கிறிஸ்தவ மதகுருமார்களின் தொலைபேசிகள் கண்காணிக்கப்படுகின்றன; அவுஸ்திரேலியாவின் உதவியைக் கோரும் கர்தினால்

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த சுயாதீன விசாரணைகளுக்கான சர்வதேச அழுத்தங்களை தீவிரப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா உதவவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏபிசிக்கு கர்தினால் இதனை தெரிவித்துள்ளார்.

270பேருக்கும் என்ன நடந்தது அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறிவதற்காக சுயாதீன விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களை கொடுப்பதற்கு அவுஸ்திரேலியாவும் உதவவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை பாரிய மனித உரிமை மீறலாக மனிதர்களின் கௌரவம் மீறப்பட்ட செயலாக அரசியல் சதி குறித்த சந்தேகம் உள்ள விடயமாக அவுஸ்திரேலிய அரசாங்கமும் ஏனைய அரசாங்கமும் கருதவேண்டும் என கர்தினால் தெரிவித்துள்ளார்.

முக்கிய நபர்கள் அமைச்சர்கள் உளவுத்துறையில் உள்ளவர்கள் யுத்தகாலத்திலும் அதன் பின்னரும் நிலவிய வன்முறை பாரிய குழப்பநிலை காணாமல்போதல்கள் படுகொலைகள் போன்வற்றுடன் தொடர்புபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள கர்தினால் இதன் காரணமாகவே நாங்கள் சுயாதீனமான சுதந்திரமான அரசியல்வாதிகளால் வழிநடத்தப்படாத சர்வதேச தராதரங்களை பின்பற்றுகின்ற விசாரணைகளை கோருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குகுதல் குறித்து கேள்வி எழுப்பியமைக்காக சுரேஸ்சாலேயை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் எனது மதகுருஒருவருக்கு எதிராக வழக்குதாக்கல்செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள கர்தினல் மல்கம் ரஞ்சித் இந்த தாக்குதல் உயர்மட்டத்தில் உள்ள குழுவொன்றின் தாக்குதல் போல தென்படுகின்றது என குறிப்பிட்டிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் ஏனையகிறிஸ்தவ மதகுருமார்களை கண்காணிக்கின்றனர் என்னை பற்றியும் ஏனைய கிறிஸ்தவமதகுருமார்கள் குறித்தும் பல ஆவணங்களை கைவசம் வைத்திருக்கின்றனர் இது குறித்து நான் உறுதியாக சொல்கின்றேன் எங்கள் தொலைபேசிகள் பாதுகாப்பாக இல்லை நாங்கள் சுதந்திரமாக பேசமுடியாத நிலையில் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிச் சிங்கள சட்டமே நாடு இன மத ரீதியாக பிளவடைய காரணம் – மனுஷ நாணயக்கார

தனிச் சிங்கள சட்டமே நாடு இனஇமத ரீதியாக பிளவடைய காரணம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் அரசியல் நோக்கத்திற்காகவும் பொருளாதார நோக்கத்திற்காகவும் இனவாதமும் மதவாதமும் சமூகத்தில் பரப்பப்பட்டன. இதனை அரசியல்வாதிகளும் தங்களின் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

இந்த நாடு வீழ்ந்தபோது, அனைவரும் ஒன்றிணைந்து தான் இந்நாட்டை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.அத்துடன் பேச்சில் மட்டுமன்றி, செயற்பாட்டிலும் எமது ஐக்கியத்தை நாம் காண்பித்துள்ளோம்.

எதிர்க்காலம் குறித்து மட்டும் குறைகூறிக் கொண்டிருக்காமல், புதிதாக சிந்திக்கும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்.

1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்துதான், இந்நாடு பல இனவாத மோதல்களுக்கு முகம் கொடுத்தது. இங்கு தான் நாம் பிரிந்தோம். இதன் பின்னர்தான் ஆயுதம் ஏந்தப்பட்டு, கொடிய யுத்தமும் நாட்டில் ஏற்பட்டது.

இவை தான் நாடு முன்னேற்றமடைய தடையாக இருந்தன.

1956 இற்குப் பின்னர் நாட்டை விட்டு பல புத்திஜீவிகள் வெளியேறினர். 1983 இலும் 2022 இலும் இதேபோன்று புத்திஜீவிகள் உள்ளிட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். நாம் நம்மை உணராத காரணத்தினால்தான், அடுத்தவரின் குறைகளை பெரிதாகக் காண்கிறோம்.

நாம் ஏனையவரின் மத, இன, கலாசாரத்தை மதித்தால் மட்டுமே, இந்நாட்டை முன்னேற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மொஹமட் முய்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு இன்று (17) தலைநகர் மாலேயில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இதில் கலந்துகொண்டார்.

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளைப் பெற மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குங்கள் – சுரேஷ் பிரேமஷ்சந்திரன்

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளைக் கோரிநிற்கும் ஜனாதிபதி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமையாக வழங்குவதற்கு முன்வரவேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்ற போர்வையிலேயே மாகாணசபைகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அரசியல் சாசனத்திற்கான பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

மகிந்த ராஜபக்சவிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவரை பதின்மூன்றாவது திருத்தத்திற்கு மேலதிகமாகச் சென்று அதிகாரங்களை வழங்குவோம் என்றும் மாகாணசபைகளை சரியான முறைகளில் நடைமுறைப்படுத்துவோம் என்றும் ஐ.நா. செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் இந்திய தலைவர்களுக்கும் பல்வேறுபட்ட உறுதிமொழிகளைக் கொடுத்தபொழுதிலும்கூட கடந்த ஐந்து வருடங்களாக மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில்கூட மாகாணசபைகள் இயங்குமா என்ற கேள்வியும் எழக்கூடிய சூழ்நிலை இன்று தோன்றியிருக்கின்றது.

ஜனாதிபதியும் ஆளும் கட்சியினரும் அடுத்த வருடத்தை தேர்தல் ஆண்டாக குறிப்பாக பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறுமென்று கூறிவருகின்றனர்.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெறாத மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்பொழுது நடைபெறும் என்பது குறித்து எவ்வித அறிவித்தல்களும் இல்லை. இது உலக நாடுகளையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும்.

இப்பொழுது புதிய வரவு- செலவுத்திட்டத்திற்கான பிரேரணைகளை முன்மொழிந்த ஜனாதிபதி அவர்கள் நாட்டில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க புலம்பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதுடன் தனியார் மற்றும் தனி நிறுவனங்களும் மாகாணசபைகளும் புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியுமென்றும் கூறியுள்ளார்.

இன்றைய சூழலில் பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்கள் ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் வாழ்கின்றனர் என்பதும் பொருளாதாரத்தில் கனிசமான முன்னேற்றத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள் என்பதும் வெளிப்படையான விடயமாகும்.

தாம் பிறந்து வளர்ந்த வடக்கு-கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய அவர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவ்வாறு தாம் விரும்பிய வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு முதலீடுகளைக் கொண்டுவருதவற்கு மாகாணசபைகளுக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இதுவரை கிடையாது.

ஆகவேதான் இலங்கை திவாலான நாடாக அறிவிக்கப்பட்ட காலத்திலும்கூட, இலங்கையைப் பொருளாதார ரீதியாக மீட்சியடைய வைக்க வேண்டுமாக இருந்தால், சர்வதேச முதலீடுகளை இலங்கை உள்வாங்க தேவை இருப்பதாகவும் அதில் புலம்பெயர் மக்களின் கனிசமாக இருக்க முடியுமென்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வந்துள்ளது.

அவ்வாறு புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீடுகளை உள்வாங்குவதாக இருந்தால், சர்வதேச முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்க வேண்டுமென்பது முதன்மையானது.

அதுமாத்திரமல்லாமல், ஜனாதிபதி கூறுவது போன்று, பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான நிலங்களைப் பகிர்ந்தளிப்பது தொடக்கம், முதலீடு செய்ய முன்வருபவர்களுக்கான சகல சலுகைகளையும் வழஙகக்கூடிய அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு இருந்தாக வேண்டும்.

ஜனாதிபதி தொடர்ச்சியாக புலம்பெயர் மக்களின் முதலீடுகளைக் கோரி நிற்கின்றார். ஆனால் புலம்பெயர் தமிழ் மக்கள் தமது முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான அதிகாரங்களை ஆக்கபூர்வமான வகையில் மாகாணங்களுக்குக் கொடுப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவது மாத்திரம் போதாது. மாறாக, பொருளாதார நலன்களை மேம்படுத்துவதற்கு சர்வதேச முதலீடுகளை உள்வாங்குவதற்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். குறிப்பாக மாகாணங்களுக்கு அத்தகைய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகள் என்று சொல்கின்றபொழுது வெறுமனே பல்கலைக்கழகங்களில் மாத்திரமல்லாமல், சர்வதேச தரம் வாய்ந்த வைத்தியசாலைகள், விவசாயம் மற்றும் கடல் வளங்களை உள்ளடக்கிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான வலுவான திட்டங்கள் உற்பத்திசார் தொழிற்சாலைகள் போன்றவற்றைச் செயற்படுத்துவதற்கும் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும்.

இவை நடைபெற வேண்டுமாயின் உடனடியாக மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

எல்லா மாகாணசபைத் தேர்தல்களையும் நடாத்துவதில் நெருக்கடிகள் காணப்படுமாயின், குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்களாவது நடாத்தப்படவேண்டும்.

பொருளாதாரத்தை வளப்படுத்த, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஒரு தார்மீக சமுதாயம் ஒன்றை உருவாக்கக்கூடிய வகையில் முடிவெடுத்து செயற்படக்கூடிய அதிகராங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும்.

இவற்றை விடுத்து வெற்று வார்த்தைகளும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் முடிவுகளுக்கு அடங்கிப் போவதுமாக இருந்தால் இந்த நாட்டில் எதனையும் சாதிக்க முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் – நாமல் ராஜபக்ச

சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்கட்சியினர் வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க தெரிந்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்களால் வரவு செலவு திட்டத்தில் இருக்கும் பிழைகளை மாத்திரமே சுட்டிக்காட்ட முடியும்.

அதனை தோற்கடிப்பதற்கான உரிமை எதிர்கட்சியினருக்கே இருக்கின்றது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் போது உரம் தொடர்பான விடயத்தில் வாயை மூடிக்கொண்டு இருந்ததால் இறுதியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதேவேளை வரவு செலவு திட்டத்தில் இருக்கும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

புலம்பெயர் இலங்கையர்கள் இலங்கையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும்

புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் மொழி அறிவை சிங்களம், தமிழ் மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது.

2030ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் பல்கலைக்கழகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ், சிங்கள புலம்பெயர் இலங்கையர்கள் இந்நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிருப்தியளிக்கும் கோப் தலைவரின் செயற்பாடுகள்; பதில் தலைவரை நியமிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

கோப் குழுவின் தலைவர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை. ஆகவே கிரிக்கெட் தொடர்பான விசாரணைகள் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுக்கப்படுமாயின் கோப் குழுவில் நாங்கள் பங்குப்பற்ற போவதில்லை. ஆகவே உரிய தீர்மானத்தை எடுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

கோப் குழுவின் தலைவரின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. ஆகவே கிரிக்கெட் சபை தொடர்பான விசாரணைகளை அவர் தலைமையில் முன்னெடுப்பது முறையற்றது. பதில் தலைவரை நியமியுங்கள் என எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்கள். முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய தீர்மானம் எடுப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற அமர்வின் போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உரையாற்றுகையில், பாராளுமன்ற குழுக்களில் கோப் குழு கௌரவமானது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவுக்கு ஒருமுறை நான் முன்னறிவிப்பு இல்லாமல் சென்றதால் அவர் என்னை குழுவில் கலந்துக் கொள்ள அனுமதிக்கவில்லை. அனுமதி பெற்றுக்கொண்டதன் பின்னர் குழு நடவடிக்கையில் கலந்துக்கொள்ளுமாறு உறுதியாக அறிவித்தார்.ஆனால் தற்போது பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையிலான கோப் குழுவுக்கு வருபவர்கள் யார் என்று தெரியவில்லை.

கோப் குழுவின் நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ள ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கோப் குழுவின் தலைவரின் ஊடக செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.கோப் குழுவின் கௌரவத்தை பாதுகாப்பதை விடுத்து பேராசிரியர் ரஞ்சித் பண்டார கோப் குழுவின் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு நிறுவனங்களுடன் மோசடி செய்கிறார். ஆகவே இவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கோப் குழுவின் தலைவரது செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடுகிறோம்.கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் கோப் குழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுப்பதை நிறுத்தி மாற்று தீர்மானங்களை முன்னெடுங்கள் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவின் தலைவர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை.ஆகவே கிரிக்கெட் தொடர்பான விசாரணைகளை கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுக்கப்படுமாயின் கோப் குழுவில் நாங்கள் பங்குப்பற்ற போவதில்லை.ஆகவே உரிய தீர்மானத்தை எடுங்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்பதால் தான் கோப் மற்றும் கோபா உள்ளிட்ட முக்கிய குழுக்களின் தலைமைத்துவ பதிவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குங்கள் என்று வலியுறுத்தினேன். மக்கள் போராட்டத்துக்கு பயந்து நீங்கள் ( சபாநாயகரை நோக்கி) அப்போது அதற்கு இணக்கம் தெரிவித்தீர்கள். போராட்டம் முடிவடைந்ததன் பின்னர் வழங்கிய வாக்குறுதியை மறந்து விட்டீர்கள். இதுவே உண்மை என்றார்.

கோப் குழு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு உரிய தீர்மானத்தை அறிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

வடக்கில் 7 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வியை தொடராது விலகியுள்ளனர் – வடமாகாண பிரதம செயலர்

வடக்கில் 7ஆயிரம் மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர் கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர் என வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் மனைப்பொருளியல் மற்றும் ஆடை வடிவமைப்பு கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் 7000 இற்கும் மேற்பட்டோர் உயர்தர பரீட்சையுடன் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்.

அவ்வாறு உங்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தாது, சாதாரண தர சித்தி, உயர்தர சித்தி பெற்று பல்கலைக்கழகம் போக முடியாவிட்டாலும் அந்த கனவினை நீங்கள் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் ஊடாக பெற்று கொள்ளலாம்.

தேசிய தொழில் தகைமை சான்றிதழ் கற்கை நெறியை தொடர ரூபாய் 25000 வழங்கப்படும். இது குறித்த வடமாகாண பிரதம செயலகத்தின் இணையத்தளத்தினூடாக மேலதிக தரவுகளை பெற்று கொள்ளலாம்.

தேசிய தொழில் தகைமையினை அதன் நான்காம் தரத்துடன் (NVQ level – 4) நிறுத்திவிடாது அதன் ஏழாம் தரம் (NVQ level – 7) வரை செல்வதுடன் ஊடாக நீங்கள் பட்டம் ஒன்றினை பெற்று கொள்ளலாம் .

அவ்வாறு தேசிய தொழில் தகைமையின் 7 ஆம் தரத்தினை பெற்றால் நீங்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகிக்கலாம்.

உண்மையிலேயே எத்தனையோ பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றார்கள் .அவர்களுக்கு கல்வி தகைமை இருக்கின்றது. ஆனால் தொழில் தகைமை இருப்பதில்லை.ஆனால் உங்களுக்கு இப்பொழுது உங்களுக்கு சான்றிதழுடன் தொழில் தகைமையும் உள்ளது என தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் வழங்கும் முன்மொழிவு பாரதூரமானது – சரத் வீரசேகர

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் வழங்கும் முன்மொழிவு பாரதூரமானது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை பகிர்ந்தளித்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூளைச்சலவை செய்யும் பல்கலைக்கழகங்கள் தோற்றம் பெறும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஒருசில முன்மொழிவுகள் வரவேற்கத்தக்கவை.

கொழும்பு மாவட்டத்தில் தொடர் மாடிv குடியிறுப்புகளில் வசிப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனை வரவேற்கத்தக்கது.

விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தாலும் அதில் மாறுப்பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு உரித்தாக்குவதில்லை.

ஏனெனில் காணி விவகாரம் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்புடையது.ஆகவே காணி உரிமையை முழுமையாக வழங்காமல் நிபந்தனை அடிப்படையில் தற்காலிக உரிமத்தை மாத்திரம் வழங்குவது பொறுத்தமானதாக அமையும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அனுமதி வழங்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிடுவது பாரதூரமானது. 13 ஆவது திருத்தத்தில் கல்வி கட்டமைப்பில் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளித்தால் கிழக்கு மாகாணத்தில் வாஹப் கொள்கையுடைய சரியா பல்கலைக்கழகம் கிழக்கு மாகாணத்திலும்,மூளைச்சலவை செய்யும் பல்கலைக்கழகம் வடக்கு மாகாணத்திலும் ஆரம்பிக்கப்படும்.

அரசியல்வாதிகள்,மாகாண ஆளுநர்கள் தமக்கு ஏற்றாட் போல் பல்கலைக்கழகங்களை உருவாக்க முயற்சிப்பாளர்கள். ஆகவே மாகாணங்களுக்கு பல்கலைக்கழக அனுமதி என்ற யோசனை முறையற்றது என்பதை வெளிப்படையாக குறிப்பிடுவோம் என்றார்.

அடை மழை காரணமாக யாழில் 850 குடும்பங்கள் பாதிப்பு

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த 2910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 234 குடும்பங்களைச் சேர்ந்த 766 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 279 குடும்பங்களைச் சேர்ந்த 950பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 9பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 27பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 191பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 180 குடும்பங்களைச் சேர்ந்த 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized