புலனாய்வு தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ள இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்: கம்மன்பில

இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் ‘புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்’ ஒன்றை ஸ்தாபிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் கூட்டணி காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை வந்த அமெரிக்காவின் சி.ஐ.ஏ.பிரதானி வில்லியம் பேர்ன் உள்ளிட்ட 22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக அவர் கூறினார்.

அதில், இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் ‘புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம் ‘ஒன்றை ஸ்தாபித்தல், இரண்டாவது விஞ்ஞான பூர்வ குடியகழ்வு கட்டுப்பாட்டு முறைமையை இலங்கை விமான நிலையங்களில் ஸ்தாபித்தல், மூன்றாவது இலங்கையுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு தொலைபேசி வலையமைப்பு தொடர்பான தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளல் மற்றும் சோபா ஒப்பந்தத்தை விரைவாக கைச்சாத்திடல் உள்ளிட்ட நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக கம்மன்பில தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட இந்த நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரச தலைவர்களுக்கு வழங்காத உயர்பட்ச பாதுகாப்புடன் கடந்த மாதம் 14ஆம் திகதி, அமெரிக்காவின் 22 முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை மேலும் ஒரு வருடம் ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சி – பவ்ரல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பல மாதங்கள் அல்லது ஒரு வருடமேனும் பிற்போடப்படும் நிலையே இருப்பதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் முறையை மாற்றுவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை திகதியின்றி ஒத்திவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் மீண்டும் வேட்புமனு கோருவதற்கே அதிக வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் மோசமான முறையில் தலையீடு செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்துக்கு தோல்வி ஏற்படும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கவேண்டியதில்லை என குறிப்பிட்ட அவர், தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், அதனால் அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இதன் மூலம் ஏற்படப்போவதில்லை என தெளிவுப்படுத்தினார்.

வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடம் இலங்கை – ஃபோர்ப்ஸ்

ஆபிரிக்காவிற்கு வெளியில் வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கை உள்ளதாக பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை தனது தனித்துவமான சுற்றுலா சலுகைகள் மற்றும் இயற்கை அழகு காரணமாக தொடர்ந்து பலரதும் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது.

உலக நாடுகளில் சிறுத்தைகளின் அடர்த்தியான பரம்பலைக் கொண்ட இடமாகவும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை விடவும் மிகச்சிறந்த பூனை இனங்களைக் கொண்ட இடமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆசிய யானைகள், மயில்கள், நீர் எருமைகள், குரங்குகள் மற்றும் தேன் உண்ணி கரடிகளை அதிகம் கொண்ட தேசமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேனப் கோடில் இருந்து டொமினிக்கன் குடியரசு வரை திமிங்கலங்களை பார்க்கக்கூடியதாக இருந்தாலும், இலங்கையில் மாத்திரமே எளிதில் நீலத் திமிங்கலங்களை காண முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

13ஐ எதிர்க்கும் தேரர்களின் பின்னால் அந்நிய சக்திகள்! – அர்ஜூன் சம்பத்

அரசியலமைப்பின் 13ஆவது சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது, அதனை எரிப்போம் என்று கூறும் பௌத்த துறவிகளின் பின்னால் ஏதோ ஒரு அந்நிய சக்தி இருக்கலாம் என இந்தியாவின் இந்து மக்கள் கட்சியின் நிறுவுனரும் அதன் தலைவருமான அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை இந்திய திருநாடு இலங்கையிடம் முன்வைத்திருக்கின்றது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பாரத பிரதமர் நரேந்திர மோடி இவர்களெல்லாம் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வருகின்றார்கள்.

ஆனால், உடனடியாக இலங்கையில் அதற்கொரு நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இங்கு இருக்கக் கூடிய பௌத்த துறவிகள் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என தெரிவித்து இங்கிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஓர் அழுத்தத்தை பிறப்பிக்கின்றார்கள்.

சொல்லப்போனால் ஒட்டுமொத்த பௌத்த மக்களினுடைய பிரதிநிதிகள் அவர்கள் மட்டுமே அல்லர். அதாவது 13ஆவது சீர்த்திருத்தத்தை எரிக்கின்றேன் என்று சொல்பவர்கள் மட்டும் அல்லர். அவர்கள் வேறு ஏதோ அந்நிய சக்திகளால் தூண்டி விடப்பட்டு இதனை செய்கின்றார்கள். இதற்குள் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கின்றது. உண்மையாக 13ஆவது திருத்தம் என்பது பௌத்தர்களுக்கு எதிரானதா என்று கேட்டால் கிடையாது. சிங்கள மக்களுக்கும் எதிரானது கிடையாது. இது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே ஒரு தீர்வு.

13ஆவது திருத்தம் வலியுறுத்தப்படுவது இன்று நேற்று அல்ல. ஜெயவர்த்தன அவர்கள் ராஜிவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் இரண்டு நாட்டினுடைய பிரதிநிதிகள் கையெழுத்திட் டுள்ளனர்.

எனவே இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது இலங்கையினுடைய பொறுப்பாகும், சில மத சார்பானவர்கள் ஏதோ சொல்கின்றார்கள் என்பதற்காக அதனை நடைமுறைப்படுத்தாமல் தவிர்க்க முடியாது- என்றார்.

கோத்தபாய கொலை முயற்சி வழக்கு: தமிழ் அரசியல் கைதியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு

அரசியல் கைதியான சிவலிங்கம் ஆருரனை பொலிசார் சித்திரவதை செய்து கடும் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்பதனை சாட்சியங்கள் மூலம் நீதிமன்றிற்கு நிருபிக்கப்பட்டுள்ளது என எதிரி தரப்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து அரச தரப்பின் முக்கிய சான்றான முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை 14 வருட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்றைய தினம் நிராகரித்தார்.

2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு கொள்ளுபிட்டி பித்தலை சந்தியில் பாதுகாப்பு செயளாளரான கோத்தபாய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரியால் நடாத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன் பாதுகாப்பு செயளாளரான கோத்தபாய ராஜபக்ஸ, இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியதுடன் அரச சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் 2013ம் ஆண்டு மார்கழி மாதம் நான்காம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இரண்டாம் எதிரியான பொறியியலாளர் சிவலிங்கம் ஆருரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மை விளம்பல் விசாரணை நிறைவடைந்ததையடுத்து தனது சமர்பணத்தில் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசார் இரண்டாம் எதிரியான சிவலிங்கம் ஆருரனை தடுத்து வைத்து விசாரணை செய்த காலத்தில்; கைதியை தாக்கவோ சித்திரவதை செய்யவில்லையெனவும் தனது வாதத்தை முன்வைத்ததுடன் கோத்தபாய கொலை முயற்சி தாக்குதலின் எதிரி சதியில் ஈடுபட்டதையும் கொலை முயற்சிக்கு உதவி ஒத்தாசை வழங்கியதையும்; சொந்த விருப்பத்தில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமாக தமிழ் மொழியில் எழுதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு வழங்கியுள்ளார் எனவே எதிரியால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை அரச தரப்பில் எதிரிக்கு எதிரான சான்றாக நெறிப்படுத்துவதற்கு நீதிமன்றம் கட்டளையிடவேண்டும் என வாதத்தை முன் வைத்தார்.

அரச தரப்பு வாதத்தையடுத்து எதிரியின் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது வாதத்தில்- பயங்கரவாத புலனாய்வு பிரிவுப் பொலிசார் 2009ம் ஆண்டு பொறியியலாளரான சிவலிங்கம் ஆருரனை கைது செய்து தனிமையில் தடுத்து வைத்து சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

அரச சாட்சியான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சில்வாவின் சாட்சியத்தினை குறுக்கு விசாரனை செய்கையில் சாட்சியத்தில் பல முரண்பாடுகள் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அரசியல் கைதியான சிவலிங்கம் ஆருரனின் உடலில் காணப்பட்ட காயங்கள் பொலிசாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் என சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியத்தினை குறுக்கு விசாரனை செய்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அரச தரப்பால் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்பதல் வாக்கு மூலத்தை நிராகரிக்கும்படி முன்வைத்த வாதத்தையடுத்து அரச தரப்பினதும் எதிரி தரப்பினதும் வாத பிரதி வாதங்களை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை நிராகரிப்பதாக கட்டளை வழங்கியதையடுத்து எதிரி தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இந்த அரசியல் கைதி 15 வருடங்களாக சிறையில தடுத்து வைக்கப்பட்டிருப்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்து இந்த கைதிக்கு எதிராக மேலும் வழக்கை தொடர்ந்தும் நடாத்த வேறு சுயாதீன சாட்சியங்கள் உள்ளனவா இல்லையா என்பதனை சட்டமா அதிபருக்கு நீதிமன்றுக்கு அறிவிக்க மிகக் குறுகிய கால தவணை கொடுக்கும்படி வேண்டிக்கொண்டதை அடுத்து வழக்கு 03.04.2023 ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரியவும் எதிரி சார்பாக சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் அணுசரனையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவும் ஆஜராகினார்.

இலங்கைக்கு கடன் வழங்குவதில் அனைத்து தரப்பிடமும் சாதக நிலைப்பாடு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் (02) இரவு, Zoom தொழிநுட்பத்தின் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பில், அனைத்து தரப்பினரினாலும் சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் சீனப் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாதிபதியுடன் இந்தக் கலந்துரையாடலை நடாத்தியுள்ளமை ஒரு மிக விசேடமான நிலைமையாகும்.

அதேபோன்று, கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பதற்காக, பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக உள்ளதாக சீனப் பிரதமர் லீ க சியாங் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளதாக அண்மையில், “ப்ளூம்பேர்க்” செய்திச் சேவை, செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கை, பாகிஸ்தான் போன்று, கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்வதாக அதன் போது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் வெளியாகும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று (03) இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி இன்று தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய திகதி தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து வைத்திருப்பதனை ரத்து செய்து திறைசேரி செயலாளருக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நாடு பிளவுபடுவது ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தல்

நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை விமானப்படை தளத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விமானப்படைக்கு தெரிவான கெடட் உத்தியோகத்தர்கள் பயிற்சி பெற்று வெளியேறும் அணிவகுப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “இன்று நீங்கள் அதிகாரிகளாகும்போது, அரசியலமைப்பை நிலைநிறுத்துவதாக சத்தியப்பிரமாணம் செய்தீர்கள்.

விமானப் படையின் பதவிப் பிரமாணமும் செய்து கொண்டீர்கள். இந்த இரண்டு பிரமாணங்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பது உங்களின் முதன்மையான கடமை மற்றும் பொறுப்புமாகும்.

அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், நாட்டைப் பாதுகாப்பதும் உங்கள் பொறுப்பாகும். ஏனெனில் நாடு இல்லாமல் அரசியலமைப்பு இல்லை. ஒரு நாடு இல்லாமல், அரசியலமைப்பு வெறும் காகிதத் துண்டாகவே இருக்கும்.

ஒரு நாடு இருப்பதாலேயே அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நீங்கள் அளித்த சத்தியப் பிரமாணத்தின்படி, இந்நாட்டு அரசியலமைப்புக்கும், சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவும், குடியரசிற்கு விசுவாசமாகச் செயல்படவும் உறுதியளித்துள்ளீர்கள்.

நமது நாட்டின் அரசியலமைப்பின் முதல் சரத்து “இது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், அரசியலமைப்பு இருப்பது குடியரசுக்காகத்தான். நாட்டின் ஒற்றையாட்சி பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அத்தியாயம், மக்கள் இறையாண்மையை செயல்படுத்தும் நிறுவனங்கள், தேசியக் கொடி மற்றும் நமது தேசிய கீதம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. மற்ற அனைத்து அத்தியாயங்களும் இவற்றைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லவே உள்ளன.

அப்படியானால், நாம் அதன்படி செயல்பட வேண்டும். முதலில் நாட்டை பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் ஒரு இறையாண்மை, சுயாதீனமான சுதந்திர நாடாக இருக்க வேண்டும்.

இறையாண்மை, சுயாதீனமான சுதந்திர நாட்டை அச்சுறுத்தும் வகையில் எதுவும் நடக்க இடமளிக்கக்கூடாது. அது நமது முக்கிய கடமை. அங்கு நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, இந்த நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்.

நாட்டின் பிரதேச ஒருமைப்பாடு 1980 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அச்சுறுத்தலுக்கு உள்ளானது. அச்சந்தர்ப்பத்தில் முப்படையினரும் பொலிஸாரும் உயிர்த் தியாகம் செய்து அதனைப் பாதுகாத்தனர்.

ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டுமானால் நாட்டு மக்களின் ஐக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும்.

நாடு என்ற வகையில் நாம் ஒரு தனியாக எழுந்து நிற்க வேண்டுமாயின், இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் போன்று, அனைத்து மதத்தினரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

நாம் அனைவரும் நமது கலாசாரத்தையும் மதத்தையும் பாதுகாக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நாடு பிளவுபட்டால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

அதேபோன்று, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை, நீதித்துறை என்ற நிறுவனங்களினால் இலங்கையின் சட்டபூர்வ தன்மை  நிறுவப்பட்டுள்ளது. சட்டத்துறை இயற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்த நீதித்துறை செயல்படுகிறது.

இந்த அனைத்து நிறுவனங்களாலும் இலங்கையின் அரசியலமைப்பைப் பாதுகாப்பது தொடர்பான விடயங்கள் நடைபெறுகின்றன. எனவே, இந்த நிறுவனங்களைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும்.

ஒரு அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது அல்லது மாற்றப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் இல்லாமல் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை. வீதிகள் என்பது நாடாளுமன்றத்திற்கான மாற்றுவழியல்ல.

கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாடாளுமன்றம் இல்லாத நாடுகள் அராஜக நாடுகளாக மாறலாம். ஏனெனில் நாடாளுமன்றம் இல்லையென்றால் சட்டங்களை இயற்றும் அதிகாரம் இல்லாமல் போய்விடும்.

அதேபோன்று, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நாடுகளும் அராஜகமாகின்றன. எனவே, ஒரு நாட்டின் அரசியலமைப்பையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

கடந்த சில நாட்களாக, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்ல செய்திகளை கொண்டு வருவதற்காக, வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல அமைப்புகளுடன் கலந்துரையாடினோம்.

நாடும் நீங்களும் விரைவில் அதன் பிரதிபலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தை இழந்தால் நாம் நாட்டை இழப்போம். நாட்டின் அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட அடிப்படை நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இது உங்களின் பொறுப்பு ஆகும். இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டால், உங்களுக்கு ஒரு நாடு இருக்கும். மேலும், அரசியலமைப்பு வழங்கிய ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பும், நாடும் ஒன்றாகவே முன்னோக்கிச் செல்கின்றன. அதனைப் பிரிக்க முடியாது.“ எனத் தெரிவித்துள்ளார்.

ஆரம்பமானது யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி

வடக்கின் நுழைவாயில்..” சர்தேச வர்த்தக சந்தை 13வது தடவையாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

கண்காட்சி கூடத்தினை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாடா வெட்டி திறந்து வைத்தார். கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் இணைத்து யாழ்ப்பாணத்தில் இந்த சந்தை நடைபெறுகிறது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை தெற்கு தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் தொழில் நுட்பரீதியில் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும்.

பல வருடகாலமாக வடக்கின் கைத்தொழில் துறை வளர்ச்சி மற்றும் சந்தைவாய்ப்பில் இருந்த பாரிய இடைவெளிகள் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் கண்காட்சிகள் மூலம் குறைக்கப்பட்டுள்ளது.

250 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில் கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக சுமார் 15 ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள். சுமார் 45 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் பேர் வரை பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கிறோம்.

பாடசாலை சீருடையுடன் வருகைதரும் மாணவர்கள் குறித்த கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடுட முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் அறிக்கையின்படி, 2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு, கடந்த பெப்ரவரிக்குள் 23.5 சதவீத அதிகரிப்பை கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, வெளிநாட்டு கையிருப்பு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாகவும் கடந்த 2022 செப்டம்பரில் 94.9 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம் 2023 ஜனவரியில் 60.1 சதவீதம் ஆகக் குறைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதியான சூழல் உட்பட பொருளாதாரம் தொடர்பாக அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைவதாகவும் அவர் தெரிவித்தார்.