இலங்கையின் கடற்பிராந்தியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் (நாரா) ஒப்படைக்கப்பட்டிருப்பதன் காரணமாக சுமார் 32 ஆண்டுகளாக நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இப்பொறுப்பை திறம்பட முன்னெடுப்பதற்கு ஏற்றவாறு தேசிய நீர்வரைவியல் காரியாலயத்தை உருவாக்கும் நோக்கில் இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இலங்கைக்குச் சொந்தமான கடற்பிராந்தியத்தை நிர்வகிப்பதுடன் தொடர்புடைய இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம்.
கடற்பிராந்தியத்தில் உயிர்களின் பாதுகாப்புக்கான சர்வதேச பிரகடனத்தை அடிப்படையாகக்கொண்டே சகல நாடுகளும் அவற்றின் கடற்பிராந்தியத்தை நிர்வகிக்கின்றன.
தமது கடற்பரப்பின் ஊடாகப் பயணிக்கும் கப்பல்களுக்கான கட்டணம் அறவிடல், கடற்பிராந்தியப் பாதுகாப்பின் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல், கடற்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் இப்பிரகடனத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையானது இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் கேந்திர நிலைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கின்றது. உலகின் ஏனைய அனைத்துப் பிராந்தியங்களுக்குமான நுழைவாயிலாகவும், பொருளாதார மற்றும் வாணிப ரீதியில் பெருமளவான நன்மைகளை ஈட்டித்தரக்கூடிய வகையிலும் இலங்கையின் அமைவிடம் உள்ளது.
இலங்கைக் கடற்பரப்பின் ஊடாக நாளாந்தம் சுமார் 200 – 300 வரையான கப்பல்களும், வருடாந்தம் சுமார் 35,000 கப்பல்களும் பயணிக்கின்றன. இவ்வாறு எமது கடற்பரப்பின் ஊடாகப் பயணிக்கும் கப்பல்களிடமிருந்து அதற்கேற்றவாறு கட்டணம் அறவிடப்படும்.
அதற்குரிய அதிகாரம் கடந்த 1981 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (நாரா) வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடற்பிராந்திய விவகாரங்களை உரியவாறு கையாள்வதற்கான நிபுணத்துவம் அக்கட்டமைப்புக்கு இல்லை. அதன் விளைவாக கடந்த 32 ஆண்டுகளாக (1981 தொடக்கம்) எமது நாட்டுக்கு வருடாந்தம் 200 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி எமது கடற்பிராந்தியத்தை உரியவாறு நிர்வகிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் ஏற்ற பொருத்தமான கட்டமைப்பு இன்மையால், அதுபற்றிய தீர்மானங்கள் ஏனைய வெளிநாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இது நாட்டுக்கான வருமானத்தை இல்லாமல் செய்வதுடன் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது.
குறிப்பாக கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்த கப்பல்களின் எண்ணிக்கை கடந்த 2015 ஆம் ஆண்டு 4,197 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், அது 2022 இல் 3,648 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோன்று 2015 ஆம் ஆண்டு திருகோணமலை துறைமுகம், காலி துறைமுகம், காங்கேசன்துறை மற்றும் காரைநகர் துறைமுகம் ஆகியவற்றுக்கு வருகைதந்த கப்பல்களின் எண்ணிக்கை முறையே 164, 72, 32 ஆகப் பதிவாகியுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டு அவை முறையே 95, 7 மற்றும் 0 ஆக வீழ்ச்சிகண்டுள்ளன.
இவையனைத்தையும் கருத்திற்கொண்டு எமது நாட்டுக்குரிய கடற்பிராந்தியத்தை முறையாக நிர்வகிக்கும் நோக்கிலேயே தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் எதிர்ப்பையும் மீறி இலங்கை நீர்வரைவியல் சட்டமூலத்தைத் தயாரித்து, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம். இச்சட்டமூலத்தின் ஊடாக தேசிய நீர்வரைவியல் காரியாலயம் என்ற புதிய கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு, அதற்கான தலைமைத்துவத்தை வழங்கும் விதமாக சிரேஷ்ட நீர்வரைவியலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதற்குப் பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படுவார். அதன்மூலம் நாட்டின் கடற்பிராந்தியத்தை முறையாக நிர்வகிக்கவும், அதனூடாக வருமானமீட்டவும் முடியும் என்று தெரிவித்தார்.