தமிழ் டயஸ்போராக்களின் வாக்குகளுக்காக அமெரிக்கா ஓரவஞ்சனை செயற்பாடு – சரத் வீரசேகர

அமெரிக்க தூதரகத்தால் தனக்கு விசா வழங்க மறுக்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழ் டயஸ்போராக்களின் வாக்குகளையே அவர்கள் எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் இது அமெரிக்காவின் ஓரவஞ்சனை செயற்பாடு எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர அமெரிக்காவின் வாஷிங்டனில் அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விசாவிற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு விசா வழங்குவதை அமெரிக்கா தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாம் நாட்டைப்பற்றியும், நாட்டின் சுயாதீனத்தன்மை பற்றியும் பேசுகின்றமையால் அமெரிக்கா எமக்கெதிராக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு எமக்கு விசா மறுக்கப்பட்டிருக்கலாம்.

நான் இதற்கு முன்னர் அமெரிக்காவில் பயிற்சிகளைப் பெற்றிருக்கின்றேன். அவ்வாறிருந்தும் தற்போது எனக்கு விசா வழங்க மறுத்துள்ளனர். தமிழ் டயஸ்போராக்களின் வாக்குகளையே இவர்கள் இதன் மூலம் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கியதன் காரணமாகவே அமெரிக்கா இவ்வாறு எமக்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். விசா வழங்குவதென்பது அமெரிக்காவின் உரிமையாகும்.

எனவே இவ்விடயத்தில் எம்மால் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. எவ்வாறிருப்பினும் ஒரே நாட்டுக்குள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக பார்க்க முடியாது. ஆனால் இது போன்ற விடயங்களில் அமெரிக்கா ஓரவஞ்சனையாகவே செயற்படுகிறது.

அதே போன்று யாரை அனுப்ப வேண்டும் என்றும் அவர்களால் கூற முடியாது. அது எமது உரிமையாகும். இவர்கள் மறைமுகமாக அரசாங்கத்தின் சுயாதீனத்தன்மையை மீது தாக்குதலை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அரசாங்கம் துணிச்சலுடன் செயற்பட வேண்டும். தனிப்பட்ட விவகாரங்களில் உங்களால் தலையிட முடியாது என்று அரசாங்கம், அமெரிக்காவுக்கு நேரடியாகக் கூற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மன்னார் மடு ஆலயம் மத நல்லிணக்கத்தின் அடையாளம் – அமெரிக்க தூதுவர்

மன்னார் ஆயர் மற்றும் பிடெலிஸ் பெர்னாண்டோ ஆகியோர் சமய நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் மதத் தலைவர்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜூலி சங் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,வரலாற்று சிறப்புமிக்க மடு மாதா ஆலயத்திற்கு சென்றேன். இந்த புனித இடத்திற்கு என்னை வரவேற்றதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னாரில் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையின் சக்தி வாய்ந்த சின்னம் என்று மடு மாதா ஆலயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸின் போர்வையில் இலங்கையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த முயற்சி

பிரான்ஸ் என்ற முகமூடி அணிந்து இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிக்கிறது. திருகோணமலையில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய புலனாய்வு சேவை கடுமையாக எதிர்த்துள்ளது என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

திருக்கோணமலை மாவட்டத்தில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தை அமைக்க பிரான்ஸ் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியின் குறுகிய நேர இலங்கை விஜயத்துக்கான நோக்கம் தற்போது வெளிப்பட்டுள்ளது.

திருகோணமலையில் பிரான்ஸ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தை அமைக்கும் கோரிக்கையை தேசிய புலனாய்வு சேவை கடுமையாக எதிர்த்து இந்த யோசனை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பிரதான பேசுபொருளாக காணப்படும் பின்னணியில் பிரான்ஸுக்கு இடமளித்தால் அது தவறான எடுத்துக்காட்டாக அமையும்.

பிரான்ஸை தொடர்ந்து அமெரிக்கா, சீனா, உள்ளிட்ட பலம்வாய்ந்த நாடுகளுக்கும் இலங்கையில் முகாமிட அனுமதி வழங்க நேரிடும்.

திருகோணமலைக்கு பிரான்ஸ் வரவில்லை நேட்டோவில் பாதுகாப்பில் மேற்குலகில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. உலகில் அதிகாரமிக்க மையமான இந்திய பெருங்கடல் எதிர்வரும் காலங்களில் ஆசியாவின் நூற்றாண்டு என அழைக்கப்படும் என்று இராணுவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உலகிலும், ஆசியாவிலும் பலமான போட்டி நாடுகளாக இந்தியாவும் சீனாவும் காணப்படுகின்றன. இந்திய பெருங்கடலின் முக்கிய கேந்திரமாக இலங்கை காணப்படுவதால் பலமிக்க போட்டி நாடுகள் இலங்கையில் ஏதாவதொரு வழியில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள ஆரம்பத்தில் இருந்து முயற்சிக்கின்றன.

அமெரிக்கா 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எக்சா,சோபா மற்றும் எம்.சி.சி. ஆகிய ஒப்பந்தங்கள் ஊடாக இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்தது. நல்லாட்சி அரசாங்கம் அதற்கு சார்பாக செயற்பட்டது. நாட்டு மக்களின் எதிர்ப்பை ஒன்றிணைத்து அமெரிக்காவின் முயற்சியை முறியடித்தோம்.

பிரான்ஸ் ஊடாக தனது நோக்கத்தை அடைய அமெரிக்கா முயற்சிக்கிறது. இலங்கையில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தை அமைக்க வேண்டிய தேவை பிரான்ஸூக்கு கிடையாது. பிரான்ஸ் என்ற முகமூடி அணிந்துக் கொண்டு எம்மை ஏமாற்ற முடியாது என்பதை அமெரிக்காவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கை வருகை

அமெரிக்க இராஜாங்கத்  திணைக்களத்தின் உலகளாவிய  ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்  ரிச்சர்ட் நெபிவ் இம் மாதம் 8 ஆம்  திகதி முதல் 9 ஆம்  திகதி வரை கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளதாக  கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

.அவருடன் வருகை தரும் தூதுக்குழுவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்பு ஆய்வாளர் டிலான் ஐகென்ஸ் அடங்குவார்.

கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்கம், எதிர்க்கட்சி, சர்வதேச நாணய நிதியம், தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர்களையும் நெபிவ் சந்திப்பார்.

ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகள், மற்றும் நாட்டிலுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகள் என்பன தொடர்பில் ஆராய்வதே அவரது வருகையின் நோக்கமாகும்.

கறுப்பு ஜூலை நினைவு தின புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்

கறுப்பு ஜூலையை குறிக்கும் விதத்தில் கொழும்பில் இடம்பெறும் புகைப்படக்கண்காட்சியொன்றை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பார்வையிட்டுள்ளார்.

கறுப்பு ஜூலையின் 40வது வருடத்தின் போது சந்திரகுப்த தேனுவர மற்றும் வளர்ந்துவரும் கலைஞர்களின் கலை விசேட கண்காட்சியை நான் பார்வையிட்டேன் என அவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

இந்த கலைப்படைப்புகள் கடந்த காலத்தின் காயங்களையும் அனைத்து இலங்கையர்களுக்குமான நியாயமான எதிர்காலத்தையும் வெளிப்படுத்தும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறன என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உண்மை, நல்லிணக்கம் மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளின் அமைதி நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகாரப்பகிர்வு, காணி விவகாரம் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினைகள் மற்றும் புதைகுழிகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடந்த இரண்டுதசாப்த காலமாக புவிசார்அரசியல் போட்டியினால் பாதிக்கப்பட்டுள்ளது – நாமல்ராஜபக்ச

இலங்கை கடந்த இரண்டுதசாப்த காலமாக புவிசார்அரசியல் போட்டியினால் பாதிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீனாவின் அரசதொலைக்காட்சியான சிஜிடிஎன்னிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் நட்புறவை வலுப்படுத்துவது குறித்த இலங்கையின் ஆர்வம் குறித்து நாமல்ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்கள் மத்தியிலான உறவுகளை மீள ஆரம்பிக்கவேண்டிய தருணம் இது என நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச அரசியல் கட்சிகள் அரசாங்கங்கள் மத்தியிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன் மாத்திரமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலான உறவுகளையும் வலுப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சீனாவும் நீண்டகால நண்பர்கள் இதன்காரணமாக இரு நாடுகளிற்கும் நன்மைகள் ஏற்பட்டுள்ளன மிகவும் நெருக்கடியான காலங்களில் சீனா இலங்கைக்கு ஆதரவாக விளங்கியுள்ளது அதேபோன்று சீனா எப்போதும் ஒரு சீன கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சீனாவிற்கு தற்போது விஜயம் மேற்கொண்டுள்ளார்,என சுட்டிக்காட்டியுள்ள நாமல்ராஜபக்ச வருட இறுதியில் ஜனாதிபதியும் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் ஏனைய மூலோபாய திட்டங்கள் மூலம் இருநாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச வல்லரசுகளின் போட்டியில் பல நாடுகள் பக்கம் சாய்வதை தவிர்க்கும் போக்கு அதிகரித்துள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள நாமல்ராஜபக்ச நாங்கள் வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என்ற புவியியல் வேறுபாடுகள் குறித்து கவனம் செலுத்தக்கூடாது நாடுகளிற்கு இடையில் சர்வதேச அபிவிருத்தி சகாக்கள் மத்தியில் பரஸ்பர நலன்கள் அடிப்படையில் இந்த விடயத்தை அணுகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் கடன்பொறி குறித்த கேள்விக்கு நாமல் ராஜபக்ச இது புவிசார்அரசியல் தொடர்பானது துரதிஸ்டவசமாக இலங்கை கடந்த இரண்டு தசாப்தங்களாக புவிசார் அரசியல் மோதலில் சிக்குண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மறுசீரமைப்பது குறித்து கருத்துதெரிவித்துவரும் அனேகமான உட்கட்டமைப்புகள் சீனாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டவை இது பொறி என்றால் முன்வந்து முதலீடு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அமெரிக்க இராஜதந்திரிகளை விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு பிளிங்கனுக்கு வலியுறுத்தல்

அண்மையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஏனைய தமிழ் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அமெரிக்க இராஜதந்திரிகளை அனுப்பி அவர்களின் விசாரணைகளை அவதானிக்க அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோணி பிளிங்கனை அமெரிக்கத் தமிழ் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தி உள்ளன.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) மனித உரிமைகள் அமைச்சினால் செயலாளர் பிளிங்கனுக்கு ஒரு கூட்டு கடிதத்தில் இந்த முறையீடு அனுப்பப்பட்டுள்ளது.

“இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சமீபத்திய செயல்பாடுகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் கூட்டாக எழுதுகிறோம், மேலும் எங்கள் கவலைகளை நிவர்த்தி செய்ய சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்தக் கவலைகளில் முக்கியமானது, இந்துக் கோயில்கள் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியச் சின்னங்களை அழிப்பதும், அதைத் தொடர்ந்து பௌத்தர்கள் யாரும் வசிக்காத தமிழ்ப் பகுதிகளில் புத்த கோயில்களைக் கட்டுவதும் ஆகும். இது இலங்கை பாதுகாப்புப் படையினரின் தீவிர ஆதரவுடனும் பாதுகாப்புடனும் செய்யப்படுகிறது” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

“தமிழர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது, ​​இலங்கை காவல்துறை அவர்களைத் துன்புறுத்தியது மற்றும் சமீபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஒன்பது மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) அரசியல் கட்சியின் சட்ட ஆலோசகர் திரு. சுஹாஷ் கனகரத்தினம் ஆகியோரைக் கைது செய்தது.”

“இந்த அரசியல் கட்சி உறுப்பினர்கள் உட்பட தமிழர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறையாமல் தொடர்கின்றன, அதே அரசியல் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான (எம்.பி.) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேறொரு கிராமத்தில் தனது தொகுதியினருடன் சந்திப்பு நடத்தியபோது, ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகள் சிவில் உடையில் குறுக்கிட்டனர். அவர்களின் அடையாளத்தைத் திரு.பொன்னம்பலம் கோரியபோதும் அவர்கள் இணங்க மறுத்துவிட்டனர். பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைநகர் கொழும்பில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்காகக் காத்திருக்கும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் ஒரு பெண் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டனர். ”

“தெளிவாக, தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சமூகத்தின் மீதான அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் தந்திரோபாயங்கள், தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும் வகையில் உள்ளன. இவை இலங்கை அரசாங்கத்தில் அதி உயர் மட்டத்தின் ஆதரவுடனே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றிய சவேந்திர சில்வா, அந்த அதிகாரத்தின் நெம்புகோல்களைக் கட்டுப்படுத்துகிறார்” எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்காக சவேந்திர சில்வா மீது விதிக்கப்பட்ட அமெரிக்கத் தடைகள் வெளிப்படையாக மீறப்பட்டு, அவர் தலைமை அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். சமீபத்தில் அவருக்குக் கூடுதலாக அளிக்கப்பட்ட இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சிவில் சமூகத்தின் மீதான அதிகாரங்கள், தமிழர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ள ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையைப் பயன்படுத்தி மீண்டும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு அவருக்குக் கூடுதல் ஊக்கத்தையும் தண்டனையின்மையையும் வழங்கியுள்ளன”

” குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களால் நாட்டை திவால் நிலையில் இருந்து பிணை எடுப்பு நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இந்த பாரதூரமான சூழ்நிலைக்குத் தீர்வு காணுமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.”

“கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து இராஜதந்திரிகளை அனுப்பி, நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போது அவதானிப்பதன் மூலம், அரசின் இத்தகைய செயல்பாடுகளைத் தடுப்பதற்கான முதல் படியை நீங்கள்எடுப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று இந்தக்கூட்டுக் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டுக் கடிதத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது:

1. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA); contact@fetna.org
2.இலங்கைத் தமிழ்ச் சங்கம்; President@sangam.org
3. ஐக்கிய தமிழ் அமெரிக்கர்கள் பிஏசி; info@tamilamericansunited.com
4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), மனித உரிமைகள் அமைச்சு; Secretariat@tgte.org
5. ஐக்கிய அமெரிக்கத் தமிழ் செயல் குழு (USTAG); info@theustag.org
6. உலகத் தமிழ் அமைப்பு; wtogroup@gmail.com

Posted in Uncategorized

இலங்கை நெருக்கடி நிலையில் இருந்து மீள இந்தியாவின் ஒத்துழைப்பு மிக அவசியம் – அமெரிக்க திறைசேரி செயலாளர்

இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென அமெரிக்காவின் திறைசேரியின் செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டியதும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் நடவடிக்கைகளை அவதானித்து வருவதுடன், கடந்த ஆறு மாதங்களில் பல்வேறு விடயங்களில் முன்னேற்றகரமான செயற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொள்ளும் கடன் அச்சுறுத்தல் பொருளாதாரத்திற்கும் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருவதுடன், இலங்கை போன்ற நாடுகளுக்கு உரிய தருணத்தில் முழுமையான கடன் நிவாரணங்களை வழங்குவதற்கு மேலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் திர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினரை மெளனமாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு கவலை

இலங்கையில் இன மத சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு கவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் செனெட் வெளிவிவகார குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டரில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலைசெய்யப்பட்டதை நான் வரவேற்க்கும் அதேவேளை அவர் கைதுசெய்யப்பட்டமை அச்சுறுத்தப்பட்டமை துன்புறுத்தப்பட்டமை குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என செனெட் குழுவின் தலைவர் செனெட்டர் மெனெட்டெஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு படையினர் புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள்  துன்புறுத்தல்கள் குறித்தும்  இனமத சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கான  நடவடிக்கைகள் குறித்தும் நான் கரிசனை கொண்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized