தமிழர் தேசத்துக் கல்வி மீண்டெழ ஆரம்பித்துள்ளது என இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளிவந்த நிலையில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த கால கல்வி வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கிவிட்டோம்.
2021 க.பொ.த உயர்தர பெறுபேறுகள், 2021 க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் கணிசமான மாற்றத்தை தந்துள்ளன. ஒப்பீட்டளவில் நாம் மீண்டெழ ஆரம்பித்துள்ளோம்.
இதனை நாம் எந்தச் சூழ்நிலையிலும் விட்டுவிட முடியாது. இதற்காக பெற்றோர்கள், மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் அக்கறையுடனும் தொழிற்பட வேண்டும்.
கடந்த 2021 க.பொ.த உயர்தர பெறுபேற்றுக்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவை, அதிபர்களின் விடாமுயற்சி, பெற்றோர்களின் ஒத்துழைப்பு என்பன கணிசமான பங்கு வகித்தன. அதனாலேயே முதல் மூன்று இடங்களில் தமிழர் செறிந்து வாழும் மாகாணங்கள் முதல் நிலையில் வந்தன.
அதேபோன்று 2021 க.பொ.த சாதாரண தர பெறுபேற்றுக்கும் ஆசிரியர்களின் அளப்பரிய சேவை, அதிபர்களின் சீரிய மனப்பாங்கு, பெற்றோரின் வகிபாகம் என்பன காரணமாக அமைகின்றன.
தமிழர் செறிந்து வாழும் மாகாணங்களில் மாணவர்களுக்கான அரச பொதுப் பரீட்சைகளில் மாணவர்கள் எடுத்துள்ள பெறுபேற்று உயர்ச்சி எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனை நாம் தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும். இன்னும் மேலெழ வழி தேட வேண்டும். எத்தகைய நெருக்கடிகள், தலையீடுகள், கலாசார பிறழ்வுகள், போதை கலாசாரங்கள், திணிப்புகள் எது வந்தாலும் நாம் அனைத்தையும் தகர்த்தெறிய வேண்டும்.
கல்வி என்பது எமது சொத்து. அதனை நாம் கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டும். அதுவே எமது வாழ்வின் ஆதாரம். அதற்காக அதிபர்கள் தாம் பொறுப்பேற்றுள்ள கல்விக் காப்பகத்தின் கண்ணியத்தையும், அங்கு காக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அன்போடு அரவணைப்போடு அனைவரையும் ஒன்றிணைத்து, ‘எமது இலக்கு ஒன்றே’ என்ற வாசகத்தை மனதில் இருத்தி தொழிற்பட வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்!
ஆயிரம் சுமைகள், துன்பங்கள். பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி எம் தேசத்துக் குழந்தைகள் என்ற உணர்வோடு ஆசிரியர்களான நீங்கள் ஆற்றும் பணியை அனைவரும் மதிக்கின்றனர்; வாழ்த்துகின்றனர்!
இன்னும் நாம் எமது கடந்த கால இலக்குகளை அடையவில்லை. அவை அடையப்பட வேண்டியவை. அதுவும் எமது காலத்தில் அவை அடையப்பட வேண்டும். அதற்காக எத்தகைய சவால்கள் வந்தாலும், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு பணியாற்றுவோம்.
இறைவனின் ஆசியும், குழந்தைகளின் பெறுபேற்று வெற்றி, அவர்களின் உயர்ச்சி, அவர்கள் பெறும் பதவிகள், பட்டங்கள் என்பன உங்களுக்கு அணிகலன்களாக அமையும் என்பது உண்மை. உங்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
நாம் பல்லாண்டு காலம் கொடிய யுத்தம், அனர்த்தம் என்பவற்றை கடந்து வந்தவர்கள். அந்த காலங்களிலும் நாம் கல்வியை கைவிட்டதில்லை. அதற்காக அக்காலத்தில் யாரும் தடையாக இருந்ததும் இல்லை.
இன்று தடைகளும் திணிப்புகளும் எம்மை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. தலையீடுகள் பல எமது எதிர்கால குழந்தைகளில் கல்வியை சீரழிக்க முனைகின்றன. அவற்றுக்கெல்லாம் நாம் இடம்கொடுக்க முடியாது.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கைகளில் மட்டுமே தங்கியுள்ளது என்பதை நீங்கள் மனதில் இருத்தி தொழிற்பட வேண்டும் என வினயத்துடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.