உயிர்த்தஞாயிறுதாக்குதல்களை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் – சந்திரிகா

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்

அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என கருதப்படக்கூடியவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்த டுவிட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதிலில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இது முஸ்லீம்களிற்கு எதிரானநடவடிக்கை இந்த நடவடிக்கை 2013 இல் அவர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்றது அது மீண்டும் நிகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்,என அவர் தெரிவித்துள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம், வைத்தியர் ஷாபி விவகாரம் போன்ற பல விடயங்கள் முஸ்லீம்களை ஆபத்தானவர்களாக சித்தரிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டன எனவும் முன்னாள் ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

கனடாவில் அமைக்கப்படும் இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு இலங்கை தூதரகம் கடும் எதிர்ப்பு

கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்கும் முயற்சிகளிற்கு கனடாவிற்கான இலங்கை தூதரகம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறுவதற்காக கனடாவில் உள்ள இலங்கை தமிழ் சமூகத்தினர் நினைவுத்தூபியை அமைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கே இலங்கை தூதரகம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் எதிர்ப்பையும் மீறி பிரம்படன் மேயர் பட்ரிக் பிரவுன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவதற்கான தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

இன்னுமொரு மாநகரசபையிடம் இதேபோன்ற ஒரு நினைவுத்தூபியை அமைப்பதற்காக விடுக்கப்பட்ட வேண்டுகோளை மேயர் நிராகரித்துவிட்டார் என இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக தீவிரவாதிகள்வேறு பெயர்களில் செயற்படுகின்றனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க அழைத்தால் ஏற்பேன் – சரத் பொன்சேகா

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தனக்கு அழைப்பு விடுத்தால் அதை ஏற்கத் தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு எனக்கு இதுவரை யாரும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், என்னைச் சந்திப்பவர்கள் எல்லாம் சொல்வது இப்போதைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்றால் உங்களைப் போன்ற ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று.

நான் இப்போது அரசியல் செய்வது ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு அதற்குள் இருந்து அழைப்பு வந்தால் ஏற்றுக்கொள்வேன்.

இந்த நாடு பொருளாதார ரீதியில் சீரழிவதற்குக் காரணம் ஊழல், மோசடிகள்தானே தவிர பொருளாதார நிபுணர்கள் அல்லர்.

ஊழல் மிக்க அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவு பெற்ற ஊழல்மிக்க வர்த்தகர்களுமே இந்த நாட்டைச் சீரழித்தனர்.

இவர்களிடமிருந்து நாம் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கினார் என்பதற்காக இந்த நாடு முன்னேறிவிடாது” – என்றார்.

22 தமிழ் அரசியல் கைதிகளே தற்போது சிறைகளில் உள்ளனர் – நீதி இராஜாங்க அமைச்சர்

யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் எனவும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் ஆண் கைதிகள்,பெண் கைதிகள், நீதிமன்றத்தினால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ள கைதிகள்,சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், மரண தண்டனை கைதிகள், சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகள்,ஆயுள் தண்டனை கைதிகள்,சிறு வயது கைதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,290 ஆக காணப்பட வேண்டும். ஆனால் பௌதீக வள பற்றாக்குறையினால் 25,899 சிறைக்கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மேலதிகமாக 14,609 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 45 ஆண்களும், 01 பெண் என்ற அடிப்படையில் 46 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பேரின் எண்ணிக்கை 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 பேருக்கு எதிரான விசாரணைகள் நிறைவு பெறாத காரணத்தினால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த 22 பேர் தொடர்பில் நீதியமைச்சு சட்டமாதிபர் திணைக்களத்துடன் ஒன்றிணைந்து விசேட நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்

சுங்கப் பிரிவால் கைது செய்யப்பட்ட அலி சப்றி அபராதத்துடன் விடுதலை

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொருட்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்கத்தின் பெறுமதி 74 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர் 91 கையடக்க தொலைபேசிகளையும் கொண்டு வந்துள்ளதாகவும், அந்த தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா எனவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கைக்கு கொண்டு வந்த சட்டவிரோத பொருட்களின் மொத்த பெறுமதி 78.2 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து ஃப்ளை டுபாய் விமானத்தில் நேற்று (23) காலை இலங்கை வந்த போது, ​​குறித்த எம்.பி., இலங்கை சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை விமானம் தாமதமானதால் 48 இளைஞர்களின் கொரிய தொழில் வாய்ப்பு இழப்பு

கொரிய மொழி பரீட்சையில் தேர்ச்சிப் பெற்று கொரியாவிற்கு தொழில்வாய்ப்பிற்காக செல்லவிருந்த நிலையில் விமானம் தாமதமானதால் 48 இளைஞர்கள் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளனர்.

குறித்த 48 இளைஞர்களும் நேற்றிரவு கொரியாவிற்கு தொழிலுக்கு செல்வதற்காக விமானநிலையததிற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் இரவு 08 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் தாமதமடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று அதிகாலை 06 மணிக்கே விமானம் பயணிக்கவுள்ளதாகவும் 10 மணித்தியாலம் தாமதமடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 மணித்தியாலங்கள் தாமதமடைந்தமையினால் தெரிவு செய்யப்பட்ட பணியாளர்களை தொழில்வாய்ப்பிலிருந்து நிராகரிப்பதாக கொரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு வேளைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்யும் பிரேரணை இன்று விவாதிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் இன்று காலை முதல் இடம்பெற்ற நிலையில், மாலை 5 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் – கர்தினால் மல்கம் ரஞ்சித் கலந்துரையாடல்

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (22)  இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருக்கும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரும் இலங்கையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்துடனான சந்திப்பு குறித்து பெருமிதமடைவதாக தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி, இந்த மிலேச்சத்தனமான தாக்குதலின் முழுமையான பின்னணி குறித்து சுயாதீனமானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் தாம் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் விசாரணைக்காக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத்திரட்டி வழங்குமாறு மக்களிடம் பிரித்தானியத் தமிழர் பேரவை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது தமிழர்களுக்குக் கிட்டிய அரிய வாய்ப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை, எனவே இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ்மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து மீறல்கள் தொடர்பான சாட்சியங்களைத் திரட்டி அப்பொறிமுறையிடம் கையளிக்கவேண்டிய பொறுப்பு தமிழ்மக்களுக்கு இருக்கின்றது என்று வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவை மேலும் கூறியிருப்பதாவது,

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ்மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இனவழிப்பானது தற்போதுவரை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்த இனப்படுகொலைகளின் உச்சகட்டமாகக் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் ஒரு இலட்சத்து நாற்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப்பட்டபோது உலகநாடுகளும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச கட்டமைப்புக்களும் மௌனமாக வேடிக்கை பார்த்ததை தமிழ்மக்கள் எப்போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்மக்களுக்கு தாயகம், தேசியம் மற்றும் தன்னாட்சி என்ற அடிப்படையில் நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதையும், இனப்படுகொலை உள்ளிட்ட கடந்தகால மீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் விசாரணைப்பொறிமுறையின் ஊடாக நீதியை நிலைநாட்டுவதையும் முன்னிறுத்திய பல்வேறு நடவடிக்கைகளை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றோம்.

அதன்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இறுதியாக நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் பிரகாரம் கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத்திரட்டி, அவற்றை வழக்குத்தொடர்வதற்கு ஏதுவான கோப்புகளாகத் தயார்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே இவ்வாறு கிடைத்த வாய்ப்பைக் கைவிடாமல், தேவையான அனைத்து சாட்சியங்களையும் சேகரித்து இப்பணிக்குழுவிடம் வழங்குவதை மிகமுக்கிய கடமையாகக் கருதுகின்றோம். அதற்குரிய நடவடிக்கைகளை நாமனைவரும் இணைந்து முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும் என்று பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

அபிவிருத்திக்குழு கூட்டங்களில் மக்கள் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை- செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

அபிவிருத்திக்குழு கூட்டங்களில் மக்கள் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை. அதிகாரிகளும் சமூகமளிப்பதில்லை இது தொடர்பில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் கவனமெடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மின்சார கட்டண விடயத்தில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் நியாயமாக நடந்துள்ளதுடன் அவரது கடைமையை சரியாக செய்துள்ளார். அரசாங்கம் மின்சார கட்டணத்தை அதிகரித்ததுடன், அது தொடர்பாக சரியான வழிமுறைகளை கையாளாத சூழ்நிலையில் அவர் தனது எதிர்ப்பை தெரிவித்தார். அந்த வகையில் அவரின் எதிர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவது தொடர்பான மசோதா வருகின்ற போது தமிழ் தேசிய கூட்டமைப்பும். ஏனைய தமிழ் கட்சிகளும் இணைந்து இந்த விடயம் தொடர்பாக ஒரு முடிவெடுப்போம்.

விலைவாசி அதிகரிப்பின் போது அவர் மக்கள் சார்பாக நின்றவர். எனவே பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவருக்கு ஆதரவழிக்கும் சூழல் உருவாகும். எனவே நாம் கூடி இறுதி முடிவெடுத்து அவருக்கு ஆதரவாக செயற்படுவதே சாலச்சிறந்தது.

அத்துடன் வவுனியா பிரதேச அபிவிருத்திக்கூட்டங்களில் நாம் கலந்துகொள்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் பிரதேசஅபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறும் நேரங்களில் கொழும்பில் முக்கிய சந்திப்புக்கள், இடம்பெறும் போது அதில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்படுகின்றது.

எம்மிடம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதுடன் வினோநோகராதலிங்கம் பெரும்பாலான கூட்டங்களில் தனது பங்களிப்பை செய்துள்ளார். அத்துடன் முழுமையாக நாங்கள் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை தவிர்ப்பதில்லை. இனிவரும் கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்வோம்.

அத்துடன் அபிவிருத்தி குழு என்ற போர்வையில் ஒரு விடயம் முடிவாக எடுக்கப்படாமல், காலம் தாழ்த்தப்படுகின்றது.முதலில் தீர்மானமாக எடுப்போம், பின்னர் ஜனாதிபதிக்கு கொடுப்போம் என்றவாறே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது.

மாறாக மக்கள்நலன் சார்ந்த விடயங்களிற்கு உடனடியாக முடிவெடுக்கப்படுவதில்லை. அத்துடன் இக்கூட்டங்களிற்கு திணைக்கள அதிகாரிகள் கூட கலந்து கொள்வதில்லை.

எனவே கூட்டங்களின் போது முடிவெடிக்க வேண்டிய விடயங்களிற்கு அன்றையதினமே முடிவெடுத்தாக வேண்டும். அதற்காக நாங்கள் நிச்சயமாக குரல் கொடுப்போம். வெறும் கூட்டமாக இல்லாமல், அதிகாரிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அபிவிருத்திக்குழு தலைவர் ஏற்படுத்த வேண்டும்.

அதிகாரிகள் வராவிடில் அவ்விடயம் முடிவு எட்டமுடியாத நிலை ஏற்படும். எனவே அபிவிருத்திக்குழு தலைவர் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். என்றார்.