தேர்தல் முறைமை மாற்றத்தின் பின்னரேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரவு – பொதுஜன பெரமுன

பிரதமர் தலைமையிலான அரசியல் கட்சியொன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறும் தேர்தல் முறைமை நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்வரை நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறை நீக்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

தற்போதைய தேர்தல் முறையின் கீழ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்கிய பின்னர் தற்போதைய தேர்தல் முறைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் எந்க கட்சியாலும் தெளிவான நாடாளுமன்ற பெரும்பான்மையை பெறமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நாட்டின் தலைவரான பிரதமர் பல அரசியல் கட்சிகளின் ஆதரவை கோரி ஆட்சியமைக்கவேண்டும் என தெரிவித்துள்ள சாகரகாரியவசம் அவ்வாறான அரசாங்கம் தனக்குஆதரவளிக்கும் கட்சிகளின் விருப்பத்தின் அடிப்படையிலேயே ஆட்சிசெய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை பொதுஜனபெரமுன எப்போதும் கொண்டுள்ளதுஎன தெரிவித்துள்ள சாகரகாரியவசம் அதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றியமைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைகாரணமாக மாகாணசபைகள் முறைகள் போன்றவற்றினால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என்பது உண்மை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையின் கீழ் அவைகள் ஏதோ ஒருவிதத்தில் கட்டுப்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க நிபந்தனையுடன் ஆதரவளிக்கத் தயார் – சஜித் பிரேமதாச

நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்க தயார் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஐக்கியமக்கள் சக்தி நிபந்தனையுடன் ஆதரவளிக்க தயார் என தெரிவித்துள்ள அவர் தேர்தலின் பின்னரே இந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆரம்பத்தில் நிறைவேற்று அதிகாரமுறையை நம்பினோம் ஆனால் சட்டத்தின் ஆட்சிக்கு இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள சஜித்பிரேமதாச இதன் காரணமாக நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிவிட்டோம் என சட்டத்தரணிகள் மாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலை அல்லது வேறு எந்த தேர்தலையும் நடத்தாமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதை எதிர்க்கின்றோம் மக்களின் வாக்களிப்பதற்கான உரிமையை பறிக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான பொறுப்பு ஜனாதிபதியின் விசுவாசியொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள சஜித்பிரேமதாச அவர் சிவில் சமூக உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் ஏனையவர்களின் நிலைப்பாட்டை அறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் அரசமைப்பு சீர்திருத்தங்களிற்கு சரியான தருணம் இதுவென குறிப்பிட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்புசீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி குரல்கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அரசமைப்பு பேரவை ஒருபோதும் ஜனாதிபதியின் அடிமையாக மாறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்ட அந்தஸ்து இல்லாத நிகழ் நிலைக் காப்புச் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் – ஜீ.எல். பீரிஸ்

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் என்பனவற்றுக்கு அமைவாக நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த சட்டத்துக்கு சட்ட அந்தஸ்து கிடையாது, செல்லுப்படியற்றது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளையும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு அமைய நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது முற்றிலும் சட்டத்துக்கு விரோதமானதொரு செயற்பாடு.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் ஊடகங்களினதும்,ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.இந்த சட்டம் சட்டவிரோதமானது.இந்த சட்டத்தை சாதாண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமாயின் பெரும்பாலான ஏற்பாடுகளை திருத்தம் செய்ய வேண்டும்,அவ்வாறு இல்லையெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் மிக தெளிவாக வியாக்கியானம் வழங்கியுள்ளது.

இந்த சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களில் ஐந்து முக்கிய திருத்தங்கள் பாராளுமன்ற குழுநிலை வேளையின் போது சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கும்,சபாநாயகருக்கும் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.

இலங்கையிக் புகழ்பெற்ற நீதியரசரான மார்க் பெர்னான்டோ, உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது ‘சபாநாயகரால் சான்றுரைக்கப்படும் சட்டமூலம் அரசியலமைப்பின் விதிவிதானங்களுக்கு அமைவானதாக அமையாவிடின் அவ்வாறான சட்டங்களுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்காது’ என தெளிவாக வாதிட்டுள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் என்பனவற்றுக்கு அமைவாக நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை.ஆகவே இந்த சட்டத்துக்கு சட்ட அந்தஸ்து கிடையாது,செல்லுப்படியற்றது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சகல ந்டவடிக்கைகளும் சட்டவிரோதமானது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படு;த்துவேன்.

இந்த ஆண்டு தேசிய தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.நிகழ்நிலை காப்புச் சட்டத்தை செயற்படுத்தினால் இலங்கையின் மனித உரிமைகளை சவப்பெட்டியில் அடக்கம் செய்ய வேண்டும்.

ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு அனைவரும் அரசாங்கத்துடன் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கிறார். ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு மத்தியில் சிறந்த மாற்றத்தை ஒருபோதும் உருவாக்க முடியாது என்றார்.a

சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வார காலத்தில் பிறப்பிக்கப்படும் – இந்திய மத்திய அரசு

ராஜீவ்காந்தி கொலைதொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நிலையில் தொடர்ந்தும் திருச்சிசிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் வெளியாகும் என இந்திய மத்திய அரசுதெரிவித்துள்ளது.

தாயாரை கவனித்துக்கொள்வதற்காக தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தவேளை மத்திய அரசின் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது சாந்தன் இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளது இலங்கை அரசாங்கம் அனுப்பியஆவணங்கள் மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனஎன தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதேவேளை தமிழக அரசாங்கம் அனுப்பிய ஆவணம் இன்னமும் வந்துசேரவில்லை சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Shell – RM Parks – CPSTL இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

உள்நாட்டு எரிபொருள் சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறந்துவிட்டதன் பின்னர், இலங்கையில் முதலீடு செய்த அமெரிக்காவை தளமாகக் கொண்ட Shell – RM Parks நிறுவனத்திற்கும், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கும் இடையில் எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தமொன்று இன்று (12) கொலன்னாவை, இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதனூடாக, Shell – RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் இருப்புக்களை இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் சேமித்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 08 ஆம் திகதி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனம் மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இது தொடர்பான முன் உடன்படிக்கையில் கைசாத்திட்டிருந்த நிலையில், உரிய எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பணிப்புரையின் பேரில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வலிவடக்கில் 500 ஏக்கரை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் மக்களின் வாழ்விடங்களில் இருந்து 500 ஏக்கரை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி இன்று(12) அப்பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலும் 500 ஏக்கர் நிலத்தைச் சுவீகரித்துத் தருமாறு விமான போக்குவரத்து அதிகார சபை கோரிக்கை விடுத்தது எனக் கூறியே இந்த முயற்சி இடம்பெற்றது.

இதற்குத் தாம் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளியிட்டு அவசர சந்திப்புக்கு மாவட்ட அரச அதிபருக்கு எழுத்தில் கடிதம் வழங்கியபோதும் அவர் வாய்மூடி மௌனியாக இருக்கின்றார் என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், இன்று மீண்டும் குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய வகையில் 500 ஏக்கரை சுவீகரிக்கும் வகையில் இரகசியமாக நிலங்களை அளவிடும் முயற்சி இடம்பெறுகின்றது என அறிந்து அப்பகுதியில் குவிந்த மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு தமது நிலங்களை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் போராட்டத்தையடுத்து நில அளவையைக் கைவிட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதில் ஜனாதிபதி ரணில் தீவிரம் – மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வஜனவாக்கெடுப்பா நாடாளுமன்ற தேர்தலா முதலில் இடம்பெறும் என தெரியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கருஜெயசூர்ய தலைமையிலான குழுவொன்றை நிறைவேற்று அதிகாரமுறை நீக்கம் தொடர்பாகஆராய்வதற்காக ரணில்விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அரசமைப்புசீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலா அல்லது சர்வஜனவாக்கெடுப்பா முதலில் வரும் என சொல்ல முடியாத நிலை காணப்படுகின்றது இது உங்கள் மத்தியில் காணப்படும் கேள்விமாத்திரமல்ல எனக்கும் இந்த கேள்வி உள்ளது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரணில்விக்கிரமசிங்கவிடமும் இதற்கான விடையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜே.வி.பி யினரை சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அழைக்க வேண்டும் – பந்துல குணவர்தன

ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மக்கள் விடுதலை முன்னணிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியுடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெல்லவாய பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது.

முறையான மறுசீரமைப்புக்களுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளோம் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

பொருளாதார மீட்சிக்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மாற்றியமைத்தால் அல்லது இடைநிறுத்தினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் என்பதை அரசியல் தரப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களை தவறான வழிநடத்தும் வகையில் போலி அரசியல் வாக்குறுதிகளை வழங்குவதை அரசியல்வாதிகள் அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அரசியல் வாக்குறுதிகளினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் அரசியல் வாக்குறுதிகளை அனைவரும் தவிர்த்துக் கொள்வது அத்தியாவசியமானது.

இந்தியா, சீனா உள்ளிட்ட முன்னிலை நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய எதிர்ப்பு கொள்கைகளை கடைப்பிடித்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டமை வரவேற்கத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணிக்கு ஜப்பான், தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும் என்றார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும் – சஜித் பிரேமதாஸ

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையாகும். இதில் உருவாக்கப்பட்ட ஏகாதிபத்தியமும், மகத்தான அதிகாரமும் இந்நாட்டு குடிமக்களின் உரிமைகளை மீறுவதால் இங்கு தெளிவான மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை இல்லாதொழிப்போம் என்ற போர்வையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்க இடமளிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சரியான திகதியில் நடத்தாமல், அதற்கு நிதி ஒதுக்காது மக்களின் வாக்குரிமையை மீறும் அரசாங்கமே ஆட்சியில் இருக்கிறது. மக்களின் சர்வஜன வாக்குரிமையில் இத்தகைய தடைகளை ஏற்படுத்தி வரும் அரசாங்கத்துக்கு நாம் ஒத்துழையோம். தேர்தலில் மக்கள் ஆணையை காண்பிக்கும் உரிமையை வழங்கியதன் பின்னரே நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பல்வேறு தனிநபர்களும் குழுக்களும் ஜனாதிபதியின் ஒப்பந்தங்களுக்கிணங்க, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தோட்டத்தை முன்வைத்து வருகின்றனர். இது தனிப்பட்ட அரசியல் வாழ்வை நீட்டிக்கும் முயற்சியே தவிர தேச நலனுக்காக இலக்காக் கொண்ட அபிலாஷை அல்ல என்றும் இதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாடு நேற்று (11) கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் Peter Maynard, ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் Shyam Divan மற்றும் இந்தியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பிரசாந்த குமார் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தினர்.

“அரசியலமைப்பு பேரவையில் இருப்பது ஜனாதிபதியின் கைப்பாவைகள் அல்லர்”

அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாகும் என ஜனாதிபதி பாராளுமன்றத்திலும் வெளியேயும் தைரியமாக தெரிவித்து வருகிறார். இதன் மூலம் அதன் அங்கத்தவர்களை நிறைவேற்றுநரின் கீழ் உள்ளவர்கள் என்று அழைப்பது தவறு. நிறைவேற்று ஜனாதிபதியின் வரம்பற்ற அதிகாரங்களை மட்டுப்படுத்தவே அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்டது. அதில் ஒரு அங்கத்தவராக, ஜனாதிபதியின் கைக்கூலியாகவோ அல்லது கைப்பாவையாகவோ செயற்படமாட்டேன் என்றும், அனைத்து விடயங்களிலும் பாரபட்சமின்றி, சரியான முறையில் நீதி நியாயமாக, தீர்மானங்களை எடுப்பேன் என்றும் தான் பேரவையில் குறிப்பிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

“கீழிருந்து மேலாக அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்திக் கொள்கையை பின்பற்றுவோம்”

சந்தை சமூகத்தில் செயல்படும் மனிதநேய முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, வளங்களின் உருவாக்கம் மற்றும் உருவாக்கப்பட்ட வளங்களின் வருமானம், சமூக நீதி மற்றும் சமத்துவ அடிப்படையில் இரண்டையும் பகிர்ந்தளிப்பதே ஒரு கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையாகும். சமூக ஜனநாயகத்தை மையமாகக் கொண்ட நடுத்தர பாதையே எமது கொள்கை. சமூகத்தில் எழும் பிரச்சினைகளை அடிமட்டத்திலிருந்து மக்கள் கருத்துக்களை உள்ளீர்த்த, பங்கேற்பு கொள்கையை வகுப்பதாகும்.

“ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாப்போம்”

ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், சட்டத்தின் ஆட்சியைப் பேணுதல் மற்றும் நீதியின் அடிப்படையில் நீதித்துறை செயல்முறையை நடைமுறைப்படுத்தி, பாதிக்கப்பட்ட சமூகத்தினரின் கருத்துக்களை கோரி நியாயமான தீர்வுகளை வழங்கும் கட்மமைப்பை செயல்படுத்துவோம். ஜனநாயகத்தின் மூன்று தூண்கள், அவற்றின் அதிகாரப் பகிர்வு மற்றும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைமையினுள் வலுவான ஜனநாயக கட்டமைப்பை நாட்டில் நிறுவுவோம்.சுதந்திர ஊடகங்களும் நான்காவது தூணாகக் கருதப்பட்டு அவை பாதுகாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

“அடிப்படை உரிமைகள் திருத்தப்பட வேண்டும்”

இந்நாட்டின் அரசியலமைப்பின் முக்கிய அங்கமான அடிப்படை உரிமைகள் பற்றி நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். அடிப்படை உரிமைகள் தொடர்பான பகுப்பாய்வு மேலும் விரிவுபடுத்தப்பட்டு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டு, தெளிவான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

“ஊழலை இல்லாதொழிக்கும் ஒரு புதிய முறைமை”

ஊழலை ஒழிக்க நடவடிக்கை எனுக்க வேண்டும். தற்போதைய ஊழல் எதிர்ப்புச் சட்ட உள்ளடக்கம் போதுமானதாக இல்லாததால், அரசியலமைப்பின் மிகவும் உயரிய பகுதியாக, ஓர் எளிய பெரும்பான்மையால் மாற்ற முடியாத ஒரு கட்டமைப்பாக ஊழல் எதிர்ப்பு நிறுவகம் நிறுவப்பட நடவடிக்கை எனுக்கப்படும். எவரும்,எந்த அதிகாரத்தாலும், செல்வாக்கு செலுத்த முடியாத முறைமை உருவாக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

“திருடர்களுடன் எங்களுக்கு டீல் இல்லை”

நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் யார் என்பதை வெளிக்கொணர ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கமும், தேசிய அறிஞர்கள் பேரவையும் நடந்து கொண்டது போல, இந்நாட்டை அழித்த தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, எமது நாட்டிற்கு இழந்த வளங்களும் சொத்துக்களும் மீட்கப்படும். இந்நாட்டை அழித்த திருடர்களுடன் எங்களுக்கு எந்த வகையிலுமான டீல்களும் இல்லை என அவர் தெரிவித்தார்.

“அரசாங்கத்தின் ஜனநாயக விரோத சட்டங்களை திருத்தம் செய்வோம்.”

அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கத்தின் பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஜனநாயகத்தை சீர் குலைக்க கொண்டு வரப்பட்ட அனைத்து சட்டங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இரத்துச் செய்து, உண்மையில், அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து, உண்மைக்கு முன்னுரிமை அளிக்கும், யோசனைகளை முன்வைப்பதற்கு முன்னுரிமை அளித்து, புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும். நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் சிறந்த சட்டங்கள் கொண்டு வரப்படும். சிவில் பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த மாட்டோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எட்கா உடன்படிக்கை தொடர்பில் பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடன் அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லை – சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை குறித்து அரசாங்கம் ஸ்ரீலங்காபொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

மார்ச்மாத இறுதிக்குள் இந்தியாவுடனான உத்தேச பொருளாதாரதொழில்நுட்ப உடன்படிக்கை குறித்த தொழில்நுட்ப பேச்சுக்களை இறுதிசெய்வது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சரத்வீரசேகர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்

இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நாடாளுமன்ற குழுவினருடன் அரசாங்கம் ஆராயவில்லை இது குறித்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் உரிய கலந்தாலோசனைகளை மேற்கொள்ளாமல் இறுதி உடன்படிக்கை குறித்த தீர்மானத்தை எடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எக்டா உடன்பாடு குறித்து ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது நிலைப்பாட்டை தாமதமின்றி வெளிப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சரத்வீரசேகர நாட்டில் காணப்படும் அரசியல் சமூக சூழ்நிலைகளை தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து 2018 இல் இரண்டு நாடுகளும் எக்டா உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன எனவும் தெரிவித்துள்ள அவர் 2016 இல் மோடி அரசாங்கத்திற்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின எனவும் தெரிவித்துள்ளார்.

2022 பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய முன்னொருபோதும் இல்லாத உதவியை இலங்கை பாராட்டுகின்றது எனினும் நெருக்கடியில் ஒரு நாடு சிக்குண்டுள்ள வேளை அதன் மூலம் பலன்பெற முயலக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.