இந்தியப் பெருங்கடலில் நுழைந்துள்ள சீனக் கப்பலை உன்னிப்பாகக் கவனிக்கும் இந்தியா

பங்களாதேஷை சுற்றியுள்ள கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஈடுபட்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான ஹை யாங் ஷி யூ 760ஐ இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வியோன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்குச் சொந்தமான இந்த நில அதிர்வு ஆய்வுக் கப்பல் டிசம்பர் 29ஆம் திக இரவு மலாக்கா வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்து, கடந்த ஜனவரி மாதம் முதல் பங்களாதேஷ் உடன் தொடர்புடைய பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் சீனக் கப்பல் இந்திய கடற்படையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்தித்தளம் ஒன்று கூறுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் சீனக் கப்பலான “யுவான் வாங் 5” இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்றபோது புதுடெல்லியால் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

அன்றிலிருந்து இலங்கை, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை கடைபிடித்து வருகின்றது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்திய கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

சீனக் கப்பல்கள் இந்த பகுதியில் சட்டவிரோதமான, ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடியில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய செய்தித்தளம் கூறுகின்றது.

இந்தநிலையில் தற்போதைய நிலவரப்படி, இந்தியப் பெருங்கடலில் சீனப் பிரசன்னம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியக் கடற்படை அதன் கடல் பிரசன்னத்தையும் கண்காணிப்பையும் தீர்விரப்படுத்தியுள்ளது.

10 ஆம் திகதிக்கு முன் நிதி வெளியிடப்பட்டால் தேர்தல் – ஆணைக்குழு

10 ஆம் திகதிக்கு முன்னர் தேவையான நிதி விடுவிக்கப்பட்டால் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு தேர்தலை நடத்த வேண்டும் என்றால் 10 ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் தற்போது தேர்தலை இரத்து செய்வது குறித்த முடிவு எட்டப்படவில்லை என்றும் 10 ஆம் திகதிக்குப் பின்னர் நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை சந்திப்பதற்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்டம் கட்டமாக என்றாலும் தேர்தலை நடத்துங்கள் – மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்து

தேர்தலை நடத்த நிதி நெருக்கடி காரணமாக இருந்தாலும் அதனை முகாமைத்துவம் செய்து, கட்டம் கட்டமாக என்றாலும் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

உலக ஜனநாயக தினத்திற்கு முன்னரேனும் தேர்தல நடத்தப்படும் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாமை பாரிய குற்றம் என குறிப்பிட்ட அவர், இது கவலைக்குரிய விடயம் என்றும் சாடியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு, நிதி அமைச்சு மற்றும் திறைசேரி என்பவற்றுக்கு தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதற்கான இயலுமை காணப்படுகிறது என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

நிதியை சேகரித்து தேர்தலை நடத்த முடியாதெனில் , கட்டம் கட்டமாவேனும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படாமையால் பிரதிநிதித்துவ ஜனநாயகம் அற்றுப்போகும் அபாயம் உள்ளது என்பதனால் தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் பயங்கரமானவை – மனோ கணேசன்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனாதிபதிக்குக் கடுமையான மற்றும் கொடுமையான அதிகாரங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது என மனோ கணேசன் தெரிவித்தார்.

ஆகவே இதனை ஒருபோதும் ஏற்க முடியாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும், இந்த புதிய சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் பயங்கரமானவை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தப் புதிய சட்டமூலம் பலருக்கும் பாதகமாக அமையும் என சுட்டிக்காட்டிய மனோ கணேசன், மக்களுக்கு போராட்டம் நடத்த முடியாத சூழலை உருவாக்கும் என்றும் என்றும் எச்சரித்தார்.

வெடுக்குநாறிமலை விக்கிரகங்களை மீண்டும் பிரதிஷ்டை செய்ய தொல்லியல் திணைக்களம் தடை

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய புனராவர்த்தன புனர் கும்பாபிஷேகம் நாளை அதிகாலை வைக்க முற்பட்ட சமயம் இன்று மாலை தொல்லியல் திணைக்களம் தடைபோட்டு நிற்கின்றது.

நெடுங்கேணியில் சேதமாக்கிய வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் நாளை அதிகாலை அதே இடத்தில் பிரதிஸ்டை செய்ய ஆலய நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு புதிய சிவன் சிலை எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட சிவலிங்கம் வெடுக்குநாறி மலையில் 300 ஆண்டுகால பழமை வாய்ந்த சிவன், அம்மன், பிள்ளையார் மற்றும் வயிரவர் வழிபட்ட இடத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதன்போது முன்பு சிவலிங்கம் இருந்து உடைக்கப்பட்ட இடத்தில் காணப்பட்ட சீமேந்து துகளை அகற்றி மீண்டும் வைக்கப்படும் லிங்கத்திற்கு இடம் சீர்செய்ய முற்பட்ட சமயம் நெடுங்கேணிப் பொலிசார் அந்த இடத்திற்கு சென்று இதற்கு தொல்லியல்த் திணைக்களம் அனுமதிக்காமல் மேற்கொள்ள முடியாது எனத் தடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வவுனியா நெடுங்கேணி பொலிஸாரால் விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்ய சென்ற இரண்டு மேசன் மற்றும் கூலியாள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக தற்போது தொல்லியல் திணைக்களத்தினருடன் பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகின்றன. இதனால் அதிகாலை 12 மணி முதல் 3 மணிவரை உள்ள புண்ணிய காலத்தில் விசேச பூசை வழிபாடுகள் மேற்கொண்டு அதே இடத்தில் மீண்டும் சிவன் பிரதிஸ்டை மேற்கொள்ளப்படுமா என்பது தற்போது கேள்விக் குறியாகியுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஐ.நா இலங்கைக்கு கடும் அழுத்தம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்து அதற்கு மாற்றீடாக பயங்கரவாதம் தொடர்பான குறுகிய வரையறைகளை உள்ளடக்கிய சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைவாக புதிய சட்டங்களை வகுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை அரசாங்கத்திடம் ​கோரிக்கை விடுத்துள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டின் போது இலங்கையின் ஆறாவது அறிக்கையை மீளாய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் இறுதி அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிஸ் கழகத்தின் கோட்பாடுகளுக்கு இணங்கி பணியாற்றுதல், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான நியமனங்களை வெளிப்படைத்தன்மையுடன் வழங்குதல், பொறுப்புகளை நேர்த்தியான முறையில் நிறைவேற்றுவதற்குத் தேவையான விடயங்களை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு அமைய, ஒன்பதாவது சரத்தின் பிரகாரம், பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையை பரிசோதிப்பதற்காக, அவர்களை தடுத்து வைத்துள்ள இடங்களை சுயாதீனமாக கண்காணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை ரூபாவிலான கடனை உள்ளடக்க மத்திய வங்கி விருப்பம்

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை ரூபாவிலான கடனையும் உள்ளடக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கடன் வழங்குநர்களின் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பினை பெறுவதற்கான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இதனை கருதி மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை மத்திய வங்கியிடம் காணப்படுகின்ற திறைசேரி உண்டியல்கள் மாத்திரமே பரிசீலிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கமும் அதன் ஆலோசகர்களும் பிரதான திறைசேரி பத்திரங்களை வைத்திருப்பவர்களுடன் ஆலோசனைகளை நடத்துவார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மொத்த திறைசேரி உண்டியல் பங்குகளில் மத்திய வங்கி 62.4 சதவீதத்தை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கடுமையானது

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கடுமையானது என விமர்சிக்கப்படுகின்றது.

மார்ச் 22 ஆம் திகதி வர்த்தமானியூடாக வெளியிடப்பட்ட உத்தேச சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்களையும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் தொழிற்சங்க நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர்.

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு, பயங்கரவாதம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக உத்தேச வரைபின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பில் இந்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் பகுதியின் பிரிவு 3இ-இற்கு அமைய, எந்தவொரு அத்தியாவசிய சேவை அல்லது விநியோகம் அல்லது ஏதேனும் முக்கியமான உட்கட்டமைப்பு வசதி அல்லது அது தொடர்பான போக்குவரத்து வசதிகளை சீர்குலைப்பது பயங்கரவாத குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்பதுடன், அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, குறித்த தரப்பினரது சொத்துகளை அரசுடைமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாதக் குற்றத்தை செய்வதில் ஈடுபடுத்துதல், தூண்டுதல் அல்லது ஊக்குவிக்கும் நோக்கில் கருத்து வெளியிடுதலும் குற்றம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சு ஊடகம், இணையம், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் ஏனைய பொது விளம்பரங்களும் இந்த சட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்தகைய குற்றத்திற்காக, 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை, அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கை தொடர்பிலும் குறித்த சட்டமூலத்தின் சரத்துக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உத்தேச சட்டமூலத்திற்கமைய, பிடியாணை இன்றி ஒருவரை கைது செய்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதுடன், பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, மூன்று மாத காலம் வரை தடுப்புக் காவலில் வைக்கவும் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படின் ஜனாதிபதி சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் ஒன்று.

இந்நிலையில் இந்த சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நீதியமைச்சர், “புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கான, சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அது வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைவடைந்துள்ளது.

எனவே, அந்த ஆணைக்குழுவுக்கு புதிய சட்டத்தின் பிரகாரம் கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். கடந்த காலங்களில் சுயாதீனத்தன்மையைக்கருதி ஓய்வுபெற்றவர்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டனர்.

ஆனால் சேவைகள் சிறப்பாக இடம்பெறவில்லை. எனவே, சிறப்பாக செயற்படக்கூடியவர்களை நியமிப்பதற்கும் ஏற்பாடுகள் உள்ளன.

சொத்து விபரங்களை வெளியிடுவது ஒரு சிலருக்கு விலக்களிக்கப்பட்டுவந்தது.

எனினும், புதிய சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி, மாகாண முதல்வர்கள், ஆளுநர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரின் தொன்மை அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம்- மக்களை அணி திரண்டு போராடவும் அழைப்பு

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்கள் அழிக்கப்பட்டு பெளத்த சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும் மக்களை அணிதிரண்டு போராடுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிங்கள பேரினவாத சக்திகளால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக தமிழ் இனத்தின் தொல்லியல் சான்றுகளை அழிப்பதோடு, பௌத்த சின்னங்களை நிறுவி குடியேற்றங்களை உருவாக்கி வரும் நிகழ்ச்சி நிரல்களுக்கு கடும் எதிர்ப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. அண்மையில் வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் முற்றாக விஷமிகளால் சேதமாக்கப் பட்டுள்ளது. இதேபோன்று கீரிமலையில் அமைந்துள்ள சிவனாலயம் சித்தர் மடங்கள் என்பன நிர்மூலமாக்கப் பட்டுள்ளன. நெடுந்தீவு, கச்சதீவு, மற்றும் நிலாவரையில் புத்தர் சிலை, குருந்தூர் மலையில் பௌத்த ஆலய கட்டிடம், கன்னியா வென்னீரூற்று தொல்லியல் திணைக்களத்தால் கைப்பற்றல் என தொடரும் நடவடிக்கைகளை நாம் முற்றாக கண்டிப்பதோடு அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறோம்.

அதேபோன்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைய நீக்குவதாக கூறிக்கொண்டு அதைவிட கடுமையான மற்றும் கொடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முகமாக, வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கிறோம். அதற்கு எமது கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்கிறோம். ஏற்கனவே இருந்த சட்டமூலத்தில் இருக்கும் அனைத்து சரத்துக்களுக்கும் மேலதிகமாக அவசர கால சேவைகளாக கருதப்படும் உணவு உற்பத்தி, விநியோக சேவைகள் என இன்னோரன்ன சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களோ அதைச் சார்ந்த ஊழியர்களோ எந்தவிதமான கருத்து தெரிவிப்பதையோ போராட்டங்களில் ஈடுபடுவதையும் இந்தச் சட்டமூலம் கட்டுப்படுத்துகிறது.

அவசரகால சட்டத்தின் கீழ் பிரகடனப் படுத்தப்படும் அனைத்து சேவைகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் செயலற்றவர்களாக ஆக்கப்படுகின்ற அபாயகரமான நிலையை இந்த சட்ட மூலம் தோற்றுவிக்கிறது.

இது அடிப்படை மனித உரிமை மீறலை முற்றும் முழுதாக மீறுவதோடு தனிமனித பேச்சு சுதந்திரத்தையும் குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையாக நாம் நோக்குகிறோம். இந்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் நாம் சுவாசிப்பதற்கும் உணவு உண்பதற்கும் தவிர வேறு எதற்கும் வாய் திறக்க முடியாதவர்களாக சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்படுவோம். எமது உரிமை சார்ந்த விடயங்களைப் பற்றி குரல் எழுப்பவோ அடக்குமுறைகள் ஆக்கிரமிப்புகளைப் பற்றி கருத்து தெரிவிக்கவோ முடியாதவர்களாக ஆக்கப்படுவோம்.

இவற்றை எதிர்த்து எமது கண்டனங்களை பதிவு செய்வதோடு மாத்திரமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அணிதிரட்டி இவற்றிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க மக்களை அழைக்கிறோம். கட்சி பேதங்கள், அரசியல் கோட்பாடுகள், சின்னங்கள் என்பவற்றைத் தாண்டி தமிழ்த் தேசிய அரசியலில் பயணிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் மதத் தலைவர்கள் அனைவரையும் எம்மோடு கைகோர்த்து வலுவான போராட்டங்களை முன்னெடுக்க அறைகூவல் விடுக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.