இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்தது தையிட்டியில் விகாரைக்கும் நடக்கும் – சிவசேனை அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்தது தையிட்டி விகாரைக்கும் நடக்கும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்ட விரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாழ்ப் பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மறவன்புலவு சச்சிதானந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு-கிழக்கிலுள்ள சைவப் பகுதிகளில் பிற மதத்தவர் அடாத்தாக கட்டுகின்ற மத தலங்கள் அனைத்தும் பாபர் மசூதிகளே என்றும் மைத்திரிபால சிறிசேனாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் எடுத்துரைத்தார்.

இலங்கையிலுள்ள இந்துக்களுக்கு இந்தியாவிலுள்ள 120 கோடி இந்துக்கள் ஆதரவாக உள்ளதாகவும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் மீது பிற மதத்தவர்கள் கை வைக்கும்போது காஷ்மீரில் இருந்து கதிர்காமம் வரைக் கும் உள்ள ஒவ்வொரு சைவர்களும் கண்ணீர் வடிப்பதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடக்கு-கிழக்கில் பாபர் மசூதிகளை உருவாக்க வேண்டாம் என்றும் பௌத்த சமயத்துக்கு கொடுக்கும் முன்னுரிமையை விடவும் சைவ சமயத்துக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் மறவன்புலவு சச்சிதானந்தன் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மைத்திரிபால சிறிசேன, உண்மையில் சைவர் என்றும் உலகதிற்காக பௌத்தராக வாழ்வதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறினார்.

பிரான்சில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் பலி – வன்முறைக் காடாக மாறிய நகரங்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகன தணிக்கையின்போது காரை நிறுத்தாமல் சென்ற , நஹெல் என்ற 17 வயதே ஆன ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாரிஸ் நகரின் நான்டெர் புறநகர்ப் பகுதியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். புதன்கிழமை இரவு சோதனை நடைபெற்றபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காரை காவல்துறையினர் நிறுத்த உத்தரவிட்டும் அது நிறுத்தப்படாததால் காவல்துறையினர் அதனை விரட்டி சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் காரில் இருந்த ஆப்பிரிக்க சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அச்சிறுவன் உயிரிழந்தார்.

இது பாரிஸ் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. பாரிஸ் இன ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட பகுதியாக அறியப்படுகிறது. இங்கே பல்வேறு இனத்தவர், கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் கருப்பின இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.அத்தோடு வன்முறையும் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள அதிபர் இமானுவேல் மேக்ரான், “இது மன்னிக்கமுடியாத குற்றம். சட்டம் தனது கடமையைச் செய்யத் தொடங்கிவிட்டதால் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்க்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதையடுத்து, உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடார்பான யோசனை நாடாளுமன்ற நிதிக்குழுவில் சமர்பிக்கப்பட்டு, எதிர்வரும் சனிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அத்தோடு வார இறுதி விடுமுறை நாளில் நடத்தப்படவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான அரசாங்கத்தின் முன்மொழிவுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிராக வாக்களிக்க உள்ளதென பாராளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்களால் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் கையளிப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மூவரும்  தூதுவர்களும்  ஏழு பேரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தங்களது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (30) இந்த நிகழ்வு இடம்பெற்றது.

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் திரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு, உகண்டா குடியரசு மற்றும் சீஷெல்ஸ் குடியரசு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இதேவேளை, பனாமா குடியரசு, பெல்ஜியம், ஹெலனிக் குடியரசு, சிரிய அரபுக் குடியரசு, பெரு குடியரசு, கொரியா குடியரசு மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கான  தூதுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களின் பெயர் விவரம் வருமாறு:

1 . கலாநிதி . ரொஜர் கோபால் – Dr. Roger Gopaul . திரினிடாட் டொபாகோ  குடியரசின் உயர் ஸ்தானிகர் – (புது டில்லி)

2 . பேராசிரியர் (செல்வி) ஜாய்ஸ் கே. கிகாபண்டா –  Prof. (Ms.) Joyce K. Kikafunda . உகண்டா குடியசின் உயர்ஸ்தானிகர்  – (புது டில்லி)

3 . திருமதி லாலாட்டியானா அக்கோச் – Mrs. Lalatiana Accouche. சீஷெல்ஸ் குடியரசு உயர்ஸ்தானிகர்  – (புது டில்லி)

4 . திரு. எலிஜியோ எல்பர்டோ சலாஸ் டி லியோன் –  Mr. Eligio Alberto Salas De Leon

     பனாமா குடியரசின் தூதுவர் –  (ஹா நோய் – Ha Noi)

5. திரு. டிடியர் வாண்டர்ஹாசெல்ட்  –  Mr. Didier Vanderhasselt

    பெல்ஜியம் இராச்சியத்தின் தூதுவர்  (புது டில்லி)

6 . திரு. டிமிட்ரியோஸ் ஐயோனோவ் – Mr. Dimitrios Ioannou

    ஹெலனிக் குடியரசின் தூதுவர் –  (புது டில்லி)

7 . கலாநிதி பஸ்ஸாம் அல்-காதிப் – Dr. Bassam Al-Khatib

     சிரிய அரபுக் குடியரசு  தூதுவர் – (புது டில்லி) 

8 . திரு. ஜேவியர் மானுவல் பாலினிச் வெலார்டே – Mr. Javier Manuel Paulinich Velarde

    பெரு குடியரசு தூதுவர்  – (புது டில்லி)

9 . திருமதி லீ மியோன் – Ms. Lee Miyon

    கொரியா குடியரசு தூதுவர் –  கொழும்பு

10 . திரு. இஸ்டிவான் ஷப்போ – Mr. István Szabó

     ஹங்கேரி தூதுவர்  – (புது டில்லி)

இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் கலந்துகொண்டிருந்தார்.

Posted in Uncategorized

எஞ்சியிருந்த ஒரேயொரு குழந்தை கதிரியக்கசிகிச்சை நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறினார்

இலங்கையின் குழந்தைகளிற்கான மிக முக்கியமான விசேடவைத்தியர் ஒருவரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இலங்கையின் ஒரேயொரு குழந்தைகளிற்கான கதிரியக்கசிகிச்சை நிபுணரே நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

விசேடவைத்தியர் சங்கத்தின் வைத்தியர் அசோக் குணரட்ண இதனை தெரிவித்துள்ளார்.

2024 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் 4000 விசேடவைத்திய நிபுணர்கள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது ஆனால் தற்போது 2000 பேரே உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

விசேட வைத்தியர்களிற்கான ஓய்வூதிய வயது குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு காரணமாக எஞ்சியுள்ள 50 வீதமான வைத்தியர்களில் 250 பேரைஇழக்கவேண்டிவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக நாட்டில் 1750 விசேடவைத்தியர்களே காணப்படும் நிலைமை உருவாகும் என தெரிவித்துள்ள அவர் அவசரமருத்துவ பிரிவை சேர்ந்த 30 வைத்தியர்களிற்கு விசேட வைத்தியர்கள் பயிற்சியை வழங்கினோம் ஆனால் அவர்களில் 20 பேர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024-25 இல் நாட்டிற்கு 289 மயக்கமருந்து நிபுணர்கள் அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது ஆனால் இந்த வருடம் 155 பேரேஎஞ்சியிருப்பார்கள் 30 பேர் வெளிநாடுகளிற்கு சென்றுவிட்டனர் 60 வயதானவர்கள் ஓய்வு பெற்றால் 20 பேர் மாத்திரமே எஞ்சுவார்கள் என வைத்தியர் குணரட்ண தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் நாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் 100 விசேட வைத்தியர்களும் மயக்கமருந்து நிபுணர்களும் எஞ்சியிருப்பார்கள் என சொல்வது துரதிஸ்டவசமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரேயொரு குழந்தைகள் தொடர்பான கதிரியக்க நிபுணராக இருந்தார். அவரும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என வைத்தியர் குணரட்ண தெரிவித்துள்ளார்.

13ஐ முழுமையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் – கடற்தொழில் அமைச்சர்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் அரசியல் யாப்பில் உள்ளன. 13ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் ஊடாக அதனை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ள போதிலும் , தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரா பிரச்சினைகளாவே காணப்பட வேண்டும் என்று எண்ணும் சில தமிழ் தலைவர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தினால் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது , ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ,

கேள்வி : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸ் விஜயத்தின் போது அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அதிகார பரவலாக்கம் குறித்த கோரிக்கைகளை சாதகமான முறையில் அணுகுவதாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு?

பதில் : ஒரு கால கட்டத்தில் இலங்கையில் பிரச்சினைகள் காணப்பட்டன. அந்த பிரச்சிகளுக்கு தீர்வு கோரி ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ் மக்கள் , அதன் ஊடாக தீர்வினைப் பெற முடியாது என ஆயுதப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதற்கமையவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவானது.

எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த ஒப்பந்தத்தின் ஊடாக வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் துரதிஷ்டவசமாக அன்றிருந்த பெரும்பாலான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஒரு முழுமையான யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அரசியல் யாப்பில் காணப்படுகிறது. 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும். எனினும் இதற்காக ஜனாதிபதி மாத்திரம் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் போதாது. தமிழ் மக்கள் தரப்பில் அவர்களின் பிரதிநிதிகள் உண்மையுடன் முன்வர வேண்டும்.

கேள்வி : 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் பொலிஸ் , காணி அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. எனினும் மத்திய அரசாங்கம் அவற்றை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகத் தோன்றவில்லையே?

பதில் : இருப்பதிலிருந்தே முதலில் ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே முன்னோக்கிச் செல்ல முடியும். தேசிய நல்லிணக்கத்துக்கு ஊடாகவும் , பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாகவுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். எனினும் சில தமிழ் தலைவர்கள் அதற்கு முரணான நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றதன் பின்னர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கேள்வி : இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை வடக்கு மக்கள் சாதகமான கோணத்தில் பார்க்கின்றனரா? இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் முரண்பாடான கருத்துக்களையல்லவா முன்வைத்துக் கொண்டிருக்கின்றன?

பதில் : எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும். அந்த வகையில் சகல பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் நிச்சயம் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகின்றேன். இதற்கான சிறந்த அறிகுறிகளாக காணிப்பிரச்சினை , அரசியல் கைதிகள் எனக் கூறப்படுகின்றவர்களின் விடுதலை உள்ளிட்ட பல நடவடிக்கைகள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாகவே வைத்திருக்க வேண்டும் என எண்ணும் அரசியல்வாதிகளே குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கேள்வி : வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வாகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. எனினும் தற்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் எந்த அடிப்படையில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் : இந்த பிரச்சினைக்கு 1987 இல் தீர்வு வழங்கப்பட்டது. எனினும் அன்றிருந்தவர்கள் அதனை நிராகரித்ததோடு , மறுபுறம் அதனை முறைகேடாக பயன்படுத்திக் கொண்டனர். நாடு; எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் அதே வேளை , இந்த விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதிருப்தி

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதில் இலங்கையில் பொலிஸ் மா அதிபரின் வகிபாகம் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணுதல், பொது மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல் போன்ற பொறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடைய மிகவும் முக்கியமான பங்கு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தவகையில் தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஜூன் 26, 2023 அன்று முடிவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில், மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிதுந்த ஜயவர்தன மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் உள்ளனர் எனப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பணிப்பாளராக கடமையாற்றிய போதே ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இத்தாக்குதலில் கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மையான அப்பாவி மக்கள் உயிர்களையும் அவயவங்களையும் இழந்தனர்.

எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டுமென ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு கோப் குழு அனுமதி

அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை பரிசீலிப்பதற்காக கோப் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் இரண்டு நாட்கள் கூடியது.

நீண்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து மேலதிக தகவல்களைப் பெற்ற பின்னர், கோப் குழு இன்று இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த திட்டம் குறித்து விவாதம் செய்வதற்காக நாடாளுமன்றம் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை கூடவுள்ளது. இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இரவு 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அநுராதபுரத்தில் இருந்து தேரர்கள் புனிதப் பொருட்களுடன் வவுனியாவுக்கு பாதயாத்திரை

ருவென்வெலிசாய விகாரையில் இருந்து வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த  தேரர்கள்  பாதயாத்திரை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாதயாத்திரையானது இன்று (30) காலை வவுனியா கண்டி வீதியில் உள்ள விகாரையை வந்தடைந்தது.

அங்கிருந்து வவுனியாவில் தமிழர் பகுதியைக் கையகப்படுத்தி குடியேற்றம் செய்யப்பட்ட காலபோகஸ்வேவ பகுதியில் உள்ள சபுமல்கஸ்கட விகாரையை சென்றடையவுள்ளது.

குறித்த பாத யாத்திரையில் 50 இற்கு மேற்பட்ட பௌத்த தேரர்கள்,  மறைந்த பௌத்த தேரர்களின் கேசம், பற்சின்னம் உள்ளிட்ட புனிதப் பொருட்களுடன் சென்று அதனை அங்கு பார்வைக்கு வைப்பதுடன், எதிர்வரும் போயா தினத்தன்று விசேட பூஜை நிகழ்வையும் நடத்தவுள்ளனர்.

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது.

2383 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் உறவுகள் ஒவ்வொரு மாதமும் 30ம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும், சர்வதேசத்திடம் நீதி கோரிய பதாதைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர்.