வெடுக்குநாறிமலை ஆலயத்திற்கு இராணுவ பாதுகாப்புடன் சென்ற பெளத்த பிக்குகள் குழு

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்தபிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்திருந்தனர்.

இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது ஆலயத்தின் நிர்வாகத்தினரும் அங்கு பிரசன்னமாகியிந்தனர்.

இது தங்களது இடம் என குறித்த குழுவால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை மறுத்த ஆலய நிர்வாகத்தினர் இது தமது மூதாதையர்களால் பூர்விகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் என தெரிவித்திருந்ததாக தெரியவருகின்றது.

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய பரிவர்த்தனை முறை

இந்தியாவின் யுனிஃபைட் இன்டர்ஃபேஸ் பேமெண்ட்ஸ் (Unified Interface Payments) என்ற யுபிஐ (UPI) தொழில்நுட்பம் இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த பரிவர்த்தனை தொழில்நுட்பம் பெப்ரவரி 12ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் கையெழுத்திடும் நிகழ்வில் இரண்டு நாட்டு தலைவர்களும் இணையத்தின் ஊடாக இணைவார்கள் என்று தாம் நினைப்பதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இந்த தொழில்நுட்ப அறிமுகம் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இனி தனிமைப்படுத்தப்பட்ட நாடல்ல; சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதே இலக்கு – அநுரகுமார

நாட்டில் விரும்பிய மாற்றத்தை அடைவதற்கான சர்வதேச ஆதரவைப் பெறுவதற்கு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதே தமது நோக்கமாகும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை இனி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாடாக செயற்பட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பிராந்தியத்தில் வளர்ந்து வரும் நாடாகவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடாகவும் விளங்குகிறது. எனவே இலங்கை அந்த நாட்டிடம் இருந்து ஆதரவைப் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

76 ஆண்டு கால அழிவுகரமான அரசியல் கலாசாரத்தை நாம் நிறுத்த வேண்டும். மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர், அந்த மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த எதிர்பார்ப்புக்கு தலைமைத்துவத்தை வழங்கி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும். அதற்கு சர்வதேச ஆதரவு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு சில துறைகளில் மூலதனமும் தொழில்நுட்பமும் தேவை. சந்தையை விரிவுபடுத்த சில நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.

உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக இருப்பதன் மூலம் நமது இலக்குகளை அடைய முடியாது. எனவே, உறவுகளை வலுப்படுத்துவதே தமது இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.

குமாரபுரம் படுகொலையின் 28வது நினைவேந்தல்

1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி – குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வாள்வெட்டு தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்தோடு, 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையும் இடம்பெற்றது.

இப்படுகொலை சம்பவம் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், இவ்வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது.

அடுத்து, இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த படுகொலைச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட உறவுகள் 28 ஆண்டுகளாக தமக்கு கிடைக்கப்பெறாத நீதியினை கோரி வருகின்றனர்.

இந்த இனப்படுகொலையால் பாதிப்புக்குள்ளான மக்கள், துயரிலிருந்து மீள முடியாமலும், பொருளாதார ரீதியில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமையும் பெரும் பிரச்சினையாக காணப்படுகிறது.

தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர்

சுப்பையா சேதுராசா

அழகுதுரை பரமேஸ்வரி

அருமைத்துரை வள்ளிப்பிள்ளை

கிட்ணன் கோவிந்தன்

அருணாசலம் தங்கவேல்

செல்லத்துரை பாக்கியராசா

வடிவேல் நடராசா

இராஜேந்திரம் கருணாகரம்

சண்முகநாதன் நிதாந்தன்

இராமஜெயம் கமலேஸ்வரன்

கந்தப்போடி கமலாதேவி

சிவக்கொழுந்து சின்னத்துரை

சிவபாக்கியம் நிசாந்தன்

பாக்கியராசா வசந்தினி

அமிர்தலிங்கம் ரஜனிகாந்தி

தங்கவேல் கலாதேவி

ஸ் ரீபன் பத்துமா

சுந்தரலிங்கம் பிரபாகரன்

சுந்தரலிங்கம் சுபாஜினி

கனகராசா சுவாதிராசா

சுப்பிரமணியம் பாக்கியம்

விநாயகமூர்த்தி சுதாகரன்

ஆனந்தன் அன்னம்மா

விஜயகாந் லெட்சுமி

அருமைத்துரை தனலெட்சுமி உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தவர்கள் ஆவர்.

இந்தியாவின் அழைப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லி செல்கிறார்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர், சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைச் சந்திப்பதற்காக அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசுக்கு காணிகளை அன்பளிப்போர் மத்திய அரச தாபனங்களுக்கு வழங்குவதை தவிர்த்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு அன்பளிப்பதே இனம்சார் பாதுகாப்பானது! – நீர்வேலி தமிழ் முற்ற திறப்பு விழாவில் முன்னாள் தவிசாளர் நிரோஷ்

மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடன் மக்கள் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதிலும் அரச தாபனங்கள் சிரத்தை எடுக்குமாயின் கிராம மட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்வது இலகுவாக அமையும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீர்வேலியில் இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற தமிழ் முற்றம் மற்றும் தபாலகக் கட்டிடத் திறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்,

நீர்வேலி மண் தமிழ் மக்களின் பாரம்பரியத்திற்கு உரிய மண்ணாகும். இந்த மண்ணில் தமிழ் முற்றத்தினை அமைக்க வேண்டும் என நான் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் அவை தீர்மானம் உள்ளிட்ட  பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டேன். இந்நிலையில் ஏற்கனவே நீர்வேலியில் தபாலகத்திற்கான கட்டிடத்தினை தனது கொடையாக அமைத்து வழங்குவதற்கான செயற்றிட்டத்தினை ஆரம்பித்திருந்த தொழிலதிபர் கிருபாகரன் அவர்கள் தமிழ் முற்றத்தினை அமைத்து அதில் பெரியார்களின் சிலைகளை நிறுவும் பொறுப்பினையும்  தானே முன்வந்து  ஏற்றுக் கொண்டு அதனை தற்போது அவர் முழுமையாகச் செயற்படுத்தியுள்ளார். அவரது முற்போக்கான கொடை எண்ணத்திற்கும் செயற்பாட்டுக்கும் பாராட்டுக்கள்.

இதற்காக அவருடன் உழைத்த ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் இ.குணநாதன் தலைமையில் குழுவினர்க்கு நன்றிகள். இன்றைய கால கட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் பல நிதி பற்றாக்குறை மற்றும் அவற்றை செயற்படுத்துவதில் உள்ள செலவீனங்களை ஒழுங்குபடுத்துவதிலும் அவற்றை நிர்வாக ரீதியில் சட்ட திட்டங்களுக்கு உள்ளாக அணுவதில் காணப்படும் தாமதங்கள் வாயிலாக விரைவாக ஈடேற்றுவதில் இழுபறிகள் உள்ளன.

இந் நிலையில் மக்களுக்கு வேண்டிய எமது இனத்தின் பண்பாடு கலாச்சாரம் வரலாறு போன்றவற்றினை நிலைநிறுத்தத் தக்க செயற்றிட்டங்களை கொடையாளர்களிடம் கையளித்து அவற்றை மக்கள் மயப்படுத்துவது சிறந்த உத்தியாகும். அரச நிறுவனம் மேற்கோள்ளும் அபிவிருத்தியில் பங்கேற்பு அபிவிருத்தி என்பதற்கு மேலாகச் சென்று மக்களின் பங்களிப்பாக அபிவிரு;தியை முன்கொண்டு செல்வதும் அவசியமாகவுள்ளது. அது தனவந்தர்கள் கொடையாளிகளை கிராம மட்டத்தில் இணைப்பதாக அமையும்.

இதேநேரம் இன்று பலர் அரச தாபனங்களுக்கு தமது சொத்துக்களை நன்கொடை அளிக்க முன்வருகையில், அவ்வாறான சூழ்நிலைகளில் மத்திய அரசாங்கம் சார்ந்த தாபனங்களுக்கு அன்பளிப்பது இன முரன்பாடும் பல்வேறு பட்ட ஆக்கிரமிப்பினையும் எதிர்கொள்ளும் இனம் நாம் என்ற வகையில் சரியான தீர்மானம் இல்லை. மேலும், மத்திய அரசின் தாபனங்கள் கொழும்பு மட்ட முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயற்படலாம். ஆனால், உள்ளுராட்சி மன்றத்திற்கு நிலங்களை அன்பளித்தால் அதில் எமது மக்கள் பிரதிநிதிகளின் முடிவே செல்வாக்குச் செலுத்தும். மத்திய அரசு சார்ந்த தாபனங்களுக்கு காணித் தேவை காணப்படின் அவற்றை உள்ளுராட்சி மன்றங்களுக்கு கையளித்து குறித்த உள்ளுராட்சி மன்றங்கள் மத்திய அரசின் தாபனங்களுக்கு வாடகைக்கு விட முடியும். இதன் வாயிலாக எமது நிலம் சார்ந்த இன ரீதியிலான பாதுகாப்பினை நாம் உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். a

ஒருங்கியல் பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கத் தயார் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவோம் நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றியவேளை நான் தெரிவித்தது போல நாங்கள் ஒவ்வொரு மாகாணசபைக்கும் அதன் சொந்த பொருளாதாரத்தை வழங்க விரும்புகின்றோம்.

அதன்காரணமாக இந்தியா போன்று ஒவ்வொரு மாகாணமும் ஏனைய மாகாணத்தின் பொருளாதாரத்துடன் போட்டியிடும்.இதனால் நன்மையேற்படும் பொருளாதாரம் போட்டிதன்மை மிகுந்ததாக காணப்படும்.

மேலும் இந்த மாகாணங்கள் தங்களின் பொருளாதார சமூக அபிவிருத்தியை தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் கையாளவேண்டும்.

இந்த அடிப்படையில் ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம்.

சில சிறுபான்மை குழுக்கள் செனெட்டிற்கான வேண்டுகோளை விடுத்துள்ளன என்னை பொறுத்தவரைக்கும் எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் அதனை எதிர்க்கமாட்டோம்.ஆனால் இதனை வெறுமனே அரசாங்கம் மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்

நாடு திரும்பும் பஸில் – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விரைவில் இறுதி முடிவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறங்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என அக் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவில் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்னும் ஓரிரு நாள்களில் நாடு திரும்புவார். அதன்பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று பொதுஜன பெரமுனக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

“கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் இறுதித் தறுவாயிலேயே ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்டோம். வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான பலம் எமது கட்சியிடம் இன்னும் உள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பலர் போட்டியிடவுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஐந்தாறு மாதங்கள் உள்ளன.

எனினும்,அதுவரை காத்திருக்கமாட்டோம் எனவும் இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.a

இலங்கையின் மூன்று விமான நிலையங்களை கையகப்படுத்துவது தொடர்பில் அதானி குழுமம் ஆலோசனை

இலங்கையின் 03 விமான நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் அதானி குழுமம் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி த இந்து வர்த்தக இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

அந்த விமான நிலையங்களின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயணிகளின் திறனை அதிகரிப்பதற்கும் ஒரு தனியார் பங்காளியின் ஆதரவு எதிர்பார்க்கப்படுவதுடன், அதானி குழுமம் அதற்காக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை சர்வதேச விமான நிலையம் உட்பட இந்தியாவில் உள்ள 07 விமான நிலையங்களின் நிர்வாகத்தை தற்போது அதானி குழுமம் நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை பிரித்தானியா உன்னிப்பாகக் கவனிக்கும்

சர்வதேச இணைய வழங்குனர்கள் மற்றும் ஆர்வலர்களின் கவலைகள் எதிர்ப்புகளை மீறி,   ஜனவரி 24 அன்று நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளதானவும், இலங்கை இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய  இந்த சட்டத்தின் முன்னேற்றம் குறித்து  உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும்  என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

சிவில் சமூகம், எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச இணைய வழங்குநர்கள் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து கவலை தெரிவித்த போதிலும், இலங்கை நாடாளுமன்றம் ஜனவரி 24 அன்று அதை சட்டமாக நிறைவேற்றியுள்ளது என இராஜாங்க அமைச்சர் Anne-Marie Trevelyan (வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம்) ) பிரித்தானிய   நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“ஒக்டோபரில் தான் இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோதும், தெற்காசியத்திற்கான இராஜாங்க அமைச்சர் லார்ட் அஹ்மட் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை ஜனவரி 25 ஆம் திகதி சந்தித்தபோதும் கூட , கருத்துச் சுதந்திரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தச் சட்டத்தின் தாக்கம் குறித்து பிரித்தானியா தனது அதிருப்திகளை வெளிப்படுத்தியது ”என அவர் பிரித்தானியா  நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.