போர்க்களமானது கிளிநொச்சி: 5 மாணவர்கள் கைது: சிறீதரன் எம்.பி மீதும் தாக்குதல்

இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தரப்பு மேற்கொண்ட எதிர்ப்பு பேரணியின் மீது பொலிசார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை, தடியடி நடத்தியதால் பெரும் களேபரம் ஏற்பட்டது.

ஏ9 வீதியில், இரணைமடுவுக்கு அண்மையாக போர்க்களம் போல காட்சியளித்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இரணைமடு சந்தியில் இருந்து போராட்டம் ஆரம்பித்து, கிளிநொச்சி நகரை நோக்கி நகர்ந்த போது, பொலிசார், விசேட அதிரடிப்படையினர் வீதியின் குறுக்கே தடுப்பு அமைத்து, பேரணியை தடுத்தனர்.

இந்த பேரணியில் பங்கேற்க 5 பேருக்கு நீதிமன்றம் தடைபிறப்பித்திருந்த நிலையில், பொலிசார் பேரணியை நகர அனுமதிக்கவில்லை.

பேரணியின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், தடியடியும் மேற்கொள்ளப்பட்டது. மாணவர்கள் தரதரவென வீதியில் இழுத்து செல்லப்பட்டனர்.

மாணவர்களை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் முயன்றனர். பொலிசாரால் இழுத்து செல்லப்பட்ட மாணவன் ஒருவரை காப்பாற்ற சிறிதரன் எம்.பி, அவரின் மேல் கவசம் போல படுத்து காப்பாற்ற முயன்றார். பொலிசார் அவரை இழுத்து எடுக்க முயன்றனர்.

இந்த இழுபறியின் போது பொலிசார் தன்னை தாக்கியதாக சி.சிறிதரன் குற்றம்சாட்டினார்

இன்றைய நாள் பொலிஸார் தாங்கள் நடந்துகொண்ட விதத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தின் அராஜகத்தை கோரமுகத்தை சர்வதேச சமூகத்தின் கண்களிற்கு கொண்டுவந்திருக்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைகழக மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பொலிஸார் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்துகொண்டனர் பல மாணவர்கள் காவித்தூக்கிச்செல்லப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண் பொலிஸார் இல்லாமல் பெண்கள் இழுத்துச்செல்லப்பட்டார்கள் தூக்கி வானிலே வீசப்பட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சியில் ஊர்வலம் வருகின்றபோது தண்ணீர்தாரை வாகனத்துடன் கண்ணீர்புகை குண்டுகளை வீசிய பொலிஸார் மிகவும் மிலேச்சத்தனமாக அடாவடியாக நடந்துகொண்டார்கள்.

மிகவும் ஜனநாயக அடிப்படையில் தனக்கிருக்கின்ற மனித உரிமைகளின் அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுத்த பல்கலைகழக மாணவர்கள் பொதுமக்கள் மீது மிகவும் மோசமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் பொலிஸார் நடந்துகொண்டமை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை இலங்கையில் பொலிஸாரின் அடாவடித்தனத்தை அடையாளப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலமாணவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள் இதுவெல்லாம் நடைபெற்ற பின்னர் ஐந்து மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட விடயத்திலே அந்த மக்கள் 3-30 மணிவரை காத்திருந்தார்கள் அவர்களை விடுதலை செய்யும்வரை வெளிக்கிடமாட்டோம் என காத்திருந்தார்கள் நண்பர் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனும் பல்கலைகழக மாணவர்களும் பொலிஸ் நிலையம் சென்று அவர்களை விடுவித்துக்கொண்ட வந்த பின்னர்தான் இந்த போராட்டம் முடிவிற்கு வந்திருக்கின்றது எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பல்கலைகழக மாணவர்களை பொலிஸார் தாக்கியவேளை நான் அவர்களை மீட்கச்சென்றவேளை பொலிஸார் ஒருவர் என்மீது தாக்குதல் நடத்தியிருந்தார் அதற்குரிய வீடியோ ஆதாரங்கள் உள்ளன நான் அதனை உரிய நேரத்தில் வெளியிடுவேன் எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் – ரெலோ செயலாளர் நாயகம் கோ.கருணாகரம் எம்.பி

தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் தாய்க் கட்சி தாங்கள்தான் என்று சொல்லும் தமிழரசுக் கட்சியினர், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று (01.02.24) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சிகள், ஒன்றாக பயணிக்க வேண்டிய காலம் இதுவாகும். 2009 இற்கு முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமான ஒரு அரசியல் இருந்தது.

நாங்கள் ஆயுத ரீதியாகவும். அரசியல் ரீதியாகவும் பலமாக இருந்தோம். 2009 இற்குப் பின்பு ஆயுத ரீதியாக நாங்கள் செயற்பட முடியாத நிலை இருந்து கொண்டிருக்கும் இந்நிலையில் மிகவும் பலமாக இருக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக்காலகட்டத்தில் சிதைந்து பல்வேறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து 2004 ஆம் அண்டிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கியமான கட்சியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தமிழரசுக் கட்சி தனியாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்றார்கள்.

அப்போது கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும், ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.

2009 இங்குப் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிதைவடைவதற்குக் காரணமும் கூட அக்கூட்டமைப்பை பதிவு செய்யாததுதான். இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே ஒரு குழப்ப நிலை உருவாகியிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.

அக்கட்சியின் தலைவர்கூட வரலாற்றிலே வாக்களிப்பின் மூலம் தெரிவாகியிருக்கின்றார். செயலாளர் மற்றும் ஏனைய நிர்வாகங்களுக்கான தெரிவுகள் கூட நடைபெற்றிருக்கின்றது ஆனால் அது ஒழுங்காக நடைபெறவில்லை என ஒருசாரார் சொல்கின்றார்கள்.

இந்த நிலையில் ஒன்றை தமிழரசுக் கட்சி உணரவேண்டும். தாங்கள் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் கட்சி தாங்கள்தான் தாய்க் கட்சி என்று சொல்பவர்கள், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும்.

அக்கட்சிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள்கூட 2009 இற்கு முன்பு இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.

தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய்யின் கட்சி ஆரம்பம்

தென்னிந்திய நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்து அதற்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டுள்ளார்.

தமிழக வெற்றி கழகம் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் தனது டுவிட்டர் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டுவந்த நடிகர் விஜயின் ரசிகர் மன்றம் இன்று தமிழத்தில் புதிய அரசியல் கட்சியாக மாற்றம்பெற்றுள்ளது.

இந்நிலையில், புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலருடன் ஆலோசனை நடத்திருந்தார்.

அதன் அடிப்படையில் கட்சியின் தலைவராக விஜய் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 150 மில்லியன் கடனுதவி

நிதித்துறை பாதுகாப்பு வலையை வலுப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியளிப்பதற்காக உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தில் கவனம் செலுத்தி,

இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பு வலையின் நிதி மற்றும் நிறுவனத் திறனை வலுப்படுத்த இந்தத் தொகை வழங்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் நிதித்துறைக்கு ஆதரவளிப்பதற்கு வலுவான பாதுகாப்பு வலைகள் தேவைப்படுவதாகவும்,

பொருளாதாரத்திற்கு நிலையான மற்றும் நம்பகமான வங்கித்துறை அவசியமானது என்றும் மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

மக்களின் ஆதரவு இன்னமும் எனக்கு இருக்கின்றது – கோத்தபாய ராஜபக்ச

நாட்டு மக்களின் அமோக வாக்குகளினாலேயே நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டேன். சிலரின் கோமாளித்தனமான செயற்பாடுகளால் தான் ஜனாதிபதிப் பதவியில் இருந்து நானாகவே விலகியிருந்தேன். மக்களின் ஆதரவு இன்னமும் எனக்கு இருக்கின்றது. எனினும், ஓய்வு நிலையில் இருக்கும் நான் மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆண்டு. அதனால் புதிய கூட்டணிகள் தொடர்பான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்தக் கூட்டணிகள் தொடர்பில் சிலர் என்னுடனும் பேசியுள்ளனர். எனினும், எந்தக் கூட்டணியுடனும் இணைவது தொடர்பில் நான் முடிவு எடுக்கவில்லை.

நாட்டின் சமகால அரசியல் நிலவரத்தை நான் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன்.

பலத்த சவாலுக்கு மத்தியில் நாட்டின் முன்னேற்றத்துக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அயராது பாடுபடுகின்றார்.

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றே தீரவேண்டும். அதை ஒத்திவைக்கும் எண்ணம் எவருக்கும் இருக்கக்கூடாது. – என்றார்.

வீட்டுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட காணிகளை வனத்துறையினர் விடுவிக்க கோரி மன்னாரில் மக்கள் போராட்டம்

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பிரதேச மக்கள் தமது கிராமத்தில் வசிக்கும் 113 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக கொம்பன்சாய்ந்தகுளம் பிரதேசத்தில் 46 ஏக்கர் காணியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்த போதிலும் வனத்துறையினர் இதுவரையில் அந்த காணியை விடுவிக்கவில்லை எனத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்தினம் முன்னெடுத்தனர்.

“எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் கொம்பன்சாய்ந்த குளத்தில் எங்கள் மக்களுக்கு குடியிருப்புக் காணி அவசியம். எங்கள் ஊரில் ஒரு வீட்டில் மூன்று நான்கு குடும்பங்கள் வாழ்கின்றோம்.

இடவசதி போதாது. ஆகவேதான் இன்று போராடுகின்றோம். 2016ஆம் ஆண்டு இந்தக் காணியை எங்களுக்கு வழங்குவதாக வட மாகாண அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் வனவளத் திணைக்களத்தினர் இதனை இன்னும் விடுவிக்கவில்லை. முன்னாள் பிரதேச செயலாளர் இதனை செய்வதாக கூறினாலும் செய்யவில்லை. “போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் தெரிவித்தார்.

இசைமாலைதாழ்வு பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு வீடுகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியின் வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை அபகரித்து விவசாத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்துக்கு வந்த நானாட்டான் உதவி பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை போராட்டக்காரர்கள் கையளித்தனர்.

இசைமாலைதாழ்வு கிராம மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மாவட்ட உதவிச் செயலாளரிடமும் கையளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி

இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மனித உரிமைகள் அம்சங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை மீளாய்வு செய்து சட்டத்தை திருத்தம் செய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளது.

நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கு தடையேற்படும்.இந்த சட்டத்தின் ஊடாக சிவில் சமூகம்,கைத்தொழிற்றுறை உள்ளிட்ட பல துறைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை மீள்பரிசீலனை செய்து சட்டத்தை திருத்தம் செய்ய இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். இதையடுத்து ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

முன்னதாக, தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (1) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை.

இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் (1) உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று காலை ஆஜராகினார்.

இவ்வாறு இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கெஹலிய ரம்புக்வெல்ல வாக்கு மூலம் அளித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தும் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைப் போன்ற சட்ட மூலத்தை அமெரிக்காவும் அமுல்படுத்த உள்ளது – பாலித ரங்கே பண்டார

தற்கொலைக்களுக்கு காரணம் சமூகவலைத்தள செய்திகளாகும். அதனால் அமெரிக்காவும் நாங்கள் கொண்டுவந்திருக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவர தீர்மானித்திருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

சமூகவலைத்தளத்தில் இடம்பெற்றும் செய்திகளால் பெண்கள், சிறுவர்கள் என பலர் தற்கொலை செய்துவருகின்றனர். இதனை தடுப்பதற்கே நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அநுராதபும் மாவட்ட சம்மேளனம் வியாழக்கிழமை (01) அனுராதபுரம் இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் தலை தூக்கும் என யாரும் நினைக்கவில்லை.

என்றாலும் 2001இல் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு சென்ற ரணில் விக்ரமசிங்க ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு நாட்டின் பிரதமரானார்.

அதன் பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இன்று நாட்டின் பிரதான பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு முழு உலகுக்கும் தெரியும் வகையில் நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துவருகிறார். ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயற்பட்டு வருகிறார்.

அதனால் ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு அனுப்பி, அவரை பிரதமராக்கி, ஜனாதிபதியாக்கியது போன்று அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை நூறு இலட்சம் வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக நியமித்தே தீருவோம். அதுதொடர்பில் சந்தேகம் கொள்ளவேண்டாம்.

ஏனெனில் விழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில் ரணில் விக்ரமசிங் மாத்திரமே முன்வந்து, நாட்டை ஓரளவு ஸ்திர நிலைக்கு கொண்டுவந்தார். அதனால் எங்களையும் நாட்டையும் மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரும் இல்லை.

அத்துடன் நாட்டை மீட்கும் இந்த பயணத்தை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும்போது ராஜபக்ஷ்வினரை பாதுகாக்க செயற்படுவதாக எங்களை விமர்சிக்கின்றனர். ராஜபக்ஷ்வினரை மாத்திரமல்ல, அனைவரையும் இணைத்துக்கொண்டு முழு நாட்டு மக்களையும் பாதுகாக்கவே ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகிறார்.

என்றாலும் திருடர்களை பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கவோ ஐக்கிய தேசிய கட்சியோ தயாரில்லை. திருடர்களுடன் பாராளுமன்றத்தில் இருப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம் செய்துவருகிறார். ஆனால் ரணில் விக்ரமசிங்க திருட்டை ஒழிக்க தேவையான சக்திவாய்ந்த சட்ட திடடங்களை கொண்டுவந்திருக்கிறார்.

அதேபோன்று நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் தெரிவித்து வருகின்றன.

ஆனால் சமூகவலைத்தளத்தில் இடம்பெற்றும் செய்திகளால் பெண்கள், சிறுவர்கள் என பலர் தற்கொலை செய்துவருகின்றனர். இதனை தடுப்பதற்கே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மாறாக யாருடைய உரிமையையும் மீறவில்லை. அமெரிக்காவில் இன்று அதிகரித்துவரும் கொலை, தற்கொலைக்களுக்கு காரணம் சமூகவலைத்தள செய்திகளாகும். அதனால் அமெரிக்காவும் நாங்கள் கொண்டுவந்திருக்கும் சட்டத்தை கொண்டுவர தீர்மானித்திருக்கிறது.

எனவே ஆளுமையும் அனுபவமும் உள்ள ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே இந்த நாட்டையும் மக்களையும் மீள கட்டியெழுப்ப முடியும்.

அதனை கடந்த ஒன்றரை வருட காலத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதனால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை நூறு இலட்சம் வாக்குகளினால் வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

இல்லாத புலிகள் அமைப்புக்கு எப்படி நிதி திரட்ட முடியும்? தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சி – சீமான் குற்றச்சாட்டு

தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்துவதை எதிர்த்து நீதிமன்றில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அறிவித்துள்ளார்.

இந்நிலைலையில் இது குறித்து சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்; தேர்தல் நேரத்தில் இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. நியாயப்படி என்ஐஏ அதிகாரிகள் என்னிடம் தான் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். ‘

அச்சுறுத்தலுக்கு அஞ்சும் நபர்கள் நாங்கள் இல்லை. சிறிய யூடியூப் சேனல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு எப்படி நிதி திரட்ட முடியும்?. விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்?.

தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது. நாட்டை கொள்ளையடித்தவர்கள் அச்சமின்றி இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். என்ஐஏ சோதனையின் மூலம் எனக்கு ஒன்று தெரிகிறது; நான் சரியான பாதையில் செல்கிறேன். பிப்.5ம் தேதி நிர்வாகிகளுடன் சேர்ந்து நானும் ஆஜராகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.