தபால்மூல வாக்களிப்பு திட்டமிட்டபடி நடக்கும்!

தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி 22-23-24 அன்று தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் மூல வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் திகதி மாத்திரமே தாமதமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டதாக ஆணைக்குழுவில் எவரும் அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தபால் மூலமானவாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான நிதி கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பை நடத்த தேசிய தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டிருந்தது.

இருப்பினும் முன்னதாக திட்டமிட்டபடி நாளை தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற இன்றைய சந்திப்பின்போதே அரசியல் கட்சி செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

Posted in Uncategorized

தேர்தல் ஏற்பாடுகளுக்கு 100 மில்லியனை வழங்கியது திறைசேரி

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரி 100 மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளது.

இந்நிலையில் திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

அந்த மூன்று நாட்களிலும் யாரேனும் தபால் மூலமான வாக்களிக்க முடியாமல் போனால், 28 ஆம் திகதி மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் முன்னிலையில் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்வதில் தங்களுக்கு சட்டத் தடைகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

எனவே அறிவிக்கப்பட்டபடி திகதியில் தேர்தலை நடத்த ஆணைக்குழுவும் மற்ற தேர்தல் செயலக அதிகாரிகளும் பணியாற்றி வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம்.ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உள்ள குறைபாடுகளை பரிசீலித்த உயர் நீதிமன்றம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

தேர்தலை திட்டமிட்டபடி முன்னெடுக்க நீதிமன்றம் பணிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அண்மையில், ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் இந்த தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

“நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தப் பயனும் ஏற்படாது” என சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தலை தடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதிக்காது நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தாக்கல் செய்த மனுக்களும், உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரால் ஒரு மனுவும், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரால் மற்றைய மனுவும் தாக்கல் செய்யப்பட்டன

தேர்தலுக்கு நிதி இல்லையெனில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து பெறவும் – தவிசாளர் நிரோஸ்

தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்றால் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள் என , தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்.ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே தியாகராஜா நிரோஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு இலங்கையினுடைய திறை சேரியாக இருக்கலாம் அல்லது நாட்டினுடைய வருமானங்களின் அடிப்படையாக இருக்கலாம் அதற்கான செலவினங்களை ஈடு செய்வதற்கான பணம் போதாது இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் ஆணைக்குழு எடுத்து வரும் முயற்சியை நாங்கள் வரவேற்கின்றோம். இந்த தேர்தல் ஒத்திவைக்காமல் நடத்தப்பட வேண்டும் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் ஒரு மக்கள் ஆணையை மீளவும் பெற வேண்டிய ஒரு சூழல் இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் இதற்கான பணம் போதாது என்கின்ற காரணம் காட்டப்பட்டு ஒத்துழைக்கப்படுமானால் நாங்கள் தேர்தல் ஆணையாளருக்கு ஒரு பகிரங்கமாக விடயத்தை முன்வைக்கின்றோம்.

இது உள்ளூராட்சி மன்ற தேர்தல் என்ற காரணத்தின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை பெறலாம். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்கள் தனியாக வருமானம் ஈட்டும் ஒரு அரச கட்டமைப்பாக இருக்கின்றன, அவ்வாறான சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு தேர்தலுக்கான செலவீனங்களை அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து பெறுவதற்கு உரிய சுற்று நிரூபம் ஊடாக முன்னெடுத்தாவது இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

ஏனெனின் தேர்தல்கள் என்பது கருத்து பெறுவதற்கும் கருத்து தெரிவிப்பதற்குமான சுதந்திரம் என்ற அடிப்படையில் ஜனநாயகத்துக்காக எங்களுடைய செலவீனங்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.

அதேநேரம் அதனை எங்களுடைய கௌரவ அதையும் ஏற்றுக்கொள்ளும். எங்களைப் போன்ற ஏனைய சபைகளும் இதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.

அரசாங்கம் நிதியில்லை என்று சொல்லி தேர்தல்களை ஒத்தி வைக்குமானால் நிச்சயமாக இது ஒரு ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற செயல் என்கின்ற அடிப்படையில் சர்வதேசம் சில உதவிகளை இந்த தேர்தல்கள் நடத்துவதற்காக செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

தேர்தலுக்கு திறைசேரி பணம் தராவிட்டால் உயர்நீதிமன்றத்தை நாடுவோம் – தேர்தல் ஆணைக்குழு

உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு திறைசேரி செயலாளர் உரிய பதில் அளிக்காவிட்டால், உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவ தெரிவித்தார்.

அரசாங்க அச்சக திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் போன்றவற்றுக்கு முற்பணத்தை வழங்குமாறு கோரியுள்ளதாகவும், அந்த கோரிக்கைகளுக்கு அமைய அடிப்படை செலவினங்களுக்காக திறைசேரி செயலாளரிடம் 770 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், தேர்தலை இடைநிறுத்தக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர், உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கு தேவையான முன்பணம் பெறாவிட்டால், அறிவிக்கப்பட்ட திகதியில் வாக்குப்பதிவை நடத்த முடியாது என்றும் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் அச்சகத் திணைக்களமும் 100 மில்லியன் ரூபாவை முற்பணமாக வழங்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் தற்போது 40 மில்லியன் ரூபா பெறுமதியான அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் மேலும் 60 மில்லியன் ரூபா பெறுமதியான அச்சடிக்கும் பணியை அவசரமாக மேற்கொள்ள வேண்டுமென திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ள்ஸின் பதவி விலகல் கடிதம் ஏற்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகுவதாக சார்ள்ஸ் கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது முக்கியமானது: விக்டோரியா நுலண்ட் வலியுறுத்தல்

மார்ச் மாதத்தில்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று (01) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட், இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

இதன்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலின் அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன், இலங்கையின் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டியதும் அவசியம் என குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதும், அந்த திருத்தங்களை சர்வதேச சரத்துகளுக்கு அமைவாக வடிவமைப்பதும் அவசியம் என விக்டோரியா நுலண்ட் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குநரான சீனா, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நம்பத்தகுந்த பதிலொன்றை வழங்கும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள்; உலக நாடுகள் வலியுறுத்து

13ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதும் முக்கியம் என்று இந்தியா நம்புகிறது என்று ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இந்திய பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத் தொடரில் முழுநிறை காலமுறை மீளாய்வு செயல்குழுவில் இலங்கை குறித்து நேற்று மீளாய்வு செய்யப்பட்டது. இதில், பங்கேற்ற இந்தியாவின் பிரதிநிதி உரையாற்றியபோதே மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட கொள்கைகள் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டும். வறுமையை ஒழிக்கவும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்களின் மீதான தாக்கத்தை குறைக்க வும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

இதில், இந்திய வம்சாவளி தமிழ் மக்களையும் உள்ளடக்க வேண்டும். அனைத்து பிரஜைகளின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என அமெரிக்க, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் மனித உரிமைகளை மீறுபவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யுமாறும் கனடா வலியுறுத்தியுள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டவும் பொலிஸார் சித்திரவதை நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் கொலம்பியா பரிந்துரைத்துள்ளது.

மேலும் அமைதியான போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு டென்மார்க் பரிந்துரைத்துள்ளது.