குருந்தூர்மலை விவகாரம்: அடையாள தூண்களை அகற்ற எவருக்கும் உரிமை இல்லை – சரத் வீரசேகர

குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் மற்றும் அடையாளமிட நடப்பட்ட துண்களை அகற்ற எவருக்கும் உரிமை இல்லை. பேச்சு மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண தயாராக உள்ளோம். பலவந்தமான முறையில் எவருக்கும் இடமளிக்க முடியாது – என்று கூறியிருக்கிறார் சரத் வீரசேகர எம். பி.

நேற்று மஹகர பகுதியில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் நாடு முழுவதும் பௌத்த சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் காணப்படுகின்றன. வடக்கு – கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகளை அடிப்படையாக கொண்டு எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை அந்த மாகாணங்களின் அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளின் அனுசரனையுடன் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன. குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மற்றும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட விடயம் பொய் என்பதை தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுர மானதுங்க தெளிவுபடுத்தவில்லை. குருந்தூர் மலையில் தமிழர்கள் விவசாயம் செய்தனர் என்று தமிழ்த் தரப்பு குறிப்பிட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது – என்றும் கூறினார்

மக்கள் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத போதும் வட,கிழக்கு அரசியல்வாதிகளே மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள் – பொதுஜன பெரமுன

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத சிறந்த தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். அரசியல் இலாபத்தைக் கருத்தில் கொண்டு தொல்பொருள் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க இடமளிக்க முடியாது என்று பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

குருந்தூர்மலை விகாரைக்காக காணிகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பு தொடர்பில் அண்மைநாட்களாக பலத்த விமர்சனங்கள் தென்னிலங்கையில் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை பெரமுன கடசியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்.

இதன்போது ஜனாதிபதிக்கு தாம் கூறியவை என்று சாகர காரியவசம் கூறிய விடயங்கள் வருமாறு, பௌத்த மதத்தை பாதுகாக்கும் பொறுப்பு அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அந்த பொறுப்பில் இருந்து எவரும் விலக முடியாது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் சின்னங்களை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் அரசியல் செய்கிறார்கள்.

சாதாரண மக்கள் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். குறுகிய அரசியல் இலாபத்தை முன்னிலைப்படுத்தி தொல்பொருள் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க இடமளிக்க முடியாது.

குருந்தூர் மலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்பதை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்துகிறோம். குருந்தூர் மலை விவகாரத்தில் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய செயல்படுவது அத்தியாவசியமானது – என்றார்.

குருந்தூர் காணிகள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களை நாடுவோம் – பெளத்த தேரர்கள் எச்சரிக்கை

தொல்லியல் என குறிப்பிட்டுக் கொண்டு பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்த கூடாது. குருந்தூர் விகாரைக்கு சொந்தமான காணிகளை அடையாளப்படுத்தி விட்டு சாதாரண மக்களுக்கு சொந்தமான காணிகளை உரியவர்களுக்கு வழங்கலாம் ஆகவே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அளவீடு செய்யப்பட்டுள்ள நடுகை தூண்களை அகற்றுமாறு ஜனாதிபதி குறிப்பிட்ட கருத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி தொல்பொருள் மரபுரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குருந்தூர் விகாரை விவகாரத்தை மகாநாயகரிடம் கொண்டு செல்வோம் என பௌத்த மத தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குருந்தூர் விகாரையின் விகாராதிபதி – கல்கமுவே சத்தபோதி தேரர்

குருந்தூர் மலை விகாரை மற்றும் காணி ஆகிய விடயங்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதிக்கும், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தற்போது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இதன் பெறுபேறாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த அனுர மனதுங்க பதவி விலகியுள்ளார்.

குருந்தூர் மலைக்கு சொந்தமான காணி அதிகம் அநுராதபுரம் மகா விகாரையை காட்டிலுல் குருந்தூர் விகாரைக்கு நிலப்பரப்பு அதிகம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரை நோக்கி நேரடியாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மகா விகாரையின் நிலப்பரப்பு 100 ஏக்கர் கூட இல்லை அவ்வாறு இருக்கையில் குருந்தூர் விகாரையின் காணி எவ்வாறு அதிகரிக்க கூடும் என ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மகா விகாரை புத்தசாசனத்தின் ஆரம்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளதால் அதனை மகா விகாரை என்று குறிப்பிடுகிறோம்.

மகா விகாரைக்கு 2000 ஏக்கர் நிலப்பரப்பு சொந்தமாக உள்ளது. அபயகிரி விகாரை, இசுறுமுனி விகாரை மற்றும் ஆகிய புனித விகாரைகளை உள்ளடக்கியுள்ளது.

மிகிந்தலை விகாரை 500 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இந்த காரணிகளை அடிப்படையாக கொண்டே மகா விகாரையின் நிலப்பரப்பு அதிகம் என்று குறிப்பிடப்படுகிறது. இதனை ஜனாதிபதி,தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

குருந்தூர் மலையில் தமிழர்களுக்கு சொந்தமான காணி காணப்படுமாயின் அவற்றை விடுவிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டு காலமாக தமிழர்கள் விவசாயம் செய்த காணிகளை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு குருந்தூர் விகாரைக்கு சொந்தமான காணி அளவிடப்பட்டு 1933 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.78 ஏக்கர் நிலப்பரப்பு வர்த்தமானி ஊடாக குறுந்தூர் விகாரைக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

குருந்தூர் மலையில் பௌத்த தொல்பொருள் சின்னங்கள் காணப்படுவதால் அதனை ஆயவு செய்வதற்காகவே மேலதிகமாக 223 ஏக்கர் காணி தொல்பொருள் பாதுகாப்பு பகுதியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டது.

தமிழர்களின் காணிகளை தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தப்படவில்லை. வன அழிப்பு ஊடாக குருந்தூர் மலைக்கு சொந்தமான காணிகள் அழிக்கப்பட்டுள்ளன.

தமிழ் பிரிவினைவாதிகளின் கருத்துகளுக்கு கவனம் செலுத்தாமல் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

மக்கள் பேரவை –ஓமல்பே சோபித தேரர்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் மரபுரிமைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட கூடாது. குருந்தூர் விகாரை மற்றும் குருந்தூர் மலையில் உள்ள பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்றார்.

தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் – கஸ்ஸப்ப தேரர்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க பதவி விலகியமை தவறானது. ஜனாதிபதியின் சட்டவிரோத கட்டளைக்கு எதிராக போராடியிருக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தொல்பொருள் திணைக்கள பணிப்பாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியம் இராசமாணிக்கத்தை தொல்பொருள் மற்றும் மரபுரிமைகள் அமைச்சராக நியமிக்க வேண்டும். இதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த மரபுரிமைகள் பாதுகாக்கப்படும்.

குருந்தூர் மலைக்கு சொந்தமான காணிகளை அரசியல் நோக்கத்துகாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயம் தொடர்பில் வெகுவிரைவில் மகாநாயக்க தேரர்களை நாடுவோம் என்றார்.

33 வருடங்களாக இலங்கை இராணுவத்தால் அபகரிக்கப்பட்டிருந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

மகாவலி ஜே வலயத்துக்குரிய தகவல்களை அரச அலுவலர்கள் வழங்கக் கூடாது என முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் ஜே வலயத்துக்கு கோப்பட்டுள்ள தகவல்களை பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர் வழங்கக் கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டத்தின் ஊடாக ஜே வலயத்தை முன்னெடுப்பதற்குரிய தரவுகள் அதன் கீழ் உள்ளடங்கும் பிரதேச செயலாளர்களிடம் கோரப்பட்டிருந்தன. 37 கிராம அலுவலர் பிரிவுகள் இதனில் உள்ளடங்குகின்றன.

இந்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. மகாவலி எல் வலயத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சுட்டிக் காட்டப்பட்டது. இந்த வலயத்தில் முல்லைத்தீவில் 34 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கியிருந்தன. இந்தப் பகுதி மக்களும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மகாவலி ஜே வலயத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தகவல் வழங்குவதில்லையென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியாக கலந்துரையாடப்படும் என நேற்றைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட இநாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் 125 ஏக்கர் காடு அழிப்பு : அதிகாரிகள் மெத்தனபோக்கு

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு, சுந்தரபுரம் பகுதியில் 125 ஏக்கர் வனப்பகுதி தனிநபர்களால் பூரணமாக அழிக்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப்பகுதி முற்றாக அழிக்கப்பட்டு துப்பரவு பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் வனவள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் காணி அற்ற நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற நிலையில் உழுந்து விதைத்தாலே வனவள அதிகாரிகள் தம்மை கைது செய்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு வனவள அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமை தமக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தவதாக மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரிடம் மக்கள் தெரியப்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.

வெடுக்குநாறி மலையில் ஏணிப்படி வைத்தமைக்காக தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து கோவில் நிர்வாகம் விடுதலை

வவுனியா வெடுக்குநாறிமலையில் ஏணிப்படி பொருத்தியமை தொடர்பாக நெடுங்கேணி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கு போதிய சான்றுகள் இன்மையால் குறித்த வழக்கில் இருந்து ஆலயப்பூசகர் மற்றும் நிர்வாகத்தினர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி திருஅருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆலயத்தில் மரத்திலான ஏணிப்படி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனை சீரமைத்து ஏணிப்படி ஒன்று அமைக்கப்பட்டமை தொடர்பாக வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஏணிப்படியை சீரமைத்தமைக்கான சான்றுகள் இல்லை என அரச சட்டவாதிகளால் இன்றையதினம் நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த மூன்று பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர் என்றார்

தையிட்டி விகாரை இரகசியமாகத் திறந்து வைப்பு; வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்களில் சிங்கள பெளத்தர்கள் வருகை

யாழ்ப்பாணம் – தையிட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்ப்புக்களுக்கு மத்தியில் விகாரை இன்று காலை 5.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் தையிட்டி விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பகுதிக்கு பிரவேசிக்க ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேனை தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரியும் 3வது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இரகசியமாக விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் அளவீடுகளை நிறுத்த உத்தரவு

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த அளவீட்டு பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு புத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உத்தரவிட்டார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிற்குமிடையில் இன்று நடந்த சந்திப்பின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் அரச தரப்பில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அமைச்சின் செயலாளர், தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய திணைக்களங்களின் பணிப்பாளர்களும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் கட்சிகள் தரப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோரும், ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் சிங்கள பௌத்தத்திற்கு முன்னதாக தமிழ் பௌத்தம் நிலவியதை சுட்டிக்காட்டிய தமிழ் எம்.பிக்கள், வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லையென்றும், ஆனால், சைவ வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டு, பௌத்த வழிபாட்டிடங்கள் அமைக்கப்படுவதை எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

உருத்திரபுரம் சிவன் கோயில், குருந்தூர் மலை, தையிட்டி விவகாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

குருந்துர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறியும், தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள்ளும் விகாரை கட்டப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியபோது, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் வில்லங்கமான விளக்கங்கள் அளித்தார்.

குருந்தூர் மலையில் முன்னர் விகாரை இருந்ததாகவும், வெளிநாட்டு சிங்கள அமைப்புக்களின் நிதியுதவியிலேயே விகாரை அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு தமிழ் தரப்பினர், வெளிநாட்டிலுள்ள தமிழ் தரப்பிலிருந்து நிதி திரட்டி தந்தால், பொலன்னறுவையில் மிகப்பெரிய சைவக்கோயில் கட்ட முடியுமா என கேள்வியெழுப்பினர்.

தமிழ் தரப்பினர் தொல்லியல் முக்கியத்துவங்களுள்ள பகுதிகளை அபகரிக்க முயல்வதாகவும், அதனாலேயே நில அளவீடு செய்வதாகவும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.

ஆலய காணிகளை தமிழ் மக்கள் அபகரிப்பதில்லையென்பதை தமிழ் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

தமிழ் தரப்பினர் தெரிவித்த விவகாரங்களிற்கு தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நீண்ட விளக்கங்கள் அளிக்க முற்பட்ட போது, கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளியுங்கள் என அமைச்சர் காட்டமாக கூறினார்.

இதன்படி, உருத்திரபுரம் சிவன் ஆலயம் உள்ளிட்ட வடக்கு கிழக்கிலுள்ள சை ஆலயங்கள், வழிபாட்டிடங்களில் அளவீட்டு பணிகளை உடனடியாக நிறுத்த அமைச்சர் உத்தரவிட்டார்.

குருந்தூர் மலைக்கு நீதவான் சென்று பார்வையிட்ட பின்னர் கூடித் தீர்மானம் எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

திருகோணமலை ஸ்ரீ லங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காணி விமானப்படை முகாமுக்கு வழங்க முயற்சி

திருகோணமலை மாவட்டம் குச்சிவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட பகுதியில் உள்ள 298 ஏக்கர் காணியில் உள்ள ஒலிபரப்புக் நிலையம் மூடப்பட்டு விமான படை முகாம் ஒன்றை நிர்மாணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஸ்ரீ லங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் இந்த காணி கடந்த 75 வருடகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காணியில் பிரத்தியேக ஒலிபரப்புக் நிலையம் அமைந்துள்ளது. உலகில் மிகப்பெரிய பிராந்தியங்களை உள்ளடக்கிய சிறு மற்றும் நடுத்தர அலைகளை ஒளிப்பரப்புகிறது.

இவ்வாறான ஒலிபரப்பு நிலையம் ஓமானில் உள்ளதுடன் அது தற்போது முழு நேரமும் இயங்குவதில்லை.குறைந்த செலவில் நீண்ட தூரம் செல்லும் இந்த அலைவரிசைகளை உலகின் பெரும்பாலான நாடுகள் மதம் மற்றும் ஏனைய பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றன. தற்போதைய வானொலியின் கீழ் சுமார் 75 ஆயிரம் டொலர்கள் வருமானம் பெறுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த பகுதி வலுவான அலைகள் இருக்கும் பகுதி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் 2021 ஆம் ஆண்டு வருமானத்தை ஈட்டிக் கொள்ளாத, பயன்படுத்தாத அரச வளங்களை மறுசீரமைப்பது தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்த அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு அமைய வானொலி கூட்டுத்தாபனம் முறையான,சிறந்த நடவடிக்கைளை பின்பற்றி கனடா நாட்டு நிறுவனத்துடன் ஒன்றிணைந்து சூரிய சக்தித் திட்டத்தை ஆரம்பிக்கும் பணிகளை மேற்கொண்டது.

இதற்கமைய இந்த காணியை இலவச மானியப் பத்திரம் மூலம் ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்துக்கு மாற்றி உரிய செயற்திட்டத்துக்கு அமைய வருமானம் ஈட்டவும்,அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியத்தை இடைநிறுத்தவும் அமைச்சரவை இரண்டாவது அங்கீகாரம் வழங்கியது.

இதன்படி ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மேற்படி விதிவிலக்கு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், அனைத்துப் பரிந்துரைகளையும் பெற்றதன் பின்னர் இறுதி எழுத்துப்பூர்வ அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்களை காணி அமைச்சு 2023.04.11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் கையளித்தது.இந்த ஆவணங்களை முறையாக ஆராயாமல்,சுற்றுச்சூழல் தொடர்பில் அவதானம் செலுத்தாமல் ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தை மூடி விட்டு விமானபடை முகாம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ஆராய விமானப்படையின் அதிகாரிகளை நியமித்தார்.

இதனடிப்படையில் விமானப்படையின் குழு ஒன்று 2023.05.03 ஆம் திகதி விமானப்படையின் குழுவினர் திருகோணமலைக்கு சென்று நில அளவை நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

திருகோணமலை மாவட்டத்தில் படை முகாம்கள் காணப்படுகின்ற நிலையில் இந்த பகுதிக்கு மேலதிகமாக விமானப்படை முகாம் ஒன்று தேவையில்லை என சிவில் உரிமைகள் அமைப்பு குறிப்பிடுகின்றமை கவனத்துக்குரியது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி உட்பட உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக சிவில் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.