துணுக்காய், மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கில் 30 க்கும் அதிகமான கிராம அலுவலர் பிரிவுகளில் தமிழர் காணிகள் கபளீகரம்

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ‘ஜே’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளும் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவும் உள்வாங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் ஏற்கனவே ‘எல்’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 34 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

அவற்றில் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 8 கிராம அலுவலர் பிரிவுகளை உடனடியாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் அரசியல்வாதிகளின் தலையீட்டையடுத்து அது ஒத்திப்போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதிதாக ‘ஜே’ வலயம் உருவாக்கப்பட்டு அதனுள் முல்லைத்தீவின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து 15 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு உள்வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதும் அங்கு எத்தனை கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்படுகின்றன எனத்தெரிவிக்கப்படவில்லை.

மேலும் இதே ‘ஜே’ வலயத்தினுள் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவின் 15 கிராம அலுவலர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

மகாவலி ‘ஜே’ வலயத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள அரச மற்றும் தனியார் காணி விபரங்கள், வீதிகள், அங்குள்ள குளங்கள், வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள், முன்னெடுக்க திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகள் உட்பட அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு மகாவலி அபிவிருத்தி அதி காரசபையால் கடந்த 2ஆம் திகதி தனிச் சிங்கள மொழியில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் ஏற்கனவே பல்வேறு அரச திணைக்களங்களாலும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது.

 

நில அபகரிப்புகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் – பிரித்தானியா

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் நில அபகரிப்புகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் தெற்காசிய இராஜாங்க அமைச்சர் அஹ்மட் பிரபு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் என்ன விடயங்களை முன்வைத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பேரவையில், 51-1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான சர்வதேச முயற்சிகளை ஐக்கிய இராச்சியம் வழிநடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது, இலங்கை தொடர்பாக அறிக்கையிடுவதற்கும் கடந்தகால மனித உரிமை மீறல்களின் ஆதாரங்களை பாதுகாப்பதற்கும், எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளில் பயன்படுத்துவதற்கும், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு உதவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரியில் இலங்கையின் உலகளாவிய காலமுறை மீளாய்வின் போது வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட வலியுறுத்தல்களை பிரித்தானியா வழங்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கெளதாரி முனையில் தனியார் நிறுவனத்துக்காக நில அளவீடு : மக்கள் கடும் எதிர்ப்பு

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனை பகுதியில் 98 ஏக்கர் காணியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் நோக்கில் நில அளவீடு மேற்கொள்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கௌதாரி முனை கிராம அலுவலர் பிரிவில் இறால் வளர்ப்பு திட்டத்திற்கு 98 ஏக்கர் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்கில் இன்றைய தினம் (04-04-2023) நில அளவீடு செய்ய முற்பட்டபோது நில அளவீட்டுப் பணிகள் பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளின்மை 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த காணிகள் இன்றி வாழுதல் என பல்வேறு காணித் தேவைகள் உள்ள போதும் இருக்கின்ற போதும் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் அரச காணிகள் உள்ளடங்களாக 98 ஏக்கர் காணியை தனியார் தனியாருக்கு வழங்கும் நோக்கில் நில அளவீடு செய்வதற்கான நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் குறித்த அளவீட்டுப்பணிகள் தடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு காணித்தேவைகள் உள்ள நிலையில் தமது பகுதியில் உள்ள காணிகளை வழங்க முடியாது என்றும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்

இன்று காலை நில அளவீட்டினை மேற்கொள்வதற்காக நில அளவீட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் நில அளவீடு செய்வதற்கு சென்றபோது பொதுமக்களால் குறித்த நில அளவீட்டுப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு பூநகரி பிரதேச செயலாளர் த.அகிலன் சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடியுடன் இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்

தம்பாட்டி இறங்குதுறை காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஊர்காவற்துறை மீனவர்களுக்கு சொந்தமான தம்பாட்டி இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடற்படையினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் குறித்த அரச காணியிலிருந்து கடற்படையினர் வெளியேறாத நிலையில், நில அளவை திணைக்களத்தினர் அந்த காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு சென்ற நிலையில் மக்கள் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருநாட்டுக்கேணி தமிழர் பூர்வீக காணிகளில் சிங்களக் குடியேற்ற முயற்சி ; மக்கள் கடும் எதிர்ப்பு

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசச்செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான கருநாட்டுக்கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்களக்குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

குறிப்பாக கருநாட்டுக்கேணிப் பகுதியில் பொலிஸ் நிலையத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய காணிகளே, இவ்வாறு அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் கீர்த்தி தென்னக்கோனின் வழிகாட்டலில், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினாலேயே இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் அவ்வாறு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை பார்வையிடுவதற்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் 03.04.2023 இன்று கருநாட்டுக்கேணிப் பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டிற்கு காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

கடந்த 1973, 1979ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்ட இக் காணிகளில் தாம் குடியிருந்ததுடன், பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாகவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

தமது பூர்வீகமான இக்காணிகளில் சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு தாம் ஒருபோது இடமளிக்கமுடியாதெனவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நீர்ப்பாசன வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா பகுதி சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களுக்குச்சொந்தமான மானாவாரி விவசாய நிலங்கள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் தற்போது தமிழ் மக்களின் குடியிருப்புக் காணிகளையும் அபகரிப்புச்செய்து அங்கு சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களை மேலும் அதிர்ப்திக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குருந்தூர்மலை காணி அளவீடு மக்கள் எதிர்ப்பால் இடைநிறுத்தம்!

கடந்த 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு தமிழ்மக்கள் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்படவில்லை.

எனவே முதலில் தம்மை மீளக்குடியமர்த்துமாறு தண்ணிமுறிப்பு தமிழ் மக்கள் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் திருமதி. உமாமகள் மணிவண்ணனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குருந்தூர்மலைப்பகுதியில் இன்று (23) தொல்லியல் திணைக்களத்திற்கு காணி அளவீடு செய்வதற்கென கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர், காணி உத்தியோகத்தர்கள், நிலஅளவைத்திணைக்களம் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

இதன்போதே தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் இக் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

அதேவேளை தொல்லியல் திணைக்களத்திற்கான நிலஅளவீட்டு முயற்சி, அப்பகுதித் தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

1933ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானித் தகவலின்படி குருந்தூர்மலைக்குரிய தொல்லியல் பிரதேசமாக சுமார் 78ஏக்கர் காணி காணப்படுவதாக தொல்லியல் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.

அதேவேளை வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களம் சுட்டிக்காட்டும் குறித்த 78ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக, பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் விவசாய நிலங்களை கடந்த 2022ஆம் ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி தொல்லியல் திணைக்களம் அபகரித்ததுடன், அத்துமீறி எல்லைக் கற்களும் நாட்டியிருந்தது.

அவ்வாறு தொல்லியல் திணைக்களத்தால் அத்துமீறி அபகரிக்கப்பட்ட பகுதிகளுக்குள், தண்ணிமுறிப்பு தமிழ் மக்களுக்குரிய குடியிருப்புக்காணிகள், பயிர்ச்செய்கைக்காணிகள், பாடசாலைக் காணி, தபால்நிலையக்காணி, நெற்களஞ்சியசாலைக்குரிய காணிகள் என்பன அடங்குகின்றன.

இந் நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய அடாவடிச் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத்தெரிவித்து தண்ணிமுறிப்புத் தமிழ் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறான சூழலில் அண்மையில் வவுனியாவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குருந்தூர்மலை தொல்லியல் பிரதேசத்திற்கென, வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களம் சுட்டிக்காட்டும் 78ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக ஐந்து ஏக்கர் காணிகள் மாத்திரமே எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அதன்படி தொல்லியல் திணைக்களம் கோருகின்ற 78ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக, மேலும் ஐந்து ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து எடுத்துக்கொள்வதற்கு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர், காணி உத்தியோகத்தர், மற்றும் நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் குருந்தூர் மலைப்பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.

குறித்த நில அளவீட்டுக்கு தண்ணிமுறிப்பு பகுதி தமிள் மக்கள் தமது கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அசாதாரண நிலமை காரணமாக தாம் அப்பகுதியில் இருந்து வெளியேறியபோதும் இதுவரையில் தமது பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.

எனவே தொல்லியல் திணைக்களம் அபகரித்துள்ள தமது குடியிருப்பு மற்றும், விவசாயக்காணிகளை விடுவித்து, முதலில் அக்காணிகளில் தம்மை மீளக்குடியமர்த்துமாறு அங்கு வருகைதந்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி. உமாமகள் மணிவண்ணனிடம் வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்த பாரதேசசெயலாளர், முதலில் ஐந்து ஏக்கர் காணிகள் தொல்லியல் திணைக்களத்திற்கு அளவீடு செய்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அபகரித்து வைத்துள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, வனவளத் திணைக்களத்திடம் வழங்கப்பட்ட பிற்பாடு, வனவளத் திணைக்களத்திடமிருந்து காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுமெனவும் பிரதேசசெலாளர் தெரிவித்தார்.

எனினும் பிரதேசசெயலரின் இக்கருத்தினை ஏற்கமறுத்த தமிழ் மக்கள், யுத்தம் மௌனிக்கப்பட்டு சுமார் 13வருடங்களுக்கு மேலாகின்றபோதும் தாம் தமது பகுதிகளில் இதுவரை மீள்குடியேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், இனியும் தாம் யாரையும் நம்பத் தயாரில்லை எனவும், முதலில் தமது காணிகளால் தம்மை மீளக்குடியிருத்துமாறும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் மக்களின் எதிர்ப்பநிலைமையாலும், தொல்லியல் திணைக்களம் அங்கு வருகைதராமையாலும் அளவீடு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகத் தெரிவித்து பிரதேசசெயலாளர், காணி உத்தியோகத்தர்கள், நிலஅளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் ஈழ விடுதலை  இயக்கத்தை(ரெலோ) சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தல்செவன விடுதி அமைந்துள்ள திருகோண சத்திர காணியை மீட்டுத் தர சஜித்திடம் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் “தல்செவன” விடுதி அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த “திருகோண சத்திரம்” எனும் சிவபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான காணியினை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரிடம் அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவரும் , சிவபூமி அறக்கட்டளை தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தான் எதிர்க்கட்சி தலைவரிடம் அவ்வாறு கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், சந்திப்பின் போது , எதிர்க்கட்சி தலைவரிடம் கீரிமலை காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இருக்கின்ற கோயில்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதை விடுவிக்கின்ற முயற்சியினை முன்னெடுக்க வேண்டும்.

அதேபோல் தல்செவன விடுதிக்கென பயன்படுத்தப்படுகின்ற 200 வருடம் பழமை வாய்ந்த திருகோணசத்திரம் என்கின்ற சிவ பூமி அறக்கட்டளைக்குரிய அந்த நிலத்தினை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அத்துடன் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, மற்றும் இராமநாதன் இந்து கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளும் பேருந்து இல்லாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கு பேருந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அதற்கு பேருந்தை வழங்க முடியும். அதனை பரிசீலித்து விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

மேலும் வீட்டுத்திட்டத்தை உங்களுடைய தந்தையார் பிரேமதாசா அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அது ஒரு நல்ல பணி இருநூறு வருடமாக மலையகத் தமிழர்கள் இன்னும் அடிமையாக வீடு வாசல் இல்லாது இருக்கின்றார்கள் அவர்களுக்கும் நன்றியோடு வீட்டு திட்டம் வழங்குகின்ற முயற்சியில் தாங்கள் ஈடுபட வேண்டும் எனவும் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம்” என தெரிவித்தார்.

படையினரால் அபகரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக்குடியேறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவில்லை

பலாலியில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்றும் தாங்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பலாலி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து பலாலி வடக்கு வசாணி பகுதியை சேர்ந்த தேவமலர் என்ற பெண் கருத்து தெரிவிக்கையில்,

அண்மைய நாட்களாக பலாலி பகுதியில் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பான செய்திகளை நீங்கள் அதிகம் பார்த்திருப்பீர்கள். 1990 ஆண்டு யுத்தம் காரணமாக தனது தாய் இடம் பெயர்ந்து சென்றனர்.

ஆனால் நாங்கள் இங்கே பிறக்கவில்லை. எங்கள் சொந்த நிலத்தை இப்போது தான் நாங்கள் பார்க்கின்றோம். இங்கு இருந்து இடம் பெயர்ந்த பின்னர் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தோம். தற்போதும் அனுபவித்து வருகிறோம். எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத முகாம்களில் தங்க வைக்கப்பட்டோம்.

ஒழுங்கான மலசல கூடம் இல்லை. கிணறு இல்லை, முகாம்களின் அருகில் வசிக்கும் மக்களின் வீடுகளில் அவற்றுக்காக சென்றோம். தற்போது கூட இங்கு மலசல கூட வசதி, நீர் வசதி மின் வசதி, இல்லாமல் கடற்கரைகளில் நாங்கள் எமது தேவையை பூர்த்தி செய்கிறோம்.

காணிகளை விடுவித்தது எமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இன்னும் பல இடங்கள் விடுவிக்க வேண்டியுள்ளது. அந்த மக்களின் சந்தோசங்களையும் நாங்கள் பார்க்க வேண்டும்.

தற்போது காணிகளை விட்டும் எங்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை. வீடு சீரமைப்பதாக இருந்தாலும் காணி துப்பரவாக்குவது என்றாலும் நீங்கள் வழங்கும் பணம் போதுமானதாக இல்லை.

இந்த கடற்கரையின் வருமானத்தை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். எனவே விரைவில் எங்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய உதவிகளையும் மலசல கூட வசதி, நீர் வசதி, மின்சார வசதிகளையும் மேற்கொண்டு தருமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

பலாலி காணி விடுவிப்பதற்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவிக்கையில்,

இந்த காணி விடுவிப்பில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் வெறும் 109 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இங்கு வெறும் 80 ஏக்கர் காணிகளே கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2500 ஏக்கர் காணிகள் உள்ள இடத்தில் வெறுமனே 80 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. காணிகள் தற்போது விடுவிக்கப்பட்ட மக்கள் புன்னகைத்தாலும் அவர்களுக்கு முன் பெரியதொரு போராட்டம் உள்ளது.

கடந்த 30 வருடங்கள் போராட்டம் காரணமாக உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்த மக்கள் எந்த ஒரு பொருளாதார வாய்பும் இல்லாத வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு அரசாங்கம் காணிகளை விடுவித்துள்ளது.

வெறும் காணிகளை மாத்திரம் வழங்கி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் அவர்களுக்கு வீடுகள் உடனே கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களுக்கு வாழ்வாதார தொழில் முயற்சிக்கான உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் மேலும் 2500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இந்த அரசாங்கம் விடுவிக்க வேண்டியுள்ளது. எனவே உள்நாட்டில் மக்கள் காணிகள் இல்லாது இருப்பது கொடுமையான விடயம். எனவே இம் முறை ஜெனிவா அமர்வுக்கு முன்னதாக இந்த அரசாங்கம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக காணிகளை விடுவிக்க வேண்டும்.

நாங்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டதன் அடிப்படையில் இந்த காணி விடுவிப்புபை பார்க்கிறோம். ஆனால் வெறுமனே இந்த 109 ஏக்கர் காணி விடுவிப்பில் நாங்கள் திருப்தி கொள்ளவில்லை. 2009 யுத்தம் முடிந்து விட்டது.

யாருக்கு பாதுகாப்பு மக்களின் காணிகளில் உணவகங்கள் கட்டுவதற்கும் ,விடுதிகள் கட்டுவதற்கும்,தென்னந்தோப்பு வைப்பதற்கும் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்குமா? இந்த மக்களின் காணி.

எனவே மக்களின் காணிகள் அனைத்து விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என சிவில் சமூக அமைப்புகள் சார்பாக கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பலாலியில் ஒரு துண்டு நிலம்கூட பொதுமக்களின் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்படவில்லை – மக்கள் ஆதங்கம்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பலாலி வடக்கு இல 254 பகுதியில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு முகாம் அமைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டிருந்தது .

இவ்வாறு விடுவிக்கப்பட்டிருந்த நிலங்களில் ஒரு துண்டு நிலம்கூட பொதுமக்களின் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என காணி உரிமையாளர்களான தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுதந்திரத்தினத்துக்கு முன்னர் தமது காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி காணி விடுவிப்பு நடைபெறும் இடத்துக்கு வருகைதந்து பார்த்த போது தமக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச நிலமாக காணப்பட்ட சிறிய நிலப்பரப்பை விடுவித்து விட்டு பொதுமக்களின் காணி விடுவிக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளதாகவும் மாறாக தமது பூர்வீக குடி நிலங்கள் வீடுகள் என்பன படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதை தம்மால் விடுவிக்கப்படுள்ள நிலத்திலிருந்துகொண்டு பார்க்கமுடிவதாகவும் அந்த நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்வதோடு முகாம் அமைத்தும் வாழ்ந்துவருவதை பார்க்க முடிவதாகவும் பலாலி வடக்கு இல 254 பகுதி காணி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காணிகளை விடுப்பதாக கூறிக்கொண்டு காணிகளை அபகரிப்பதிலும் இராணுவமயமாக்கத்திலும் அரசாங்கம் தீவிரம் – தவிசாளர் நிரோஷ்

வலி. கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான அக்கரை சுற்றுலாக் கடற்கரையில் கடற்படையினர் காணியை அடையாளப்படுத்துதல் மற்றும் அளவீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்த நிலையில் அவ்விடத்திற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விரைந்து செல்வதற்கிடையில் கடற்படையினர் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வலி. கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிக்கையில், கடற்படையினருக்கு பிரதேச சபையின் காணியை தான் வழங்கியுள்ளதாக பிரதேச செயலாளர் அறிவித்திருந்தார். அவ்வாறாக அறிவிப்புக் கிடைத்தவுடன் அவ்வாறாக குறித்த காணியை வழங்க முடியாது என நான் மறுத்திருந்தேன். இந் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (03.02.2023) இரகசியமாக பிரதேச சபைக்குச் சொந்தமான சுற்றுலா வலயத்திற்குள் நுழைந்த கடற்படையினர் அளவீடுகளை மேற்கொண்டு புகைப்படங்களையும் எடுக்கின்றனர் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. நான் பரிதொரு கூட்டத்தில் இருந்து அவசரமாக குறித்த கடற்கரைக்கு விரைந்து சென்ற போது அங்கிருந்து ஏற்கனவே கடற்படையினர் விலகிச் சென்றுவிட்டனர். அவர்கள் கருமம் முடித்துச் சென்றார்களோ, அல்லது நான் வருகின்றேன் என தகவல் அறிந்து சென்றார்களோ தெரியவில்லை.

பின்னர் நான் குறித்த பிரதேசத்தை பார்வையிட்ட போது இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் நுழைவுச் சிட்டை பெற்று மக்களோடு மக்களாக நிலைமைகளை அவதானித்துக் கொண்டு நின்றனர். அடிப்படையில் இந் நிலம் உள்ளுராட்சி மன்றத்தின் ஆட்சியில் காணப்படும் நிலம். இதில் பிரதேச செயலாளர் முடிவுகளை இராணுவத்திற்’கு வழங்குவதற்கு முடிவுகளை எடுக்க முடியாது. மேலும் மில்லியன் கணக்கில் எம்மால் முதலீடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா வலயம் ஒன்றை இராணுவமயப்படுத்த முடியாது. எமது மக்களின் காணிகளை விடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றபோதும் காணிகளை அபகரிப்பதிலும் இராணுவமயமாக்கத்தினை முற்கொண்டு செல்வதிலும் அரசாங்கம் தீவிரம் காட்டியே வருகின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டினார்.