தேர்தல் நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் – பிரசன்ன ரணதுங்க

தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், நாடு என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயற்படும் நிலை தற்போது கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதை வாழ்க்கை செலவுக்கு அமைய தேர்தல் ஒன்றை நடத்த குறைந்தது 20 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி செலவாகும் என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, இருப்பினும் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதால் ஒன்றும் மாற்றமடைய போவதில்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போட சூழ்ச்சிகள் செய்யும் அரசாங்கம் – உதய கம்மன்பில

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான அறிவிப்பை ஆணைக்குழு வெளியிடும் என எதிர்பார்த்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்த ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் தேர்தலை ஏதாவதொரு வழிமுறையில் பிற்போடுவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இருமுனை போட்டி நிலவுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தேர்தலை நடத்துவதை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்களுடன் விசேட கலந்துரையாடல்

மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

விசேட கலந்துரையாடலொன்றுக்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல் ஆணைக்குழு நேற்று ஆலோசனை நடத்தியது.

மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அடிப்படை செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல் அதிகாரிகள் என்ற வகையில் மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போடுமாறு ஆணைக்குழுவுக்கு அரசாங்கத்தால் கடும் அழுத்தம் – நாலக கொடஹேவா

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளது.

தேர்தலை பிற்போட முடியாது. வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு ஆணைக்குழு அரசாங்கத்திடம் அறிவித்து விட்டது. தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில்  வியாழக்கிழமை (டிச. 22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடன் பெற்று பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணலாம் என்பது ஜனாதிபதியின் பிரதான பொருளாதார கொள்கையாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பு எதிர்கொள்ளும் மிக மோசமான பாதிப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி  உட்பட  அரசாங்கம் கவனம்  செலுத்தவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு  அரசாங்கம் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்து வருவதாக அறிய முடிகிறது. தற்போதைய நிலைமைக்கு அமைய தேர்தலை பிற்போட முடியாது. நடைமுறை சட்டத்திற்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை பிற்போட வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,பொதுஜன பெரமுனவிற்கும் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை உள்ளது,ஏனெனில் இரு  தரப்பினரும் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் விடயத்தில் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரும்,பொதுஜன பெரமுனவினரும் தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள். ஆகவே இவ்விரு தரப்பினரும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவது சிறந்தது, பொருளாதார படுகொலையாளிகளுக்கு ஜனநாயக ரீதியில் சரியான பாடம் கற்பிக்க முடியும்.

2020ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேர்ந்த கதியே தமக்கும் ஏற்படும் என்பதால் பொதுஜன பெரமுன உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் பிற்போட பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாட்டு மக்கள் அரசியல் ரீதியான தமது நிலைப்பாட்டை தேர்தல் ஊடாக மாத்திரமே வெளிப்படுத்த முடியும்.மக்களின் அடிப்படை உரிமையை நிச்சயம் பாதுகாப்போம். தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்கமாட்டாது என்றார்.

எல்லை நிர்ணயங்களின் போது வெளிப்படைத் தன்மை கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

உள்ளுராட்சி வட்டாரங்களை குறைக்கும் வகையில் அவற்றை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக நிராகரித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (டிச. 20) காலை எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மகிந்த தேசபிரியவின் தலைமையில்  அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கட்சித் தலைவர்கள்  மேற்படி நடவடிக்கையினை கூட்டாக நிராகரித்துள்ளனர்.

அத்தோடு புதிய எல்லை நிர்ணயம் தொடர்பில்  தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ள கட்சித் தலைவர்கள் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படுகின்ற போது அதில் பல்வேறு குறைபாடுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.

பல்லின சமூகங்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்கள் பாதிக்கப்படாத வகையில் அல்லது அவர்களது பிரதிநிதித்துவம் திட்டமிட்டு இல்லாது செய்யும் வகையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படக் கூடாது.

ஆதாவது அந்தந்த பிரதேசங்களில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் திட்டமிட்டு தவிர்க்கும் வகையில் வட்டார எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்படுவதாக பொது அமைப்புகளிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தனர்.

கட்சித் தலைவர்கள் எல்லை நிர்ணயங்களின் போது வெளிப்படைத் தன்மையுடனும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளினதும் கருத்துக்களும் பெறப்பட வேண்டும் எனவும் தனியே அதிகாரிகளால் மட்டும் இவற்றை தீர்மானிக்க விட முடியாது என்றும்  கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாகாணத் தேர்தலை பிற்போட்டவர்களே 13ஐ பற்றி பேசுவது வேடிக்கைக்குரியது – நாமல் ராஜபக்ச

தேர்தலைக் காலந்தாழ்த்த முயற்சித்தவர்கள் தற்போது 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். மின்சாரம், எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின் விலைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறைத்திருந்தாலும், போராட்டம் ஊடாக மக்கள் அவரை விரட்டியடித்தார்கள் எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் நாட்டில் தேர்தல் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும்.

அன்று மாகாணசபைத் தேர்தலைக் காலந்தாழ்த்துவதற்காக செயற்பட்டவர்கள் இன்று அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியது. 13ஆவது திருத்தச் சட்டம், தேர்தல்கள் தொடர்பில் அவர்களுக்கு அக்கறை இருந்தால் கடந்த 2, 3 வருடங்களுக்கு முன்பு தேர்தலைக் காலந்தாழ்த்தி இருக்க மாட்டார்கள். நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அது தொடர்பான நீண்டக் கலந்துரை யாடல்களை நடத்தி தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். என்றார்

புதிய வருடத்தில் புதிய கூட்டமைப்பு – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நாட்டின் எதிர்கால அரசியலுக்கான புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியை எதிர்வரும் ஜனவரி மாதம் அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் ஜயஶ்ரீ மா போதியை வழிபடுவதற்காக நேற்று(14) சென்றிருந்த போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வர்த்தமானி

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கு அமையவே எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது – வினோ எம்.பி

மக்கள் பிரதிநிதிகளினதும், மக்களினதும் விருப்பத்திற்கு முரணாக உள்ளுராட்சிமன்றங்களின் எல்லை தொகுதிகள் நிர்ணயம் செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கு அமையவே எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விவசாயம், நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் ஆகிய அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொகுதி தொடர்பான எல்லை நிர்ணய குழுவின் கூட்டங்கள் மாவட்ட ரீதியில் இடம்பெறுகின்றன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டுமாக இருந்தாலும் அவசர அவசரமாக எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளினதும், மக்களின் விருப்பமில்லாமல், அதிகாரிகளின் விருப்பத்திற்கமைய எல்லை நிர்ணயம் செய்யப்படுவது. உண்மையான நோக்கத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கமைய மாத்திரம் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது, இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தல் நடத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணயங்களை தமது விருப்பத்திற்கு அமையவே அரசாங்கம் நிர்ணயம் செய்ய முயற்சிக்கிறது, இது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.

வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் பயிர்செய்கைகளுக்காக வழங்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிட்டார், ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

வடக்கு மாகாணத்தில் வடக்கு மாவட்டத்தில் மக்கள் காலம் காலமாக விவசாயம் செய்த காணிகளை வனவளத்துறை திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள வேண்டுமாயின் நாட்டில் விவசாயத்துறை மேம்படுத்த வேண்டும். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய காணிகளை வனவளத்துறை திணைக்களம் ஏதாவதொரு காரணத்தை குறிப்பிட்டுக் கொண்டு சுவீகரிப்பதையே பிரதான இலக்காக கொண்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் மீனவர் பிரச்சினை, விவசாய பிரச்சினை தொடர்பான கூட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதில்லை. வடக்கு மாவட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு நியமிக்கப்படாத காரணத்தினால் அரச அதிகாரிகள் தன்னிச்சையாக செயற்படுகிறார்கள்.

மக்கள் பிரநிதிகள் மக்கள் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்த உரிய வழிமுறை காணப்படவில்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் பாராளுமன்றத்தின் ஊடாக மாத்திரம் தீர்வு காண முடியாது, ஆகவே மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாவட்ட மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். என தெரிவித்தார்.

தற்போது தேர்தலுக்கான காலம் உருவாகியுள்ளது : எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானதல்ல – பஷில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய தற்போதைய செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றன. அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு எம்மால் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானதல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் ஊடக மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு திங்கட்கிழமை (டிச.05) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

தற்போது தேர்தலுக்கான காலம் உருவாகியுள்ளது. எனினும் அது எவ்வாறு இடம்பெறும் என்பது எமக்குத் தெரியாது. கட்சி என்ற ரீதியில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இதுவரை போட்டியிட்ட சகல தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதற்காக நாம் முழு நாட்டு மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எவ்வாறிருப்பினும் மக்களின் எதிர்பார்ப்பினை நூறு வீதம் நிறைவேற்றத் தவறியிருந்தால் அது தொடர்பில் கவலையடைகின்றோம்.

நிச்சயம் எமது குறைபாடுகளை தீர்வு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நான் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள போதிலும் , அரச நிர்வாகத்தில் ஈடுபடவில்லை. தற்போது 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அரச நிர்வாகத்தில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதல்லவா? எவ்வாறிருப்பினும் அரச நிர்வாகத்தில் நான் இல்லாத போதிலும் அரசியலில் இன்னும் இருக்கின்றேன். நான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு செல்ல எதிர்பார்க்கவில்லை. என்னால் பாராளுமன்றத்திற்கு செல்லவும் முடியாதல்லவா? அது தொடர்பில் நான் மகிழ்வடைகின்றேன்.

69 இலட்சம் பொது மக்கள் வாக்களித்து தெரிவு செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியை இராஜநாமா செய்தார். அதனையடுத்து பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்ட போது , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு தீர்மானித்தது. எமது இந்த தெரிவு தவறானதல்ல என்று எண்ணுகின்றேன்.

தற்போது ஆளும் , எதிர்க்கட்சி என அனைவரும் சுதந்திரமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகக் காணப்பட்டது. அந்த சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

பொது வெளியில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுவதற்கான சூழலை ஜனாதிபதி எமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார். அதே போன்று பொருளாதாரம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவார் என்று பாரிய எதிர்பார்ப்பு எம் மத்தியில் காணப்படுகிறது.

பொதுஜன பெரமுனவில் எந்தவித பிளவும் கிடையாது. மக்கள் மத்தியில் நாம் ஒருமித்தே காணப்படுகின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக உத்தியோகபூர்வமாக இன்னும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பதவி வகிக்கின்றார். எதிர்காலத்தில் புதியவர்கள் தெரிவு செய்யப்படுவர் என்றார்.