தமிழ் மக்களின் அடிப்படை சுதந்திரம், மனித உரிமைகளை பாதுகாக்குமாறு இந்தியா வலியுறுத்தல்

தமிழர்கள் உட்பட குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை விரைவில் உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

2009ஆம் ஆண்டு முதல் இலங்கையின் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயன்முறைகளுக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது என ஜெனிவாவில் உள்ள ஐ. நா சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிக்கும் அடிப்படைக் கொள்கைகளை இந்தியா ஆதரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தி இலங்கையில் தமிழர்களின் வாழ்வை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இராணுவக் குறைப்புக்கு தீர்மானமில்லை – இராணுவ பேச்சாளர்

வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின் எண்ணிகை இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்குறைப்பு செய்யப்படவில்லை எனவும், கட்டளைத் தளபதிகளின் எணிக்கை குறைக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவான இராணுவத்தினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொதுமக்களின் பெருமளவான காணிகளும் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அவ்வப்போது படையினரின் தேவைக்காகக் காணிகளும் அளவீடு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என அரசியல்வாதிகளும், பொதுமக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், வடக்கு, கிழக்கில் அதிகளவான படையினர் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனச் சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே, வடக்கு, கிழக்கில் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதில்லை என இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ள நிலையில் இராணுவத்தினரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதால் சர்வதேச விசாரணைக்கான சாத்தியம் குறித்து ஆராய்கிறோம் – அமெரிக்கா

உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து தாம் ஆராய்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடருக்கு முன்பதாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்காக ஜெனிவா சென்றிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் முக்கிய உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றார்.

அதன்படி நேற்று முன்தினம் வியாழக்கிழமை வரை வொஷிங்டனில் தங்கியிருந்த அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக், அமெரிக்கத் திறைசேரி அதிகாரிகள், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்தியுள்ளார்.

குறிப்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது, அண்மையில் சனல்-4 செய்திச்சேவையினால் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

அந்த ஆவணப்படத்தின் பின்னணி மற்றும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத்தன்மை, உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டிருப்பதனால் இதனை சர்வதேச குற்றமாகக் கருதி சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

சனல்-4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ள ஹன்ஸீர் அஸாத் மௌலானா, இதுபற்றி ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்கனவே சாட்சியமளித்துள்ள நிலையில் அதனைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதுபற்றிக் கருத்துவெளியிட்ட பெத் வான் ஸ்காக், உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் உண்டு எனவும், இதுகுறித்து தாம் ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

உள்நாட்டு பிணையங்கள் Fitch Ratings-ஆல் தரமிறக்கம்

உள்நாட்டு பிணையங்களின் தரப்படுத்தலை Fitch Ratings சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனம் மேலும் தரமிறக்கியுள்ளது.

இதற்கமைய, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கமைய புதிய வட்டி வீதத்தின் கீழ் விநியோகிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள பிணையங்களின் தரப்படுத்தல் ‘C’ மட்டத்தில் இருந்து ‘D’ மட்டத்திற்கு தரமிறக்கப்பட்டுள்ளது.

குறித்த உள்நாட்டு கடனானது, வரையறுக்கப்பட்ட செலுத்தப்படாத நிலையிலிருந்து – செலுத்தப்படாத நிலைக்கு கீழிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இதுவரை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ் விநியோகிப்பதற்கு முன்மொழியப்படாத உள்நாட்டு பிணையங்களின் தரப்படுத்தல் வரையறுக்கப்பட்ட செலுத்தப்படாத நிலை வரை தரமிறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு 1591 வீடுகள் கையளிக்கப்படவுள்ளன

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகள் நாளை (17) கையளிக்கப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 79.70 கோடி இந்திய ரூபா மதிப்பில் 1591 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வேலூரை அண்மித்துள்ள மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க உள்ளார்.

மேலும், காணொளி வாயிலாக 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்போருக்கான வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வேலூர் மாவட்டத்தில் மாத்திரம் 11 கோடி இந்திய ரூபா மதிப்பில் 220 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூரில் தொடங்கி வைத்தார்.

142.16 கோடி இந்திய ரூபா மதிப்பில் 3,510 வீடுகளைக் கட்டும் நடவடிக்கை இதன்போது ஆரம்பிக்கப்பட்டது.

நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரயில் மூலம் இன்று இரவு வேலூர் செல்வதுடன், நாளை இரவு ரயில் மூலம் சென்னை திரும்பவுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Posted in Uncategorized

ஐ.நா மனிதவுரிமை அறிக்கையில் இனி மலையகமும் இடம்பெறும்

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் இவ்வருட அறிக்கையில் மலையகம் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடே என ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே ஏற்றுக்கொண்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இது எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்படும் எனவும், இலங்கை ஐநா நிகழ்ச்சி வலயத்தில் மலையக தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஐநாவின் இலங்கை பிரதிநிதி உறுதியளித்தார்.

தமுகூ தலைவர் மனோ கணேசன், எம்பி வேலு குமார், கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணீதரன் மற்றும் ஐநா தரப்பில் இலங்கை ஐநா பிரதிநிதி மார்க்-அந்தரே, சமாதான சாளர ஒருங்கிணைப்பாளர் தாரக ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துக்கொண்ட சந்திப்பு தொடர்பில் கூட்டணியின் மனோகணேசன் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Truth and Reconciliation Commission) ஆகியவை இன்னமும் இழுபறியில் இருக்கின்றன.

இரு தரப்பிலும் குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் பிடிவாதமாக மறுக்கின்றமையே இதற்கு பிரதான காரணம் என நான், முன்னாள் சமீபத்து தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ற முறையில் சொன்னதை ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார்.

பதினைந்து இலட்சம் மலையக தமிழர் மத்தியில் சுமார் ஏழரை இலட்சம் பேர் இன்னும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர்.

அவர்களில் ஒன்றரை இலட்சம் பேர் தோட்ட தொழிலாளர்கள். இந்த பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மக்களே இலங்கை சமூக பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியவர்கள் என்ற தரவுகளுடனான ஆவணத்தை எழுத்து மூலமாக ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரேக்கு நாம் வழங்கினோம்.

இலங்கை ஐநா நிகழ்ச்சி வலயத்தில் மலையக தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஐநாவின் இலங்கை பிரதிநிதி உறுதியளித்தார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் பௌத்த பிக்குவால் குழப்பம்; அளவீட்டுப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்கள்

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைக்க அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினர் மக்களது எதிர்ப்பையடுத்து அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கருப்பனிச்சான்குளம் கிராமத்தில் வசித்து வந்த தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக இடப்பெயர்ந்து சென்றதுடன், யுத்தம் முடிவடைந்த பின் மீண்டும் வருகை தந்து தமது காணிகளில் குடியேறி, விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கிராமத்தில் தமது மயானம் இருந்ததாக தெரிவித்து அருகில் உள்ள கொக்குவெளி சிங்கள கிராம மக்கள் இரு பிக்குகளின் தலைமையில் குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய காணி ஒன்றினை உரிமை கோரி வந்ததுடன், தற்போது அதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்து குழப்பம் விளைவித்து வந்தனர்.

இது தொடர்பில் குறித்த காணியினை விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தி வரும் கருப்பனிச்சாங்குளம் கிராமத்தை சேர்ந்த நபர் கருத்து தெரிவிக்கையில்,

இது எனது பரம்பரை வழியான காணி. இங்கு எனது மூதாதையர்கள் முதல் நாங்கள் வரை நீண்ட காலமாக குடியிருந்து வருகின்றோம். பின்னர் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் வருகை தந்து காணியில் விவசாய செய்கையினை முன்னெடுத்து வருகின்றோம். தற்போது எமது காணியில் காய்க்கும் நிலையில் பெரிய தென்னை மரங்களும் நிற்கின்றன.

இந்நிலையில் எனது காணியில் சிங்கள மக்களுக்கான மயானம் இருந்ததாக கூறி, அதனை மீள அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, எனது காணிக்கான அனுமதி பத்திரத்தை கூட பிரதேச செயலகத்தால் வழங்காமல் முடக்கி வைத்துள்ளனர்.

எனது காணியில் முன்பு மயானம் இருந்தமைக்கான எந்த சான்றுகளும் இல்லை. அல்லது சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள் கூட இல்லை. குறித்த சிங்கள கிராமத்திற்கு அண்மையில் மூன்று மயானங்கள் உள்ளது. அவர்கள் அங்கு சடலங்களை புதைக்க முடியும். தற்போது எனது காணியை சுற்றி தமிழ் மக்கள் குடியமர்ந்துள்ளனர். எனவே இங்கு மயானம் அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பது நீதியான செயற்ப்பாடாக தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பகுதிக்கு பிக்கு இருவரின் தலைமையில் வருகை தந்த சிங்கள மக்கள் குறித்த காணியில் தங்களது மூதாதையர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காணியில் மயானம் அமைப்பதற்காக அதனை மீட்டுத்தருமாறும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் பொலிசார் இரு தரப்புடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறித்த காணி 1967 ஆம் ஆண்டில் மயானமாக இருந்ததாக நில அளவைத்திணைக்களத்தின் கள ஆய்வு குறிப்பில் இருப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

எனினும், நில அளவைத் திணைக்களத்தின் 2019 அறிக்கையின் படி அது வன இலாகாவிற்குரிய காணியாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மயானம் இருந்ததாக எந்த பதிவுகளும் இல்லை என தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாருடன் முரண்பட்ட தமிழ் மக்கள், இப்படி ஒரு மயானம் இருப்பதாக பிரதேச சபையின் அறிக்கையில் கூட இல்லை. நாம் இந்த காணியை அளவீடு செய்வதற்கு இடமளிக்கமாட்டோம். மயானம் அமைப்பதற்கு சிங்கள கிராமத்திலேயே பல அரச காணிகள் இருக்கின்றது. அங்கு அதனை அமைக்க முடியும் என தெரிவித்ததுடன், நீண்டகாலமாக குடியிருக்கும் நிலையில் நீதிமன்றம் ஊடாக இதற்கு தீர்வைக் காணுமாறும் தெரிவித்தனர்.

எனினும், குறித்த காணியை நில அளவீடுசெய்து சிங்கள மக்களின் மயானத்திற்காக ஒதுக்குமாறு பௌத்த மதகுரு வருகை தந்த அதிகாரிகளிடம் பலமுறை கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் சென்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்குமாறு பிரதேச செயலாளர் இருதரப்புக்கும் தெரிவித்ததுடன், அதுவரை தற்காலிகமாக அயலில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்குமாறும் சிங்கள மக்களுக்கு தெரிவித்திருந்தார். இதனையடுத்து நிலமை சீராகியது.

குழப்ப நிலையால் அளவீட்டுப் பணிகளுக்காக வருகை தந்த நில அளவைத்திணைக்களத்தின் அலுவலர்கள் காணியை அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனித புதைகுழிகளை மறைப்பதற்காகவே அவ்விடங்களில் விகாரைகள்? ரெலோ தலைவர் செல்வம் எம்.பி சந்தேகம்

மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே பௌத்த விகாரைகளை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொக்குதொடுவாயில் மனித புதைக்குழிகளில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தென்னிலங்கை தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் கிடப்பிலே உள்ளது எனவும் ஒவ்வொரு இடத்திலும் மனித எச்சங்களை கண்டு பிடித்து கிடப்பில் போடும் நிலையே இலங்கையில் காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இந்த விடயத்தில் சர்வதேசம் சரியான கவனத்தை எடுக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வு பணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என முல்லைத் தீவு நீதவான் நீதிபதி தெரிவித்துள்ளார்;.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று 09 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியின் போது முழுமையான 17 உடற்பாகங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த அகழ்வு அகழ்வு நடவடிக்கைகள் கடந்த 06 ஆம்; திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் 9 ஆம் நாள் அகழ்வு பணிகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

குறித்த அகழ்வு பணிகள், தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ். நிரஞ்சன், தடயவியல் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நேற்றைய அகழ்வு பணியின் போது, ஆடையொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குரிய இ-1124 அடையாள இலக்கமும் மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த அகழ்வு பணி இன்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கவனிக்காது உலகம் சுற்றும் வாலிபனாக ரணில் : மக்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கும் – ஜனா எம். பி

உள்நாட்டிலேயே பல இருக்கும்போது இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டிய ஜனாதிபதி தற்போது நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் செல்வது மாத்திரமல்லாமல் எந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஆணைக்குழு அமைப்பதாக காட்டி காலத்தை கடத்துகின்றார் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)  தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

11ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூடியிருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு இலங்கை அனுசரணை கொடுத்து இலங்கையில் நடைபெற்ற அநீதிகளுக்கு பொறுப்பு கூறுவது தொடர்பாக பிரேரணை அங்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தையும், சர்வதேசத்தையும் தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டே வருகின்றது.

அந்த வகையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் பிரதி உயரஸ்தானிகர் ஒரு எழுத்து மூலமாக அறிக்கையை கொடுத்திருக்கின்றார்.

அந்த அறிக்கையில், இலங்கையிலே நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும். அந்த வகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஒரு நியாயமான விசாரணை வேண்டும். இலங்கையில் ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்கின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள், மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும், வடகிழக்கிலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு சர்வதேச அங்கீகரிக்க கூடிய சட்ட திட்டத்தை கொண்டு வரும் வரை இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்பதற்கு மாறாக இந்தியாவின் வதிவிட பிரதிநிதி இலங்கையில் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியவாறு இங்கு ஒரு நிரந்தரமான தீர்வை முன்வைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றார்.

பாராளுமன்றத்தில் எதிர்வரும் 21ஆம் 22 ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பந்தமாக விவாதம் வர இருக்கின்றது. இவ்வாறான பிரச்சனைகள் அனைத்தும் இந்த நாட்டில் இருக்கும்போது அதை விடுத்து பொருளாதார ரீதியான பிரச்சினைகள் இருக்கின்றது, உள்ளூர் கடன் மறுசீரமைப்பு திட்டம் இருக்கின்றது, வெளிநாட்டு கடன் மறு சீரமைப்பு திட்டம் இருக்கின்றது, பல பிரச்சனைகள் இந்த நாட்டிலே இருக்கின்றது. எதிர்க்கட்சிகள் அனைத்துமே உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பந்தமாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகம் சுற்றும் வாலிபனாக ஒவ்வொரு நாடாக ஏறி இறங்கி கொண்டிருக்கின்றார்.

பிரித்தானியா செல்கின்றார்,பிரான்ஸ் செல்கின்றார்,ஜப்பான் செல்கின்றார், சிங்கப்பூர் செல்கின்றார் தற்போது கியூபா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல இருக்கின்றார். உண்மையில் உள்நாட்டிலேயே இத்தனை பிரச்சனைகள் இருக்கும் போது இத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டிய ஜனாதிபதி தற்போது நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் செல்வது மாத்திரமல்லாமல் எந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஆணைக்குழு அமைப்பதுமாக காலத்தை கடத்துகின்றார்.

தற்போதைய உயிர்த்த ஞாயிறு பிரச்சனை தொடர்பாக மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இது விடயமாக விசாரித்து அந்த அறிக்கையை பாராளுமன்றத்திலே சமர்ப்பிப்பதாக இருக்கின்றார். ஆனால் பாராளுமன்றத்திலே இன்று இருக்கும் பொதுஜன பெரமுன கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுமே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி நிற்கும் போது ஜனாதிபதி மாத்திரம் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமான சேனல் 4 வெளியிட்ட வீடியோ சம்பந்தமாக விசாரித்து ஒரு அறிக்கையை தயாரிப்பது என்பது இந்த நாட்டு மக்களை மாத்திரம் அல்ல சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயலாக தன்னுடைய வழமையான பாணியிலேயே ஏமாற்றும் செயலாகவே இவர் செய்து கொண்டிருக்கின்றார்.

தென்னிலங்கையில் இருந்து விமல் வீரவன்ச குழுவினரும் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தமிழ் மக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் குற்றம் சாட்டுவது என்பது உண்மையிலேயே நகைப்புக்குரிய ஒரு விடயம். விமல் வீரவன்சவை பொருத்தமட்டில் அவருடைய உடம்பிலே ஓடும் இரத்தம் இன வெறியுடன் சம்பந்தப்பட்ட இரத்தம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த இன துவேசத்தை இன வெறியை வைத்துக் கொண்டுதான் தன்னுடைய அரசியலை அவர் தக்கவைத்துக் கொள்கின்றார். எதிர்வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் இந்த நிலையில் அந்த தேர்தலில் கூட தானோ அல்லது தான் சார்ந்தவர்களோ வெல்ல வேண்டுமாக இருந்தால் இப்படியான இன துவேச இன வெறி கொண்ட கருத்துக்களை விதைப்பது சர்வசாதாரண விடயம்.

அந்த வகையில் அவர் இந்த கருத்துக்களை சொல்லியிருப்பது மாத்திரமல்ல வடக்கு கிழக்கிலே இருக்கும் சில தமிழ் பிரதிநிதிகள் தமிழ் கட்சிகள் கூட இந்த பிரச்சினையை ஒரு அரசியல் ரீதியாக அணுகப் பார்க்கின்றார்கள். உண்மையில் இந்த விடயத்தை உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் என்பது 250 க்கு மேற்பட்ட உயிர்களை காவு கொண்ட ஒரு சம்பவம் மாத்திரமல்ல நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்ட ஒரு சம்பவம் அது மாத்திரமல்ல இலங்கையின் நிலைப்பாட்டை வெளி உலகத்திற்கு உணர்த்திய சம்பவம்.

ஏனென்றால் கிட்டத்தட்ட 40 வெளிநாட்டவர்கள் உயிர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள். அந்த வகையிலே இந்த சம்பவத்தை அரசியலுடனோ, தமிழ் தேசியத்துடனோ, தமிழ் மக்களுடனோ இணைத்து பார்ப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்.

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம் செய்ததன் காரணமாக இன்று இரண்டு அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இருக்கின்றது. அதில் ஒருவர் பல்கலைக்கழக மாணவன். இந்த நாட்டின் பொருளாதார சூழ்நிலை மாத்திரமல்ல நாட்டில் உள்ள நிர்வாக சீர்கேடு அது மாத்திரமல்லாமல் அமைச்சுகளில் உள்ள ஊழல்கள் சம்பந்தமாக நிர்வாகத்தை ஒழுங்காக கொண்டு நடத்த முடியாமல் இன்று பலரும் பல விடயங்களை முன்வைத்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் என்கின்ற ஒரு பெரிய பிரளயமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இந்த நாட்டில்.

அந்த வகையில் நேற்றைக்கு முதல் நாள் மதியம் இருந்து புகையிரத சாரதிகள் வேலைநிறுத்தத்திலே ஈடுபட்டிருக்கின்றார்கள.; இதன் காரணமாக புகையிரதத்திலே நெருசல் மாத்திரம் அல்ல இருப்பதற்கு இடமில்லாமல் புகையிரதத்துக்கு மேல் இருந்து பயணம் செய்த ஒரு பல்கலைக்கழக மாணவன் தலை துண்டிக்கப்பட்டு இறந்த ஒரு சம்பவம் என்பது இந்த நாட்டின் ஒரு சோகமான நிர்வாக கேட்டுன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாக இருக்கின்றது.

அந்த வகையில் அரச திணைக்கள ஊழியர்கள் அமைச்சையும் அமைச்சின் மேலதிகாரிகளையும் குற்றம் சாட்டுவதுடன் அமைச்சர்கள் ஊழியர்களை குற்றம் சாட்டும் ஒரு நிலை மாறி மாறி குற்றச்சாட்டு அளவுக்கு நிலை இருக்கின்றது. எப்படி இருந்தாலும் இந்த மரணத்திற்கு போக்குவரத்து அமைச்சு முழு பொறுப்பையும் எடுத்து உரிய விசாரணையை முன்னெடுத்து இந்த உயிர் இழப்பிற்கு ஒரு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று மிகவும் ஆக்ரோசத்துடன் இந்த அமைச்சை கேட்டுக் கொள்கின்றேன்.

அரசாங்கம் குற்றம் சாட்டுவது அரசாங்கத்தை மாற்றுவதற்காக எதிரணிகள் எதிர்க்கட்சிகள் பின்புலத்தில் இருந்து இயக்கிக் கொண்டு இங்கே போராட்டங்கள் நடைபெறுவதாக அரசாங்கம் குற்றச்சாட்டுகின்றது இதே போன்று தான் 2021 ஆம் ஆண்டுக்கு பின்பு இந்த பொருளாதார நெருக்கடி வந்ததன் பின்பு அரகல என்னும் போராட்டமும் நடைபெற்று இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

ஆனால் பொதுமக்கள் தாங்கள் பாதிக்கப்படும் போது போராட்டங்களை செய்ய எத்தனிக்கும்போது அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் தலைமையில் இதனை திணிப்பது என்பது ஒரு புதிய விடயம் அல்ல.

அந்த வகையில் மக்கள் போராட்டத்தை அரசாங்கம் கடந்த வருடம் அரகலயின் மூலமாக அறிந்திருக்கின்றது தொடர்ச்சியாக இந்த அடக்குமுறை நீடித்தால் இது ஒரு பெரியதொரு போராட்டமாக வெடிக்கும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை எனவும் தெரிவித்தார்.