கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும் – ஹர்ஷ

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும். எத்தரப்பினருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உரையாடியதை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடன் மறுசீரமைப்பு மற்றும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் உறுப்பினர் குறிப்பிட்ட விடயத்தை ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் கோ ஹோம் சைனா என்பது பொருத்தமற்றது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் எத்தரப்பினருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஆகவே இவ்விடயத்தில் முரண்பாடற்ற வகையில் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

 

தமிழ் அமைச்சர்களுடன் சீனத் தூதரகம் சென்றார் மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று மாலை கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் முன்னாள் ஜனாதிபதியுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் இராகவனும் சீனத் தூதரகத்துக்கு சென்றுள்ளார்கள்

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1989 முதல் 2002 வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1989 முதல் 2004 வரை மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும் இருந்த H.E. ஜியாங் ஜெமின் (H.E Jiang Zemin) மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்குச் சென்றார்.

அதேவேளை அனுதாப குறிப்பிலும் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.

சீனப் பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட வேண்டும் – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்

மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேண்டாம் என இலங்கை அரசுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், சீன அரசாங்கத்தினால் சீன விவசாயப் பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கை அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் நவம்பர் 25, கையொப்பமிட இரகசிய ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை ஊடகங்களில் அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் எங்களின் நிலத்தை அபகரிக்கும் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி நிரலை அறிந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு துணிச்சலாக மறுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

ஐ.நா சபையின் அறிக்கையின் பிரகாரம், இனவழிப்பு யுத்தத்தின் இறுதி ஆறு மாத காலப் பகுதியில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களும் சிறுமிகளும் சிறிலங்கா ஆயுத படையினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர். குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

சீனா, அனைத்தையும் நன்றாக அறிந்திருந்தும் தமிழர்களை தொடர்ந்து அவமானப்படுத்துவதையும், சர்வதேச அரங்கில் தமிழர்களுக்கு நீதி கிடைக்காமல் தடுப்பதையும் வழக்கமாக கொண்டதுடன், போர்க்குற்றவாளிகளை ஆதரித்தும் இலங்கையை கடன் பொறியில் சிக்க வைத்து அச்சுறுத்தியும் இலங்கையை கைப்பற்றும் அதன் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது.

தமிழர் விரோத மனப்பான்மை கொண்ட சீனா வடக்கிலும் கிழக்கிலும் தனது செல்வாக்கை அதிகரிக்கச் செல்லும் தீய நோக்கத்துடன் எமது கடலையும் நிலத்தையும் அபகரித்து எமது பாரம்பரிய மண்ணில் எம்மை அகதிகளாக்கி இனப்படுகொலை செய்யும் முயற்சிகளை நாம் ஏற்கனவே கண்டித்திருந்தோம்.

தீங்கு விளைவிக்கும் கடலட்டை பண்ணைகள் என்ற போர்வையில் சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்கனவே எமது கடலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து, எமது மீனவர்களிடையே பிளவை உருவாக்கியுள்ளது.

தற்போது சீனா வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள வளமான விவசாய நிலங்களை, தமது நாட்டில் பத்து ஆண்டுகளில் ஏற்பட இருக்கும் மிக கடுமையான உணவு பஞ்சத்தை சமாளிக்கும் பொருட்டு தீய எண்ணத்துடன் கைப்பற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறது. சீனா, இலங்கைக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன் கூடிய மலக் கழிவுகளை உரமாக வழங்கியதாகவும், இலங்கைக்கு மில்லியன் கணக்கான ரூபாய்களை செலுத்துமாறு நிர்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது. சீனாவில் வரவிருக்கும் உணவு நெருக்கடியை சமாளிக்க எமது வளமான விவசாய நிலங்களை சீனா எப்படி கைப்பற்றி எம்மை அடிமையாக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

வெளிப்படைத்தன்மையற்ற மற்றும் சாத்தியமற்ற சீனக் கடன்கள் மூலம் இலங்கை தற்போதைய நிலைமைக்கு வந்துள்ளது என்பது தெளிவாகிறது. இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுக்கு ஜப்பானும், இந்தியாவும் ஆதரவளித்துள்ள போதிலும், கடன்களை பரிசீலிக்கும் தற்போதைய பேச்சு வார்த்தைகளில் கூட சீனாவின் மறுநிதியளிப்பு திட்டத்தில் தொடர்ந்து இருந்து வருவது, இலங்கையில் மீண்டும் பேரழிவை ஏற்படுத்தும் சீனாவின் மறைமுக நிகழ்ச்சி நிரல் இலங்கையின் சமீபத்திய வரலாற்றிலிருந்து தெளிவாகக் அறிய முடிகிறது.

சீனாவின் அணுகுமுறையின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வளமான விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவுக்கு விற்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். எமது நிலங்களையும் கடலையும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவிற்கு விற்க பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் செய்து வருகிறது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், அண்மையில் சீன பல்கலைக்கழகத்துடன் கைச்சாத்திட இருந்த ஒப்பந்தத்தை இரத்து செய்த   துணை வேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா அவர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அரசியல் நிர்ப்பந்தத்திற்காக எமது நிலத்தையும் கடலையும் வேறு நாடுகளுக்கு விற்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதுடன், நமது கடலையும், நிலத்தையும் காப்பாற்ற குரல் கொடுக்குமாறு   சிவில் சமூகங்கள் மற்றும் அனைத்து மக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த கடமையிலிருந்து தவறுகின்ற பட்சத்தில், எதிர்காலத்தில் நாம் அனைவரும் எம்முடைய சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவோம் என்றுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹோங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்துள்ளது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, பிரேமநாத் சி.தொலவத்த உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான கடன் பிரச்சினை, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், நேரடி முதலீடு, வரலாற்று உறவு, புதிய ஆற்றல், சுற்றுலாத் துறை மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா வழங்கும் – அலி சப்ரி நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா முன் வந்து வழங்கும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை நீண்ட காலமாக கடனை திருப்பும் செலுத்துவதை இலங்கை நிறுத்தியுள்ள நிலையில் இது கடனாளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை சீனா நன்கு அறிந்துகொண்டிருக்கும் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய போராட்டங்கள் மக்கள் ஆதரவின்றி நடத்தப்படுவதாகவும், போராட்டக்காரர்கள் தீவிரவாதிகள் இல்லையென்றாலும், மறைமுக நிகழ்ச்சி நிரலுடன் போராட்டங்கள் இடம்பெறுவதாகவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர் அலி சப்ரி ஒவ்வொரு முறையும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரத் தொடங்கும் போது போராட்டங்களும் ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வாழ் சீனர்களுக்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய கூட்ட அறிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆணையம்

இலங்கையில் உள்ள சீன மக்களுக்கு சீனா வழங்கிய சினோபார்ம் கோவிட்-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தின் சுருக்கத்தையும், அதன் தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கையையும் டிசம்பர் 1ஆம் தி கதிக்கு முன் வெளியிடுமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (என்எம்ஆர்ஏ) தகவல் அறியும் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (டிஐஎஸ்எல்) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

ஆணைக்குழுவின் இந்த உத்தரவுக்கு இணங்கத் தவறினால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 39 ஆவது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்படும் என்றும் தகவல் அறியும் உரிமை ஆணையகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, ​தகவல் அதிகாரி கோரிக்கையை அந்த நிராகரித்தார்.

இந்த நிலையில் தகவல் அதிகாரியின் பதிலில் அதிருப்தி அடைந்த, இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (டிஐஎஸ்எல்), கடந்த ஆண்டு ஏப்ரல் 29 அன்று நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் மேல்முறையீடு செய்தது, ஆனால் நியமிக்கப்பட்ட அதிகாரி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் பதிலளிக்கத் தவறிவிட்டார்.

இதனையடுத்து உலகளாவிய ஊழல் எதிர்ப்பு நிறுவனம் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வ இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்தது.

இலங்கையில் உள்ள சீன மக்களுக்கு சீனா வழங்கிய சினோபார்ம் கோவிட்-19 தடுப்பூசி தொடர்பில், தனியார் நிறுவனம் ஒன்றுடன் வெளிப்படுத்தப்படாத உடன்படிக்கை இருப்பதாக சந்தேகம் தெரிவித்தே, இலங்கையின் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தது.

இலங்கை மாணவர்களுக்கு சீனா அரிசி நன்கொடை

இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசி பொதிகள் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) 1,000 மெற்றிக் தொன் பொதிகள் கொண்ட அரிசி தொகை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.

மேலும் குறித்த அரிசி பொதிகள் விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாகவு சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 7,000 மெட்ரிக் தொன் அரிசி பொதிகள் சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

முதலீட்டை ஊக்குவிப்பதற்காகத் தேவையான சட்ட மறுசீரமைப்புக்களைச் செய்வது அவசியம் – சீனப்பிரதிநிதி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனாவின் வெளிநாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லிங் கொங்ரியன் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற வகையில் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள், மனித வளம் மற்றும் ஏனைய வசதிகள் காணப்படுகின்ற போதும், முதலீட்டை ஊக்குவிப்பதற்காகத் தேவையான சட்ட மறுசீரமைப்புக்களைச் செய்வது அவசியம் தெரிவித்தார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷன்ஹோங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை  பாராளுமன்றத்தில் சந்தித்தபோதே சீன விசேட பிரதிநிதி லிங் கொங்ரியன் இதனைத் தெரிவித்தார்.

தேவையான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு, முதலீட்டுக்கு நட்பான சூழல் உருவாக்கப்பட்டால் ஹம்பாந்தோட்டடை, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஏனயை பொருளாதார வலயங்கள் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு சீனா அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

இலங்கையின் நீண்டகால நட்பு நாடாக சீனா வழங்கிவரும் ஒத்துழைப்பைப் பாராட்டிய சபாநாயகர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

அத்துடன், வெளிநாடுகளுடன் நட்புறவைப் பேணுவதற்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவர் லிங் கொங்ரியன் இலங்கை-சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் விசேட கூட்டத்திலும் கலந்துகொண்டார். இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக விளங்குவதற்குத் தேவையான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், தொழில்துறை மற்றும் விவசாயத்துறையில் மேம்படுத்துவதற்குத் தேவையான திறமைமிக்க இளைஞர் சமுதாயம் போன்ற வளங்களை இலங்கை கொண்டிருப்பதாக பாராளுமன்ற நட்புறவு சங்கத்தில் உரையாற்றும்போது அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக இலங்கை சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர்  நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்

Posted in Uncategorized

சீன உயரதிகாரி இலங்கை வருகை – கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு!

வெளி நாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் (CPAFFC) தலைவர் Lin Songtian நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.

அவர் பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லின் சாங்டியன் (62) 1986 இல் சீனாவின் வெளியுறவு சேவையில் நுழைந்தார், மேலும் சீன வெளியுறவு அமைச்சகத்தில் துணை பணிப்பாளர் (2007-2008), வெளியுறவு நிர்வாகத்தின் பணிப்பாளர்(2010-2014) மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கானபணிப்பாளர் (2014-2017).ஆகிய பதவிகளை இது வரையில் வகித்துள்ளார்.

2020 முதல், லின் சாங்டியன் வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

சீனத் தூதுவருடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல்

இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹோங் (Qi Zhenhong) இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, இலங்கையின் பல்வேறு சவால்களை சமாளிக்க சீனாவின் தொடர்ச்சியான மற்றும் உறுதியான ஆதரவை தூதுவர் மீண்டும் வலியுறுத்தியதாக சீன தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

எனினும் தாம் இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்களை மறுசீரமைக்க சீனா உடன்பட்டதா? என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த நவம்பர் 3 ஆம் திகதி, இலங்கை தனது கடனை மறுசீரமைக்கும் வகையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பை நடத்தியதாக இலங்கை கூறியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.