புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இயக்கத்தின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உபதலைலரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளருமான தோழர் இராகவன் அல்லது ஆர்.ஆர் (வேலாயுதம் நல்லநாதர்) வியாழக்கிமை (22) இயற்கை எய்தினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், 1980 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இணந்திருந்து – தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை முழுமையாக அர்ப்பணித்த ஒரு மூத்த போராளியே ஆர்.ஆர் ஆவார்.

அவரது உடலுக்கு  உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் மற்றும் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

ஆர்.ஆர். இன் வித்துடலுக்கான வணக்க நிகழ்வுகள் -16 ஹேக் வீதி, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் சனிக்கிழமை (24) காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், அதனைத் தொடர்ந்து, வவுனியா கோவில் குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை 8 மணி தொடக்கமும் நடைபெறும்.

பின்னர், முற்பகல் 11 மணிக்கு இறுதி நிகழ்விகள் நடைபெற்று ஆர்.ஆர். இன் வித்துடல் வவுனியா கோவில்குளத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை – முல்லை. நீதிமன்றில் அறிக்கை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணியின்போது மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம்(22) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றையதினம்(22) இடம்பெற்ற வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன்,

ஏற்கனவே, அகழ்ந்து எடுக்கப்பட்ட எச்சங்களில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து பிற பொருட்கள் தொடர்பான அறிக்கை பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களது அறிக்கை இன்று மன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் முல்லைத்தீவு நீதவான் த.பிரதீபன் அவர்களால் மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பகுப்பாய்வின் அடிப்படையில் இது 1994 ஆம் ஆண்டுக்கு முற்படாததும் 1996 ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியினை கொண்டிருக்கலாம் என பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகின்றது.

அத்தோடு மீண்டும் எஞ்சிய எலும்புக்கூட்டு தொகுதியினை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அனேகமாக மார்ச் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இருப்பினும், அதற்கான நிதி அமைச்சினால் வழங்கப்படும் பட்சத்தில் அகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே மீண்டும் மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு குறித்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வைத்தியர்களின் அறிக்கையின் மனித எச்சங்களின் வயது, பால், இறப்பிற்கான காரணம் போன்றவை இன்னும் வெளிவராமல் நிலுவையில் இருக்கின்றது என மேலும் தெரிவித்தார் .

தமிழ் மக்கள் ஜே.வி.பி யுடன் இணைவதை தடுக்க முயற்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி – ஜே.வி.பி குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு அவர்கள் எம்மோடு இணைவதை தடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புள்ள குழுக்கள் முயற்சிப்பதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கையில்

இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம்.

எனவே, எமக்கு எதிரான பாசறையினர் எம்மீது ஆதாரமற்ற, அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக தோழர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்டவர்கள் இந்தியாவின் அழைப்பின் பேரில் இந்திய விஜயத்தை மேற்கொண்டு வந்ததன் பின்னர் இந்நாட்டு தமிழ் மக்கள் மத்தியில் எம்மீதான மிகப் பெரிய ஆர்வமும் கவனமும் அதிகரித்து வருகின்றது.

எனவே, தமிழ் மக்கள் எம்மோடு இணைவதைத் தடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புள்ள பல்வேறு குழுக்கள் மிகவும் தவறான ஒரு செய்தியை புனைந்து வருகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் இடையீட்டுடன்தான் 83 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரம் மேற்கொள்ளப்பட்டதென பொய்யான பிரச்சாரத்தை இவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் செய்து வருகின்றனர். இது அப்பட்டமான பொய்யாகும்.

83 கறுப்பு ஜுலைக் குற்றச் செயல்கள் ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையின் கீழ் இயங்கிய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் இடையீட்டின் பேரில்தான் மேற்கொள்ளப்பட்டன.

அதுபற்றிய எழுத்திலான குறிப்புகள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றை எங்களால் சமர்ப்பிக்க முடியும். 83 கறுப்பு ஜுலை கலவரத்துக்கு முன்னர் யாழ். நூலகத்தை தீக்கிரையாக்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்த்துடைய அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்கள். அவர்கள் பற்றிய எல்லா விடயங்களையும் எங்களால் சமர்ப்பிக்க முடியும்.

ஆனால், இந்த கலவரத்தின் பின்புலத்தை நாம் ஆராய்ந்தால் 1983 கறுப்பு ஜுலை என்பது குறிப்பாக இலங்கையில் வடக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய எல்லா மாகாணங்களிலும் வசித்த தமிழ் மக்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்ட அடிப்படையில் கட்டவிழ்த்துவிட்ட கடுமையான ஒரு இனவாத செயற்பாடாகும்.

குறிப்பாக ஜே.ஆரின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தேர்தலை பிற்போட்டு ஜனநாயகத்தின் மீது அடக்குமுறையைப் பிரயோகித்து படுமோசமான ஆட்சியைத்தான் செய்து வந்தது. அவர்கள் தொழிற்சங்கங்களை தடை செய்தார்கள்.

ஒரு இலட்சம் பேருக்கு தொழிலை இழக்கச் செய்தார்கள். வளர்ந்து வந்துகொண்டிருந்த தேசிய ஒற்றுமை ஒரு மட்டத்தை அப்போது அடைந்திருந்தது. இந்த தேசிய ஒற்றுமையை சிதைப்பதற்காக ஜே.ஆரும், ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையையும் அடக்குமுறையையும் பாவித்தார்கள்.

1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் 1977 அம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தன, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அரசாங்கத்தை அமைக்கும்போது இந்நாட்டில் யுத்தம் இருக்கவில்லையே? ஜே.ஆர் மற்றும் ரணிலின் தவறான இனவாத அரசியலின் காரணமாகத்தான் 81, 82 இல் முரண்பாட்டு நிலைமையொன்று இலங்கையில் உருவாகியிருந்தது. 83 ஆம் ஆண்டிலே முரண்பாடு உச்சம் கண்டிருந்தது. அதன் விளைவாக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை அவர்களின் வீடுகளில் ஒப்படைப்பதுதான் அப்போது அமுலில் இருந்த நடைமுறை. ஆனால், ஜே.ஆர். ஜெயவர்தன, ரணில் உள்ளிட்ட கும்பல் அந்தச் சிப்பாய்களின் பூதவுடல்களை கொழும்புக்கு கொண்டுவந்து திட்டமிட்ட அடிப்படையில் மிகப்பெரிய ஒரு தாக்குதலை கொழும்பில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டனர். அத்தாக்குதல் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச தலைவர்களால் இலங்கை முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. சப்பாத்து தைக்கின்ற வறிய மனிதர் முதற்கொண்டு பெரிய தொழிலதிபர்கள் வரை இதனால் பாதிப்புற்றார்கள். இலங்கையில் எத்தனையோ சினிமா தியட்டர்கள் அழிக்கப்பட்டன. கொழும்பில் ரணிலின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த காமிணி மண்டபம் இப்போது இல்லையே! யார் தீக்கிரையாக்கியது? ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் காடையர் கும்பல்கள்தான் அழித்தன.

எனவே, 83 கறுப்பு ஜுலையை உருவாக்கியதும் அமுலாக்கியதும் ஐக்கிய தேசியக் கட்சிதான். ஜே.ஆர்.தான் அதன் முக்கியஸ்தர். அதேப்போல அப்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டன. அவர்களின் ஆதனங்கள் அழிக்கப்பட்டன. அதனையடுத்து ஜே.ஆர். ஜெயவர்தன ஒருவாரகாலம் சட்டத்தை அமுலாக்கவில்லை. பொலிசாருக்கு கட்டளையை பிறப்பிக்கவில்லை. பொலிஸ்மா அதிபர்கள் ஜே.ஆரிடம் சென்று அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரினார்கள். ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை. எனவே, இந்தக் கறுப்பு ஜுலையைத் தொடர்ந்து ஜே.ஆர். என்ன செய்தார்? மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜ கட்சி ஆகிய மூன்று இடதுசாரி கட்சிகளை தடைசெய்தார்.

தடைசெய்து சில மாதங்களுக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜ கட்சியின் தடைகளை நீக்கினார். ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் தடையை நீக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் விடுதலை முன்னணி 1980களில் மிகவும் பலம்பொருந்திய வகையில் வளர்ந்து வந்தது. அதாவது, இடதுசாரியின் மிகவும் பலம்பொருந்திய மக்கள் இயக்கமாக வளர்ந்து வந்துகொண்டிருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் தோழர் விஜேவீரவை உள்ளிட்டவர்கள் பாராளுமன்றத்திற்கு வந்து இந்த நாட்டின் அதிகாரத்தை இடதுசாரிகளின் கைகளுக்கு கொண்டுபோய் விடுவார்களென ஜே.ஆர். பயந்தார். எனவே, அதனை தடுப்பதற்காக ஜே.ஆர் இந்த இனவாதத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை படுகொலை செய்து, அதனை பயன்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியை தடை செய்தார்.

ஹிட்லரும் இதைத்தானே செய்தார். ஹிட்லரின் நாசிக்கட்சி ஜேர்மன் பாராளுமன்றத்தை தீக்கிரையாக்கினார்கள். அவ்வாறு செய்துவிட்டு ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மீது குற்றத்தை சுமத்தினார்கள். அதன் பின்னர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்து அடக்கினார்கள். ஜே.ஆரும் 83 இல் இதைத்தான் செய்தார். பின்னர் கறுப்பு ஜுலை தொடர்பாக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்தக் கலவரத்திற்குக் காரணம் ஐக்கிய தேசியக் கட்சிதான் என்று அதில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, இற்றைவரை அக்குற்றச் செயல்களுக்காக ரணில் விக்ரமசிங்க இந்த தேசத்திடம் மன்னிப்புக் கோரவில்லை. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பாக புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவைதான் நடந்த உண்மை.

பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இந்த விடயம் தெரியும். ஆனால், அக்காலப்பகுதியில் இலங்கையில் சமூக வலைத்தளங்கள் இருக்கவில்லை. சுயாதீன ஊடகங்கள் இருக்கவில்லை. ஓரிரண்டு செய்தித்தாள்கள் இருந்தன. ஐ.டி.என், தேசிய ருபவாஹிணி என்ற இரு இலத்திரனியல் ஊடகங்கள் அரசாங்கத்தின் கைகளில் இருந்தன. எனவே, அந்தநேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் காடையர்கள், அயோக்கியர்கள் புரிந்த ஆட்கொலைகளை ஜே.வி.பி. அல்லது வேறு நபர்கள் மீது சுமத்துவதற்கு வசதியாக இருந்தது. அண்மைக் காலத்தில் மக்கள் எழுச்சியின் போது அரசாங்கத்தின் காடையர்கள் கோல்ஃபேஸ் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு அப்பலியை மற்றவர்கள் மீது சுமத்த முயற்சித்தனர்.

ஆனால், சமூக வலைத்தளங்கள் இருந்ததனால் ராஜபக்ஸர்களால் அதனைச் செய்ய முடியவில்லை. ஆனால், 83 யுகம் அப்படிப்பட்டதல்ல. எனவே, 83 கறுப்பு ஜூலை இலங்கை வரலாற்றை முற்றாகவே மாற்றியமைத்தது என்பதை தெட்டத்தெளிவாகக் கூறுகிறோம். இது ஆயுதமேந்திய பிரிவினைவாதத்திற்காக இளைஞர்களை வழிப்படுத்தியது. இது முட்டாள்த்தனமான கறுப்பு ஜுலையாகும். அந்தக் கலவரத்தில் உடைமைகளை இழந்த, உறவுகளை இழந்த, கைகால் முறிந்த தோழர்கள் இன்னமும் இருக்கிறார்கள். இன்று மக்கள் விடுதலை முன்னணியுடன் அவர்கள் இணைந்தே இருக்கிறார்கள். சரோஜா போல்ராஜ், இராமலிங்கம் சந்திரசேகர், மோகன் போன்ற தோழர்கள் அப்படிபட்டவர்கள்தான்.

ஜே.வி.பி. தமிழர்களை தாக்கியிருந்தால் அவர்கள் ஏன் ஜே.வி.பியுடன் இணைந்துகொள்ள வேண்டும்? அந்தக் காலப்பகுதியில் ஜே.வி.பி. இனவாத ரீதியாக செயற்படவில்லை என்பதை மக்களிடம் தெரிவித்துக்கொள்கின்றோம். அப்போது நாங்கள் தமிழ் சகோதர சகோதரிகளை இயலுமான நேரங்களில் காப்பாற்றினோம். அவர்களை பாதுகாத்தோம்.

எனவே, வங்குரோத்து அடைந்துள்ள இந்த ராஜபக்ஸர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் சேறுபூசும் இயக்கங்களிடம் அகப்படாமல் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக எம்மோடு இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் ரணிலை ஓட ஓட விரட்டுவோம் – ரில்வின் சூளுரை

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும், அப்படிச் செய்தால் மக்களுடன் வீதிக்கு இறங்கி ஜனாதிபதி ரணிலை ஓட ஓட விரட்டியடிப்போம் என்றும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப் பகுதியில் இப்போதுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிகின்றது.

இந்நிலையில், அரசமைப்பின்படி, அதற்கு முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தி ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும்.

அந்தத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கோ அல்லது வேறு ஏதும் சதி செய்வதற்கோ இடம்கொடுக்கமாட்டோம். மக்களை வீதிக்கு இறக்கி இந்த அரசை விரட்டுவோம் எனவும் தெரிவித்தார்.

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்கட்சிக்கு வழங்குமாறு கோரிக்கை

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (22) காலை ஆரம்பமான பாராளுமன்ற அமர்வின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு இந்த பதவிகளை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்ததாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இது தொடர்பான நிலைமையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – சபா.குகதாஸ் வேண்டுகோள்

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் பிரதிநிதிகளை சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

அது அவர்களின் ஐனநாயக உரிமை ஆனால் தமிழர்களுடன் ஐே.வி.பி பேசுவதற்கு முன்பாக பிரதான இரண்டு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

ஒன்று ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று அவர்கள் கோரி நிற்கும் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது ஐே.வி.பியின் முன்னாள் தலைவர் றேஹண விஐயவீர, ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் 2006 இணைந்த வடகிழக்கு மாகாணங்களை சட்டரீதியாக பிரிப்பதற்கு ஐே.வி.பியின் உயர்நீதிமன்ற வழக்கே காரணமானது.

2009 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு தென்னிலங்கையில் சாரை சாரையாக சிங்கள இளைஞர்களை இராணுத்தில் இணைவதற்கு தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற வெறித்தனமான பிரசாரத்தை மேற்கொண்டதுடன் யுத்த வெற்றியை ராஐபக்ச குடும்பத்துடன் பாற்சோறு வழங்கி கொண்டாடியது தாங்கள் தமிழர்களுக்கு செய்த தவறு.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் – உயர்நீதிமன்றம் அறிவிப்பு

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசமைப்புக்கு முரணானது என சுட்டிக் காட்டியுள்ள உயர்நீதிமன்றம், ஒருசில ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பெற்றுக்கொள்வதுடன், மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும்.” என் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நேற்று (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மேற்படி சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான செல்லுபடியாகும் தன்மை பற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்வருமாறாகும்:-

• 3, 42, 53 மற்றும் 70 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் இணங்காததுடன், பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அவை நிறைவேற்றப்படுதல் வேண்டும். எனினும், அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.

• 4 ஆம் வாசகம் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் திருத்தப்படுதல் வேண்டும்.

• 72(1) ஆம் வாசகம் அரசியலமைப்புடன் இணங்காததுடன் விசேட பெரும்பான்மையுடனும் மற்றும் மக்கள் ஆணையின் போது மக்களினால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். அவ்வாசகங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அந்த இணங்காமை நீங்கும். அதற்கு இணங்க, 72(2) ஆம் வாசகமும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க திருத்தம் செய்யப்படுதல் வேண்டும்.

• 75(3) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 3 ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய 4 (இ) உறுப்புரையை மீறுவதுடன் 2/3 பெரும்பான்மையுடனும் மக்கள் ஆணையின் போது அவை அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். அவ்வாசகம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அந்த இணங்காமை நீங்கும்.

• 83 (7) ஆம் வாசகம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுதல் வேண்டும். அவ்வாசகம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை மேற்கொண்டால் அவ் இணங்காமை நீங்கும்.

மேலும், உயர்நீதிமன்றத்தினால் சட்டமூலத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களுக்கு இணங்க மாத்திரம் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலம் சட்டமாக நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கேற்கவேண்டாம் என கோரிக்கை!

கச்சதீவு திருவிழாவில் இம்முறை இந்தியாவில் இருந்து பக்தர்கள் எவரும் பங்கேற்க வேண்டாம் என கச்சத்தீவு திருப்பயன ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை இந்திய பக்தர்களின் உறவு பாலமாக உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா இந்த ஆண்டு 23 மற்றும் 24 திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், சிறையில் உள்ள நான்கு இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.

அதனடிப்படையில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக படகுகள் இயக்கப்படாததால் இந்த ஆண்டு திருப்பயணத்தை ரத்து செய்வதாக கச்சத்தீவு திருப்பயன ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அந்த செய்தியில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய திருப்பயணிகள் தயவு செய்து கச்சதீவுக்கு பயணிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கொடுத்த பணத்தை விரைவில் திருப்பிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் தெரிவித்தார் – எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்பு

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச உள்ளிட்ட அதிகாரிகள், உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதியொன்றை திங்கட்கிழமை (19) மல்வத்து அஸ்கிரி மகா மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தனர்.

இச்சட்டமூலத்திற்குப் பாராட்டு தெரிவித்த மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரியத் தரப்புப் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோர் இதனை மேலும் பரிசீலனை செய்து பொது நிலைப்பாட்டை அறிவிக்கவும் இணக்கம் தெரிவித்தனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகச் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் மேலும் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்தனர்.

கலாநிதி மகவெல ரதனபால தேரர், கலாநிதி முருத்தெனியே தர்மரதன தேரர் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை இடைக்கால செயலகத்தின் பிரிவு தலைவர் (கொள்கை) கலாநிதி சி. வை. தங்கராஜா, மக்கள் தொடர்பு நிறைவேற்று அதிகாரி தனுஷி டி சில்வா, சிரேஷ்ட சட்ட நிறைவேற்று அதிகாரிகளான யஸ்மதா லொகுனாரங்கொட, துலான் தசநாயக்க, இணைப்பாளர் எஸ். டி. கொத்தலாவல ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எட்கா உடன்படிக்கை நிறைவேறின் இந்தியர்கள் நிரந்தமாக குடியேறுவர் – விமல் வீரவன்ச

200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொண்டதை போன்று எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள். ஜனாதிபதியின் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு பொதுஜன பெரமுனவினர் வெட்கமில்லாமல் இருக்கிறார்கள். பிரதமர் தினேஷ் குணவர்தன பூனை போல் செயற்படுகிறார். அமைச்சரவை உறுப்பினர்கள் முட்டாள்களை போல் உள்ளார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது உண்மையல்ல,நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பதிலாக நெருக்கடிகளை தீவிரப்படுத்தி என்றும் விடுப்படாத நடவடிக்கைகள் மாத்திரமே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். ஆகவே மறுசீரமைப்பு தீர்மானங்களை மீள்பரிசீலனை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

அமைச்சர் ஹரின் பிரனாந்து அண்மையில் இந்தியாவுக்கு சென்று ‘இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ‘ என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஹரின் பிரனாந்து இந்தியாவில் ஆற்றிய உரையை ஊடகங்கள்திரிபுப்படுத்தியுள்ளதாகவும்,செம்மைப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிடுகிறார்.அமைச்சர் ஹரின் பிரனாந்து குறிப்பிட்ட கருத்தை எவரும் திரிபுப்படுத்தவில்லை.

தேசியத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.பொரலுகொட சிங்கம் என்று குறிப்பிடப்படும் பிரதமர் தினேஷ் குணவர்தன தற்போது பூனை போல் அமைதியாக உள்ளார்.

டெலிகொம் நிறுவனம்,மின்சார சபை மன்னாரில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளன.இதுவா பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள். இலங்கையில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பனவற்றை இந்தியாவுக்கு வழங்குவதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் இந்த நாட்டின் என்ன மிகுதியாகும்.பாராளுமன்றத்தையும் இந்தியாவுக்கு வழங்கலாமே?

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை எதிர்வரும் மார்ச் மாதம் கைச்சாத்திட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையின் சகல தொழிற்றுறைகளிலும் ஈடுப்பட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.எட்கா ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை ஆளும் தரப்பின் எத்தனை உறுப்பினர்கள் அறிவார்கள்.வழங்குதை சாப்பிட்டு விட்டு இருப்பதை மாத்திரமே பிரதான செயற்பாடாக கொண்டுள்ளார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய தமிழர்களை வெள்ளையர்கள் இலங்கையில் தங்க வைப்பதற்காக மலையக பகுதிகளுக்கு அழைத்து வரவில்லை.தொழிலுக்காகவே அழைத்து வரப்பட்டார்கள். பிற்பட்ட காலத்தில் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் ஊடாக மலையக தமிழர்கள் பலர் நாடு கடத்தப்பட்டார்கள்.சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் சரியானது என்று குறிப்பிடும் தரப்பினர்கள் இன்று எட்கா ஒப்பந்தத்துக்கு சார்பாக செயற்படுகிறார்கள்.

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக தங்கியதை போன்று இந்தியர்களும் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள்.இந்தியர்கள் வெற்றிலை கடை கூட இலங்கையில் வைப்பார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நன்கு அறிவார். அதனால் தான் எதிர்காலத்தில் நடக்க போவதை முன்கூட்டியதாகவே அவர் ‘இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ‘ என்று குறிப்பிட்டுள்ளார். வழங்குவதை சாப்பிட்டு விட்டு,அமைதியாக இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் செயற்பாட்டை அறிய மாட்டார்கள்.பாராளுமன்றத்தில் கையுயர்த்துவதற்காகவே பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்கிறார்.

அண்மையில் தாய்லாந்து நாட்டுடன் சுதந்திர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை.முட்டாள்தனமான அமைச்சரவை உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். எட்கா ஒப்பந்தத்துக்கும் இவர்கள் ஆதரவு வழங்குவார்கள்.

நாட்டின் இறையாண்மையை பிற நாட்டில் காட்டிக் கொடுத்துள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக பேசுவதற்கும், அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுவதற்கும் எவருக்கும் தற்றுணிவு கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வெட்கம் என்பதொன்று கிடையாது. 69 இலட்ச மக்களாணைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ராஜபக்ஷர்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

எட்கா ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஒரு அரச அதிகாரி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிவில் தரப்பினர் இந்த ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்துக்கு சென்று அவரிடம் கேள்வி கேட்ட போது ‘எதனையும் குறிப்பிட முடியாது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எட்கா ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் ஒரு அணி செயல்படுகிறது ஆனால் இலங்கை சார்பில் ஒரு நபர் மாத்திரமே செயற்படுகிறார். ஆகவே எட்கா ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்கும் தரப்பினர் தேச துரோகிகளாக கருதப்படுவார்கள் என்றார்.