புலம்பெயர் இலங்கையர்கள் இலங்கையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும்

புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் மொழி அறிவை சிங்களம், தமிழ் மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது.

2030ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் பல்கலைக்கழகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ், சிங்கள புலம்பெயர் இலங்கையர்கள் இந்நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதாரத்தை மீட்டமையை போன்று கிரிக்கட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் – ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில்

இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டுவர விரும்புவதாகவும், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட் விளையாட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்காக இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

இவ்வருட வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியலை மாற்றியமைக்கும் வரவு செலவுத் திட்டமாகும்.வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் இலக்கை ஏற்கனவே தான் நெருங்கிவிட்டதாகவும், அரசியல் நோக்கின்றி அந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் தேர்தலை இலக்கு வைத்து செயற்பட்டாலும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே தனது முதல் கடமையாகும் எனவும் அதன் பின்னர் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோர் 2024 வரவு செலவுத் திட்டம் மற்றும் அதன் அடிப்படை குறித்து இங்கு நீண்ட விளக்கமளித்தனர்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

ஒரு நாடாக முன்னோக்கிச் செல்லும்போது அரசாங்கச் செலவுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும். அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

மேலும், மத்திய வங்கியின் சட்டத்தின்படி இப்போது எமக்கு பணத்தை அச்சிடவோ வங்கிகளிடம் கடன் பெறவோ முடியாது. மேலும், அரசாங்கத்திற்கு பெறக்கூடிய கடன்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது நாம் பெருமளவு தொகை கடன்கள் செலுத்தவேண்டியுள்ளது.

குறிப்பாக, பௌத்த பொருளாதார தத்துவத்தின்படி அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்போது வருவாயை உருவாக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும். இதுவரை நம் நாட்டில் இருந்த பொருளாதார முறைமை வெற்றிபெறவில்லை. 1972 இல் முழுமையான சோசலிசப் பொருளாதாரம் பின்பற்றப்பட்டதோடு 1977 இல் பொருளாதாரத்தின் ஒரு பகுதி திறந்து விடப்பட்டது.பொருளாதாரத்தை திறந்து அரச நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் இதை அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

இன்று சிங்கப்பூர், மலேசியா போன்ற முன்னேறிய நாடுகளின் பொருளாதாரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் இலங்கையில் மிகப்பெரிய தனியார்மயத்தை மேற்கொண்டு வருகின்றோம். அதாவது காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்திய விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு முழு உரிமையை வழங்க வேண்டும். மேலும் குறிப்பாக அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் அந்த உரிமை வழங்கப்படும்.

நாட்டின் பொருளாதாரத்திற்காக 500 பில்லியன் முதல் 1 டிரில்லியன் ரூபாய் வரை சொத்துக்களை உள்ளடக்கியுள்ளோம். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸினை விற்றாலும் இந்தச் சேவைகள் அனைத்தையும் சேர்த்தாலும் இந்தத் தொகை கிடைக்காது. இவற்றின் உற்பத்தியை இப்போது அதிகரிக்கலாம். நாங்கள் எடுத்துள்ள ஒரு பாரிய நடவடிக்கையாக நான் பார்க்கிறேன். இது இலங்கையின் மிகப்பெரிய தனியார்மயமாக்கலாகும்.

சாதாரண மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் நில உரிமையை வழங்கவில்லை. ஷங்ரில்லா ஹோட்டலுக்கு நில உரிமையை வழங்கினோம். ஆனால் இது சாதாரண மக்களுக்கு வழங்கப்படவில்லை. அந்த காணிகளை மக்களுக்கு வழங்குவதற்காகவே மகவெலி ஆரம்பிக்கப்பட்டது. சீ மற்றும் எச் வலயங்களில் உள்ள நிலம் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இப்போது இவை அனைத்தும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம். எங்களுக்கு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரம் மற்றும் சந்தை தேவை என்பதால், RCEP அமைப்பைப் போன்றே இந்தியா மற்றும் பங்களாதேஷ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் எங்கள் சந்தையை விரிவுபடுத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நாம் ஒரு போட்டி பொருளாதாரமாக மாற வேண்டும். போட்டியற்ற வணிகங்கள் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும். அதற்காக நாம் தனியான உதவிகளை வழங்குகிறோம்.பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் குறுகிய கால திட்டங்களாக விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை நவீனமயமாக்கல் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். விவசாயத்தை நவீனமயமாக்கினால், நாட்டில் பாரிய விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

சுற்றுலாத்துறையின் ஊடாகக் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கவும் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 05 மில்லியன்களாக அதிகரிக்கவும் எதிர்பார்த்திருப்பதோடு, டிஜிட்டல் பொருளாதார முயற்சிகளையும் அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவுடன் முன்னோக்கிச் செல்லவும் எதிர்பார்க்கிறோம். இதுவரையில் அதுபற்றி கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

அதற்கான மனித வளமும் அவசியப்படுகிறது. கல்வி முறையில் மாற்றம் செய்து அந்த தேவையை பூர்த்தி செய்துகொள்ள எதிர்பார்க்கிறோம். அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை புதிதாக ஆரம்பிப்பதற்கு அவசியமான சட்டங்கள் உருவாக்கப்படும்.

பல்கலைக்கழங்களில் கட்டணம் அறவிடப்படும் பட்சத்தில் அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு கடன் தொகையும் வழங்கப்படும். அதேபோல் தொழிற் பயிற்சித் துறையை மறுசீரமைத்து மாகாண சபைகளின் கீழ் நடத்திச் செல்ல எதிர்பார்க்கிறோம்.

மாகாண சபைகளுக்கு ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கு காணப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் வாய்ப்புக்களும் வருமான வழிமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும். அந்த பணிகளை 2030க்குள் செய்து முடிக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டில் நாம் புதிய பொருளாதார வேலைத்திட்டங்களை ஆரம்பிப்போம்.

அதேபோல் 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஆணைக்குழுக்கள், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பல்வேறு அறிக்கைகள் எனக்கு கிடைத்துள்ளன. அதனால், நிறைவேற்று அதிகாரத்தின் செயற்பாடுகளுக்கு பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பும் கிடைக்கிறது.

ஊழல் ஒழிப்புக்கான சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டுள்ள அதேநேரம், தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்த்து அரசியலமைப்புச் சபையினால் அதற்கான அங்கத்தவர்கள் நியமிக்கப்படும் வரையில் காத்திருக்கிறோம்.

சர்வதேச நாணய நிதியத்துனான பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக “அரச நிர்வாக பகுப்பாய்வு” செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கை சிங்களம் – தமிழ் மொழிகளில் கிடைத்தவுடன் அதனை செயற்படுத்துமாறு அறிவிப்போம்.

அதனை மேற்பார்வை செய்வதற்கான பாராளுமன்றத்தில் மேற்பார்வைக் குழுவொன்றை நிறுவ உள்ளோம். மோசடி தொடர்பில் தேடியறிந்து அதனை கட்டுப்படுத்துவதே எமகு நோக்கமாகும்.

ஐக்கிய இராஜ்ஜியத்தில் செய்யப்பட்டதை போன்று பாராளுமன்ற தரநிலை தொடர்பான வரைபை முன்வைக்க எதிர்பார்க்கிறோம்.

அதனால், நாட்டில் காணப்படும் அரசியல் முறையை தொடர்ந்தும் முன்னெடுப்பதா அல்லது மாற்றங்கள் அவசியமா என்பதை தேடியறிவதற்கான ஆணைக்குழு ஒன்றினை நியமித்துள்ளோம்.

அரசியல் கட்சிகள் உரிய வகையில் செயற்படாவிட்டால் ஜனநாயகம் இருக்காது. எனவே அரசியல் கட்சிகளை நிர்வகிப்பது எப்படி, தேர்தல் சட்டம் மற்றும் செலவீனங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தேடிப்பார்க்க வேண்டியது அவசியமாகும்.

அதேபோல், ஜனசபை முறைமையை ஏற்படுத்தவும் எதிர்பார்க்கிறோம். ஒரு வருடத்திற்கும் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த சூழலிலேயே தற்போதைய வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எச்.சமரதுங்க குறிப்பிட்டதாவது.

இலங்கைப் பொருளாதாரத்தின் முழுமையான தரவுகள் எம்மிடம் இல்லை. 2022 இல் நாட்டின் பொருளாதார மந்தநிலை பற்றிய தரவுகளே எங்களிடம் உள்ளன. கடந்த வருடம் நாட்டின் பொருளாதாரம் 7.3 சதவீதமாக முடங்கியது. இந்த வருடத்திலும் பொருளாதாரம் 2% ஆக முடங்கியது.

ஆனால், 2024 பொருளாதாரம் வளர்ச்சி காணும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அந்த வகையில், 1.8% நேர் பெறுமதியிலான வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டு வந்துள்ளோம் என்பதை புள்ளி விவரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

2022 ஏப்ரல் மாதமளவில் நாட்டின் கையிருப்பு 24 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது. தற்போதைய அரசாங்கம் அதனை 3.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கச் செய்துள்ளது. அடுத்த வருடம் அடிப்படைக் கணக்கில் அதிகரிப்பை காண முடியும் என எதிர்பார்க்கப்படுவதோடு. கடன் மீள் செலுத்துகையின் போது அடிப்படை கணக்கு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

வாகன இறக்குமதி தவிர்ந்த ஏனைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு கையிருப்பும் வரையறுக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட 2023 உடன்படிக்கையின் படி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ளது. இது வரையிலான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றியளித்துள்ளன.

இருதரப்பு கடன்கள் மற்றும் இறையாண்மை பத்திர கடன்கள் கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கத்தால் செலுத்தப்படவில்லை. வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடம் பெற்ற கடன்கள் தொடர்ந்து திருப்பிச் செலுத்தப்பட்டன. செலுத்தப்படாத தொகை எஞ்சியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டின் பின்னர் மேற்படி கடன் தொகையை செலுத்த முடியும்.

அடுத்த வருடம் 4127 பில்லியன் வருமானம் அரசாங்கத்திற்கு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவு 6978 பில்லியன் ரூபாகவும் பட்ஜெட் இடைவெளி 8% என்ற குறைந்த அளவில் உள்ளது. பணம் அச்சிடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளது. அரச வங்கிகளின் கடன் வழங்களுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு பணத்தை தேட வேண்டிய அவசியம் ஏற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கத்துக்கமைய கடன் பெறுதலின் போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அரசாங்கத்தின் செலவீனங்களுக்கு ஏற்றவாறு பணத்தை ஈட்டிக்கொள்ள வேண்டிய தேவை உருவாகும்.

சர்வதேச நிதியத்தின் 4 வருட வேலைத்திட்டத்திலும் வரவு செலவு திட்டத்திலும் அதற்கு அவசியமான யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. வரவும் செலவும் ஒரே அளவில் காணப்படுவதால், பெருமளவான மாற்று திட்டங்களுக்கு செல்ல முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்கு அமைய அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க சர்வதேச கடன் வழங்குநர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்

அந்த வேலைத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமாயின், சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. இது சாதாரண காலத்தில் இடம்பெற்ற வேலைத்திட்டம் அல்ல. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பின்னரே சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகளை எட்டினோம். எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு வெளியே அரசாங்கம் செயல்பட முடியாது. பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அது அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ஒரு வேலைத்திட்டமாகும். சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் பணியே இடம்பெறுகின்றது. கடந்த 16 மாதங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் 85 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் ஊடாக பொருளாதாரத்தை துரிதப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். புதிய பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் புதிய சட்டங்களை தயாரிக்கவும் அதில் முன்மொழியப்பட்டுள்ளது. உற்பத்திச் சந்தையில் உள்ள குறைபாடுகளுக்கு, புதிய முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தொழிலாளர் சந்தையை வலுப்படுத்துவது குறித்தும் பட்ஜெட் மூலம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் சந்தைகள் மற்றும் நிலம் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் உள்ளன.

ஜனாதிபதி குறிப்பிட்டது போன்று நீண்டகாலமாக தீர்க்கப்படாத காணிகளின் உரிமையை மக்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்கள் வாடகை செலுத்த வேண்டியதில்லை. அதற்கான கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறோம். அந்த இரண்டு திட்டங்களின் நிதி ப் பெறுமதி சுமார் இரண்டு டிரில்லியன் ரூபாய். அந்த சொத்துக்கள் நாட்டின் சந்தையில் இணைக்கப்படுகிறது என்றார்.

இங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் வழங்கினார்.

கேள்வி:கிரிக்கெட் அபிவிருத்திக்காக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1.4 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது, விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மீதான தடையை நீக்க உங்களிடம் ஏதேனும் வேலைத்திட்டம் உள்ளதா?

பதில்: சர்வதேச கிரிக்கெட் பேரவையுடனான கலந்துரையாடலை நடத்த கிரிக்கட் தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாம் இழந்த போட்டிகளை எப்படியாவது பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மாணவர்களின் திறமைகளை வளர்க்கும் வகையில் கிரிக்கெட்டுக்காக 1.4 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் அவ்வாறான பிரச்சினைகள் இல்லை. ஏனைய பிரதேசங்களிலும் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும். 2030ஆம் ஆண்டு வரை இவ்வாறு பணம் ஒதுக்க எதிர்பார்க்கிறோம். அப்போது நாம் உலகில் முதல் இடத்தை அடைய முடியும்.

காமினி திசாநாயக்க முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் காரணமாகவே 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றோம். அப்போது பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்காக நான் பல்வேறு செயற்பாடுகளைச் செய்தேன். கார்பீல்ட் சோபஸ் இலங்கைக்கு வருகை தந்து எங்களுக்கு உதவினார். இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமாயின் கிரிக்கெட்டையும் கட்டியெழுப்ப முடியும்.

கேள்வி:நவம்பர்-டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச கடன் மறுசீரமைப்பு முடிவடையும் என்று எதிர்பார்த்தாலும், அது இன்னும் நடக்கவில்லை. அதற்கு இன்னும் எவ்வளவு காலம் செல்லும்?

பதில்:நவம்பர் மாதம் இன்னும் முடியடையவில்லை. நாம் கடன் வழங்கும் நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளோம். அந்த நாடுகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமான ஆலோசனைகளை சமர்ப்பித்துள்ளன. அது தொடர்பில் நாம் சர்வதேச நாணய நிதியத்துடனும் கலந்துரையாட வேண்டும். ஆனால் அவர்களை மீண்டும் டிசம்பர் 6ஆம் திகதி தான் நாம் சந்திப்போம். எனவே டிசம்பர் மாதம் இறுதி வரை பார்ப்போம். இந்தக் கட்டத்தை வெற்றிகரமாகக் கடந்து அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். ஏற்கனவே வெஸ்டன் மிலன், அதானி போன்ற முதலீட்டாளர்கள் வந்து முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். தோல்வியடைந்த நாடு என்றால், இவ்வாறு முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்.

கேள்வி:நீங்கள் முன்வைத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பதிலளித்துள்ளதா? சில தரப்பினர் கூறுவது போன்று வரவு செலவுத் திட்டத்தில் முழுமையாக சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தான் உள்ளதா?

பதில்:இல்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எனக்கு பதில் வரவில்லை. இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் நாங்கள் செயற்பட்டுள்ளோம்.

வெகுசன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் இது இரண்டாவது வரவு – செலவு திட்டமாகும்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2 மணித்தியாலங்கள் நின்றவாறு வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வரவு – செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்து.முன்மொழிவுகளை செயற்படுத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரினார்.

இந்தியாவின் சென்னையில் உள்ள IT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல்.

19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2024 ஆம் ஆண்டில் 01 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளை 2 மணித்தியாலங்கள் நின்றவாறு வாசித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  வரவு – செலவு திட்ட வரைபு உருவாக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்து.முன்மொழிவுகளை செயற்படுத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரினார்.

பொருளாதாரம் மீட்சியடையாமல் லெபனான் நாட்டின் நிலைக்கு செல்வதா இல்லையா என்பதை எதிர்க்கட்சியினர் தீர்மானிக்க வேண்டும். ஒருகாலத்தில் பிரித்தானியாவுக்கு கடன் வழங்கிய நாம் இன்று முழு உலக நாடுகளிடமும் கையேந்துகிறோம்.

பொருளாதார நெருக்கடிக்கு கடினமான தீர்மானங்களை  செயற்படுத்தாவிட்டால் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவ எவரும் முன்வரமாட்டார்கள்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு  கடினமான தீர்மானங்கள் இல்லாமல் போலியான அழகான விடையேதும் கிடையாது.

எதிர்காலத்தை சிறந்த முறையில் வெற்றிகொள்ள வேண்டுமாயின் நிலைபேறான பொருளாதார கொள்கை செயற்படுத்த வேண்டும்.

சுற்றுலா கைத்தொழில் துறையை மேம்படுத்த 8 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. சிவிட் ஸ்ரீ லங்கா திட்டத்தின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு முதல் செயற்படுத்தப்படும்.

அம்பாந்தோட்டை, பிங்கிரிய, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் புதிய முதலீட்டு வலயங்கள் ஸ்தாபிக்கப்படும்.

இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படும்.

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நடைமுறையில் உள்ள சட்டங்களில் 60 சட்டங்கள் காலத்துக்கு ஏற்றாற் போல் திருத்தம் செய்யப்படும்.

அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

2024 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தைப் போன்று புரட்சிகரமான வரவு – செலவு திட்டத்தை எவரும் சமர்ப்பிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவிக்காமல் நாட்டுக்காக ஒத்துழைப்பு வழங்குங்கள்.

திருகோணமலை நகரம் இந்திய முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்யப்படும். இதற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படும்.

பொருளாதார நெருக்கடிக்கு தனித்து தீர்வுகாண முடியாது. அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவேன்.

வரவு – செலவுத் திட்ட  முன்மொழிவுகள் அமுலாக்கம், செலவு தொடர்பில் மாகாண சபைகள் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் தூய்மையான குடிநீர் பிரச்சினைக்கு 2024 ஆண்டின் முதல் காலாண்டுக்குள் நிரந்தர தீர்வு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

நட்டமடையும் அரச நிறுவனங்களினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே நட்டமடையும் அரச நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்படும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக எதிர்ப்பு தெரிவிப்பதை அரசியல் தரப்பினர் நாட்டுக்காக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த அரச வங்கிகள் ஊடாக இலகு வட்டி வீதத்திலான கடனுதவி வழங்கப்படும். இதற்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

சிறு மற்றும் பெருங்குளங்கள் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும். வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்துறையை மேம்படுத்துவது பிரதான இலக்கு.

சகலருக்கும் ஆங்கிலம் ‘திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 2034 ஆம் ஆண்டு  சகலருக்கும் ஆங்கிலம் என்ற இலக்கு வெற்றிபெறும்.

நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை  வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த  ஒழுங்குமுறை எதிர்வரும் ஆண்டு முதல் செயற்படுத்தப்படும்.

அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக  மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நவீன உலகுக்கு பொருந்தும் வகையில் எதிர்காலத்தில் மேலதிகமாக 4 பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்படும்.

பழமையான கல்வி முறைமை நடைமுறையில் உள்ளது. நவீன உலகுக்கு பொருத்தமான கல்வி முறைமை 2024 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படும்.

வீதி புனரமைப்புக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

மலையக பகுதியில் கிராமிய அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

கொழும்பு தொடர்மாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் வரி 2024 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்படும். வீட்டு உரிமை முழுமையாக அவர்களுக்கு வழங்கப்படும். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்பார்ப்பார்களா ?

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஆரம்பகட்டமாக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் கடந்த காலங்களில் முன்வைத்த பரிந்துரைகளை வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கியுள்ளேன். ஆகவே வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான மாதக் கொடுப்பனவுகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு :

சிரேஷ்ட பிரஜைகளுக்கான மாதக் கொடுப்பனவு 3000 ரூபாவால் அதிகரிப்பு.

விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு.

2024 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

தேர்தல் வெற்றியல்ல  நாட்டின் வெற்றியே எனக்கு  முக்கியம்.

ஓய்வூதியக்காரர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிப்பு.

அரச சேவையாளர்களுக்கான கொடுப்பனவு 10000 ரூபாவால் அதிகரிப்பு.

2024 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் தேர்தல் வரவு செலவுத் திட்டம் அல்ல, எதிர்காலத்துக்கான வரவு செலவுத் திட்டம்.

பூச்சியமாக  வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு கையிருப்பு தற்போது 3.5 பில்லியன் டொலராக நிலைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம் –

இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதார பாதிப்பினால் 30 சதவீதமாக உயர்வடைந்த வட்டி வீதம் தற்போது 15 சதவீதமாக குறைவடைந்துள்ளது –

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட அரசியல்,பொருளாதார கொள்கை தோல்வி. நவீன யுகத்துக்கு இணையாக கொள்கைகளை வகுக்காவிட்டால் ஒருபோதும் முன்னேற முடியாது.

நுவரெலியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தை உருவாக்குவோம்.

சகல அபிவிருத்திகளையும் எதிர்த்து எதிர்காலத்தையும் கொள்ளையடிக்க வேண்டாம்

நட்டமடையும் அரச நிறுவனங்களை தேசிய வளம் என்று குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த சுமைகளையும் மக்கள் மீது சுமத்த முயற்சி

மத்திய வங்கி  சட்டத்துக்கு அமைய எண்ணம் போல் நாணயம் அச்சிட முடியாது. ஆகவே எதிர்வரும் ஆண்டு அரச வருமானத்தை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும். – நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

2023 ஆம் ஆண்டு  3415 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதும், 2410 பில்லியன் ரூபா மாத்திரமே திரட்டப்பட்டுள்ளது.ஆகவே வரி வருமான எதிர்பார்ப்பு இலக்கு தோல்வி – நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது நாணயம் அச்சிட வேண்டும்,கடன் பெற வேண்டும்.ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்துவது சமவுடைமை கொள்ளைக்கு எதிரானது  -நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

சம்பளத்தை அதிகரிக்குமாறு ஒரு தரப்பினர் போராடுகிறார்கள். அரச சேவையாளர்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். அரச சேவையாளர்களுக்கு ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது

கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிலையை நன்கு அறிவோம். வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வது இலகுவானதொரு காரியமல்ல

பொருளாதார மீட்சிக்காக எடுத்துள்ள தீர்மானங்கள் சரி என்பதை கடந்த கால சமூக கட்டமைப்பு நிலைவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எமது பயணம், பாதை, சரியன கடினமானதாக இருந்தாலும் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்

தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

போலியான வாக்குறுதிகள், அரசியல் நிவாரணங்கள் ஆகியவற்றால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.இதனை இனியும் தொடர முடியாது – நிதியமைச்சர்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் துரிதகால திட்டங்களுக்கு அப்பாற்பட்டு நீண்டகால இலக்குகளை அடிப்படையாக கொண்டதாக எதிர்கால திட்டங்கள் அமையும் –

எவரும் பொறுப்பேற்காத மரணப்படுக்கையில் இருந்த நாட்டையே நான் பொறுப்பேற்றேன். நாட்டை துரிதமாக மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம் –

அரசாங்கம் மாத்திரமல்ல அனைவரும் அரச நிதியை வீண்விரயம் செய்துள்ளோம். தவறான வாக்குறுதிகள், நிவாரணம் வழங்கல் பொருளாதார முன்னேற்றத்துக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க சபைக்கு முன்மொழிந்தார்.

ரணில் தமிழ் மக்களுக்கு நிலையான தீர்வை வழங்கியே தீர்வார் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல உறுதி

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நிலையான தீர்வை வழங்கியே தீருவார் எனவும் இதை இலங்கை வந்திருந்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் ஜனாதிபதி கூறியுள்ளார் எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களுக்குத் தீர்வு வேண்டும் என்று சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் விடுக்கும் கோரிக்கையை ஏற்கின்றோம். அதேபோல் அவர்களும் ஜனாதிபதியின் தேசிய ரீதியான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத்தில் ஆளும், எதிரணி என இரு தரப்பினரும் இணைந்து ஒரு தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்து அதை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியுடன் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு ; பெளத்த உறவுகளை மேம்படுத்தும் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய உயர்  ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்டு இந்திய தூதுக்குழுவினர்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்ப பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இச் சந்திப்பு கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழ்கிழமை (2) இரவு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விற்கும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமனுக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சு வார்த்தையில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பௌத்த  உறவுகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தின் 15 மில்லியன் டொலர் அன்பளிப்புடன்  முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.

அமைச்சரவை மாற்றத்தில் மகிழ்ச்சியில்லை‌ : பொதுஜன பெரமுன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) அமைச்சரவையில் மாற்றம் செய்தார்.

03 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

எவ்வாறாயினும், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கவலையடைந்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தீர்மானம் ஜனாதிபதி எடுத்த தவறான முடிவாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை வழிநடத்தும் பலத்தை பாராளுமன்றத்தின் தலைவருக்கு வழங்குகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஆற்றலை வழங்குகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஐந்து பேர் மாத்திரமே உள்ளனர். ஆனால் இங்கிருந்து ஒரு அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அரச அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அது தவறு. தவறை தவறு என்று சொல்ல நாங்கள் பயப்படுவதில்லை. ஜனாதிபதி கூட தவறு செய்தால் தவறுதான்.

இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுகாதார அமைச்சராக டொக்டர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டனர்.

மேலும், தற்போது நிதி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டியவை, அரச பெருந்தோட்ட முயற்சியாண்மை மறுசீரமைப்பு அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் ஜனாதிபதி நியமித்தார்.

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் – ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்ரங்கில் இன்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் சாத்தியமாகுமாகும் பட்சத்தில் மாகாண சபைத் தேர்தலையும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

சீன ஜனாதிபதி – இலங்கை ஜனாதிபதி இடையே விசேட சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்கை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சீனாவில் பீஜிங் நகரித்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க  கடந்த 16ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் சீனாவிற்கான நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப்  பதவியேற்றதன் பின்னர் சீனாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ரணில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 14ஆம் திகதி சீனா செல்லவுள்ளார்.

இதன்போது சீன அரசாங்கத்துடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ளது

மேலும் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை; வடக்கிற்கு இரு நாள் விஜயம்

பிரித்தானியாவின் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன் மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

அவரை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் வரவேற்றதோடு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். இதன்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக்கும் கலந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியைச் சந்தித்த அவர், பொருளாதா மீட்சிக்கான பதையில் இலங்கை முன்னெடுத்துவரும் செயற்பாடுகள், கடன் மறுசீரமைப்புக்கான முனைப்புக்கள், உண்மை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகள் இந்து சமுத்திரத்தில் வர்த்தகம், சக்திப் பரிமாற்றத்துக்கான திறந்த மற்றும் சுயாதீனத் தன்மையை பேணுதல், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முனைப்புக்கள், உலக வங்கியின் உதவித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விடயங்கள் சம்பந்தமாக பரந்துபட்ட அளவில் கலந்துரையாடியதாக அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியனின் இந்த விஜயமானது, பிரித்தானியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் இன்று ஆரம்பமாகும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அத்துடன் அவர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை வலியுறுத்தவுள்ளார்.

அத்துடன், காலநிலை மாற்றம், சுற்றுசூழல் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் வகிபாகத்தினை வலியுறுத்தவுள்ளதோடு, இலங்கையின் சுற்றுச்சூழல் முன்முயற்சிகளுக்கு, குறிப்பாக பல்லுயிர் நோக்கங்கள் மற்றும் கிளாஸ்கோ ஒப்பந்தம் தொடர்பான விடயங்களில் பிரித்தானியாவின் ஆதரவினையும், ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தவுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் கூட்டு காலநிலை இலக்குகள் அடைவதற்கான பகிரப்பட்ட நோக்கங்களை முன்னேற்றுவதில் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் பங்களிப்பினையும் வலியுறுத்தவுள்ளார்.

அமைச்சர் ட்ரெவெலியன் கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்த கலந்துரையாடல்கள் காலநிலைமாற்றத்துக்கான நிதி, பசுமை வளர்ச்சி, இருதரப்பு வர்த்தகம், மனித உரிமைகள், நீதி சீர்திருத்தம் மற்றும் இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளது. அத்துடன் வர்த்தக மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை நடத்துவார்.

அதனைத்தொடர்ந்து நாளை 11ஆம் திகதி வடக்குக்கான விஜயத்தினை மேற்கொள்ளும் அவர் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் உள்ளுர் வர்த்தகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். வடக்கில் உள்ள தமிழ் பிரதிநிதிகளை ஒன்றாக அழைத்துள்ள அவர் தனியார் விடுதியில் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

மேலும், பிரித்தானியாவின் மோதல், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிதியத்தின் ஆதரவுடன் முகமாலையில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் தளத்திற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதோடு அந்த விஜயமானது, இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் கண்ணிவெடி அகற்றும் முயற்சிகளுக்கும் பிரித்தானியாவின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.