிலங்களையும் இந்து சமயத்தையும் பாதுகாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.