வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த இந்தியா மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மற்றும் காங்கேசன்துறை இடையில் ரயில் கடவைகளில் உள்ள சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போது அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாதையை நவீனப்படுத்துவதற்கு வசதியாக கொழும்பில் – காங்கேசன்துறைக்கான சேவைகள் இந்த வருடம் ஜனவரி மாதம் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இந்தியாவால் நீடிக்கப்பட்ட கடன் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் இம்மாதத்தில் முடிவடைய இருந்தபோதிலும் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது.

இதேவேளை, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பயண நேரத்தை ஒன்றரை மணி நேரத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – காங்கேசன் துறை ரயில் சேவை அடுத்த மாதம் மீள ஆரம்பம்

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின் அடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் மார்க்கம் திருத்தப்பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.

62 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் மார்க்கம் இந்திய கடன் உதவியின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட ரயில் மார்க்கத்தில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாகாணசபைக்கான ஆலோசனைக்குழு அமைக்கும் ஏற்பாடு மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் எனும் கோரிக்கையை நலிவுறச் செய்யும் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டு அல்லது முன்வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும் ஏற்பாடானது, ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்திருக்கும், மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாக அமைகிறது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

அரசியல் யாப்பிலே ஏற்கனவே இருக்கின்ற அதிகாரங்களை பகிர்ந்து, மாகாண சபை தேர்தல் சட்டத்தில் அதற்கான திருத்தங்களை மேற்கொண்டு பாராளுமன்ற அனுமதியை பெற்று மாகாண சபை தேர்தலை நடாத்துமாறு எமது கோரிக்கை அமைந்திருந்தது. அதை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டு, அந்த மாகாண சபையில் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள நிலை நிறுத்துவதற்கான சட்ட வரைபுகளை தான் ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த சட்ட வரைபுகளோடு தேர்தல் திருத்த சட்டத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது அனுமதி பெற்று மாகாண சபைகளில் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள நிறுத்தி, மாகாண சபை தேர்தலை நடாத்தலாம் என உறுதிமொழி வழங்கியிருந்தார். ஆனால் இதுவரைக்கும் அந்த விடயங்கள் தொடர்பான தெளிவான கருத்துக்கள் எதுவும் ஜனாதிபதியால் கூறப்படவில்லை.

இந்த நிலையிலே ஆலோசனைக்குழு ஒன்றை அமைத்து மாகாண சபையை வழி நடத்துவதற்காக ஜனாதிபதி எடுக்கின்ற முயற்சியும், அதை எமது தமிழர் தரப்பினரே அரசியல் கோரிக்கையாக முன்வைத்திருப்பதும் கவலையளிக்கிறது.

ஜனாதிபதியுடைய மாகாண சபை வழிநடத்தல் குழு என்பது அவரால் அமைக்கப்பட வேண்டிய ஒன்று, அதனை நாங்கள் வலிந்து கேட்பது அவசியமற்றது. அது ஏற்கனவே ஒரு நிர்வாகம் சம்பந்தப்பட விடயம். நாங்கள் கேட்பது அரசியல் நிலைப்பாடு. அதாவது மாகாண சபை தேர்தல்களை நடாத்த வேண்டும், பறிக்கப்பட்ட அதிகாரங்களோடு ஏற்கனவே இருக்கின்ற அதிகாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது ஒரு அரசியல் கோரிக்கை.

ஆகவே, நாங்கள் இந்த அரசியல் கோரிக்கைக்கு புறம்பான ஒரு நிர்வாக ரீதியான ஆலோசனை சபையை அமைக்கும் விடயத்தை கோரிக்கையாக, அதாவது அரசியல் கோரிக்கையாக முன்வைப்பது அபத்தமானது ஆகும். அது ஜனாதிபதி அவருடைய தேவை கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கை. ஆகவே நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் இருக்க இருக்க வேண்டியதில் அனைத்து தமிழ் தரப்பும் உறுதியாக இருக்க வேண்டும்.

மாறாக தனித்து செயற்பட முற்படுகின்றபோது, எமது பிரதான கோரிக்கையான அதிகாரப் பகிர்வு, மாகாண சபை தேர்தலை விரைந்து நடாத்துதல் என்ற விடயங்களுக்கு இவை குந்தகம் விளைவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி, தேர்தல்களைப் பிற்போடுவதற்கு இதைப் பயன்படுத்துகின்ற அபாய சூழ்நிலை இப்போது எழுந்திருக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அரசியல் தரப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் தரம் 9 க்குட்பட்ட மாணவர்களுக்கு வெள்ளி,ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடாத்தத் தடை

ஜுலை முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக தனியார் கல்வி நிலையங்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் இன்று(09) காலை 09 மணி தொடக்கம் 1 மணிவரை கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

இதில் சுகாதாரம், கல்வி, மதத் தலைவர்கள், பொலிஸ், தனியார் கல்வி நிலைய நிறுவனங்கள், பெற்றோார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இன்றைய கலந்துரையாடல் நிறைவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:-

1 . பெற்றோருக்கு முதலில் விழிப்புணர்வு கருத்தமர்வுகளை தனியார் கல்வி நிலையங்களையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு பிரதேச செயலக மட்டங்களில் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

2 . ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கை முற்றுமுழுதாக ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமை மாலையும் நிறுத்தப்பட வேண்டும்.

3 . தனியார் கல்வி நிலையங்கள் சுகாதார வசதி, வகுப்பறை பிரமாணம் கட்டடங்கள் போன்றவற்றுக்கமைய அமைந்திருக்க வேண்டும்.

4. தனியார் கல்வி நிலையங்கள் உள்ளூராட்சி நிறுவனம், பிரதேச செயலகத்தில் பதிவு செய்தல் கட்டாயமாகும்.

5 . தனியார் கல்வி நிலையங்கள் 15 தொடக்கம் 30 நிமிடம் வரை ஆன்மிகம், சமூகம் சம்பந்தப்பட்ட விடயங்களை போதிக்க வேண்டும்.

6 . இந்த செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெறுதை அவதானித்து பிரதேசமட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் குழு உருவாக்கப்படவுள்ளது.

இத் தீர்மானங்களை பின்பற்றாத தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

நீண்ட போராட்டத்திற்கு எங்களைத் தயார்ப்படுத்தாமல் விட்டால் இவளவு காலமும் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்ததாகிப் போய்விடும் – சுரேஸ் பிரேமச்சந்திரன் கவலை

நீண்ட போராட்டத்திற்கு எங்களைத் தயார்ப்படுத்தாமல் விட்டால் இவ்வளவு காலமும் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்ததாகிப் போய்விடும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற சிவகுமாரின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1974 ம் ஆண்டு தமிழாராட்சி மாநாட்டில் பல பேர் கெல்லப்பட்டமைக்கு காரணமாயிருந்த பொலிஸ் பொறுப்பதிகாரியை பழி தீர்க்க வேண்டுமென சிவகுமாரன் உட்பட்டோரால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் பல கட்டங்களைக் கண்டு ஆயுதப் போராட்டமாக 2009 வரை நீடித்தது.

24 வயதில் தனது உயிரை ஈழ விடுதலைக்காக ஈந்த பொழுது நாங்கள் மாணவனாக இருந்தோம். பொன் சிவகுமாரனின் இறுதியஞ்சலியில் கலந்து கொண்டது. இன்றும் பசுமையாக ஞாபகத்தில் இருக்கின்றது.

அவருக்கும் எனக்கும் 7 வயது இடைவெளி காணப்படும் வேளை இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் 73 வயதை அடைந்திருப்பார்.

வருகின்ற வருடம் அவர் இறந்து 50 வது வருடத்தைக் கொண்டாடவுள்ள நிலையில் ஈழ விடுதலைக்காக அவர் ஆரம்பித்து வைத்த யுத்தம் 2009 வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் , போராளிகள் எனக் கொலை செய்யப்பட்டாலும் இன்றும் நாங்கள் இராணுவ அடக்குமுறைக்குளிருக்கும் துப்பாக்கிய சூழ்நிலைக்குள் தான் இருக்கின்றோம்.

இன்றைய நிலையில் வடகிழக்கு முழுவதும் சி்ங்கள பௌத்த மேலாதி்கத்தை நிறுவுவதற்கான போக்கையே காண முடிகின்றது. ஆகவே நாங்கள் பல தூரம் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

நீண்ட போராட்டத்திற்கு எங்களைத் தயார்ப்படுத்தாமல் விட்டால் இவளவு காலமும் செய்த தியாகங்கள் விழலுக்கு இறைத்ததாகிப் போய்விடும்.

இன்று இலங்கை பொலிஸ் , இராணுவம் உட்பட உயர் மட்டத்திலுள்ளோர் தமிழ் மக்களை குத்திக் குதறப்பட வேண்டிய இனமாகத்தான் பார்க்கின்றார்கள்.அன்று பாராளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம் , யோகேஸ்வரன் தாக்கப்பட்டதைப் போன்று இன்று தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

அந்த வகையில் தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுத்து சுயாட்ச பிரதேசத்தில் தமது பிரச்சினைகளை கௌரவமாக வன்றெடுக்கக்கூடியநிலைக்கு மாற்றப்பட வேண்டுமாயின் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டு செயற்படத் தவறும் பட்சத்தில் தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைக்கின்றோம் என்பதே கருத்தாகும் எனக் குறிப்பிட்டார்.

தியாகி பொன் சிவகுமாரனின் 49 வது நினைவேந்தல் ரெலோ யாழ் மாவட்ட செயலகத்தில் அனுட்டிப்பு

தியாகி பொன் சிவகுமாரனின் 49 வது நினைவேந்தல் 05/06/2023 மாலை 4 மணிக்கு ரெலோ யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அமைப்பாளர் தியாகராசா நிரோஷ் தலைமையில் பொதுச் சுடரினை ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் ஏற்றி வைத்தார் அதனைத் தொடர்ந்து அக வணக்கம் இடம்பெற்றது பின்னர் ஏனைய உறுப்பினர்கள் மலர் அஞ்சலி செய்தனர் தியாகி சிவகுமாரனின் நினைவு தொடர்பாக சபா குகதாஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

யாழ்ப்பாணம்- காரைக்கால் பயணிகள் கப்பல் சேவைக்கு அனுமதி!

இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் சேவையை நடத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் – கே.கே.எஸ். இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது.

இந்தியத் தரப்பிலிருந்தே அதற்கான அனுமதிகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்று அறியமுடிகின்றது.

இதற்கிடையில் பாண்டிச்சேரியிலிருந்து காங்கேசன்துறைக்கான சரக்குக் கப்பல் சேவையை எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடத்துவதற்கான அனுமதி ஹேலீஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான  ரயில் சேவை மீண்டும்  ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ரயில் பாதை  திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு ரயில் சேவைகள் கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரை மட்டுமே  இடம்பெறுகின்றன.

இந்நிலையில், அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான ரயில் பாதையின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மீண்டும்  ரயில் சேவையை ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க முடியும் என மஹவ – ஓமந்தை ரயில்வே திட்ட பணிப்பாளர்  அசோக முனசிங்க தெரிவித்தார்.

தமிழருக்கு இழைத்த அநீதியை மறைக்கவே பொதுவான நினைவு தினம்- சபா. குகதாஸ் ஆதங்கம்

ரணில் விக்கிரமசிங்கவின் பொது நினைவேந்தல் தினம் தமிழர்கள் மீது திணிக்கப்படுமாயின் அச் செயற்பாடு மீண்டும் ஒரு தமிழின அழிப்பாகவே அமையும் என தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

1983 இல் இருந்து 2009 வரை போராலும் வன்முறையாலும் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூறும் வகையில் பொது நினைவு கூறும் தினத்தை பிரகடனப்படுத்துமாறு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.

ரணிலின் இந்த செயற்பாடு இது வரை தமிழர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்களினாலும் அரச படைகளினாலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், அநியாயங்கள், படுகொலைகள், இனப்படுகொலைகள் போன்றவற்றுக்கான நீதி கிடைப்பதை தடுப்பதற்காகவும் குற்றம் இழைத்தவர்களை பாதுகாப்பதற்கும் அரசாங்கத்திற்கு ஏற்படும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்குமாக இந்த பொது நினைவு தினம் என்ற நாடகத்தை அரங்கேற்றவுள்ளார்.

14 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கனடா பிரதமரின் நினைவு கூறல் அறிக்கை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு மன ஆறுதலை கொடுத்த சம நேரம் சிங்கள ஆட்சியாளரின் போலி முகத்திரையை வெளிப்படுத்தியுள்ளது இதனால் தனித் தனியான நினைவேந்தல்களை நிறுத்த புதிய உத்தியை கையில் எடுத்துள்ளார் ஐனாதிபதி ரணில்.

தமிழர்களுக்கு பொது நினைவு தினம் ஏற்புடையது இல்லை காரணம் ஒவ்வொரு நினைவேந்தல் தினங்களும் தனித் தனியான வரலாற்றுப் பின்னணியை கொண்டவை அத்துடன் அவற்றுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை எனவே ரணிலில் விக்கிரமசிங்காவின் பொது நினைவேந்தல் தினம் தமிழர்கள் மீது திணிக்கப்படுமாயின் அச் செயற்பாடு மீண்டும் ஒரு தமிழின அழிப்பாகவே அமையும்.

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் கைது

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் யாழ். பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இம்மானுவேல் ஆர்னோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவரென தெரிய வருகின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.