இலங்கைக்கான ஐ.எம்.எவ் உதவி தமிழ் மக்களுக்கு எதிரான கலாசார இனவழிப்பை மேற்கொள்வதற்கான உந்துசக்தியை வழங்கியுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டமானது, தமிழ்மக்களுக்கு எதிராகக் கலாசார ரீதியிலான இனவழிப்பை மேற்கொள்வதற்கான வலுவான உந்துசக்தியை மீண்டும் இலங்கைக்கு வழங்கியிருப்பதுபோல் தெரிவதாக ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

அண்மையகாலங்களில் நீராவியடி பிள்ளையார் கோயில், குருந்தூர்மலை சிவன்கோயில், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் என்பன உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் சைவசமய வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டுவரும் சம்பவங்களை அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு கடுமையாகக் கண்டித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டமையானது, தமிழ்மக்களுக்கு எதிராகக் கலாசார ரீதியிலான இனவழிப்பை மேற்கொள்வதற்கான வலுவான உந்துசக்தியை இலங்கைக்கு மீண்டும் வழங்கியிருப்பதுபோல் தெரிகின்றது என்றும் அக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டுமொருமுறை சர்வதேச சமூகத்தை வெற்றிகரமாக ஏமாற்றிவிட்டார் என்று சுட்டிக்காட்டியுள்ள ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு, இந்த அட்டூழியங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் பாராமுகமாக இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாறும் அக்குழு அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள்; அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையில் கடந்த ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழலில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு விசாரணை செய்து அவர்களை தண்டிக்க அரசாங்கம் குறைந்தபட்ச நடவடிக்கைகளையே எடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த மே 9 அன்று கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்முறை சம்பவத்தின் பின்னர் 3,300 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 2,000 ற்கும் அதிகமானோர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அரசாங்கம் அறிவித்தது.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய அனுமதிக்கு அமெரிக்கா வரவேற்பு

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, பொருளாதார மீட்சிக்கான பாதையின் ஒரு முக்கியமான படி இதுவென்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும் என்றும் வேலைத்திட்டங்கள் மற்றும் பொருளாதாரம் பாதையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அனைவரும் பயன்பெறும் வகையில் சிறந்த நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு தீர்வு காணும் கட்டமைப்பு மற்றும் நீடித்த சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் நாடு எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள்வதற்கு வலுவான சீர்திருத்தங்கள் அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழலுக்கு எதிரான சட்டத்தை மறுசீரமைப்பது உட்பட ஊழலைச் சமாளிக்கும் முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

உறுதியான வங்கி முறையை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்றும் நிதி மேற்பார்வை மற்றும் நெருக்கடி மேலாண்மை கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் இலங்கைக்கு தற்போது அவசியம் – அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie Chung) தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிக்க அமெரிக்கா வழங்கிய புலனாய்வுத் தகவல்களே உதவின – அலி சப்றி

திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார்.

இது முழுமையான முட்டாள்தனம் என பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கும் எவரும் இராணுவதளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ஆனால் அதன் அர்த்தம் நாங்கள் தனிமையில் வாழ முடியும் என்பதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது நீண்ட காலமாக தொடரும் ஒன்று இது அமெரிக்காவுடன் மாத்திரமானதல்ல என தெரிவித்துள்ள அலி சப்ரி இந்தியா சீனா ஜப்பானுடனும் நீண்டகால பாதுகாப்பு உறவுகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் போர்க்கலங்கள் வருகின்றன கூட்டு ஒத்திகைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது புதிய ஒழுங்குமுறையின் ஒரு பகுதி அனைவரும் இதனை அறிந்துகொண்டுள்ளனர் உணர்ந்துகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அதற்கு அப்பால் பல விடயங்கள் குறித்த கருத்துபரிமாற்றத்திற்கான வலையமைப்பை கொண்டிருப்பது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே உதவின என்பது எங்களிற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லைகளை கடந்து நாங்கள் எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்பட்டிருக்காவிட்டால் எங்களால் விடுதலைப்புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என தெரிவித்துள்ள அலிசப்ரி இவ்வாறான செயற்பாட்டின் மூலம் எங்களால் விடுதலைப்புலிகளின் ஆயுதவிநியோகத்தை முடக்க முடிந்தது – அவர்களின் நிதி திரட்டும் நடவடிக்கைகளை முடக்கினோம் சர்வதேச அளவில் அவர்களை தடை செய்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் சரியாக நினைவில் வைத்திருப்பீர்கள் என்றால் விடுதலைப்புலிகளின் 9 ஆயுதகப்பல்களை இலங்கை கடற்படை அழித்தது இது எங்களது புலனாய்வு பிரிவினர் அமெரிக்க புலனாய்வு பிரிவினருடன் ஒத்துழைத்ததன் காரணமாகவே சாத்தியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

புலனாய்வு தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ள இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்: கம்மன்பில

இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் ‘புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்’ ஒன்றை ஸ்தாபிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் கூட்டணி காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை வந்த அமெரிக்காவின் சி.ஐ.ஏ.பிரதானி வில்லியம் பேர்ன் உள்ளிட்ட 22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக அவர் கூறினார்.

அதில், இலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் ‘புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம் ‘ஒன்றை ஸ்தாபித்தல், இரண்டாவது விஞ்ஞான பூர்வ குடியகழ்வு கட்டுப்பாட்டு முறைமையை இலங்கை விமான நிலையங்களில் ஸ்தாபித்தல், மூன்றாவது இலங்கையுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு தொலைபேசி வலையமைப்பு தொடர்பான தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளல் மற்றும் சோபா ஒப்பந்தத்தை விரைவாக கைச்சாத்திடல் உள்ளிட்ட நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக கம்மன்பில தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட இந்த நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரச தலைவர்களுக்கு வழங்காத உயர்பட்ச பாதுகாப்புடன் கடந்த மாதம் 14ஆம் திகதி, அமெரிக்காவின் 22 முதனிலை பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை உடன் நடத்த அமெரிக்க செனட்டின் வௌியுறவு குழு வலியுறுத்தல்

இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நியாயமான உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

டுவிட்டர் செய்தியொன்றில் அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் குரல்கள் ஒலிக்காமலிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் மறுக்க முடியாதபடி ஜனநாயக விரோதமானது இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயல் என அமெரிக்க செனெட் குழு தெரிவித்துள்ளது.

இறுதிப் போரில் 9 கப்பல்களை அழிக்க அமெரிக்காவே உதவியது – அலி சப்றி

தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படுதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த ஒன்பது கப்பல்களை எமது படையினர் வெற்றிகரமாக அழிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் உறுதுணையாக அமைந்தது என்பதை மறந்து விடக்கூடாது என்றும் தெரிவித்தார். நேற்று பாராளுமன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் மக்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவர்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் அவர்களின், மொழி, கலாசாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இன மற்றும் மத பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் பல்தன்மை ஒருமைப்பாட்டுடன் இவ்வாறு ஆரம்பிக்கப்படும் பயணமே வெற்றி பெற முடியும் அதன் மூலமான பொருளாதார முன்னேற்றமே நிலையானதாக அமையும்.

நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த ஒன்பது கப்பல்களை எமது படையினர் வெற்றிகரமாக அழிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் உறுதுணையாக அமைந்தது என்பதை மறந்து விடக்கூடாது. அந்த வகையில் சர்வதேச நாடுகளுடனான நல்லுறவுக்கு முன்னாள் வெளிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் செயல்பாடுகள் மிகவும் காத்திரமானதாக அமைந்தது என்றும் மறந்துவிடக்கூடாது – என்றார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலர் – அமெரிக்க பிரதிநிதிகள் குழு இடையே பேச்சுவார்த்தை

இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்களில் செவ்வாய்க்கிழமை (14) இரவு நாட்டை வந்தடைந்த அமெரிக்க பிரதிநிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆகியோரை சந்தித்தனர்.

செவ்வாய்க்கிழமை (14) இரவு இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்களில் நாட்டை வந்தடைந்த தூதுக்குழுவிற்கு இந்திய-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணை பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி. ரோயல் தலைமை தாங்கினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆகியோரை அமெரிக்க பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தனர்.

அமெரிக்க – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஸ்திரத்தன்மை மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரி அடங்கிய குழுவினர் இலங்கைக்கு

அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரி உட்பட 20 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சிறப்பு விமானங்களில் அவர்கள் நேற்று மாலை பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அமெரிக்க தூதுக்குழுவின் வருகையையொட்டி விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் மூன்று நாட்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Posted in Uncategorized